Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruRebelAmbedkar
பாபாசாகேப் பேசுகிறார்

எதிர்காலத் தலைமுறையும் இதே கொடுமைகளை சந்திக்க வேண்டுமா?

Ambedkar

இதுவரை நான் விவாதித்ததன் அடிப்படையில் இரண்டு உண்மைகள் தெளிவாகத் தெரிகின்றன: 1. நீங்கள் எவ்வித பலமுமின்றி உங்கள் மீதான வன்கொடுமைகளை எதிர்க்க முடியாது. 2. வன்கொடுமைகளை எதிர்க்க உங்களிடம் போதிய பலம் இல்லை. இந்த இரண்டு முடிவுகளின் தொடர்ச்சியாக மூன்றாவது உண்மை விளங்குகிறது. அது என்ன? வன்கொடுமைகளை முறியடிக்க வெளியிலிருந்து நீங்கள் பலத்தைப் பெற்றாக வேண்டும். இந்த ஆற்றலை நீங்கள் எப்படிப் பெறப் போகிறீர்கள் என்பது மிக முக்கியமான கேள்வி. இது குறித்து நீங்கள் எந்தச் சார்புமின்றி சிந்திக்க வேண்டும்.

வேறு சமூகத்துடன் நீங்கள் நெருங்கிய உறவு வைத்துக் கொள்ளாமல், வேறு மதங்களில் நீங்கள் உங்களை இணைத்துக் கொள்ளாமல், வெளியிலிருந்து நீங்கள் பலத்தைப் பெற முடியாது. இதன் மூலம் தெளிவாகத் தெரியும் உண்மை என்னவென்றால், நீங்கள் தற்போது இருக்கும் மதத்தைக் கைவிட்டு பிற சமூகத்தோடு உங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதே இல்லை எனில், நீங்கள் வேறு சமூகத்திடமிருந்து ஆதரவையும், ஆற்றலையும் பெற முடியாது. உங்களுக்கு வலிமை இல்லாதவரை, நீங்களும் உங்களுடைய எதிர்காலத் தலைமுறையும் இதே போன்ற துன்பகரமான வாழ்க்கையையே மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
இதுவரை, பொருளாதார நலன்களுக்காக ஏன் மதம் மாற வேண்டும் என்று விவாதித்தோம்.

தற்பொழுது, நம் உள்ள உணர்வுகளுக்காக ஏன் மதம் மாற வேண்டும் என்பது குறித்து சில கருத்துகளை முன்வைக்க விரும்புகிறேன். மதம் என்றால் என்ன? அது தேவையா? "மக்களை ஆள்வதே மதம்'. மதத்திற்கான உண்மையான பொருள் இதுதான். இந்து சமூகத்தில் தனி மனிதனுக்கு இடமில்லை. இந்து சமூகம் வகுப்புவாத அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளது. ஒரு தனி மனிதன் இன்னொரு தனி மனிதனுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று இந்து மதம் கற்றுக் கொடுப்பதில்லை. என்னைப் பொருத்தவரை, ஒரு தனி மனிதனை அங்கீகரிக்காத மதத்தை ஏற்க இயலாது.

ஒரு தனி மனிதனை மேம்படுத்த மூன்று காரணிகள் தேவை: 1. இரக்கம் 2. சமத்துவம் 3. சுதந்திரம். இந்து மதத்தில் இம்மூன்றில் ஏதாவது ஒரு அம்சமாவது இருப்பதாக நீங்கள் அனுபவ ரீதியாக சொல்ல முடியுமா? தீண்டாமையைவிடக் கொடிய, சமத்துவத்திற்கு எதிரான தன்மையை மனித இன வரலாற்றிலேயே காண முடியாது. நீங்கள் தொடர்ந்து இந்துக்களாகவே இருக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டதால்தான் இந்த அவல நிலையிலேயே இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். முஸ்லிம்களாக மாறிய பிற மக்கள், இந்துக்களால் தீண்டத்தகாதவர்களாகவோ, சமமற்ற நிலையிலோ நடத்தப்படுவதில்லை. கிறித்துவர்களாக மாறியவர்களுக்கும் இது பொருந்தும்.

உலகில் உள்ள கொடூரமான மக்களில் இந்துக்கள்தான் முதலிடம் வகிக்கிறார்கள். இந்துக்களின் சொல்லும் செயலும் வேறுவேறாக இருக்கிறது. இவர்களின் நாவிலே ராமனும் கையிலே கூர்வாளும் வைத்திருக்கிறார்கள். இந்துக்கள் சாதுக்களைப் போல் பேசுவார்கள். ஆனால், கொலை பாதகர்களைப் போல் நடந்து கொள்வார்கள்.
அந்த வகையில், இந்துக்களின் பார்வையில் மட்டும் நாம் கீழான மக்கள் அல்ல; இந்துக்கள் நம்மை நடத்தும் நிலை, நம்மை இந்தியா முழுவதும் கீழானவர்களாகப் பார்க்க வைக்கிறது. இந்த வெட்கக் கேடான நிலையில் இருந்து நாம் விடுபட வேண்டும் எனில், இந்தக் கசடுகளை அகற்றி நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்ற ஒரே ஒரு வழிதான் உள்ளது. அது என்ன? இந்து மதத்தாலும் இந்து சமூகத்தாலும் பூட்டப்பட்டுள்ள இரும்பு வேலிகளைத் தகர்த்தெறிய வேண்டும்.

ஒரு பொருளின் சுவையை மாற்றலாம். ஆனால், விஷத்தை அமிர்தமாக்க முடியாது. சாதிகளை ஒழிப்பது என்பது, நஞ்சை அமிர்தமாக்குவதற்கு ஒப்பானது. சுருக்கமாகச் சொன்னால், ஒரு மனிதனை இன்னொரு மனிதன் தொழுநோயாளியைப் போல் நடத்த அறிவுறுத்தும் ஒரு மதத்தில் இருக்கும்வரை, சாதியால் நம் மனதில் ஆழமாக நிலை நிறுத்தப்பட்டிருக்கும் வேறுபாடுகள் ஒரு போதும் அழியாது. தீண்டத்தகாத மக்கள் மீதான சாதிக் கொடுமைகளையும் தீண்டாமையையும் ஒழிக்க, மதத்தை மாற்றிக் கொள்வது மட்டுமே சரியான மருந்தாகும்.

மதம் மாறுவதற்கு நீங்கள் ஏன் தயங்க வேண்டும்? தற்பொழுது சாதி இந்துக்களிடையே உங்களுக்கு இருக்கும் சமூக உறவுகள் என்ன? இந்துக்களிலிருந்து முஸ்லிம்களும் கிறித்துவர்களும் எந்த அளவுக்கு ஒதுங்கி இருக்கிறார்களோ, அதேபோல்தான் நீங்களும் இருக்கின்றீர்கள். உங்கள் சமூகமும் இந்து சமூகமும் இரு தனித்த குழுக்களாகும். மதமாற்றத்தின் மூலம், ஒரு சமூகம் பிளவுபட்டுவிட்டதாக எவரும் கூற முடியாது. இன்றைக்கு எப்படி தனித்த குழுக்களாக வாழ்கின்றீர்களோ, அதேபோல்தான் இனியும் இருக்கப் போகின்றீர்கள். இது உண்மை எனில், மத மாற்றத்தைக் கண்டு நீங்கள் ஏன் அஞ்ச வேண்டும். நீங்கள் அச்சப்படுவதற்கான எந்தக் காரணமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை

1936 ஆம் ஆண்டு மே மாதம் 30, 31 ஆகிய இரு நாட்கள் இயோலாவில் ஆற்றிய பேருரை


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com