Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruRebelBharathi
பாரதியார் பாடல்கள்

             கண்ணன் - என் சேவகன்

கூலிமிகக் கேட்பார் கொடுத்ததெலாம் தாம் மறப்பார்;
வேலைமிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்;
'ஏனடா நீ நேற்றைக் கிங்குவர வில்லை' யென்றால்
பானையிலே தேளிருந்து பல்லால் கடித்த தென்பார்;
வீட்டிலே பெண்டாட்டி மேற்பூதம் வந்ததென்பார். 5

பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாளென்பார்;
ஓயாமல் பொய்யுரைப்பார்; ஒன்றுரைக்க வேறுசெய்வார்
தாயாதி யோடு தனியிடத்தே பேசிடுவார்;
உள்வீட்டுச் செய்தி யெல்லாம் ஊரம் பலத்துரைப்பார்;
எள்வீட்டில் இல்லையென்றால் எங்கும் முரசறைவார். 10

சேவகரால் பட்ட சிரமமிக வுண்டு கண்டீர்;
சேவகரில் லாவிடிலோ, செய்கை நடக்கவில்லை.
இங்கிதனால் யானும் இடர்மிகுந்து வாடுகையில்
எங்கிருந்தோ வந்தான், "இடைச்சாதி நான்" என்றான்;
"மாடு கன்றுமேய்த்திடுவேன்; மக்களைநான் காத்திடுவேன்; 15

வீடு பெருக்கி விளக்கேற்றி வைத்திடுவேன்;
சொன்னபடி கேட்பேன்; துணிமணிகள் காத்திடுவேன்;
சின்னக் குழந்தைக்குச் சிங்காரப் பாட்டிசைத்தே
ஆட்டங்கள் காட்டி அழாதபடி பார்த்திடுவேன்;
காட்டுவழி யானாலும், கள்ளர்பய மானாலும்; 20

இரவிற் பகலிலே எந்நேர மானாலும்
சிரமத்தைப் பார்ப்பதில்லை, தேவாணர் தம்முடனே
சுற்றுவேன் தங்களுக்கோர் துன்பமுறா மற்காப்பேன்;
கற்றவித்தை யேதுமில்லை; காட்டு மனிதன்; ஐயே!
ஆனபொழுதுங்கோலடி குத்துப்போர் மற்போர் 25

நானறிவேன்; சற்றும் நயவஞ் சனைபுரியேன்"
என்று பலசொல்லி நின்றான். "ஏதுபெயர் சொல்" என்றேன்
"ஒன்றுமில்லை; கண்ணனென்பார் ஊரிலுள்ளோர் என்னை" என்றான்
கட்டுறுதி யுள்ளவுடல், கண்ணிலே நல்ல குணம்
ஒட்டுறவே நன்றா உரைத்திடுஞ்சொல் - ஈங்கிவற்றால்; 30

தக்கவனென் றுள்ளத்தே சார்ந்த மகிழ்ச்சியுடன்,
"மிக்கவுரை பலசொல்லி விருதுபல சாற்றுகிறாய்;
கூலியென்ன கேட்கின்றாய்? கூறு" கென்றென். "ஐயனே!
தாலிகட்டும் பெண்டாட்டி சந்ததிக ளேதுமில்லை;
நானோர் தனியாள்; நரைதிரை தோன்றா விடினும் 35

ஆன வயதிற் களவில்லை; தேவாணர்
ஆதரித்தாற் போதும் அடியேனை; நெஞ்சிலுள்ள
காதல் பெரிதெனக்குக் காசுபெரி தில்லை" யென்றான்.
பண்டைக் காலத்துப் பயித்தியத்தில் ஒன்றெனவே
கண்டு மிகவும் களிப்புடனே நானவனை 40

ஆளாகக் கொண்டு விட்டேன் அன்று முதற்கொண்டு,
நாளாக நாளாக, நம்மிடத்தே கண்ணனுக்குப்
பற்று மிகுந்துவரல் பார்க்கின்றேன்; கண்ணனால்
பெற்றுவரும் நன்மையெல்லாம் பேசி முடியாது
கண்ணை இமையிரண்டும் காப்பதுபோல், என்குடும்பம் 45

எண்ணமுறக் காக்கின்றான் வாய்முணுத்தல் கண்டறியேன்
வீதி பெருக்குகிறான்; வீடுசுத்த மாக்குகிறான்;
தாதியர்செய் குற்றமெல்லாம் தட்டி யடக்குகிறான்;
மக்களுக்கு வாத்தி, வளர்ப்புத்தாய், வைத்தியனாய்
ஒக்கநயங் காட்டுகிறான்; ஒன்றுங் குறைவின்றிப் 50

பண்டமெல்லாம் சேர்த்துவைத்துப் பால்வாங்கி மோர் வாங்கிப்
பெண்டுகளைத் தாய்போற் பிரியமுற ஆதரித்து
நண்பனாய், மந்திரியாய், நல்லா சிரியனுமாய்,
பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய்,
எங்கிருந்தோவந்தான் இடைச்சாதியென்று சொன்னான். 55

இங்கிவனை யான்பெறவே என்னதவஞ் செய்துவிட்டேன்!
கண்ணன் எனதகத்தே கால்வைத்தநாள் முதலாய்
எண்ணம் விசாரம் எதுவுமவன் பொறுப்பாய்ச்
செல்வம், இளமாண்பு, சீர், சிறப்பு, நற்கீர்த்தி,
கல்வி, அறிவு, கவிதை, சிவயோகம், 60

தெளிவே வடிவாம் சிவஞானம், என்றும்
ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கிவரு கின்றனகாண்!
கண்ணனை நான் ஆட்கொண்டேன்! கண்கொண்டேன்! கண்கொண்டேன்!
கண்ணனெனை யாட் கொள்ளக் காரணமும் உள்ளனவே!



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com