Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruRebelAmbedkar
பாபாசாகேப் பேசுகிறார்

சமூக ஜனநாயகம் மறுக்கப்படுவது ஏன்?

Ambedkar

ஜனநாயகத்தைக் கருத்தளவில் மட்டுமல்லாது, நடைமுறையிலும் பின்பற்ற வேண்டும் எனில், நாம் என்ன செய்ய வேண்டும்? என்னுடைய கருத்துப்படி, நம்முடைய சமூக, பொருளியல் நோக்கங்களை நிறைவேற்ற நாம் சட்டரீதியான முறைகளைக் கையாள வேண்டும். நாம் ரத்தந்தோய்ந்த புரட்சியைக் கைவிட வேண்டும் என்பதே இதன் பொருள். சட்டமீறல், ஒத்துழையாமை மற்றும் சத்யாகிரகம் ஆகிய முறைகளைக் கைவிட வேண்டும் என்பதே இதன் பொருள். சமூக, பொருளாதார நோக்கங்களை நிறைவேற்ற சட்டரீதியான வழிகள் இல்லாது போனால், அந்நோக்கங்களை அடைய சட்டத்திற்குப் புறம்பான வழி முறைகளைக் கையாள்வதில் ஓரளவுக்கு நியாயம் இருக்கலாம். ஆனால், சட்டரீதியான வழிகள் திறந்திருக்கும் போது, சட்டத்திற்குப் புறம்பான வழிமுறைகளைக் கையாளுவதில் எந்த நியாயமுமில்லை. இவ்வழிமுறைகள் எல்லாம் குழப்பத்திற்கே வழிவகுக்கும். எனவே, எவ்வளவு விரைவில் இதைக் கைவிடுகிறோமோ அந்தளவுக்கு அது நல்லது.

ஜனநாயகத்தைப் பேணிக் காப்பாற்ற விரும்புகிறவர்கள் செய்ய வேண்டிய இரண்டாவது பணி, ஜான் ஸ்டூவர்ட் மில்லின் எச்சரிக்கையைக் கவனத்தில் கொள்வது: "உங்களுடைய சுதந்திரத்தை எவ்வளவு பெரிய மனிதனின் காலடியிலும் வைத்துவிட வேண்டாம். அல்லது பெரிய மனிதர்களை முழுமையாக நம்பி முழு அதிகாரத்தையும் அவர்களிடம் ஒப்படைத்து விடாதீர்கள்.'' நாட்டுக்காகத் தன் வாழ்நாள் முழுவதும் உழைத்த பெரிய மனிதர்களுக்கு நன்றிக் கடன் செலுத்துவதில் எந்தத் தவறுமில்லை. ஆனால், நன்றி செலுத்துவதற்கும் ஓர் எல்லை உண்டு. "எந்தவொரு மனிதனும் தன்னுடைய மானத்தை விலையாகக் கொடுத்து நன்றியுணர்வைக் காட்ட மாட்டான்; எந்தவொரு பெண்ணும் தன்னுடைய நன்றியுணர்வுக்கு கற்பை விலை போச மாட்டாள்; எந்தவொரு தேசமும் தன்னுடைய நன்றியுணர்வுக்கு சுதந்திரத்தை விலையாகத் தராது.'' என்று மிகச் சரியாகவே சொன்னார் அய்ரீஷ் தேசியவாதி டேனியல் ஓ கானெல்.

இந்த எச்சரிக்கை, வேறு எந்த நாட்டுக்குப் பொருந்துவதைவிட இந்தியாவுக்குப் பெரிதும் பொருந்துகிறது. இந்தியாவில், ‘பக்தி' அல்லது வழிபாட்டு முறை அல்லது தலைவர்களை வழிபடுதல், அரசியலில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இப்பழக்கத்தை, உலகின் வேறு எந்தப் பகுதியிலும் உள்ள வழக்கத்துடனும் ஒப்பிட முடியாது. மதத்தில் இருக்கும் ‘பக்தி'யானது பாவ விமோசனம் பெறுவதற்குப் பயன்படலாம். ஆனால், அரசியலில் ‘பக்தி' அல்லது ‘மனித வழிபாடு' கண்டிப்பாக அழிவுக்கான பாதையாகவே அமையும். இறுதியில், அதுவே நிரந்தர சர்வாதிகாரத்திற்கும் வழிவகுத்துவிடும்.

நாம் செய்ய வேண்டிய மூன்றாவது பணி, வெறும் அரசியல் ஜனநாயகத்துடன் நாம் நின்றுவிடக் கூடாது. நமது அரசியல் ஜனநாயகத்தை, ஒரு சமூக ஜனநாயகமாக நாம் மாற்றியாக வேண்டும். அரசியல் ஜனநாயகத்தின் அடிப்படையாக சமூக ஜனநாயகம் இல்லாது போனால், அரசியல் ஜனநாயகம் நிலைத்து நிற்காது. சமூக ஜனநாயகம் என்றால் என்ன? சமூக ஜனநாயகம் என்பது சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை அங்கீகரிக்கும் ஒரு வாழ்க்கை நெறிமுறை. சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய மூன்று கொள்கைகளும் தனித்தனியாகப் பார்க்கப்படக் கூடாது. இம்மூன்றும் ஒருங்கிணைந்திருக்க வேண்டும். ஒன்றிருந்து ஒன்று இல்லாது போனால், ஜனநாயகத்தின் முக்கிய அம்சமே தோற்றுப் போய்விடும்.

சுதந்திரம் சமத்துவத்திலிருந்து பிரிக்கப்படக் கூடாது. சமத்துவம் சுதந்திரத்திலிருந்து பிரிக்கப்படக் கூடாது. சுதந்திரமும் சமத்துவமும் சகோதரத்துவத்திலிருந்து பிரிக்கப்படக் கூடாது. சமத்துவம் இல்லாத, சுதந்திரத்தால், ஒரு சிலரின் அதிகாரம் பெரும்பான்மையினர் மீது திணிக்கப்படும் நிலை ஏற்பட்டு விடும். சுதந்திரம் இல்லாத சமத்துவம், தனிநபர்களின் முயற்சியைக் கொன்றுவிடும். சகோதரத்துவம் இல்லை எனில், சுதந்திரமும் சமத்துவமும் இயற்கையான ஒன்றாக ஒன்றிணைந்து இருக்காது.

இவற்றை நடைமுறைப்படுத்த ஒரு கண்காணிப்பு தேவைப்படுகிறது. இந்திய சமூகத்தில், இவ்விரண்டு கூறுகளும் முழுவதுமாக இல்லை என்ற எதார்த்த உண்மை நிலையை ஒப்புக் கொண்டு நாம் தொடங்குவோம். அதில் ஒன்று சமத்துவம். இந்தியாவில் சமூகத் தளத்தில், படிநிலைப்படுத்தப்பட்ட கொள்கையின் அடிப்படையில் அமைந்த ஒரு சமூகமே நிலவுகிறது. இதன் பொருள், சிலர் உயர்ந்த நிலையிலும் மற்றவர்கள் தாழ்ந்த நிலையிலும் உள்ளனர். பொருளாதாரத் தளத்தில், சிலர் மிகவும் செழிப்பான நிலையிலும் எஞ்சியிருப்போர் கடும் வறுமையிலும் உழலுகின்ற ஒரு சமூகமாகவே இருக்கிறது.

26 சனவரி 1950 அன்று, நாம் முரண்பாடுகளுடனான ஒரு வாழ்க்கையில் நுழையப் போகிறோம்: அரசியல் சமத்துவம் இருக்கும்; சமூக, பொருளாதாரத் தளத்தில் சமத்துவமற்ற நிலையே நீடிக்கும். அரசியலில் நாம் ஒரு மனிதன் ஒரு ஓட்டு ஒரு மதிப்பு என்ற கொள்கையை அங்கீகரித்திருப்போம். சமூக, பொருளாதாரத் தளத்தில், நாம் ஒரு மனிதன் - ஒரு மதிப்பு என்ற கொள்கையைத் தொடர்ந்து மறுத்தே வருவோம். இத்தகைய முரண்பாடுகளுடனான வாழ்க்கை முறையை எத்தனை நாளைக்கு நாம் அனுமதிப்பது?


25.11.1949 அன்று, மக்களவையில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com