Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruRebelAmbedkar
பாபாசாகேப் பேசுகிறார்

தலித் மக்களை அரசியலிலிருந்து துடைத்தெறிவதற்கான முதல் முயற்சியல்ல இது!

Ambedkar

தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிப்பதற்குச் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகளால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து, திரு. காந்தி தெரிவித்துள்ள அச்சம் முற்றிலும் கற்பனையானது என்பது என் கருத்து. முஸ்லிம்களுக்கும், சீக்கியர்களுக்கும் தனி வாக்காளர் தொகுதிகள் அளிப்பதால், நாடு பிளவுபடப் போவதில்லை என்ற நிலையில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களுக்குத் தனிவாக்காளர் தொகுதிகள் வழங்குவதால், இந்து சமுதாயம் பிளவுபட்டு விடும் என்று கூற முடியாது...

பெரும்பான்மையினரின் கொடுங்கோன்மையிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு, சுயாட்சி அரசியலமைப்பின்படி சிறப்பு அரசியல் உரிமைகள் பெறுவதற்குத் தகுதிபெற்ற ஒரு வகுப்பினர் எவரேனும் இருப்பார்களேயானால், அவர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்தான் என்பதைப் பலரும் உணர்ந்திருக்கிறார்கள் என்பது உறுதி. இவர்கள் உயிர் வாழும் போராட்டத்தில், தாக்குப்பிடித்து நிற்க முடியாத நிலையில் உள்ளனர். அவர்கள் பிணைக்கப்பட்டுள்ள மதம் அவர்களுக்கு ஒரு கவுரவமான இடத்தை அளிப்பதற்குப் பதில், அவர்களைத் தொழுநோயாளிகள் போல் நடத்துகிறது; இயல்பான சமூகத் தொடர்புக்கு அருகதையற்றவர்கள் என்று அவர்களுக்கு முத்திரை குத்துகிறது. பொருளாதார ரீதியில் பார்த்தால், தங்களின் அன்றாட வாழ்க்கைக்கு, சாதி இந்துக்களை முழுவதுமாக சார்ந்திருக்க வேண்டிய ஒரு வகுப்பாக அது இருந்து வருகிறது. சுதந்திரமாக வாழ்க்கை நடத்துவதற்கு, அதற்கு எந்த வழியும் இல்லை.

இந்துக்களின் எதிர்ச்சார்பான மனோபாவத்தால், அவர்களுக்குப் பல்வேறு வழிகளும் அடைக்கப்பட்டு விட்டன. அது மட்டுமல்ல, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் வாழ்க்கையில் முன்னேறி விடாதபடி தடுப்பதற்கு, இந்து மதத்தின் எல்லா கதவுகளையும் அவர்களுக்கு மூடிவிடுவதற்குத் திட்டமிட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கிராமங்களில் சாதாரண இந்தியக் குடிமக்களாக சிதறுண்டு, ஒரு சிறு அமைப்பாக இருந்துவரும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மேற்கொள்ளும் எந்த முயற்சியையும் ஈவு இரக்கமின்றி ஒடுக்குவதற்கு சாதி இந்துக்கள், அவர்கள் என்னதான் தங்களுக்குள் பிளவுபட்டிருந்தாலும், எப்போதும் சதி செய்தே வருகின்றனர்.

இத்தகைய சூழ்நிலையில், திட்டமிட்ட கொடுங்கோன்மையை எதிர்த்து நடத்தப்பட்டு வரும் வாழ்க்கைப் போராட்டத்தில், வெற்றிபெறும் பாதையில் எத்தனை எத்தனையோ இடர்ப்பாடுகளை சந்தித்து வரும் ஒரு வகுப்பினர் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்குள்ள ஒரே வழி, அரசியல் அதிகாரத்தில் ஓரளவு பங்குபெறுவதுதான் என்பதை நியாய உள்ளம் கொண்ட எல்லோருமே ஏற்றுக் கொள்வர்...

தாழ்த்தப்பட்ட மக்களின் நலன் விரும்பும் ஒருவர், புதிய அரசியலமைப்பில் அவர்களுக்கு எவ்வளவு முடியுமோ, அவ்வளவு அதிகாரத்தைப் பெற்றுத் தருவதற்கு திரு. காந்தி சற்றும் விட்டுக் கொடுக்காமல் போராடுவார் என்றுதான் நினைத்தேன். ஆனால், மகாத்மாவின் சிந்தனைப் போக்குகள் விந்தையாக இருக்கின்றன; புரிந்து கொள்வதற்கு முடியாதவையாக இருக்கின்றன. வகுப்புத் தீர்ப்பின்படி, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பெறும் அற்பமான அரசியல் அதிகாரத்தை அதிகப்படுத்துவதற்கு அவர் முயற்சி மேற்கொள்ளவில்லை. அது மட்டுமன்றி, அவர்கள் பெறக்கூடிய சிறிதளவு அதிகாரத்தையும் அவர்களிடமிருந்து தட்டிப்பறிப்பதற்கு, தமது உயிரையே பலியிட முன்வந்திருக்கிறார். அரசியல் வாழ்விலிருந்து தாழ்த்தப்பட்ட மக்களை அறவே துடைத்தெறிவதற்கு, மகாத்மா செய்யும் முதல் முயற்சி அல்ல இது...

மகத்திலும் நாசிக்கிலும் நடைபெற்ற சச்சரவுகளில், இந்து சீர்திருத்தவாதிகள் எனப்படுவோர் எந்த லட்சணத்தில் நடந்து கொண்டனர் என்ற அனுபவம் எனக்கு உண்டு. தாழ்த்தப்பட்டோரின் நலனில் உண்மையிலேயே அக்கறை கொண்ட எவரும், தாழ்த்தப்பட்ட மக்களை கைதூக்கிவிடும் பொறுப்பை, மேம்பாடடையச் செய்யும் சீரிய பணியை இத்தகைய நம்பிக்கை துரோகிகளிடம் ஒப்படைக்க ஒருபோதும் சம்மதிக்க மாட்டார்கள் என்பதை இந்த அனுபவத்தைக் கொண்டு துணிந்து கூறுவேன். நெருக்கடி வேளையில், தங்கள் இனத்தவன் உணர்ச்சிகளைப் புண்படுத்துவதைவிட, தங்கள் கோட்பாடுகளை உதறித் தள்ளிவிடத் தயாராக இருக்கும் சீர்திருத்தவாதிகளால் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு எந்தப் பயனும் இல்லை...

இந்து அரவணைப்பிலிருந்து விடுபடுவதற்கு, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தீர்மானித்துவிட்டால் இவ்வகையான எத்தகைய நிர்பந்தம் கொண்டு அவர்களை அந்த அரவணைப்பில் நீடிக்கச் செய்ய முடியாது. இந்து மதம் அல்லது அரசியல் அதிகாரம் இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும்படி தீண்டத்தகாதவர்களை மகாத்மா கேட்டுக் கொண்டால், அவர்கள் அரசியல் அதிகாரத்தைதான் தேர்ந்தெடுப்பார்கள். இதன் மூலம் மரணத்தின் பிடியிலிருந்து மகாத்மாவை காப்பாற்றுவார்கள்... ஆனால், மகாத்மாவின் உயிரா அல்லது என் மக்களின் உரிமைகளா? இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் நிலைக்கு அவர் என்னைத் தள்ளமாட்டார் என்று நம்புகிறேன். ஏனென்றால் என் மக்களைக் குண்டுகட்டாகக் கட்டி, தலைமுறை காலத்துக்கு சாதி இந்துக்களிடம் ஒப்படைக்க, நான் ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டேன்.

.இத்தகைய சூழ்நிலையில், திட்டமிட்ட கொடுங்கோன்மையை எதிர்த்து நடத்தப்பட்டு வரும் வாழ்க்கைப் போராட்டத்தில், வெற்றிபெறும் பாதையில் எத்தனை எத்தனையோ இடர்ப்பாடுகளை சந்தித்து வரும் ஒரு வகுப்பினர் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்குள்ள ஒரே வழி, அரசியல் அதிகாரத்தில் ஓரளவு பங்குபெறுவதுதான் என்பதை நியாய உள்ளம் படைத்த எல்லோருமே ஏற்றுக் கொள்வர்.

(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு 9, பக்கங்கள் : 311 - 317)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com