Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruRebelBharathidasan
பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள்

              புத்தகசாலை

தனித்தமைந்த வீட்டிற் புத்தகமும் நானும்
சையோகம் புரிந்ததொரு வேளைதன்னில்,
இனித்தபுவி இயற்கையெழில் எல்லாம் கண்டேன்;
இசைகேட்டேன்! மணம்மோந்தேன்! சுவைகள் உண்டேன்!

மனித்தரிலே மிக்குயர்ந்த கவிஞர் நெஞ்சின்
மகாசோதியிற் கலந்த தெனது நெஞ்சும்!
சனித்ததங்கே புத்துணர்வு! புத்தகங்கள்
தருமுதவி பெரிது! மிகப்பெரிது கண்டீர்!

மனிதரெலாம் அன்புநெறி காண்பதற்கும்
மனோபாவம் வானைப்போல் விரிவடைந்து
தனிமனித தத்வமாம் இருளைப் போக்கிச்
சகமக்கள் ஒன்றென்ப துணர்வதற்கும்,
இனிதினிதாய் எழுந்தஉயர் எண்ணமெல்லாம்
இலகுவது புலவர்தரு சுவடிச்சாலை;
புனிதமுற்று மக்கள்புது வாழ்வுவேண்டில்
புத்தக சாலைவேண்டும் நாட்டில்யாண்டும்.

தமிழர்க்குத் தமிழ்மொழியிற் சுவடிச்சாலை
சர்வகலா சாலையைப்போல் எங்கும் வேண்டும்.
தமிழிலிலாப் பிறமொழிநூல் அனைத்தும் நல்ல
தமிழாக்கி வாசிக்கத் தருதல்வேண்டும்,
அமுதம்போல் செந்தமிழிற் கவிதைநூற்கள்,
அழகியவாம் உறைநடையில் அமைந்த நூற்கள்,
சுமைசுமையாய்ச் சேகரித்துப் பல்கலைசேர்
துறைதுறையாய்ப் பிரித்தடுக்கி வைத்தல் வேண்டும்.

நாலைந்து வீதிகளுக் கொன்று வீதம்
நல்லதுவாய் வசதியதாய் இல்லம் வேண்டும்,
நூலெல்லாம் முறையாக ஆங்கமைத்து
நொடிக்குநொடி ஆசிரியர் உதவுகின்ற
கோலமுறும் செய்தித்தாள் அனைத்தும் ஆங்கே
குவிந்திருக்க வகைசெய்து தருதல் வேண்டும்.
மூலையிலோர் சிறுநூலும் புதுநூலாயின்
முடிதனிலே சுமந்துவந்து தருதல் வேண்டும்

வாசிக்க வருபவரின் வருகை ஏற்றும்
மரியாதை காட்டி அவர்க் கிருக்கை தந்தும்,
ஆசித்த நூல்தந்தும் புதிய நூல்கள்
அழைத்திருந்தால் அதையுரைத்தும், நாளும் நூலை
நேசித்து வருவோர்கள் பெருகும் வண்ணம்
நினைப்பாலும் வாக்காலும் தேகத்தாலும்
மாசற்றதொண் டிழைப்பீர்! சமுதாயச்சீர்
மறுமலர்ச்சி கண்டதென முழக்கஞ் செய்வீர்!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.