KeetruRebelBharathi
பாரதியார் பாடல்கள்

             கண்ணம்மா - என் குழந்தை

(பராசக்தியைக், குழந்தையாகக் கண்டு சொல்லிய பாட்டு)

சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா!
       செல்வக் களஞ்சியமே!
என்னைக் கலி தீர்த்தே - உலகில்
       ஏற்றம் புரிய வந்தாய்!        1

பிள்ளைக் கனியமுதே - கண்ணம்மா
       பேசும்பொற் சித்திரமே!
அள்ளி யணைத்திடவே - என் முன்னே
       ஆடி வருந்தேனே!        2

ஓடி வருகையில் - கண்ணம்மா
       உள்ளங் குளிரு தடீ!
ஆடித்திரிதல் கண்டால் - உன்னைப்போய்
       ஆவி தழுவு தடீ!        3

உச்சி தனை முகந்தால் - கருவம்
       ஓங்கி வளரு தடீ!
மெச்சி யுனை யூரார் - புகழ்ந்தால்
       மேனி சிலிர்க்கு தடீ!        4

கன்னத்தில் முத்தமிட்டால் - உள்ளந்தான்
       கள்வெறி கொள்ளு தடீ!
உன்னைத் தழுவிடிலோ - கண்ணம்மா
       உன்மத்த மாகு தடீ!        5

சற்றுன் முகஞ் சிவந்தால் - மனது
       சஞ்சல மாகு தடீ!
நெற்றி சுருங்கக் கண்டால் - எனக்கு
       நெஞ்சம் பதைக்கு தடீ!        6

உன்கண்ணில் நீர்வழிந்தால் - என்நெஞ்சில்
       உதிரங் கொட்டு தடீ!
என் கண்ணிற் பாவையன்றோ? - கண்ணம்மா!
       என்னுயிர் நின்ன தன்றோ?        7

சொல்லு மழலையிலே - கண்ணம்மா!
       துன்பங்கள் தீர்த்திடு வாய்;
முல்லைச் சிரிப்பாலே - எனது
       மூர்க்கந் தவிர்த்திடு வாய்.        8

இன்பக் கதைக ளெல்லாம் - உன்னைப்போல்
       ஏடுகள் சொல்வ துண்டோ?
அன்பு தருவதிலே - உனைநேர்
       ஆகுமோர் தெய்வ முண்டோ?        9

மார்பில் அணிவதற்கே -உன்னைப்போல்
       வைர மணிக ளுண்டோ?
சீர்பெற்று வாழ்வதற்கே -உன்னைப் போல்
       செல்வம் பிறிது முண்டோ?        10