Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruRebelAmbedkar
பாபாசாகேப் பேசுகிறார்

பொதுவுடைமை அரசால் நன்மை உண்டாகுமா?

Ambedkar

பொதுவுடைமைக் கொள்கையின்படி அரசு, நிரந்தர சர்வாதிகாரத் தன்மையுடன் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது, தங்களுடைய அரசியல் தத்துவத்தில் ஒரு பலவீனமான அம்சம் என்று பொதுவுடைமைவாதிகளே உணர்கிறார்கள். ஆனால், அரசு அமைப்பு இறுதியாக வாடி, காய்ந்து உதிர்ந்து போய் விடும் என்று கூறி அதன் கீழ் புகலிடம் தேடுகிறார்கள். ஆனால், அவர்கள் இரண்டு கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. எப்போது அது உதிர்ந்து போகும்? அரசு உதிர்ந்து போகும்போது அதன் இடத்துக்கு எது வரும்? முதல் கேள்விக்கு அவர்கள் நிச்சயமான பதில் எதுவும் கூற முடியாது.

ஒரு குறுகிய காலத்துக்கு சர்வாதிகாரம் இருப்பது, ஜனநாயகத்தைப் பாதுகாப்பானதாக வைப்பதற்குக்கூட நல்லதாக இருக்கலாம். சர்வாதிகாரம் தன் வேலையைச் செய்து முடித்தபிறகு, ஜனநாயகத்தின் பாதையில் எதிர்ப்படும் தடைகளையும் பாறைகளையும் அகற்றிய பிறகு, ஜனநாயகப் பாதையைப் பாதுகாப்பானதாக ஆக்கிய பிறகு அது, தன்னைத் தானே ஏன் கலைத்துக் கொள்ளக் கூடாது? அசோகரே இதற்கு எடுத்துக்காட்டாக விளங்கவில்லையா? அவர் கலிங்கத்தின் மீது வன்முறையைப் பயன்படுத்தினார். ஆனால், அதன்பிறகு அவர் வன்முறையை முற்றிலுமாகக் கைவிட்டார். இன்று நம்மில் வெற்றி பெற்றவர்கள், தங்களிடம் தோல்வியடைந்தவர்களின் ஆயுதங்களைக் களைவது மட்டுமின்றி, தங்களுடைய ஆயுதங்களையும் களைந்து விட்டால் உலகம் முழுவதும் அமைதி நிலவும்.

பொதுவுடைமைவாதிகள் இதற்கு எந்த பதிலையும் கூறவில்லை. அரசு வாடி, காய்ந்து உதிர்ந்து போகும்போது, அதன் இடத்துக்கு எது வரும் என்ற கேள்விக்கு நிறைவான பதில் கூறப்படவில்லை. இந்தக் கேள்வி, அரசு எப்போது உதிர்ந்து போகும் என்பதை விட முக்கியமானது. அதன் பிறகு அராஜகம் வருமா? அப்படியானால், பொதுவுடைமை அரசை உருவாக்குவது பயனற்ற செயலாகும். வன்முறையினால்தான் அதைத் தாங்கிப் பிடிக்க முடியும்; அதற்கு ஆதரவாக நிற்கும் வன்முறையை விலக்கிக் கொண்டால், அராஜகம் ஏற்படும் என்றால் பொதுவுடைமை அரசினால் என்ன நன்மை?

வன்முறையை விலக்கிக் கொண்டபிறகு, அது நிலைநிற்குமாறு தாங்கக் கூடியது மதம் ஒன்றுதான். ஆனால், பொதுவுடைமைவாதிகளுக்கு மதம் என்பது முற்றிலும் வெறுக்கத்தக்கதாகும். மதத்தின் மீது அவர்கள் மிக ஆழ்ந்த வெறுப்பு கொண்டிருப்பதால், பொதுவுடைமைக்கு உதவியாக இருக்கக் கூடிய மதங்களுக்கும், உதவியாயில்லாத மதங்களுக்கும் இடையே வேறுபாடு பார்க்க மறுக்கிறார்கள். பொதுவுடைமைவாதிகள் கிறித்துவ மதத்தின் மீது கொண்டுள்ள வெறுப்பை, புத்த மதத்தின் மீதும் காட்டுகிறார்கள்; இந்த இரண்டுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டைக் காணும் பொறுமை அவர்களிடம் இல்லை.

கிறித்துவ மதத்தின் மீது பொதுவுடைமைவாதிகள் கூறும் குற்றச்சாட்டு இரண்டு வகையானது. முதலாவது குற்றச்சாட்டு, கிறித்துவ மதம் மக்களை மறு உலக மனப்பான்மை கொண்டவர்களாக்கி, இந்த உலகில் வறுமையை சகித்துக் கொள்ளச் செய்கிறது என்பதாகும். முன்பு எடுத்துக்காட்டப்பட்ட மேற்கோள்களிலிருந்து புத்த மதத்தின் மீது இத்தகைய குற்றச்சாட்டைக் கூற முடியாது என்பது தெளிவாகும்.

கிறித்துவ மதத்தின் மீது பொதுவுடைமைவாதிகள் கூறும் இரண்டாவது குற்றச்சாட்டையும் புத்த மதத்தின் மீது கூறமுடியாது. ‘மதம் மக்களின் அபின்' என்று பொதுவுடைமைவாதிகள் கூறும் கூற்றில் இந்தக் குற்றச்சாட்டு அடங்கியுள்ளது. ‘பைபிளில்' கூறப்படும் மலைப் பிரசங்கத்தை அடிப்படையாகக் கொண்டு, இந்தக் குற்றச்சாட்டு கூறப்படுகிறது. மலைப் பிரசங்கம் வறுமையையும் பலவீனத்தையும் மேல் நிலைக்கு உயர்த்துகிறது. ஏழைகளும் பலவீனர்களும் பரலோகத்தை அடைவார்கள் என்று அது வாக்களிக்கிறது. புத்தருடைய அறிவுரைகளில் மலைப் பிரசங்கத்தைப் போன்ற எதுவும் இல்லை. அவருடைய அறிவுரை, செல்வம் சேர்க்கச் சொல்கிறது. இது குறித்து புத்தர், தம்முடைய சீடர்களில் ஒருவரான அனாதபிண்டிகாவுக்கு அளித்த அறிவுரையை கீழே தருகிறேன்.
ஒருமுறை அனாதபிண்டிகா, புத்தர் தங்கியிருந்த இடத்துக்கு வந்தார். அவருக்கு வணக்கம் செலுத்திவிட்டு அருகில் அமர்ந்து கொண்டு இவ்வாறு கேட்டார்: “இல்வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளவனுக்குப் பெறுவதற்கு அரிதான, ஆனால், அதே நேரம் வரவேற்கத்தக்க, மகிழ்ச்சியான, உவப்பான விஷயங்கள் எவை என்று புத்தர் கூறுவாரா?''

புத்தர் இந்தக் கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்: "இத்தகைய விஷயங்களில் முதலாவது விஷயம், சட்டப்படி செல்வம் சேர்ப்பதாகும். இரண்டாவது விஷயம், உங்களுடைய உறவினர்களும் சட்டப்படி செல்வம் சேர்க்குமாறு பார்த்துக் கொள்வதாகும். மூன்றாவது விஷயம், நீண்ட காலம் வாழ்ந்து முதுமை அடைவதாகும்.''

"உண்மையில் இல்வாழ்வான் பெறுவதற்கு அரிதான, ஆனால், வரவேற்கத்தக்க, மகிழ்ச்சியான, உவப்பான, இவற்றை அடைவதற்கு முன்பு நான்கு நிபந்தனைகள் உள்ளன. நம்பிக்கை என்ற அருள்வளம், அறநெறி ஒழுக்க நடத்தை என்ற அருள்வளம், தாராளத்தன்மை என்ற அருள்வளம், விவேகம் என்ற அருள்வளம் ஆகியவை இந்த நிபந்தனைகளாகும்.''


‘பாபாசாகேப் டாக்டர் அம்போத்கர் ஆங்கில நூல் தொகுப்பு' : 3 பக்கம் : 453


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com