KeetruRebelBharathi
பாரதியார் பாடல்கள்

             கண்ணன் என் காந்தன்


கனிகள் கொண்டுதரும் - கண்ணன்
        கற்கண்டு போலினிதாய்;
பனிசெய் சந்தனமும் - பின்னும்
        பல்வகை அத்தர்களும்,
குனியும் வாண்முகத்தான் - கண்ணன்
        குலவி நெற்றியிலே
இனிய பொட்டிடவே - வண்ணம்
        இயன்ற சவ்வாதும்.          1

கொண்டை முடிப்பதற்கே; - மணங்
        கூடு தயிலங்களும்,
வண்டு விழியினுக்கே - கண்ணன்
        மையுங் கொண்டுதரும்;
தண்டைப் பதங்களுக்கே - செம்மை
        சார்ந்துசெம் பஞ்சுதரும்;
பெண்டிர் தமக்கெல்லாம் - கண்ணன்
        பேசருந் தெய்வமடீ!          2

குங்குமங் கொண்டுவரும் - கண்ணன்
        குழைந்து மார்பெழுத;
சங்கையி லாதபணம் - தந்தே
        தழுவி மையல் செய்யும்;
பங்கமொன் றில்லாமல் - முகம்
        பார்த்திருந் தாற்போதும்;
மங்கள மாகுமடீ! -பின்னோர்
         வருத்த மில்லையடீ!          3