Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruRebelAmbedkar
பாபாசாகேப் பேசுகிறார்

19. புத்தரின் அகிம்சை ஆக்கப்பூர்வமான வன்முறையே

Ambedkar

நாம் வழிவகைகளை மதிப்பீடு செய்ய வேண்டும். யாருடைய வழிவகைகள் மேலானவை, நீண்டகாலம் நிலைத்துப் பயன்தருபவை என்று பார்க்க வேண்டும். எப்படி இருப்பினும், இரு தரப்பிலும் சில தவறான புரிதல்கள் உள்ளன. இதைத் தெளிவுபடுத்த வேண்டியது அவசியம். வன்முறையை எடுத்துக் கொள்ளுங்கள். பலருக்கு வன்முறையைப் பற்றிய நினைப்பே நடுக்கத்தைத் தருகிறது. ஆனால், இது வெறும் உணர்ச்சியே. வன்முறையை முற்றிலுமாகக் கை விட்டுவிட முடியாது. பொதுவுடைமையைக் கடைப்பிடிக்காத நாடுகளிலும், கொலை செய்தவன் தூக்கிலிடப்படுகிறான். தூக்கிலிடுவது வன்முறை ஆகாதா? பொதுவுடைமை அற்ற நாடுகள், பொதுவுடைமை அற்ற பிற நாடுகள் மீது போர் தொடுக்கின்றன. பல லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்படுகிறார்கள். இது வன்முறை ஆகாதா?

ஒரு கொலைகாரன், ஒரு குடிமகனைக் கொன்றான் என்பதற்காக அவனைக் கொல்லலாம் என்றால், போரில் ஒரு படை வீரன் பகை நாட்டைச் சேர்ந்தவன் என்பதற்காக இன்னொருவனைக் கொல்லலாம் என்றால், உடைமைகள் தனி ஒருவனுக்குச் சொந்தமாயிருக்கும் காரணத்தால் பிற மனிதர்கள் துன்பத்துக்குள்ளாகிறார்கள் என்றால், அந்த உடைமைகளின் சொந்தக்காரனை ஏன் கொல்லக் கூடாது? உடைமைகளின் சொந்தக்காரனுக்கு ஏன் விலக்களிக்க வேண்டும்? தனியுடைமை ஏன் புனிதமானதாகக் கருதப்பட வேண்டும் என்பதற்குக் காரணமே இல்லை.

புத்தர் வன்முறையை எதிர்த்தார். ஆனால், அவர் நீதியை ஆதரித்தார்; நீதியை நிலைநாட்ட வன்முறையைப் பயன்படுத்துவதை அவர் அனுமதித்தார். அவருக்கும் வைசாலியின் படைத் தலைவரான சிம்ம சேனாவுக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் இதை விளக்குகிறது. புத்தர் அகிம்சையை அறிவுறுத்துகிறார் என்று கேள்விப்பட்ட சிம்மசேனா அவரிடம் சென்று கேட்டார்:

"பகவானே, நீங்கள் அகிம்சையை அறிவுறுத்துகிறீர்கள். அப்படியெனில், குற்றம் செய்த ஒருவனை தண்டிக்காமல் விட்டுவிட வேண்டுமா? நாங்கள் எங்களுடைய மனைவி, குழந்தைகள் மற்றும் செல்வங்களைக் காப்பாற்றுவதற்குப் போர் செய்யக் கூடாது என்று சொல்கிறீர்களா? அகிம்சையின் பெயரால் நாங்கள் குற்றவாளிகளிடம் துன்புற வேண்டுமா? ததாகதரே, நீங்கள் உண்மையின் நலனுக்கும் நீதியின் நலனுக்கும் வேண்டியதான போராயிருந்தால் கூட, அறவே தடை செய்கிறீர்களா?''

புத்தர் பதிலளித்தார்: "என் அறிவுறையை நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். குற்றம் செய்தவன் தண்டிக்கப்பட வேண்டும்; குற்றமற்றவன் விடுவிக்கப்பட வேண்டும். குற்றம் செய்தவனைத் தண்டிப்பது நீதிபதியின் தவறு அல்ல. தண்டனை விதிக்கும் நீதிபதி சட்டத்தைத்தான் செயல்படுத்துகிறார். அவர் அகிம்சையை மீறிவிட்டதாகக் குற்றம் கூற முடியாது. நியாயமான அமைதியைப் பாதுகாப்பதற்கான எல்லா வழிகளும் தோல்வியடைந்து போனால், போர் தொடங்குகிறவன் மீதுதான் இம்சையின் பொறுப்பு சாரும். தீய சக்திகளுக்கு ஒரு போதும் ஒருவன் பணியக் கூடாது. போர் இருக்கலாம். ஆனால், அது சுயநல நோக்கங்களுக்காக இருக்கக் கூடாது.''

வன்முறைக்கு எதிராகப் பேராசிரியர் ஜான் திவே கூறுவது போன்ற வேறு வாதங்களும் இருக்கின்றன. குறிக்கோள் நல்லதானால், எந்த வழிவகையும் நியாயம்தான் என்பது அறநெறியைத் தலைகீழாக மாற்றும் கொள்கை. இப்படி சொல்கிறவர்களைப் பற்றிக் குறிப்பிடுகையில் பேராசிரியர் திவே சரியாகவே கேட்கிறார்: குறிக்கோளைத் தவிர வேறு எது வழிவகையை நியாயப்படுத்த முடியும். குறிக்கோள்தான் வழிவகையை நியாயப்படுத்துகிறது என்கிறார்.

குறிக்கோள்தான் வழிவகையை நியாயப்படுத்துகிறது என்பதை புத்தர் ஒப்புக்கொண்டிருக்கக்கூடும். வேறு எது நியாயப்படுத்தக்கூடும்? குறிக்கோளின் நலனை முன்னிட்டு வன்முறை நியாயப்படுத்தப்பட்டால், அந்தக் குறிக்கோளை அடைவதற்கு வன்முறையைக் கையாள்வது சட்டபூர்வமான வழியேயாகும் என்று அவர் கூறியிருப்பார். வன்முறைதான் ஒரே வழியாயிருந்தால் உடைமையாளர்களுக்கு அவர் வன்முறையிலிருந்து நிச்சயமாக விலக்களித்திருக்க மாட்டார்.

ஆனால், குறிக்கோளை அடைவதற்கு அவரது வழிவகைகள் வேறு விதமானவை என்பதை நாம் காணப்போகிறோம். வன்முறை என்பது என்ன என பேராசிரியர் திவே சுட்டிக்காட்டியிருக்கிறார். "ஆக்கரீதியான நோக்கங்களுக்கு பலத்தைப் பயன்படுத்துவது அவசியமானாலும், பலத்தை ஒரு சக்தியாகப் பயன்படுத்துவதற்கும், அதை வன்முறையாகப் பயன்படுத்துவதற்கும் இடையே ஒரு வேறுபாடு இருப்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.''

புத்தரின் அகிம்சை, ஜைன மதத்தை நிறுவிய மகாவீரரின் அகிம்சையைப் போல அவ்வளவு முழுமையானது அல்ல. அவர் பலத்தைச் சக்தியாகப் பயன்படுத்துவதை மட்டுமே அனுமதித்திருப்பார். பொதுவுடைமைவாதிகளின் அகிம்சையைப் போல அவ்வளவு முழுமையானது அல்ல. பொதுவுடைமைவாதிகள் அகிம்சையை முற்றான ஒரு தத்துவமாகப் பேசுகிறார்கள். ஆனால், புத்தர் இதற்கு முற்றிலும் முரணான கருத்தைக் கொண்டிருந்தார்.

‘பாபாசாகேப் டாக்டர் அம்போத்கர் ஆங்கில நூல் தொகுப்பு': 3 பக்கம்: 450


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com