Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruRebelBharathidasan
பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள்

             உலகம் உன்னுடையது!

பள்ளம் பறிப்பாய், பாதாளத்தின்
அடிப்புறம் நோக்கி அழுந்துக! அழுந்துக!
பள்ளந்தனில்விழும் பிள்ளைப் பூச்சியே,
தலையைத்தாழ்த்து! முகத்தைத்தாழ்த்து!
தோளையும் உதட்டையும் தொங்கவை! ஈன
உளத்தை, உடலை, உயிரைச் சுருக்கு!
நக்கிக்குடி! அதை நல்லதென்றுசொல்!
தாழ்ந்துதாழ்ந்து தாழ்ந்த நாயினும்
தாழ்ந்துபோ! குனிந்து தரையைக்கௌவி
ஆமையைப் போலே அடங்கி ஒடுங்கு!
பொட்டுப் பூச்சியே, புன்மைத் தேரையே
அழு! இளி! அஞ்சு! குனி! பிதற்று!
கன்னங்கருத்த இருட்டின் கறையே.
தொங்கும் நரம்பின் தூளே! இதைக்கேள்;
மனிதரில் நீயுமோர் மனிதன்; மண்ணன்று!
இமைதிற! எழுந்து நன்றாய் எண்ணுவாய்!
தோளை உயர்த்துச் சுடர் முகம் தூக்கு!
மீசையை முறுக்கி மேலே ஏற்று!
விழித்தவிழியில் மேதினிக் கொளிசெய்!
நகைப்பை முழக்கு! நடத்து லோகத்தை!
உன்வீடு - உனது பக்கத்தின் வீட்டின்
இடையில் வைத்த சுவரை இடித்து
வீதிகள் இடையில் திரையை விலக்கி
நாட்டொடு நாட்டை இணைத்து மேலே
ஏறு! வானை இடிக்கும் மலைமேல்
ஏறு விடாமல்; ஏறு மேன்மேல்!
ஏறி நின்று பாரடா எங்கும்;
எங்கும் பாரடா இப்புவி மக்களைப்!
பாரடா உன மானிடப் பரப்பைப்!
பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்!
'என்குலம்' என்றுனைத் தன்னிடம் ஒட்டிய
மக்களட்பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சிகொள்!
அறிவை விரிவுசெய்! அகண்டமாக்கு!
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!
அணைந்துகொள்! உன்னைச் சங்கமமாக்கு.
மானிட சமுத்திரம் நானென்று கூவு!
பிரிவிலை எங்கும் பேதமில்லை
உலகம் உண்ணஉண்! உடுத்த உடுப்பாய்!
புகல்வேன்; 'உடைமை மக்களுக்குப் பொது'
புவியை நடத்துப் பொதுவில் நடத்து!
வானைப் போல மக்களைத் தாவும்
வெள்ளை அன்பால் இதனைக்
குள்ள மனிதர்க்கும் கூறடா தோழனே!

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.