Keetru
இலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் தகவல் களம் சிரிப்'பூ'
Font problem?
Keetru Puthu Ezhuthu
Puthu EzhuthuPuthu Ezhuthu
ஜனவரி - ஏப்ரல் 2007
அன்பும் உறவும்
மா. கணேசன்


இரத்த - உறவுகளின் இயல்பு

மனித ஜீவிகள் மனித பெற்றோர்களின் வழியே பிறக்கிறார்கள். இந்த அங்க தொடர்புதான் இரத்த உறவுகளை உருவாக்குகிறது. இந்த உறவுகள் பிராணியபாசத்தின் விளைவாகும். இந்த பாசத்தை இந்தக் கட்டத்தில் அன்பு என்று கொள்ளவியலாது. ஏனெனில் இந்தக் கட்டத்தில் ஜீவிகள் யாவும் பிரதானமாக இயல்பூக்கங்களினால் இயக்கப்படுகின்றன. இனப் பெருக்க வழிமுறையானது முற்றிலும் நனவற்ற நிலையில் மேற்கொள்ளப் படுவதாகும். இது ஒரு தானியங்கித் தனமான அனிச்சை செயல் போன்ற பிரதி-வினையாகும். அதாவது, ஒரு உயிரினமானது அற்றுப் போவதிலிருந்து பாதுகாக்கப்படவும், தொடர்ந்து பெருகி நிலைத்து ஜீவித்திடவுமான மிகவும் இயற்கையானதொரு தேவையை முன்னிட்டு எழும் பதிலளிப்பாகும். எனினும் இந்த நனவிலிமயமான பிராணிய-பாசம் தான் பின்னர், மனித ஜீவியானவன் உளவியல் ரீதியாக வளர்ந்திடும், முதிர்ச்சியடையும் வழியில் அல்லது போக்கில் பிரக்ஞையுடன் கூடிய மானிட - அன்பாக மலர வேண்டிய ஒன்றாகும். இந்த அன்பானது உயிரின் உலகம், சடப் பொருளின் உலகம் என யாவற்றையும் தழுவிச் செல்வதாகும்.

இரத்த - உறவுகள் மீதான ஒருவரது பாசம், ஈடுபாடு உண்மையில் அன்பல்ல. குறிப்பாக, ஒருவர் தனது குழந்தைகளின் மீது கொள்ளும் பாசம் அன்பல்ல. ஏனெனில் ஒருவரது குழந்தைகள் என்பவை உண்மையிலேயே ஒருவருடையவையே. அதாவது ஒருவரது பகுதியே அல்லது நீட்சியே. குட்டி என்பது தாயின் நீட்சியே. ஆகவே இவ்விடத்தில் தோன்றுவது உடமைபூர்வமான பாசம் தானே தவிர அன்பல்ல. இதை நாம் சுய-அன்பு (நங்ப்ச்-கர்ஸ்ங்) என்றழைக்கலாம். சுய-அன்பு என்பது அன்பல்ல.

ஏனெனில் சுய-அன்பு என்பது ஒரு ஜீவியானது தன்னை பாதுகாத்துக் கொள்ள விழையும் மிகவும் இயற்கையான இயல்பான ஒரு உணர்வு ஆகும். ஆக தன்னை பாதுகாத்துக் கொள்ளும் அந்த உணர்வு தான் தனது அங்கம் அல்லது நீட்சி போன்ற குட்டி (குழந்தை) குறித்தும் ஏற்படுகிறது. அதில் உண்மையில் நனவு பூர்வமான “தொடர்பு படுத்துதல்” என்பது தனக்கு வெளியிலுள்ள ஏதோவொன்றுடனோ அல்லது தன்னுள்ளேயுள்ள எதனுடவோ கூடவும் இல்லை. இவ்வாறு தொடர்பு படுத்துதல் என்பது எழாமலேயே விளையும் உறவுகளே இரத்த-உறவுகள் ஆகும்.

தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளும் உணர்வினை சுய-அன்பு எனக் குறிப்பிடுவோமெனில் தனது அங்கம் அல்லது பகுதி போன்ற தனது குழந்தையை பாதுகாக்கத் துடிப்பதும் அதே சுய-அன்பு தான், அல்லது சுய-அன்பின் நீட்சியே தான் எனலாம். இதே சுய-அன்பானது தனது குழந்தைகட்கும், பிற நெருங்கிய குடும்ப உறவுகட்கும், சற்று தொலைவான குடும்ப உறவுகட்கும் நீட்டிக்கப்படுகிறது. பிறகு அது தனது இனம், சனம், சாதி, குலம் என நீட்டிக்கப்படுகிறது.

இரத்த உறவுகள் என்பது முதலில் குடும்ப-ரீதியாகவும், பிறகு சமூக ரீதியாகவும் (சாதி, சனம் என்று) அமைகிறது. இவை உபயோகமானவை, எந்த அளவிற்கு குடும்பம் மற்றும் சமூகக் கோளங்களின் புறவாழ்க்கை கோருகிறதோ, செல்கிறதோ அந்த அளவிற்கு இவை உபயோகமானவை. அதற்கு மேல் இவ்வுறவுகள் எவ்வகையிலும் இறுதியானவை யல்ல. ஏனெனில், குடும்பம் சமூகம் என்பவை இயற்கையாக அமைந்த, அளிக்கப்பட்ட அடிப்படை நிலைமையாகும். ஒரு துவக்கப் புள்ளி போல. ஆனால் நம்மில் பெரும்பாலானோர் இந்த துவக்கப் புள்ளியைத் தாண்டி சிறிதும் நகர்வதேயில்லை.

சக - ஜீவிகள் எனும் உறவு

சக-ஜீவிகள் அல்லது சக-மனிதர்கள் என்போர் யார்? சக-ஜீவிகள் என்போர் எவரெனில் ஒருவருக்கு தனது தாய், தந்தை, உடன்பிறந்தோர், கணவன் அல்லது மனைவி குழந்தைகள், நெருங்கிய மற்றும் தொலைவான உறவினர்கள், அண்டை அயலார், நண்பர்கள், எதிரிகள் மற்றும் மனித குலத்தின் அனைத்து உறுப்பினர்களும் ஆவர்.

ஆம், தனியொருவருக்கும், பிறருக்குமான உறவு என்பது சகஜீவி என்பது தானாகும். நாம் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் சகஜீவிகளே. பிறர் அல்லது அடுத்தவர் என்பது ஒருவரது தாயாக, தந்தையாக, சகோதரனாக, சகோதரியாக, கணவனாக, மனைவியாக, மகளாக, மகனாக, அத்தையாக, மாமாவாக, ................... இப்படி யாராகவும் இருக்கலாம். இந்த சக-ஜீவி எனும் உறவே மிகவும் சரியான, முறையான உறவாகும். ஏனெனில் இவ்வுறவு மட்டுமே புவி தழுவியதாய் உள்ளது. பிற உறவுகள் பெற்றோர்க்கு பிள்ளைகள் என்பதானதும், கணவனுக்கு மனைவி அல்லது மனைவிக்கு கணவன் என்பதானதும் போன்ற யாவும் குறுகியவை, அருகமைந்தவை.

பெற்றோர்கள் - பிள்ளைகள், கணவன் - மனைவி, போன்ற உறவுகள் மிகவும் நெருக்கமானது, அன்யோன்யமானது எனப்படுகிறது. அதாவது பிற அண்டை அயலாருடனான உறவை விடவும் நெருக்கமானது எனப்படுகிறது. ஆனால் இது வெறும் தோற்றப் பிழையே தவிர உண்மையல்ல. ஏனெனில், வாழ்க்கையின் ஆழமான புதிரின் முன்னே, எவரும் நெருக்கமானவரும் அல்ல, தொலைவானவரும் அல்ல. நாமனைவரும் பரஸ்பரம் அன்னியர்களே, தனியர்களே. நாம் பிறருக்கும் மட்டுமல்ல, நமக்கு நாமே அன்னியராகவே இருக்கிறோம். ஆக நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையை தனியே தான் சந்தித்தாக வேண்டும். இறப்பையும் தனியேதான் சந்தித்தாக வேண்டும்.

வாழ்க்கையை நேரேயும், உண்மையாகவும் சந்திப்பது, எதிர்கொள்வது என்பது ஒரு மனித ஜீவியானவன் தன்னை நோக்கி (தன்னில்) விழிப்படையும் போது மட்டுமே சாத்தியமாகும். அதாவது ஒரு தனிப்பட்ட, தனித்துவமான உளவியல் ஜீவியாக புதிர்மயமானதொரு பிரபஞ்சத்தின் முன் அதே சமமான புதிர்மயமானதொரு இருப்பின் முன் முகத்திற்கு முகம் எதிரெதிரே ஒருவர் நிறுத்தப்பட்டிருப்பதை அவ்வளவு நேரே உணரும் போது மட்டுமே சாத்தியமாகும். இந்த விழிப்பு அல்லது பிரக்ஞை கொள்ளுதல் என்பது எப்போதும் தனிமனித சவால் அல்லது விவகாரம் ஆகும். அதில் உறவுகள் நுழையவோ, எதுவும் செய்யவோ இடமில்லை. அனைத்து விதமான உறவுகளும் ஜீவித்தல் (வெறும் உயிர் வாழ்தல்) எனும் மட்டுப்பாடான கோளத்தில் சமூக-பொருளாதார-அரசியல் எனும் குறுகிய கூடாரத்தில் மட்டுமே பயன்படுபவை, செல்லுபடியாகின்றவை. இதைக் கடந்து மனித வாழ்க்கை எனும் கோளத்திற்குள் நுழைய வேண்டுமெனில் நாம் உளவியல் ரீதியாக தனிமனிதர்களாகப் பிரிந்திட
வேண்டும். தனித்துச் சென்றிட வேண்டும்.

மிகவும் அசலான வாழ்க்கையெனும் பயணத்தில் நாம் அனைவரும் பரஸ்பரம் சக-பயணிகளே. அதில், பிற உறவுகள், தந்தை-மகன், கணவன்-மனைவி போன்ற யாவும் அர்த்தமற்றவை. ஒவ்வொருவரும் பயணிக்கிறார்கள். ஒவ்வொருவரும் பிற ஒவ்வொருவருக்கும் சக-பயணியே. நமது பிரதான குறிக்கோள் என்பது பயணத்தில் இருப்பது, பயணிப்பது - அதாவது கற்பது, வாழ்வது மட்டுமே. அங்கே யாதொரு பூசலுக்கும், சண்டை சச்சரவிற்கும், போட்டி பொறாமைக்கும், வெறுப்பிற்கும், பாகுபாட்டிற்கும், ஆதிக்கத்திற்கும், ஏய்ப்பிற்கும், மேய்ப்பிற்கும் இடமில்லை. இவற்றிற்கு இடம் அளித்தோமெனில் நாம் உண்மையில் பயணிக்கவில்லை, உண்மையில் நாம் வாழவில்லை; வெறுமனே தேங்கிப் போனோம் அல்லது வெறுமனே உயிர் பிழைக்கிறோம் என்றாகி விடும். (இன்று நாம் 'வாழ்வது' போல).

உறவின் மட்டுப்பாடுகள்

நாம் ஏற்கனவே உறவுகளால் சூழப்பட்டுள்ளோம். ஒருவர் எப்போதுமே ஒரு குடும்பத்தில் பாதிக்கப்பட்டவராயுள்ளார். அக்குடும்பம் ஒரு இனக்குழு அல்லது சமூகத்தில் உள்ளது. அச்சமூகம் ஒரு நாட்டில் உள்ளது. ஒரு நாடு பிற நாடுகளால் சூழப்பட்டுள்ளது. மேலும் ஒருவர் எப்போதுமே பலவிதமான உறவுகளால் சூழப்பட்டுள்ளார். நடைமுறை வாழ்க்கை கோளத்தினுள் உறவுகள் பல வகைகளிலும் உபயோகமாக உதவியாக உள்ளன. நாம் அனைவருமே இந்த “நடைமுறை வாழ்க்கையில்” தான் அக்கறை கொண்டவராயுள்ளோம். நமக்கு வாழ்தல் என்பது நடைமுறை ரீதியாயிருத்தல், அதோடு இலாபகரமானவற்றையும், பயன்பாடுடையனவற்றையும் அடைவதை குறிக்கோளாய்க் கொள்ளுதல் என்பதே. அதாவது உறவு, உறக்கம், புணர்ச்சி, சௌகரியம், சுகம் ஆகிய அடிப்படை பசிகளை, தேவைகளை தொடர்ந்து பூர்த்தி செய்து கொள்வது என்பதே. இவற்றின் மீதுதான் குடும்பம், சமூகம், தேசம் மற்றும் முழு மனித குலமும் கட்டியெழுப்பப்பட்டுள்ளன.

நாம் ஒரு துண்டுபட்ட மனிதகுலமே யெனினும், எப்படியோ, நாம் இணைந்து செயல்படுவது, ஒத்துழைப்பது என்பதன் தேவையை உணர்ந்தவர்களாயுள்ளோம். இல்லையெனில் சமூக-யந்திரம் இயங்காதல்லவா? இந்தக் காரணி தான் நம்மை மீண்டும் மீண்டும் ஒன்றிணைக்கிறது. அனைத்து விதமான பூசல்களுக்கும், சண்டை சச்சரவுகளுக்கும், முரண்பாடுகளுக்கும் மத்தியில் 'உறவு' போன்ற ஏதோ ஒன்றை நிலவச் செய்கிறது. இதற்கு மாறாக ஏதாகிலும் ஒரு வழியில் நம்மால் நம் தேவைகளை, விருப்பங்களை, ஆசைகளை அடுத்தவர்கள் மீது சார்ந்திடாமல், அடுத்தவர்களது உதவியில்லாமல் பூர்த்தி செய்து கொள்ள முடியுமானால் நாம் உறவுகள் குறித்து சிறிதும் கருதமாட்டோம். உறவுகள் நமக்குத் தேவைப்படாது நாம் அனைவரும் பணக்காரர்களாக செல்வந்தர்களாக ஆகிட விரும்புவதற்கு இதுவும் ஒரு காரணம் எனலாம். அதாவது பிறர் மீது சார்ந்திடுவதை தவிர்ப்பதற்காக நாம் பணத்தின் மீதும், செல்வத்தின் மீதும் சார்ந்திட விரும்புகிறோம். ஏனெனில், பணமும் செல்வமும் பிறரை நம்மீது சார்ந்திடச் செய்து நமக்குச் சேவை புரியச் செய்திடும்.

பிறருடனான நமது உறவுகள் எவ்வளவு தான் நைந்து கிழிந்து போயிருப்பினும் உறவு போன்ற ஒன்றை நாம் தக்க வைத்துக் கொள்கிறோம். ஆனால் ஏன் நமக்கு கொள்கிறோம். ஆனால் ஏன் நமக்கு உறவுகளோ, துணைகளோ தேவைப்படுகிறது? நம்முடைய இயற்கையான பரிணாமத் தோற்றத்தின் படி, எறும்புக் கூட்டம், மீன் கூட்டம் போன்று நாமும் ஒரு இனமாக தோன்றியுள்ளோம். நாம் ஒரு மனிதச் சமூகம் ஆவோம். இது ஒரு இயற்கையான, கொடுக்கப்பட்ட நிலையாகும். இந்நிலையினை நாம் மறுக்க முடியாது. பிற மனித ஜீவிகளுடன் சேர்ந்து இணைந்து தான் வாழ்ந்திட வேண்டும். ஆனால் அதே வேளையில் நமது உள்ளார்ந்த பரிணாம இயல்பானது நம்மை ஆதி மந்தைத் தனத்திலிருந்து பிரிந்து விலகிச் செல்லவும் அனைத்து உறவுகளையும் கடந்து வளர்ந்து செல்லவும், மேன்மேலும் அக-ரீதி ஆக பரிணமிக்கவும் தூண்டுகிறது. ஏனெனில் எது கொடுக்கப்பட்ட நிலையோ, அல்லது இயற்கையான நிலையோ அதுவே இறுதியானதன்று.

ஒரு ஆரோக்கியமான வழியில், குழந்தைகளுக்கு பிற குழந்தைகள் தேவைப்படுகிறார்கள். கூடி விளையாடுவதற்காக. பருவம் எய்தியவர்களுக்கு பிற பருவமடைந்த துணைகள் தேவைப்படுகிறார்கள். குடும்பத்தை உருவாக்குவதற்காக. வளர்ந்த மனிதர்களுக்கு பிற மனிதர்கள் தேவைப்படுகிறார்கள் : நாடு-நகரங்களை நிர்மாணிக்கவும் மற்றும் உயிர் வாழ்வதற்குரிய அனைத்து பொருட்களையும் விஷயங்களையும் உற்பத்தி செய்வதற்காக. இந்த பல விதமான குடும்ப, சமூக, தனிச் சுயங்களுக்கிடையேயான உறவுகளும் இறுதியானவையல்ல. இவ்வுறவுகளைக் கொண்டு நாம் கட்டியெழுப்பிடும், வாழும் வாழ்க்கையும் இறுதியானதல்ல. ஏனெனில் இந்த தனிநபர் எனப்படும் “சொந்தச் சுயம்” அல்லது “தனிச் சுயம்” என்பது மிகவும் மட்டுப்பாடானதொரு சுயமாகும். இந்தத் தனிநபர் கிட்டத்தட்ட ஒரு பூஜ்ஜியமே.

ஆக, இத்தகைய தனிச் சுயங்களுக்குகிடையேயான சமூக உறவாடல்களின் மூலம் எத்தகைய நீடித்த, நன்மைமிக்க மதிப்பீடுகள் வெளிப்பட வியலும்? பல பூஜ்ஜியங்களின் கூட்டுத்தொகை என்பது மீண்டும் பூஜ்ஜியம் தானே? இந்த தனிச் சுயம் அல்லது தனிநபர் என்பவர் உண்மையில் ஒரு தனிமனிதர் அல்ல - அதாவது விழிப்புணர்வுள்ள முழுமையானதொரு மனித ஜீவியல்ல. இந்த நபரது ஆளுமை என்பது ஒரு பிம்பம், அல்லது ஒரு முகமூடி மட்டுமே. அதாவது மட்டுப்பாடான தனிச் சுயமானது பிற மட்டுப்பாடான தனிச் சுயங்களுடன் இணைந்து ஒத்து ஒழுகி அனுசரித்துப் போதலின் வழியே உருவாக்கப்பட்ட ஒரு பிம்பம் அல்லது முகமூடி, அவ்வளவு தான். இந்த மட்டுப்பாடான தனிச்-சுயங்களின் கூட்டத்தைத் தான் நாம் சமூகம் என்கிறோம். அதனுடைய அனைத்து நிறுவனங்களுடனும், இட்டுக்கட்டிய மதிப்பீடுகளுடனும், இதர விஷயங்களுடனும்.

இந்த மட்டுப்பாடான தனிச் சுயம் என்பது வெறும் உயிருள்ள உடல்தான் (அதனுடைய சில பிராணித்தனமான பசிகளுடனும் இயல்புகளுடனும்); இந்த உடலுக்கு ஒரு மனம் உள்ளது. ஆனால் அம் மனமானது இன்னும் தன்னை நோக்கி விழிப்படையாதிருக்கிறது. தனது அசலான இயக்கங்கள் குறித்து விழிப்படையாதிருக்கிறது. ஏனெனில் அம்மனம் உடலின் கோரிக்கைகளை, பசிகளை, விருப்பங்களை பிரதிநிதித்துவம் செய்து நிறைவேற்றுவதிலேயே திருப்தியடைந்து விடுகிறது. விலங்கியல்பைக் கொண்ட உடலும், இன்னும் விழிப்படையாதிருக்கும் மனமும் சேர்ந்த கலவைச் சுயமானது உண்மையான சுயமல்ல. அதாவது மனித ஜீவியின் “முழுச்சுயம்” அல்ல மனித ஜீவியின் உண்மையான கருவான சுயத்தைக் கண்டடைய வேண்டுமெனில் இந்த மட்டுப்பாடான சுயமானது தனது மட்டுப்பாடுகளை நேரே புரிந்துணர்தல் அவசியம், அவ்வாறு புரிந்துணர்ந்து அமைதியுறல் அவசியம்.

அப்போது தான் உண்மையான மையமான சுயமானது உடல்-மனம் எனும் அடுக்குகளின் ஒருங்கிணைந்த இசைவான இயக்கத்தின் விளைவாக உள்ளிருந்து வெளிப்படவியலும். ஆக இந்த மட்டுப்பாடான தனிச்சுயம் (இந்தச் சுயமானது சமூகத் தாக்கத்தினால் பெரிதும் கட்டமைக்கப்படுவதால் சிலர் இதை சமூகச்சுயம் எனவும் குறிப்பிடுவர். ஆம், தனித்துவம் அற்ற சமூகச் சுயம்; இன்னும் முழுமை பெறாத சுயம்.) அல்லது சொந்தச் சுயம் என்பது கடக்கப்பட வேண்டிய நிலையம் ஆகும். சொந்தச் சுயத்தை கிட்டத்தட்ட நிலை அல்லது சுயம் தான் உண்மையான (ஏனெனில் முழுமையான) மனித ஜீவி ஆகும். அது வரை ஒருவர் பாதி விலங்காகவும், பாதி மனிதனாகவும் இருக்கிறார்.

முழு மனித ஜீவியை கண்டடைவது அல்லது “தன்னையறிவது” என்பதுதான் நம் ஒவ்வொருவரின் மற்றும் ஒட்டுமொத்த பரிணாமத்தின், பிரபஞ்ச இருப்பின் சிகரம் போன்ற இலக்கு ஆகும்.

உறவுகளுக்கு அப்பால்

தாயிடம் ஒட்டிக் கொண்டிருக்கும் சிசுவாக நாம் நமது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்குகிறோம். தாய்-சிசு உறவானது அங்கக ரீதியானதொரு பிணைப்பாகும். அதில் தொடர்புபடுத்துதல் என்பது அறவே இல்லை. குழந்தையானது தாயின் அங்கம் அல்லது நீட்சி போன்றது. மேலும் அது தாயின் சுய-அன்பு எனும் வளையத்தனுள் பாதுகாக்கப்படுகிறது. பிறகு தந்தை மற்றும் பிற குடும்ப அங்கத்தினர் அக்குழந்தைக்கு அறிமுகமாகிறார்கள். ஆனால் உறவில் எதுவும் அடிப்படையில் மாறுவதில்லை. வெறுமனே சுய-அன்பு வளையம் மட்டும் குடும்ப அங்கத்தினர்களை உள்ளடக்கும் வகையில் சற்று விரிவாக்கப்படுகிறது. குடும்பம் என்பது எப்போதும் ஒரு இனக்குழுவின் பகுதியாக விளங்குவதால் சுய அன்பின் வளையம் மேலும் விரிக்கப்பட்டு ஒருவரது இனத்தார் சாதி-சனத்தார் ஆகியோரையும் உள்ளடக்குவதாகிறது.

இடையே குழந்தையானது அண்டை அயலாரையும் பால்காரர், தபால்காரர் போன்ற பிறரையும் தெரிந்து கொள்கிறது. பிறகு பள்ளிக்குச் செல்லும் போது பிற குழந்தைகளை அது சந்திக்கிறது. அவர்கள் சக-மாணவர்களாக, நண்பர்களாக, எதிரிகளாகவும் ஆகிறார்கள். இப்போது ஒரு குழந்தையானது பரந்த சமுதாயத்தின் பல்வேறு உறுப்பினர்களையும் தெரிந்து கொள்கிறது. ஆனால் இந்த உறுப்பினர்களுடனான உறவு என்று வரும் போது அக்குழந்தையானது சிறு இடைவெளியை அல்லது தொலைவினை தக்க வைத்திடும்படி கற்பிக்கப்படுகிறது. ஏனெனில் இவ்வுறுப்பினர்கள் யாவரும் ‘பிறர்’ எனப்படும் திணையில் அமைகிறார்கள். அவர்களுடன் நாம் சில வேளைகளில் தொடர்பு கொள்கிறோம், கொடுக்கல் - வாங்கல்களைச் செய்கிறோம்; அதாவது அவர்களுடன் ஒருவருக்கு வியாபாரத் தொடர்பு உள்ளது ஆனால் உறவேதுமில்லை. தபால்காரர், பால்காரர், பேருந்து ஓட்டுனர், பெட்டிக் கடைக்காரர் ஆகியோருடன் நமக்கு உறவேதுமில்லை.

கடைக்காரரைப் பொறுத்தவரையில் அவர் மக்களுக்கு சில பொருட்களை விற்கிறார் எனும் வியாபாரத் தொடர்பு தாண்டி மக்களுடன் அவருக்கு வேறு உறவேதுமில்லை. ஆனால் இவர்கள் யாவரும் தான் நமது சக-மனிதர்கள், சக-ஜீவிகள்; மனித குலம் எனும் பெருங்குடும்பத்தின் உறுப்பினர்கள். ஆனால் இச் சகமனிதர்கள் குறித்து நமக்கு எவ்வித எண்ணமும், உணர்வும், அக்கறையும் கிடையாது. ஏனெனில் நமது இதயங்களுக்கு அன்பு என்னவென்று தெரியாது! மேலும் அந்த அளவிற்கு இன்னொரு மனித-ஜீவியுடன் நனவுடன் தொடர்பு கொள்ளும் தேவையை உணர்ந்திடும், அன்பின் அவசியத்தை அளவிற்கு உளவியல் ரீதியாக நாம் இன்னும் வளர்ந்திடவில்லை. அன்பிற்கான அவசியமோ, தேவையோ இன்னும் நம்முள் எழவில்லை. ஏனெனில் அந்த அளவிற்கு நாம் இரத்த-உறவுகளின் பாசத்தில் கட்டுண்டுள்ளோம்.

மேலும், இரத்த - உறவுகள் அல்லது பிற நெருங்கிய உறவுகளுடன், குடும்பத்தாருடன், ஒருவரது சாதி சனத்தாருடன், சமூகத்துடன் சேர்ந்து வாழ்வதற்கு அன்பு தேவைப்படுவதில்லை. வெறும் பாசமும், அங்கக பிணைப்பும் மட்டுமே போதுமானது. ஆனால் இந்த இணைப்பும் பாசமும் மிகவும் மெலியது. எந்தவொரு கணத்திலும் பொறாமை, பேராசை, வெறுப்பு, விரோதம் போன்ற கூறுகள் உறவுகளை உடைத்து நொறுக்கி விடக்கூடும். கொலை விழக் கூடிய நிலைமைக்கும் கூட கொண்டு சேர்த்திடும். இது ஒன்றே போதும் சுய-அன்பு என்பது உண்மையில் அன்பல்ல என்பதற்கான நிரூபணம். மேலும் சுய-அன்பின் வளையத்திற்குள் ஒருவர் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க முடியாது. ஏனெனில் எந்த நிமிடத்திலும் சுய-அன்பு வளையமானது சடாரென சுய-அன்புப் புள்ளியாகச் சுருங்கி விடக்கூடும். அப்புள்ளியில் ஒருவரது சொந்த சுயத்தின் நலம் மட்டுமே கருதப்படும். பிறர் யாவரும் வெளியே, புள்ளிக்கு வெளியே தள்ளப்படுவர். அண்ணனோ, தம்பியோ, தங்கையோ, தாயோ, தகப்பனோ...... யாவரின் முகத்தின் மீதும் கதவுகள் சாத்தப்படும்.

உண்மையான உறவு என்பது இயற்கையுடனும் ஒட்டு மொத்த இருத்தலுடனும் இதயங்கலந்து சங்கமித்துப் பெற்ற ஆனந்தத்தை மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் துடிப்பில் ஒருவர் நனவுடன் இன்னொருவருடன் தொடர்பு கொண்டிடும், தன்னிலிருந்து வெளிச்சென்று அடையும் போது மட்டுமே பிறக்கும். இத்தகைய உறவின் ஒரு சாயலாக ஒரே பாலைச் சேர்ந்த நண்பர்களுக்கிடையேயான நட்புறவைச் சொல்லலாம். உண்மையான நட்பும் கூட தற்போது மிகவும் அரிதாகவே நிகழ்கிறது. அடுத்து ஆண்-பெண் காதலைக் கூட உண்மையான தொடர்புபடுத்துதல் என்பதன் ஒரு வகையாகக் கூறலாம். ஆனால் இது மிக மிக அரிதாகவே நிகழக்கூடியது. ஏனெனில் காதலிப்பவர்கள் இருவரும் உளவியல் ரீதியாக முதிர்ச்சி (பக்குவம்) பெற்றிருக்கும் போது மட்டுமே இது சாத்தியமாகிறது. இந்த முதிர்ச்சி இல்லையெனில் ‘காதலில் வீழ்வது’ என்பது வெறும் வீழச்சியே, அதாவது வெறும் இனக்கவர்ச்சி அல்லது இயல் பூச்சியின் தூண்டல் விளைவு என்பதாக மட்டுமே விளங்கும். ஆக உண்மையான தொடர்புபடுத்துதல் இல்லாமல், தன்னிலிருந்து வெளிச் சென்று சேராமல் உண்மையான உறவு என்பது இருக்க முடியாது. ஆகவே இரத்த-உறவுகள் என்பவை உண்மையான உறவுகளல்ல.

ஆனால், ஒருவர் இன்னொருவருடன் தொடர்பு படுத்துவதற்கு முன்னர் தன்னை அவர் முதலில் கண்டடைய வேண்டும். அதாவது தன்னுடன் அவர் தன்னை தொடர்பு படுத்திடல் வேண்டும். ஏனெனில், தன்னையே தான் கண்டுபிடிப்பது என்பது ஒரு போதும் தாமே நிகழ்வதில்லை. ஏனெனில் அது இயற்கையான நிலையோ, கொடுக்கப்பட்ட நிலையோ அல்ல. பதிலாக ஒருவர் தன்னை நோக்கி விழிப்படைய வேண்டும். தனது உண்மையான சுயத்தை நோக்கி விழிப்புற வேண்டும். இந்த உண்மையான மையமான சுயம் என்பது ஒருவரது புறச் சுயமான உடலோ அல்ல - அது வெறுமனே ஒரு விலங்கு (தனக்குரிய அடிப்படையான பசிகளைக் கொண்டதொரு விலங்கு). அல்லது ஒருவரது இடைச் சுயமான மனமும் அல்ல. மனம் என்பது புறவுலகை அறிய உதவும் ஒரு கருவி போன்றது; அதாவது புறவுலகை நோக்கிய ஒரு சன்னல். அதிலும் வலையடிக்கப்பட்டு காணும் காட்சியை துண்டாக்கிக் காட்டும் ஒரு சன்னல். ஆகவே, ஒருவர் தனது உடலையும் மனதையும் கடந்து சென்றிட வேண்டும். மிக ஆழமாக தன்னுள் சென்று தனது சாரத்தை, ஆன்மாவை அடைதல் வேண்டும்.

தனது சாரமான ஆன்மாவைக் கண்டுபிடித்திடும் போது மட்டுமே தன்மை உண்மையில் ஒருவர் கண்டடைகிறார் எனலாம். ஒருவரது ஆன்மா என்பது ஒருவருடைய சுயத்தின் சாரம் மட்டுமல்ல, பிற சுயங்களின் சாரமும் ஆகும். இவ்வாறு ஒருவர் தன்னைக் கண்டடைந்திட்ட பிறகே பிறருடன் தொடர்புகொள்ளுதல் என்பது அர்த்தமுள்ளதாயிருக்கும். அதற்கு முன்னர் அனைத்து உறவுகளும் மேலோட்டமானவையே, வெறும் பரஸ்பர சார்ந்திருத்தல் மற்றும் பயன்பாட்டு ரீதியானவையே. இந்த “விழிப்பு” என்பது சாதாரண உறக்கத்திலிருந்து விழிப்பது அல்ல ; மாறாக விலங்குத் தன்மையிலிருந்து மனிதத்தன்மைக்கு விழிப்பதாகும். இவ்வாறு தன்னை ஒருவர் கண்டடையும் வரையில் அன்பை அவரால் ஒரு போதும் அறிய வியலாது.

உண்மையில் ஒருவர் தன்னையறிவதும், அன்பின் ஊற்றை அடைவதும் ஒன்றுதான். பொதுவாக அன்பு என்றவுடன் நாமனைவரும் பிறருடன் அல்லது இன்னொரு மனித ஜீவியுடன் தொடர்பு அல்லது உறவு கொள்ளும் போது மட்டுமே தேவைப்படும் ஒரு இணைப்புப் பாலமாக காண்கிறோம். உண்மையில் அன்பு என்பது இன்னொருவருடன் தொடர்புகொள்வதற்கு முன் தமக்கே முதலில் தேவைப்படுகிறது. உயிர்க்காற்றான பிராண வாயு போல அன்பானது முதலிடத்தில் ஒவ்வொருவருக்குமே தேவைப்படுகிறது. அன்பில்லாமல் மனித ஜீவிக்குரிய உள்ளாந்த அர்த்தத்துடன் ஒருவர் வாழ இயலாது.

அன்பில்லாத மனிதர் வெறும் நடைப்பிணமே அல்லது ஒரு எந்திரமே. அன்பை ஒருவர் இன்னொருவருக்குக் கொடுக்கவோ, இன்னொருவரிடமிருந்து பெற்றிடவோ இயலாது. ஒருவரிடம் அன்பு இருக்கிறதென்றால் அதன் விளைவுகளை மட்டுமே பிறர் உணரவோ, பெற்றிடவோ இயலும்; நேரே அன்பை இன்னொருவர் பகிர்ந்திட இயலாது.

நம்மில் பெரும்பாலானோர், யாரும் தம்மை நேசிப்பதில்லை என்பதாக வருந்துகிறோம். பிற பொருட்களை போல அன்பையும் புறத்தேயிருந்து எதிர்பார்க்கிறோம். ஆனால் உண்மையில் நாம் ஒவ்வொருவரும் அன்பின் ஒளிபரப்பு மையமாகத் திகழ்ந்திட வேண்டும். மனித வாழ்க்கையின் ஒரே இலட்சியம் அன்பெனும் பாடத்தை கற்பது மட்டும்தான். ஒருவரது பிரச்சினை யாரும் தன்னை நேசிக்கவில்லை என்பதாயில்லாமல், எல்லோரையும், எதிர்ப்படும் ஒவ்வொருவரையும் தாம் நேசிக்க வேண்டும் என்பதாக இருத்தல் வேண்டும். இன்னும் காதல் எனும் களத்திலும் கூட நாம் ஒரு தலைக்காதல், அரை தலைக் காதல் என்றெல்லாம் அறியாமையில் பேசுகிறோம். உண்மையான காதலில் காதல் மட்டுமே பிரதானம். காதலன், காதலி ஆகியோர் வெறும் சாக்குக்குத் தான். ஏனெனில் காதல் என்பது அன்பிற்கு இட்டுச் செல்லும் ஒரு வித்தியாசமான, விசேடமான தனிச் சாலையாகும். அதில் காதலனும், காதலியும் சேர்ந்தே செல்வது மிக மிக அரிது. ஆக, காதலில் ஒருதலை, அரைத்தலை என்றெல்லாம் இருக்க முடியாது. உலகில் காதலிக்கும் யாரேனும் இருக்க வேண்டும். அதாவது உலகின் அழிவை தள்ளிப் போடும் யாரேனும் ஒருவர் இருக்க வேண்டும். அவ்வளவுதான். ஆம், அன்பை நாம் பிறரிடமிருந்து பெறவும் வேண்டாம், கொடுக்கவும் வேண்டாம். ஒருவரிடம் அன்பிருந்தாலே போதும், அதாவது அன்பு வாசம் செய்யும் - வந்து போகும் - திறந்த மாளிகையாக ஒருவர் இருந்தாலே போதும். ஏனெனில் அன்பு என்பது கையாளக் கூடிய பொருள் அல்ல.

உறவுகளின் அடியோட்டமான உண்மையான தன்மைகளையும், இயல்புகளையும் ஒருவர் அறியத் தவறினால்; மேலும் ஒருவரை மட்டுப்படுத்துவதும், கட்டிப் போடுவதுமான குடும்ப-மைய உறவுகளையும், சாதியின்-மைய உறவுகளையும், கடந்து செல்ல வேண்டியதான் அவசியத்தையும் அறியத் தவறினால் ஒருவர் மிகவும் குறுகலான முதல்-நிலை உறவுகளின் கோளத்திற்குள்ளேயே சிறைப்பட்டு விடுகிறார். வாழ்க்கைப் பயணத்தின் தொடக்கப் புள்ளியிலேயே சிக்கிக் கொள்கிறார். அங்கேயே தங்கி தேங்கி அழுகிப் போகிறார்.

இதற்கு மாறாக, அனைத்து உறவுகளிலிருந்தும் (அனைத்து உறவுகளும் பினைப்புகளே) நம்மை நாம் விடுவித்தக் கொள்வோமெனில், தனித்து (தமது அகத்தில் வேர் கொண்டு) நிற்போமெனில், அனைவரையும் சக-பயணிகளாக கருதி அக்கறையோடும், பொறுப்போடும் அணுகுவோமெனில் நமது பயணமானது ஒவ்வொருவருக்கும் இனிதே அமைவதோடு விடுதலையளிப்பதாயிருக்கும். ஒருவர் பிற ஒவ்வொருவருக்கும் சக-பயணியாக விளங்குவாரெனில் அவர் தமது மகன்கள், மகள்களை மட்டுமே அதிகம் நேசிப்பவராக; பிறரை, அண்டை அயலாரை ஒதுக்கி விடுபவராக இருக்க வியலாது.

ஒருவருடைய சொந்தக் குடும்பமானது தம் பக்கம் உடனடியான கவனிப்பையும், அக்கரையையும் கோருகிறது என்ற போதிலும் அது ஒட்டு மொத்த மனித குலத்தின் மீதான ஒருவரது பொறுப்பினை மட்டுப்படுத்திட முடியாது. நாம் நமது அண்டை அயலார்க்கு உணவளிக்கும் விஷயத்தில் நேரடியாக ஈடுபட்டிருக்கவில்லை என்ற போதிலும் நம்மைச் சுற்றியுள்ள எவரும் அடிப்படைத் தேவைகளைப் பெற இயலாமல் வாடிடவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும் பொறுப்பும் அக்கரையும் நமக்குள்ளது. அதாவது நமது சொந்த வாழ்-முறை மற்றும் மதிப்பீடுகளை அடையும் வழிமுறை ஆகியவை மூலம் பிறரது அடிப்படை வாழ்க்கைக்கு ஊறு விளைவிக்காமல் இருக்கிறறோமா என உறுதிப்படுத்திட வேண்டிய அக்கரையும் பொறுப்பும் நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. ஏனெனில் ஒருவரது சொந்தக் குடும்பம் என்பது மாபெரும் மனிதகுலத்தின் ஒரு சிறு பகுதி மட்டுமே.

மிகவும் விரிவான அடிப்டையில் ஒருவரது சொந்தக் குடும்பம் என்பது உண்மையில் ஒருவருடைதல்ல. மாறாக, அது மனித குலத்தின் ஒரு பகுதி - அப்பகுதி குறித்த முழு பொறுப்பும் அக்கரையும் கவனிப்பும் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவ்வகையில் தான் மனித குலத்தின் ஒரு பகுதி ஒருவரது குடும்பமாக உள்ளது. இவ்வாறு குடும்பமானது முழுமையான கண்ணோட்டத்தில் காணப்பட வேண்டும். இல்லாவிடில் குடும்பம் எனும் பகுதிக்கு அர்த்தமில்லை. முழுமையின் மூலமே பகுதியானது இருக்கிறது. மனிதகுலம் இல்லையேல் தனியொரு குடும்பம் தனது அர்த்தத்தை இழந்து விடுவான். மனித குலம் என்பது ஒரே குடும்பம்தான். இது வெறும் கோட்பாடு அல்ல. விஞ்ஞான பூர்வ உண்மையாகும். உண்மையில் மனிதகுலம் மட்டுமல்ல, உயிருள்ள அனைத்து ஜீவராசிகளும், புவி மீதுள்ள அனைத்து தாவர இனங்களும், விலங்கினங்களும் ஒரே முட்டையிலிருந்து தோன்றியவையே

ஆனால் நாமோ இரத்த உறவுகளிலும், குடும்ப உறவுகளிலும் முற்றிலுமாக மூழ்கிக் கிடக்கிறோம். உறவுகள் என்றால் நமக்கு இரத்த-உறவுகள் மட்டுமே. இதற்கு வெளியே நாம் உறவு கொள்கிறோம். அல்லது கொடுக்கல் - வாங்கல் நிகழ்த்துகிறúôம் என்றால் அது நமது சொந்து இனம், சாதி சனத்தாருடன் மட்டுமே. நம்மைப் பொறுத்தவரையில் மனிதகுலம், உலகம் என்பவை. நமது குடும்பம், சாதி சனம் சமூகத்துடன் முடிந்து போகிறது. அதற்கு மேல் மனித குலம் என்பது வெறும் கோட்பாடு மட்டுமே;

உண்மையான சமூகப்புரட்சி பொருளாதாரப் புரட்சி என்பது நம் ஒவ்வொருவரிடத்திலும், இல்லத்திலும், நாம் பின் பற்றும் மதிப்பீட்டு-அமைப்பில் ஒரு அடிப்படை மாற்றத்தை செய்வதன் மூலம் மட்டுமே ஏற்பட முடியும்.

ஆகவே அப்படியொன்று நம்மைப் பொறுத்த வரையில் இல்லையென்றாகி விடுகிறது. இது தான் நமது இதயங்களில் அன்பில்லாததற்கும் காரணமாகும். நாம் ஒரு துண்டுபட்ட மனிதகுலம் அதில் நமக்கிடையே உண்மையான உறவு ஏதுமில்லை!

எப்போது நாம் நம்மிலிருந்து வெளிச்சென்று முழுமையைத் தழுவிடுகிறோமோ, முழுமையுடன் தொடர்பு கொள்கிறோமோ அப்போது தான் நாம் உண்மையான உறவில் இருக்கிறோம் ........ எனவே தான் அனைத்து விதமான மேலோட்டமான முதல் - நிலை உறவுகளûக் கடந்து அப்பால் செல்வது மிக முக்கியமாகிறது. அப்பால் செல்வது என்பது உண்மையில் ஒருவர் தன்னுள் செல்வதே. இதன் அர்த்தம் உளவியல் ரீதியாக சார்ந்திருக்காமல் ஒருவர் தனித்து, தன்னில் வேர் கொண்டு நிற்க வேண்டும். மேலும் தன்னை முழுவதுமாகக் கண்டடையும் பொருட்டு முடிவில் ஒருவர் தனக்குள்ளேயே ஆழமாகச் சென்று அடங்கிட வேண்டும். ஏனெனில் ஒருவர் தன்னை கண்டடையும் போது தான் உண்மையில் அனைவருடனும் அனைத்துடனுமான ஒன்றிப்பில் ஒருமையில் இணைகிறார். ஏனெனில் ஒருவர் முழுமையினின்றும் வேறானவர் அல்ல.



கீற்றுவில் தேட

Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.puthiyakaatru.keetru.com

www.koottanchoru.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anicha.keetru.com

www.anaruna.keetru.com

www.thaagam.keetru.com

www.dheemtharikida.com

www.noolagam.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.kathaisolli.keetru.com

www.kuthiraiveeran.keetru.com

www.ani.keetru.com

www.puthuezhuthu.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.bank.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.puthiyathendral.keetru.com

www.vanam.keetru.com

www.vizhi.keetru.com

www.kanavu.keetru.com

www.inmai.keetru.com

www.sancharam.keetru.com

www.kannottam.keetru.com

www.neythal.keetru.com

http://uthappuram.keetru.com/

http://semmalar.keetru.com/

About Us | Terms & Conditions | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP