Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruRebelAmbedkar
பாபாசாகேப் பேசுகிறார்

இந்தியா ஒரு சர்வாதிகார நாடாக மாறுமா?

Ambedkar

நம் நாட்டின் எதிர்காலம் பற்றிய சிந்தனையிலேயே நான் மூழ்கியிருக்கிறேன். 26 சனவரி 1950இல் இந்தியா ஒரு சுதந்திர நாடாக இருக்கும். ஆனால், இந்த நாட்டின் சுதந்திரம் எந்த நிலையில் இருக்கும்? தன்னுடைய சுதந்திரத்தை அது தக்க வைத்துக் கொள்ளுமா அல்லது மீண்டும் இழக்க நேரிடுமா? என்னுடைய சிந்தனையில் எழுந்துள்ள முதல் கேள்வி இது. இந்தியா, இதற்கு முன்பு சுதந்திர நாடாக இருந்ததில்லை என்பதல்ல. ஆனால், ஏற்கனவே இருந்த சுதந்திரத்தை அது இழந்திருக்கிறது. இரண்டாவது முறையும் அது தனது சுதந்திரத்தை இழக்க நேரிடுமா? இந்த எண்ணம்தான், இந்த நாட்டின் எதிர்காலத்தைப் பற்றி மிகவும் அதிகமாக கவலை கொள்ள வைக்கிறது. இதைவிட என்னைப் பெரிதும் குழப்பும் செய்தி: இந்தியா இதற்கு முன்பு தனது சுதந்திரத்தை இழந்தது என்பது மட்டுமல்ல; நம் சொந்த மக்களின் துரோகத்தினால்தான் அது சுதந்திரத்தை இழக்க நேர்ந்தது.
சிந்து மாகாணத்தை முகமதுபின் காசிம் படையெடுத்து வந்தபோது, தாகர் அரசனின் ராணுவத் தளபதிகள், முகமதுபின் காசிம்மின் முகவர்களிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு, தமது அரசனின் சார்பாக நின்று போர் புரிய மறுத்து விட்டனர். முகமது கோரியை இந்தியா மீது படையெடுத்து வருமாறு அழைத்து, பிருத்திவிராஜை எதிர்த்துச் சண்டையிட வைத்தது ஜெய்சந்த். இவர், இப்படையெடுப்பிற்குத் தன்னுடைய உதவியையும் சோலங்கி அரசர்களின் உதவியையும் அளிக்க உறுதி அளித்தார்.

இந்துக்களின் விடுதலைக்காக சிவாஜி போரிட்டபோது, பிற மராட்டிய உயர் குடியினரும் ராஜ்புத்திர அரசர்களும், முகலாயப் போரரசர்கள் சார்பாகப் போரிட்டுக் கொண்டிருந்தனர். ஆங்கிலேயர்கள், சீக்கிய ஆட்சியாளர்களை அழிக்க முயன்றபோது, சீக்கியர்களின் முக்கிய தளபதியான குலாப் சிங், சீக்கிய அரசைக் காப்பாற்றாமல் அமைதி காத்தார். 1857இல் ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்தியாவின் பெரும்பகுதி மக்கள் போர்ப் பிரகடனம் செய்தபோது, சீக்கியர்கள் இந்நிகழ்வை அமைதியாக வேடிக்கைப் பார்த்தனர்.

இதே வரலாறு, மீண்டும் மீண்டும் நிகழுமா? இந்த எண்ணமே என்னைக் கவலையில் ஆழ்த்துகிறது. ஏற்கனவே நம்மிடையே சாதி, மதம் என்ற வடிவில் இருக்கும் எதிரிகளுடன் எதிரும் புதிருமான பல்வேறு அரசியல் கட்சிகளை நாம் சந்திக்க இருக்கிறோம். இது என்னை மேலும் மேலும் கவலையில் ஆழ்த்துகிறது. இந்திய மக்கள் நாட்டை, தங்களின் மதக் கொள்கைகளுக்கும் மேலாக வைத்துப் பார்க்கப் போகிறார்களா அல்லது நாட்டிற்கும் மேலாக மதத்தை வைக்கப் போகிறார்களா? எனக்குத் தெரியவில்லை. ஆனால், அரசியல் கட்சிகள், தங்களின் மதக் கொள்கைகளை நாட்டுக்கும் மேலாக நிறுத்தினார்கள் என்றால், நமது சுதந்திரம் இரண்டாவது முறை மீட்கவே முடியாத நெருக்கடிக்குத் தள்ளப்பட்டு விடும் என்பது மட்டும் உறுதி. இந்த நிலை வராதவாறு, நாம் ஒருங்கிணைந்து பாதுகாக்க வேண்டும். நமது சுதந்திரத்தை, நமது கடைசிச் சொட்டு ரத்தம் இருக்கும் வரை காப்பாற்ற நாம் உறுதி ஏற்க வேண்டும்.

26 சனவரி 1950 அன்று, இந்தியா ஒரு குடியரசாக அதாவது, மக்களுடைய மக்களால் மக்களுக்கான அரசாக ஆகப் போகிறது. மீண்டும் அதே சிந்தனை என்னுள் ஏற்படுகிறது. இந்த நாட்டின் குடியரசுச் சட்டத்திற்கு என்ன நேரும்? இது தன்னைத் தக்க வைத்துக் கொள்ளுமா அல்லது இழக்க நேரிடுமா? இது என்னுள் எழும் இரண்டாவது எண்ணம். முதல் சிந்தனை போலவே இதுவும் என்னை மிகவும் கவலை கொள்ள வைக்கிறது. இந்தியா இதற்கு முன்பு ஜனநாயக நாடாக இருந்ததில்லை என்பதல்ல. ஒரு காலத்தில், இந்தியா குடியரசாக இருந்திருக்கிறது அரசர்கள் ஆட்சி செய்திருக்கின்றனர். அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். அவர்கள் எதேச்சதிகாரமுள்ளவர்களாக இருக்க வில்லை. அவர்களின் எல்லைகள் வரையறுக்கப்பட்டிருந்தன. இந்தியாவுக்கு நாடாளுமன்றமும், அதன் நடைமுறைகளும் புதிதல்ல. பவுத்த பிக்கு சங்கங்களின் வரலாற்றை ஆய்வு செய்தால், அங்கு நாடாளுமன்றங்கள் இருந்திருக்கின்றன. சங்கங்கள், நாடாளுமன்றங்களேயன்றி வேறு அல்ல. ஆனால், சங்கத்து உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தின் நவீன காலத்தின் அத்துணை நடைமுறைகளையும் கடைப்பிடித்து வந்தனர்.

நாடாளுமன்றத்தில் உட்காரும் இடத்தை சீர் செய்வது, தீர்மானங்களை நிறைவேற்றுவது, குறைநிறைகளைப் பார்ப்பது, வாக்கு எண்ணுவது, வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்துவது போன்ற சட்டவிதிகளைக் கடைப்பிடித்து வந்தனர். பிக்கு சங்கங்களில், அனைத்து நாடாளுமன்ற நடைமுறைகளும் புத்தரால் கடைப்பிடிக்கப்பட்டன.
இத்தகைய ஜனநாயக அமைப்பு முறையை இந்தியா இழந்து விட்டது. இரண்டாவது முறையும் அது இழக்க நேரிடுமா? எனக்குத் தெரியவில்லை. ஆனால், ஜனநாயகம் நீண்ட நாட்களாகக் கடைப்பிடிக்கப்படாத இந்தியா போன்ற ஒரு நாட்டில், ஜனநாயகம் சர்வாதிகாரத்திற்கு வழிவகுத்து விடும் ஆபத்து இருக்கிறது. புதிதாகப் பிறந்த ஜனநாயகம், தனது இடத்தை மாற்றி சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்க வாய்ப்பிருக்கிறது. தேர்தலில் ஒரு கட்சிக்கே எதிர்பாராத பெரும் வெற்றி கிடைத்துவிட்டால், சர்வாதிகாரம் வருவதற்கே வாய்ப்பு அதிகம்.

25.11.1949 அன்று, மக்களவையில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி.நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com