Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthu Ezhuthu
Puthu EzhuthuPuthu Ezhuthu
ஜனவரி - ஏப்ரல் 2007
கோடைப்பகல் தூக்கம்
ரமேஷ் - பிரேம்


புதுச்சேரி, முத்தியால்பேட்டை, அங்காளம்மன் குப்பம் வன்னியச் சமூகத்தினர் வாழும் பகுதி. எனவே அவ்வூர் கடற்பகுதியில் மீன்பிடிப்பற்ற நெடும் கடற்கரைப் பரப்பில் மாபெரும் இடுகாடு ஒன்று உள்ளது. இடுகாட்டின் வடக்கே சோலைத் தாண்டவன் குப்பம் மற்றும் தெற்கே வைத்தியக் குப்பம் என்ற இரு மீனவக் குப்பங்கள் உள்ளன. பாப்பம்மாள் கோயில் என்றழைக்கப்படும் இந்த இடுகாட்டில்தான் மகாகவி, பாரதிதாசன் சமாதி உள்ளது. புதுப்பிக்கப்படாமல் காலத்தால் கைவிடப்பட்ட பெரிய சமாதிகள் இடிந்து கிடக்கும் இம்மயான வெளிக்குள் பின்னிரவு கடந்து கொண்டிருக்கும்போது நாங்கள் நுழைந்தோம்.

கடற்கரை ஈரமணலின் கால்கள் சரிந்து புதையப் புதைய நடக்கிறோம். எங்களது தோள்களில் நாங்கள் சற்று முன்பு கொன்ற எங்கள் தோழரின் பிணம்.

சாராயக் கடையில் யாருமே இல்லை. மின்சாரமும் இல்லை. ஒரு மூலையில் பெட்ரோமாஸ் விளக்கு ஒன்று பன்றிபோல உருமியபடி எரிந்துகொண்டிருக்கிறது. நாங்கள் ஆறுபேர் குடித்துக் கொண்டிருக்கிறோம். சாராயம் விற்றுக் கொண்டிருப்பவர் கல்லாப்பெட்டி மீதே கவிழ்ந்து குறட்டைவிட்டு தூங்கிக் கொண்டிருக்கிறார். வெளியே பிசுபிசுவென்று மழைத் தூறுவது கொட்டகை மீது பட்டு இரைச்சலை ஏற்படுத்துகிறது. ஏன் எதற்கு என்று தெரிந்து கொள்வதற்குள், சாராய பாட்டிலை சவுக்குக் கம்பத்தில் தட்டி உடைத்து, ஒருவர் மற்றொருவரின் வயிற்றில் சொருகுகிறார். பிறர் பாய்ந்து தடுப்பதற்குள் பாதி நீள பாட்டில் வயிற்றில் புதைய, அவர் கீழே சரிந்து மூர்ச்சை அடங்கினார். நாங்கள், ‘தோழர்........, தோழர் வேலு’ என்றபடி அவரை உலுக்கினோம்

பிணத்தை அங்கேயே போட்டுவிட்டு ஓடிவிடலாமென நினைத்தோம். ஆனால் மனம் ஒப்பவில்லை. அவரை தூக்கிக்கொண்டு வெளியே வந்தோம். மழை விட்டிருந்தது. நெடுஞ்சாலையில் யாருமே இல்லை, பேயிருட்டு. பிணத்தை நடுத்தெருவில் கிடத்திவிட்டு சுற்றுமுற்றும் பார்த்தோம். பேருந்து நிறுத்தத் தடத்தின் ஓரமாக வரிசையாக கட்சிக்கொடிகள் நனைந்து தொங்கும் கொடிக்கம்பங்கள் நிற்பது தெரிந்தது. ஓடிச்சென்று இரண்டு மூன்று சவுக்கைக் கம்பங்களை மண்ணோடு சாய்த்து முறித்து எடுத்து, குறுக்கும் நெடுக்குமாக சவுக்கையை அடுக்கி, கொடிமரக் கயிற்றினாலேயே கட்டி பாடை தயாரித்தோம். அதற்குள் ஒருவர் ஓடிச்சென்று, சாராயக் கடையிலிருந்த பெட்ரோமாஸ் விளக்கை தலைமீது வைத்துத் தூக்கிவந்தார். பாடையில் பிணத்தைக் கிடத்தி நால்வர் தூக்க, விளக்கோடு ஒருவர் வர, எங்கள் சவவூர்வலம் பின்னிரவில் நடந்தது.

நகரத்துக்குள் நுழைந்து பிரதான வீதிகளின் வழியாகச் சென்றோம். வழிநெடுக்க சாலைகளை அடைத்துக் கொண்டு கட்டடங்கள் இடிந்து சரிந்து கிடந்தன. நாங்கள் போதையில் இருக்கும்போது பூகம்பம் நிகழ்ந்துவிட்டதோ என ஒருவர் கேட்டார். இன்னொருவர், ‘இல்லை, நாம் இரண்டு நாட்களாகத் தொடர்ந்து குடித்துக் கொண்டிருக்கிறோம். உள்நாட்டுப்போர் ஆரம்பித்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. நகரத்தின் மீது முதல் விமானம் பறக்கும்போது நாம் சாராயக் கடைக்குள் ஒதுங்கினோம் அல்லவா’ என்று சூழலை ஞாபகப்படுத்தினார்.

மீண்டும் மழை தொடங்கிவிட்டது. வழிநெடுக்க சரிந்து கிடந்த மரங்களும் மின்சாரக் கம்பிகளும் கட்டட இடிபாடுகளும் எங்கள் ஊர்வலத்திற்குத் தடையாக இருப்பினும், இறந்தவரை ஏதாவதொரு இடிபாட்டிற்குள் வீசிவிட்டுப்போக மனமின்றி, அவரை கௌரவமாகப் புதைக்கவேண்டி, இடுகாட்டை நோக்கி விரைந்து கொண்டிருந்தோம். ‘சாராயக் கடைக்குள் இரண்டு நாட்களாக இருந்ததாலேயே நாம் தப்பிப் பிழைத்தோம். இல்லையென்றால் இந்த இடிபாடுகளுக்குள் நசுங்கிச் செத்திருப்போம். இந்த நகரத்தில் இப்போது நாம் மட்டுமே உயிரோடு இருக்கிறோம் போலும்’ என்றார் எங்களில் ஒருவர். இன்னொருவர் ‘நமக்கு சாராயம் அளந்து ஊற்றியவனும் உயிரோடு தூங்கிக் கொண்டிருக்கிறான் இன்னும்’ என்றார்.

மழை வேகம் தணிந்து புள்ளியில் ஒடுங்கிய பொழுது நாங்கள் இடுகாட்டின் ஈரமணலுக்குள் கால்கள் சறுக்கிப் புதையப் புதைய நடந்தோம். வழிநெடுக்க வெட்டப்பட்ட செவ்வகக் குழிகள் தயாராக இருந்தன. சில குழிகளில் வெள்ளைத் துணியால் சுற்றப்பட்ட உடல்கள் இறக்கப்பட்டு மூடப்படாமல் கிடந்தன. எங்கள் நண்பரின் உயரத்திற்கு ஏற்ற ஒரு நீள செவ்வகக் குழியில் அவரை இறக்கிவிட்டு, குழிக்கருகே குவிக்கப்பட்டிருந்த, தோண்டி எடுக்கப்பட்ட ஈரமணலை கைகளாலேயே தள்ளி குழியை மூடினோம். தூரத்தில் கடலலை வெண்நுரை பொங்க தெரிந்தது. கடலோரமாக தெற்குப் பகுதியில் கீற்றுப்பந்தல் இடப்பட்டு வரிசையாக பெட்ரோமாஸ் விளக்குகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஆர்வம் எங்களை உந்தித்தள்ள, ஐவரும் அந்த இடத்தை நோக்கி ஓடினோம்.

பந்தலுக்கடியில் வரிசையாகப் பிணங்கள் பாடையில் கிடத்தப்பட்டிருந்தன. சுமார் இருபதுக்கும் மேற்பட்ட பாடைகள். பிணங்களின் மீது பூமாலைகள். ஒவ்வொரு பாடைக்குப் பக்கத்திலும் ஒரு பெட்ரோமாஸ் நின்றுகொண்டிருந்தது. பிணமடக்கம் செய்யும் இடுகாட்டுத் தொழிலாளர்கள் இரண்டொருவர் அமர்ந்தபடி தூங்கிக் கொண்டிருந்தனர். அவர்களைத் தவிர அங்கு வேறு யாருமில்லை. நான் பார்க்க, எட்டாவது பாடையில் இருந்த பிணம் சிறு முனகலோடு கை கால்களை அசைத்துக் கொண்டிருந்தது. நான் என்னுடன் நிற்கும் நண்பர்களை பதற்றத்தோடு பார்க்கிறேன். என் அருகில் யாருமே இல்லை. தூரத்து இருட்டில் வெட்டப்பட்ட குழிகளுக்கிடையே நகரும் பெட்ரோமாஸ் விளக்கோடு என் நண்பர்கள் ஆகிவிட்ட தோழர்கள் போவது தெரிந்தது.

தனித்துவிடப்பட்ட நான் மீண்டும் எட்டாவது பாடையைப் பார்க்கிறேன். போர்வையை விலக்கிய எலும்பும் தோலுமான ஓர் உருவம் எழுந்து அமர்ந்தபடி என்னை முரைக்கிறது. அதன் கழுத்தில் தொங்கும் சாமந்தி மாலை, பெட்ரோமாஸ் வெளிச்சத்தில் தீவளையம் போல எரிகிறது. அதன் இடையில் ஒரு கோவணம் மட்டுமே. சடைவிழுந்த நீண்ட முடி. சடைத்த நீண்ட தாடி மயிர் - மார்பு வரை தொங்க என்னைப் பார்த்த அது ; தான் இன்னும் சாகவில்லை என்றும் தன்னை காபாற்றும்படியும் முணுமுணுத்தது. அதன் முணுமுணுப்பைக் கேட்டு எழுந்த ஒரு இடுகாட்டுத் தொழிலாளி அதை நெருங்கி பலம் கொண்ட மட்டும் மார்பில் உதைத்து வீழ்த்தி மிதித்து, பாடையில் நீட்டிப் படுக்கவைத்துப் பிறகு என்னை நோக்கித் திரும்பி, ‘உனக்கு என்ன வேண்டும்’ என்பது போல பார்த்தார். நான் மருண்டெழுந்தேன். கண்களிலிருந்து பிணங்கள் வளைய வளையமாகக் கரைந்தன. பிணங்கள் நீர்த்து, எனது சயன அறை ஒரு குளமாகி, படுக்கையில் நான் மிதக்க, குளிரூட்டப்பட்ட அறையின் இளநீல இரவு விளக்கு மங்கலாகப் புலப்பட்டது.

விழப்பு தட்டியவுடன் மீண்டும் நான் கனவை அசைபோட்டபடி படுத்திருந்தேன். ஏறக்குறைய இருபத்தைந்து வயதிற்கு முன்பு, பாப்பம்மாள் கோயில் இடுகாடு என்றழைக்கப்பட்ட கடற்கரை மயானவெளியில் போக்கற்று சுற்றித் திரிவேன். ஊர் முடியும் இடத்திலிருந்து நீளும் நெடிய கடற்மணற் பரப்பில் கால்களில் செருப்பின்றி உச்சிப்பகலில் கடலை நோக்கி ஓடுவேன். ஓட ஓட கடல் எட்டி எட்டி போய்க் கொண்டிருக்கும். ஓடி ஓடி தளம் சரிந்த கைவிடப்பட்ட சமாதி நிழல்களில் மாறி மாறி நின்று கொதிக்கும் கால்களை சூடாற்றுவேன். ஆனால், கைவிடப்படாத ஒரு சமாதி அங்குண்டு. அது பாப்பம்மாள் என்ற சிறுமியின் சமாதி. அச்சமாதியினுள் அவள் புதைக்கப்பட்ட மேடு அழகாக சாணியால் பூசி மெழுகி கோலமிட்டு இருக்கும்.

மேட்டின் தலைப்பகுதியில் அவளுடைய மங்கிய புகைப்படம் கண்ணாடி சட்டமிட்டு மாட்டப்பட்டிருக்கும். அடுக்கடுக்காக வளையல்கள் கோர்க்கப்பட்ட கயிறுகள் சரம்சரமாக சுவரில் அறையப்பட்ட ஆணிகளிலிருந்து தொங்கும். அச்சிறுமி அமர்ந்து ஆடிய மரக்குதிரையும், நடந்து பழகிய முச்சக்கர தள்ளுவண்டியும், சொப்புச் சாமான்களும் அந்த சமாதி அறைக்குள் இருக்கும். தலைமாடத்தில் என்றுமே நான் பார்த்து அணையாத அகல்விளக்கு ஏற்றப்பட்டிருக்கும். யாருமே போக பயப்படும் அந்த உயிருள்ள வாழும் சமாதிமுன் அதன் கம்பிக்கதவுவழியே நின்று தினம் பார்ப்பது எனது வழக்கம். சுவரில் தொங்கும் அச்சிறுமி தினம் தினம் வளர்ந்து என்னுடன் பழகத் தொடங்கி, எனது முதல் காதலியானாள்.

கையில் ஏதேனும் ஒரு புத்தகம் இருக்கும். கிளை நூலகத்தில் உறுப்பினராக இருந்தேன். எனது கோடை விடுமுறை நாட்கள் எல்லாம் கடலோர தென்னை மரத்தடியிலும், சமாதி மதில் சுவர் நிழலிலும் புத்தக வாசிப்புகளோடு கழியும். மாலை பொழுது சாய வீடு திரும்புவேன்; பாப்பம்மாள் உடன் வருகிறாளா என திரும்பித்திரும்பிப் பார்த்தபடி.

என் அம்மா ஒருமுறை சொன்னாள்; “பாப்பம்மாள் தமிழச்சி அல்ல ; அவள் யாழ்பாணத்தி” என்று “யாழ்குடாவில் சிறார்களோடு கும்மாளமிட்டுக் குளிக்கும்போது அவள் அலைகளால் உள்வாங்கப்பட்டு, நம் புதுச்சேரியின் கரை ஒதுங்கினாள்” என்றும் சொன்னாள். அவளது சமாதிக்கு விளக்கு போட யாழ்பாணத்திலிருந்து தினமும் படகுவந்து போகிறதென்றாள்.

ஆக, இந்த இடுகாட்டுக்குள் நான் நுழைந்து சுமார் இருபது ஆண்டுகள் ஆகி இருக்கலாம். இந்த இரவு எனது கனவில் மீண்டும் இச்சுடுகாடு காட்சியாக விரிந்ததும், அதில் நான் பிணங்களுக்கு ஊடாக அலைந்ததும் உடம்பை சில்லிட வைத்தது. படுக்கையை விட்டெழுந்து வெளியே வந்தேன். சமையலறைக்குச் சென்று தண்ணீர் குடித்துவிட்டு, கழிவறைக்குச் சென்று சிறுநீர் கழித்துவிட்டு வந்தேன். சிறிது நேரம் பால்கனியில் நின்றிருந்தேன். அடித்து ஓய்ந்த மழையில் தெருவில் முழங்கால் அளவுநீர் ஓடிக் கொண்டிருந்தது. கைக்கடிகாரம் அதிகாலை நான்கு மணியைக் காட்டியது. இருப்பினும் அடர்த்தியான மழையிருட்டு விலகாமல் இருந்தது.

விடிந்ததும் அலுவலகத்தில் முதலில் செய்து முடிக்க வேண்டிய வேலைகளை மனது அசைபோட்டது. இரண்டொருமுறை மட்டுமே சென்று வந்த சாராயக்கடை கூட கனவில் வருகிறதே என்ற எண்ணம் எரிச்சலைத் தந்தது. இலங்கையில் தமிழர்ப் பகுதியில் நிகழ்த்தப்படும் விமானப்படைகளின் குண்டுவீச்சு புதுச்சேரி நகரம்வரை பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ளதை எண்ணி மனம் அதிர்ந்தது. ஆகாயத்தில் இரண்டொரு விமானம் திடீரென்று தோன்றி இந்நகரம் மீது இவ்விரவில் குண்டுகளை சடசடவென கொட்டினால் எப்படியிருக்கும் என்று கற்பனைச் செய்தபடி, வானைப் பார்த்தேன். வானம் கற்பனையாகச் செய்யப்படுவதில்லை என்பதை எனக்கு உணர்த்தியபடி, தனித்த ஒரு காகம் ஈர இருட்டில் கரைந்தபடி இடம் பெயர்வதை செவிகள் உணர்ந்தன. பசி எடுத்தது. கொஞ்சமாக கருப்புக் காபி குடிக்கலாமா என மீண்டும் சமையலறைக்குள் நுழைந்தேன்.

சென்ற வாரம் சக ஊழியர்களுடன் தேனீர் அருந்த அலுவலகத்தை விட்டு வெளியே வந்தேன். சாலையின் எதிர் புறம் வரிசையாக இருக்கும் தேனீர்கடைகளுள் ஒன்றில் சிகரெட்டைக் கொளுத்தியபடி தேனீருக்குச் சொல்லிவிட்டு நின்றிருந்தேன். எதிர்புறத்திலிருந்து கையேந்தியபடி ஒரு சந்நியாசி வந்துகொண்டிருந்தார். இடுப்பில் ஒரு முழம் காவியை சுற்றியிருந்த அவரின் உருவம் நீண்டு மெல்லிய எலும்பும் தோலுமாக இருந்தது. கழுத்தில் சில கொட்டைகளைக் கோர்த்து அணிந்திருந்த அவருடைய சிடுக்கு விழுந்த தாடி மார்புவரை தொங்கியது. சடைவிழுந்த தலைமுடிக் கற்றைகள் தாழம்பூப் போல மூன்று நான்குக் கால்களாகத் தொங்கின.

ஒடுக்கு விழுந்த நீண்ட முகத்தின் நெற்றியில் திருநீரும் சந்தனக் கீற்றும். பளிச்சென்று என் எதிரில் வந்து நின்றவர், என்னை குறுகுறுப்போடு பார்த்தார். நான் பாக்கெட்டில் கையை நுழைத்து சில்லரைகளைத் தேடினேன். அவரது பார்வை என்மீது தைப்பதை உணர்ந்து துணுக்குற்று ஏறிட்டுப் பார்த்தேன். அவர் “நான் உங்களை உங்களுடைய கனவுக்குள் இருந்தபோது ஒருமுறை சந்தித்திருக்கிறேனே” என்றார். எனக்கு தூக்கிவாரிப் போட்டது. உடம்பில் சிறு நடுக்கம் உண்டானது. அதற்குள் என் நண்பர் ஒருவர் எங்களிவருக்கும் நடுவில் வந்து நின்றார். அவருடைய வருகையால் சிறு அசௌகர்யத்தை உணர்ந்த சந்யாசி, நான் கொடுத்த சில்லரையை வாங்கிக் கொண்டு அடுத்த கடையை நோக்கி நகர்ந்தார்.

நான் என் நண்பரை அங்கேயே நிறுத்திவிட்டு ‘சாமி’ என்று அச்சந்யாசியை அழைத்தபடி அவர் பின் சென்றேன். என்னை திரும்பிப் பார்த்தவர், ஒரு ஆட்டோவிற்கு வழிவிட்டு ஓரமாக நின்றார். நான் அவரை கும்பிட்டபடி ‘நீங்கள் என்னவோ சொல்லி வந்தீர்களே’ என்று அருகில் சென்று நின்றேன். என்னை கூர்ந்து பார்த்தவர் “நாம் ஏற்கனவே சந்தித்துள்ளோம்; உங்களுடைய கனவில்” என்றார். நான், ‘கனவிலா’ என சிறுபுன்னகையுடன் கேட்டேன். “ஆமாம், தோழர். ஒரு இடுகாட்டில் உங்களுடைய சக தோழர் ஒருவரை புதைத்துவிட்டு வரும்போது ஒரு பாடையில் படுத்தபடி நான் உங்களைப் பார்த்து முணுமுணுத்தது ஞாபகத்தில் உள்ளதா?” என்றார். நான் அதிர்ந்து நின்றேன். அவர் தம் காரை படிந்த பற்கள் தெரிய சிரித்தார்.

“நான் திருவண்ணாமலையில் பாறைகளோடு பாறையாகச் சுற்றித் திரிபவன். கடலில் குளிக்க மனம் ஆசை கொள்ளும் போது, மலையிலிருந்து கீழறங்கி நடந்தே இங்கு வந்துவிடுவேன். இந்த நகரத்துக் கடல் பிடிக்காது. ஊர் தாண்டியுள்ள பாப்பம்மாள் கோயில் இடுகாட்டுக் கடற்கரையில் உறங்குவதும் கடலில் மூழ்கிக் குளிப்பதுமாக இரண்டொரு நாட்களை இரவும் பகலுமாக அங்கேயே கிடந்து கழிப்பேன். உங்களுடைய கனவுக்குள் அந்த இடுகாட்டுக் கடற்கரை காட்சியுறும் போது அங்கே என்னை நீங்கள் பார்த்தீர்கள். நானும் உங்களைக் கண்டேன். என் சொந்த நாடு ஈழம். ஊர் யாழ்ப்பாணம். கடலில் நீந்தியே ராமேஸ்வரம் வந்து அங்கிருந்து நடந்தே அண்ணாமலைக்கு வந்து சேர்ந்தவன். உங்கள் கனவில் இடிபாடுகளோடு நீங்கள் கண்ட நகரம் உங்களது புதுச்சேரி அல்ல ; அது எனது யாழ்பாணம். யாழ் நகர வீதிகளினூடாகத்தான் நீங்கள் உமது தோழர்களுடன் ஒரு பிணத்தை சுமந்து கொண்டு நடந்தீர்கள். ஆனால், நீங்கள் நுழைந்த இடுகாடு உங்களுடைய நாட்டுக்கும் ஊருக்கும் சொந்தமானது”.

நான் மேலும் மேலும் அதிர்ந்து நின்றேன். எனது கால்கள் நடுங்கத் தொடங்கின. நான் அருகிலிருந்த வேறொரு தேனீர் கடை இருக்கை ஒன்றில் சரிந்து அமர்ந்தேன். சிறிது நேரத்திற்குப் பிறகு என் முகம் குளிர்ந்த நீரினால் அறையப்பட, கண்கள் திறந்து திருதிருவென விழித்தேன். எதிரே நண்பர் கையில் தண்ணீர் குவளையோடு பதட்டத்துடன் நின்றிருந்தார். நான் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு விருட்டென எழுந்து கைக்குட்டையால் முகத்தை துடைத்தபடி அங்குமிங்கும் பார்த்தேன்; சாமியாரைக் காணவில்லை. நண்பர், ‘அச்சாமியார் உங்களுக்கு திருநீரு பூசிவிட்டு போய்விட்டார்’ என்றார். நான் அருகில் நின்றிருந்த இருசக்கர வாகனத்தின் கண்ணாடியில் முகத்தைப் பார்த்தேன். நெற்றியில் திருநீரின் தீற்றல் நீர்ப்பட்டு கலைந்திருந்தது.

அலுவலக வேலைகள் மற்றும் தொழிற்சங்க வேலைகளில் மனமும் உடம்பும் உழன்று கொண்டிருந்தன. கடற்கரை சாலைவழியே அலுவலகம் செல்வதை தவிர்த்தேன். கடலைப் பார்க்கவே பயத்தைத் தந்தது. எனது கண்களுக்கு மட்டும் சில உடல்கள் குண்டடிபட்டு நீரில் மிதந்து கரை ஒதுங்குவதும், சில உடல்கள் கடலிலிருந்து எழுந்து கரையேறுவதுமான காட்சிகள் தெரிந்தன. எனவே கடற்கரை பக்கம் செல்வதையே தவிர்த்தேன். இனம்புரியாத ஏதோவொரு குற்றவுணர்வு என்னுள் குடைந்துகொண்டே இருந்தது. ஏதோவொரு மறைவிலிருந்து என்னை யாரோ ஒருவர் துப்பாக்கியால் குறிபார்ப்பதை, குறுகுறுப்போடு மனம் உணர்ந்துகொண்டே இருப்பதை தவிர்க்க முடியவில்லை. கடல் இல்லாத வேறு ஊருக்கு மாற்றலாகிப் போய்விடலாமா என்ற எண்ணம் கொஞ்ச நாட்களாக இருக்கிறது. செய்தித் தாள்களைத் தவிர்த்தேன். தொலைக்காட்சி இணைப்பை துண்டித்தேன். நண்பர்களுடன் அரசியல் பேசுவதைத் தவிர்த்தேன். குறிப்பாக இலங்கையைப் பற்றிய செய்திகள் எனது காதுகளுக்கு எட்டாத இடத்தில் என்னை வைத்துக்கொள்ள பிரயாசைப்பட்டேன்.

ஒரு நாள் கனவில், அதிலும் பகல் தூக்கத்தில் தொலைக்காட்சியின் அருகில் படுத்திருக்கிறேன். காட்சித்திரை சில நொடிகள் இருண்டு ஒளிர்ந்து பிசிறு பிசிறாகக் காட்சி ஓடி, பிறகு பளிச்சென தெரிகிறது. திரையில் தோழர் பிரபாகரன் தோன்றி பேசுகிறார். ஒலி அமைப்பு இன்னும் சீர்படவில்லை. வெற்று உதட்டசைவுகளை உற்று கவனிக்கிறேன். அவரது உதட்டசைவுகளுக்கு எனது உதடுகள் அசைந்து ஒலிகொடுக்கின்றன. நான் தன்னிச்சையாக உச்சரிக்கும் வார்த்தைகள் அவரின் உதட்டசைவுகளுக்குப் பொருந்தி வருகின்றன. நான் உச்சரிப்பது ஒரு கவிதை. ஆம், அது பாரதிதாசனின் கவிதை வரிகள் என்பதை என் மனம் உணரும் போது கனவு கலைந்துவிடுகிறது.

சுள்ளென்ற வெயில் சன்னலின் வழியே உள்ளே காய்கிறது. மனம் ஒரு நிதானத்திற்கு வந்தபோது மீண்டும் கனவை ஞாபகம் கொணர்ந்தேன். காட்சித் திரையில் தோன்றிய முகம் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் மனத்திரையில் தோன்றியது. அம்முகம் சிறுசிறு மாற்றங்களோடு என் தந்தையின் முகமாகத் தெரிந்தது. ஆம், அது என் தந்தைதான். இருபது ஆண்டுகளுக்குமுன் இறந்துபோன எனது தந்தைதான் அது. மீண்டும் எனக்கு ஞாபகத்திற்குவந்தது; அவரைப் புதைத்த இடம்கூட பாப்பம்மாள் கோயில் இடுகாடுதான் என்பது, அவர் உச்சரித்த கவிதை வரிகளை அசைபோட்டேன். அப்படியான ஒரு கவிதை பாரதிதாசனிடம் இல்லை என்பது தெரியவந்தது. அக்கவிதை என்னுடைய சொந்த வரிகள்; பாரதிதாசனின் சாயலில் என்பதையும் அறிந்தேன். அப்போது படீரென என்தூக்கம் கலைய, என் துணைவி கதவைத் திறந்துகொண்டு காபியோடு உள்நுழைந்தாள். நான் திடுக்கிட்ட விழிப்பில் கண்கள் எரிய ஏதும் விளங்காமல் தலையைப் பிடித்தபடி அவளை ஏறிட்டுப் பார்த்தேன். அவள் அருகில் நெருங்கி,

“என்ன, தலை வலிக்கிறதா” என்று நெற்றியில் தொட்டுப் பார்த்தாள். நான் ‘இல்லை, எல்லாம் வெறும் கனவு’ என்றபடி காபியை வாங்கிப் பருகினேன். அவள், பக்கத்தில் அமர்ந்து என் தலையைக் கோதியபடி, “அதிகம் குடிக்காதே” என்றாள். ‘பகலிலா, இரவிலா’ என கேட்டபடி அவளது மார்பில் தலை சாய்ந்தேன். மார்புக்குள் அலையோசை.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com