KeetruRebelBharathi
பாரதியார் பாடல்கள்

             9. கண்ணன் - என் விளையாட்டுப் பிள்ளை

கேதாரம் - கண்டஜாதி - ஏகதாளம்
ரஸங்கள் : அற்புதம், சிருங்காரம்

தீராத விளையாட்டுப் பிள்ளை -கண்ணன்
தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. (தீராத)

1. தின்னப் பழங்கொண்டு தருவான்; - பாதி
       தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;
என்னப்பன் என்னையன் என்றால் - அதனை
       எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான்.       (தீராத)

2. தேனொத்த பண்டங்கள் கொண்டு - என்ன
       செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்;
மானொத்த பெண்ணடி என்பான் - சற்று
       மனமகிழும் நேரத்திலே கிள்ளி விடுவான்.       (தீராத)

3. அழகுள்ள மலர்கொண்டு வந்தே - என்னை
       அழஅழச் செய்துபின், "கண்ணை மூடிக்கொள்;
குழலிலே சூட்டுவேன்" என்பான் - என்னைக்
       குருடாக்கி மலரினைத் தோழிக்குவைப்பான்.       (தீராத)

4. பின்னலைப் பின்னின் றிழுப்பான்; - தலை
       பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்;
வன்னப் புதுச்சேலை தனிலே - புழுதி
       வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான்.       (தீராத)

5. புல்லாங் குழல்கொண்டு வருவான்! - அமுது
       பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்;
கள்ளால் மயங்குவது போலே - அதைக்
       கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம்.       (தீராத)

6. அங்காந் திருக்கும்வாய் தனிலே - கண்ணன்
       ஆறேழு கட்டெறும் பைப்போட்டு விடுவான்;
எங்காகிலும் பார்த்த துண்டோ ? - கண்ணன்
       எங்களைச்செய்கின்ற வேடிக்கையொன்றோ?       (தீராத)

7. விளையாட வாவென் றழைப்பான்; - வீட்டில்
       வேலையென் றாலதைக் கேளா திழுப்பான்;
இளையாரொ டாடிக் குதிப்பான்; - எம்மை
       இடையிற் பிரிந்துபோய் வீட்டிலே சொல்வான்.       (தீராத)

8. அம்மைக்கு நல்லவன் கண்டீர்! - மூளி
       அத்தைக்கு நல்லவன், தந்தைக்கு மஃதே,
எம்மைத் துயர்செய்யும் பெரியோர் - வீட்டில்
       யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான்.       (தீராத)

9. கோளுக்கு மிகவுஞ் சமர்த்தன்; - பொய்ம்மை
       சூத்திரம் பழிசொலக் கூசாச் சழக்கன்;
ஆளுக் கிசைந்தபடி பேசித் - தெருவில்
       அத்தனை பெண்களையும் ஆகா தடிப்பான்.       (தீராத)