Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruRebelBharathidasan
பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள்

             பெற்றோர் இன்பம்

கூடத்து நடுவில் ஆடும் ஊஞ்சலில்
சோடித்து வைத்த துணைப்பொற் சிலைகள்போல்
துணைவனும் அன்புகொள் துணைவியும் இருந்தனர்!
உணவு முடிந்ததால், உடையவள் கணவனுக்குக்
களிமயில் கழுத்தின் ஒளிநிகர் துளிரும்,
சுண்ணமும், பாக்குத் தூளும், கமழும்
வண்ணம் மடித்து மலர்க்கை ஏந்தினாள்.
துணைவன் அதனை மணிவிளக் கெதிரில்
மாணிக் கத்தை வைத்ததுபோல் உதடு
சிவக்கச் சிவக்கச் தின்றுகொண் டிருந்தான்.
ஆயினும் அவன்உளம் அல்லலிற் கிடந்தது.

"கேட்டான் நண்பன், சீட்டு நாட்டின்றி
நீட்டினேன் தொகை! நீட்டினான் கம்பி;
எண்ணூற் றைம்பது வெண்பாற் காசுகள்
மண்ணா யினஎன் கண்ணே" என்றான்.
தலைவன் இதனைச் சாற்றி முடிக்குமுன்
ஏகா லிஅவர் எதிரில் வந்து
கூகூ என்று குழறினான்: அழுதான்.
உழைத்துச் சிவந்ததன் உள்ளங் கைகள்
முழுக்க அவனது முகத்தை மறைத்தன.
மலைநிகர் மார்பில் அலைநிகர் கண்ணீர்
அருவிபோல் இழிந்தது. "தெரிவி. அழாதே
தெரிவி" என்று செப்பினான் தலைவன்
"நூற்றிரண் டுருப்படி நூல்சிதை யாமல்
ஆற்றில் வெளுத்துக் காற்றில் உலர்த்திப்
பெட்டி போட்டுக் கட்டி வைத்தேன்.
பட்டா ளத்தார் சட்டையும் குட்டையும்
உடன் இருந்தன. விடிந்தது பார்த்தேன்.
உடல் நடுங்கிற்றே ஒன்றும் இல்லை"
என்று கூறினான் ஏழை ஏகாலி.

அல்லல் மலிந்த அவ்வி டத்தில்,
வீட்டின் உட்புறத்து விளைந்த தான
இனிய யாழிசை கனிச்சாறு போலத்
தலைவன் தலைவியைத் தழுவலாயிற்று.

"நம்அரும் பெண்ணும் நல்லியும் உள்ளே
கும்மா ளமிடும் கொள்ளையோ" என்று
தலைவன் கேட்டான். தலைவி "ஆம்" என்று
விசையாய் எழுந்து வீட்டினுட் சென்றே
இசையில் மூழ்கிய இருபெண் களையும்
வருந்தப் பேசி வண்தமிழ் இசையை
அருந்தா திருக்க ஆணை போட்டாள்.

தலைவன்பால் வந்து தலைவி குந்தினாள்.
மகளொடு வீணை வாசித் திருந்த
நாலாவது வீட்டு நல்லி எழுந்து
கூடத்துத் தலைவர் கொலுவை அடைந்தாள்.
"என்ன சேதி?" என்றான் தலைவன்
நல்லி ஓர்புதுமை நவிலலு ற்றாள்.
"கடலின் அலைகள் தொடர்வது போல
மக்கள், சந்தைக்கு வந்துசேர்ந்தார்கள்,
ஆடவர் பற்பலர் அழகுப்போட்டி
போடுவார் போலப் புகுந்தனர் அங்கே
என்விழி அங்கொரு பொன்மலர் நோக்கி
விரைந்தது. பின்அது மீளவில்லை.
பின்னர் அவன்விழி என்னைக் கொன்றது;
என்னுளம் அவனுளம் இரண்டும் பின்னின,
நானும் அவனும் தேனும் சுவையும்
ஆனோம் - இவைகள் அகத்தில் நேர்ந்தவை

மறுநாள் நிலவு வந்தது கண்டு
நல்லிக் காக நான், தெருக் குறட்டில்
காத்திருந்தேன்; அக் காளை வந்தான்.
தேனாள் வீட்டின்¢ 'எண்' தெரிவி என்றான்.
நான்கு - எனும் மொழியை நான்மு டிக்குமுன்
நீயா என்று நெடுந்தோள் தொட்டுப்
பயிலுவ தானான் பதட்டன்; என்றன்
உயிரில் தன்உயிர் உருக்கிச் சேர்த்து
மறைந்தான்" என்று மங்கை என்னிடம்
அறைந்தாள். உம்மிடம் அவள் இதைக் கூற
நாணினாள். ஆதலால் நான்இதைக் கூறினேன்
என்று நல்லி இயம்பும் போதே
இன்னலிற் கிடந்த இருவர் உள்ளமும்
கன்னலின் சாற்றுக் கடலில் மூழ்கின.

'நல்லியே நல்லியே நம்பெண் உன்னிடம்
சொல்லியது இதுவா? நல்லது நல்லது.
பெண்பெற்ற போது பெருமை பெற்றோம்.
வண்ண மேனி வளர வளர, எம்
வாழ்வுக்கு - உரிய வண்மை பெற்றோம்;
என்மகள் உள்ளத்தில் இருக்கும் தூயனின்
பொன்னடி தனில்எம் பொருளெல்லாம் வைத்தும்,
இரந்தும், பெண்ணை ஏற்றுக் குடித்தனம்
புரிந்திடச் செய்வோம் போ' என் றுரைத்தான்.

தலைவி சாற்றுவாள் தலைவ னிடத்தில்,
'மறைபோற் சுமந்த என் வயிற்றில் பிறந்தபெண்
நல்லி யிடத்திற் சொன்னாள். இதனைச்
சொல்லும் போதில்என் செல்வியின் சொற்கள்
முல்லை வீசினவோ! முத்துப் பற்கள்
நிலா வீசினவோ! நீல வழிகள்
உலவு மீன்போல் ஒளிவீ சினவோ;
நான்மேட் கும்பேறு பெற்றிலேன்' என்று
மகள்தன் மணாள னைக்கு றித்ததில்
இவர்கட்கு இத்தனை இன்பம் வந்ததே!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com