Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruRebelBharathi
5. குயிலும் குரங்கும்

மற்றைநாட் கண்ட மரத்தே குயிலில்லை,
சுற்றுமுற்றும் பார்த்துத் துடித்து வருகையிலே-
வஞ்சனையே! பெண்மையே! மன்மதனாம் பொய்த்தேவே!
நெஞ்சகமே! தொல்விதியின் நீதியே! பாழுலகே!
கண்ணாலே நான்கண்ட காட்சிதனை என்னுரைப்பேன்! 5

பெண்ணால் அறிவிழக்கும் பித்தரெல்லாம் கேண்மினோ!
காதலினைப் போற்றுங் கவிஞரெலாங் கேண்மினோ!
மாதரெலாங் கேண்மினோ! வல்விதியே கேளாய் நீ!
மாயக் குயிலோர் மரக்கிளையில் வீற்றிருந்தே
பாயும் விழிநீர் பதைக்குஞ் சிறியவுடல் 10

விம்மிப் பரிந்து சொலும் வெந்துயர்ச்சொல் கொண்டதுவாய்
அம்மாவோ! மற்றாங்கோர் ஆண்குரங்கு தன்னுடனே
ஏதேதோ கூறி இரங்கும் நிலைகண்டேன்.
தீதேது? நன்றேது? செய்கைத் தெளிவேது?
அந்தக் கணமே அதையுங் குரங்கினையும் 15

சிந்தக் கருதி உடைவாளிற் கைசேர்ந்தேன்.
கொன்றுவிடு முன்னே குயிலுரைக்கும் வார்த்தைகளை
நின்று சற்றே கேட்பதற்கென் நெஞ்சம் விரும்பிடவும்,
ஆங்கவற்றின் கண்ணில் அகப்படா வாறருகே
ஓங்கு மரத்தின்பால் ஒளிந்துநின்று கேட்கையிலே, 20

பேடைக் குயிலிதனைப் பேசியது:-"வானரரே!
ஈடறியா மேன்மையழ கேய்ந்தவரே! பெண்மைதான்
எப்பிறப்புக் கொண்டாலும், ஏந்தலே! நின்னழகைத்
தப்புமோ? மையல் தடுக்குந் தரமாமோ?
மண்ணிலுயிர்க் கெல்லாந் தலைவரென மானிடரே, 25

எண்ணிநின்றார்தம்மை; எனிலொருகால் ஊர்வகுத்தல்,
கோயில், அரசு, குடிவகுப்புப் போன்ற சில
வாயிலிலே, அந்த மனிதர் உயர்வெனலாம்.
மேனி யழகினிலும், விண்டுரைக்கும் வார்த்தையிலும்
கூனி யிருக்கும் கொலுநேர்த்தி தன்னிலுமே, 30

வானரர்தஞ் சாதிக்கு மாந்தர் நிக ராவாரோ?
ஆன வரையும் அவர்முயன்று பார்த்தாலும்,
பட்டுமயிர் மூடப் படாத தமதுடலை
எட்டுடையால் மூடி எதிருமக்கு வந்தாலும்,
மீசையையும் தாடியையும் விந்தை செய்து வானரர்தம் 35

ஆசை முகத்தினைப்போ லாக்க முயன்றிடினும்
ஆடிக் குதிக்கும் அழகிலுமை நேர்வதற்கே
கூடிக் குடித்துக் குதித்தாலும், கோபுரத்தில்
ஏறத் தெரியாமல் ஏணிவைத்துச் சென்றாலும்,
வேறெத்தைச் செய்தாலும், வேகமுறப் பாய்வதிலே 40

வானரர்போ லாவரோ? வாலுக்குப் போவதெங்கே?
ஈனமுறுங் கச்சை இதற்கு நிகராமோ?
பாகையிலே வாலிருக்கப் பார்த்ததுண்டு, கந்தைபோல்;
வேகமுறத் தாவுகையில் வீசி எழுவதற்கே
தெய்வங் கொடுத்த திருவாலைப் போலாமோ? 45

சைவசுத்த போசனமும் சாதுரியப் பார்வைகளும்-
வானரர்போற் சாதியொன்று மண்ணுலகின் மீதுளதோ?
வானரர் தம்முள்ளே மணிபோல் உமையடைந்தேன்,
பிச்சைப் பறவைப் பிறப்பிலே தோன்றிடினும்,
நிச்சயமா முன்புரிந்த நேமத் தவங்களினால் 50

தேவரீர் காதல்பெறுஞ் சீர்த்திகொண்டேன்; தம்மிடத்தே
ஆவலினாற் பாடுகின்றேன்; ஆரியரே கேட்டருள்வீர்!"
(வானரப் பேச்சினிலே மைக்குயிலி பேசியதை
யானறிந்து கொண்டுவிட்டேன், யாதோ ஒரு திறத்தால்)
காதல், காதல், காதல்;
காதல் போயிற் காதல் போயிற்
சாதல், சாதல், சாதல்.
முதலியன (குயிலின் பாட்டு)
நீசக்குயிலும் நெருப்புச் சுவைக்குரலில் 55

ஆசை ததும்பி அமுதூறப் பாடியதே:-
காட்டில் விலங்கறியும், கைக்குழந்தை தானறியும்,
பாட்டின் சுவையதனைப் பாம்பறியும் என்றுரைப்பார்.
வற்றற் குரங்கு மதிமயங்கிக் கள்ளினிலே
முற்றும் வெறிபோல் முழுவெறிகொண்டாங்ஙனே 60

தாவிக் குதிப்பதுவுந் தாளங்கள் போடுவதும்
"ஆவி யுருகுதடி, ஹா ஹா!" என்பதுவும்,
கண்ணைச் சிமிட்டுவதும், காலாலுங் கையாலும்
மண்ணைப் பிறாண்டியெங்கும் வாரி யிறைப்பதுவும்,
"ஆசைக் குயிலே! அரும் பொருளே! தெய்வதமே! 65

பேச முடியாப் பெருங்காதல் கொண்டு விட்டேன்;
காதலில்லை யானாற் கணத்திலே சாதலென்றாய்;
காதலினாற் சாகுங் கதியினிலே என்னை வைத்தாய்;
எப்பொழுதும் நின்னை இனிப்பிரிவ தாற்றுகிலேன்;
இப்பொழுதுதே நின்னை முத்தமிட்டுக் களியுறுவேன்" 70

என்றுபல பேசுவதும் என்னுயிரைப் புண்செயவே,
கொன்றுவிட எண்ணிக் குரங்கின்மேல் வீசினேன்
கைவாளை யாங்கே! கனவோ? நனவுகொலோ?
தெய்வ வலியோ? சிறு குரங்கென் வாளுக்குத்
தப்பி முகஞ்சுளித்துத் தாவி யொளித்திடவும், 75

ஒப்பிலா மாயத் தொருகுயிலுந் தான்மறைய,
சோலைப் பறவை தொகைதொகையாத் தாமொலிக்க,
மேலைச் செயலறியா வெள்ளறிவிற் பேதையேன்
தட்டுத் தடுமாறிச் சார்பனைத்துந் தேடியுமே,
குட்டிப் பிசாசக் குயிலையெங்கும் காணவில்லை. 80


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com