Keetru Puthiya Thendral
Puthiya Thendral Logo
செப்டம்பர் 2007
இவர்தான் ஜீவா
இரவீந்திரபாரதி


காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பில் வத்தலகுண்டு நகரில் 1938 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் நாள் தமிழ் மாகாண 39-வது அரசியல் மாநாடு. அந்தக் காலத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி என்பது மிகப்பெரிய கெளவரமானது.

முப்பது வயது கூட நிரம்பாத ஒரு இளைஞர் பெரிய பெரிய தலைவர்களையெல்லாம் விட அதிக வாக்குகள் பெற்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகத் தேர்வு செய்யப்படுகிறார்.

அப்போது, தமிழில் அல்ல, ஆங்கிலத்தில், "யார் இந்த ஜீவானந்தம்?" என்று கேட்டார் இராஜாஜி என்று அழைக்கப்பட்ட இராஜகோபாலாச்சாரி.

நாஞ்சில் நாட்டுப் பகுதியில் (இன்றைய கன்னியாகுமரி மாவட்டம்) பூதப்பாண்டி என்பது குறிஞ்சியும், மருதமும் கொஞ்சி விளையாடும் இயற்கை எழில்மிக்க சிற்றூர்.

அவ்வூரில் சமூக அடுக்கில் பிராமணர்களுக்கு அடுத்த நிலையில் இருந்த வேளாளப் பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்த பட்டன்பிள்ளை உமையம்மை தம்பதியருக்கு 21-08-1907 இல் நான்காவது மகனாகப் பிறந்தார். முதல் மூன்று பிள்ளைகளும் தங்காமல் போகவே நான்காவது பிள்ளைக்கு மூக்குக்குத்தி மூக்கன் என்று பெயர் வைத்தனர். மூக்கன், மூக்காண்டி என்று அழைக்கப்பட்டார். இவர்களது குடும்பத் தெய்வம் சொரிமுத்தய்யனார் என்பது. எனவே சொரிமுத்து என்பது இவரது இளமைக்காலப் பெயர்.

திருவிழா என்றால் ஊர்மறிச்சான் என்று ஊரிலே தடுப்பு கட்டுவார்கள். அதாவது திருவிழா முடியும்வரை, மேல்சாதிக்காரர் குடியிருக்கும் அந்தத் தெருவுக்குள் அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் யாரும் உள்ளே நுழையக்கூடாது அவ்வளவு கட்டுப்பாடு.

ஜீவா தன்னோடு படிக்.கும் தாழ்த்தப்பட்டவர் எனப் புறக்கணிக்கப்பட்ட குடும்பத்தைச் சார்ந்த மண்ணடி மாணிக்கம் என்பவரின் தோள் மீது கைபோட்டுக்கொண்டு பூதப்பாண்டியில் தெருமறிச்சனைத் தாண்டி மேல் சாதிக்காரர் தெருவிலே நுழைந்து கம்பீரமாக பூதலிங்க சுவாமி திருக்கோயிலுக்குள்ளும் அழைத்துச் சென்றார்.

இளவயது ஜீவா அப்போது கடவுள் பக்திக்காரர். தேவாரம், திருவாசகம் பாடிக்கொண்டே வழிபடுவது வழக்கம். தீண்டாதாரை தெருவுக்குள் அதுவும் கோவிலுக்குள்ளே அழைத்து வந்துவிட்டதைக் கண்டபிறகும் சும்மா இருப்பார்களா ஆதிக்க சாதியார்! மேல் சாதிக்காரர்களின் எதிர்ப்பு இவர் குடும்பத்தின்பால் திரும்பியது.

குடும்பம் அவமானப்பட வேண்டியதாயிற்று. தந்தை மகனது செயலுக்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்கும் நிலை ஏற்பட்டது. தந்தையின் கண்டிப்பு அதிகமானது.

"நான் வீட்டை விட்டாவது வெளியேறுவனேயில்லாமல் கொண்ட கொள்கையைச் சிறிதும் விடமுடியாது" என்று வீட்டை, ஊரைத் துறந்தார்.

பள்ளி இறுதி ஆண்டில் படித்துக்கொண்டிருக்கும்போது அவரது தாயார் உமையம்மாள் காலமாகிவிட்டார். தாய்க்குத் தலைமகன் என்பது வழக்கு. மூத்தபிள்ளைதான் தாய்க்கு கொள்ளி வைக்கவேண்டும். மூத்த மகன் நீர்மாலை எடுத்து வரவேண்டும். மொட்டை போட்டு ஈமச்சடங்கு செய்யும்போது கோடி அதாவது புதுத்துணி உடுத்த வேண்டும். ஜீவா கோடித்துணியாக கதர்தான் வேண்டும் என்று கூறினார். எங்கு தேடினும் கதர் கிடைக்கவில்லை. கதரைத்தவிர வேறு உடுத்த முடியாது என்று மறுத்துவிட்டார். எனவே அவருக்குப் பதிலாக அவரது சகோதரர் நடராசன்தான் ஈமச்சடங்கு செய்யவேண்டியதாயிற்று.

காந்தியடிகளின் பால் மிகவும் கவரப்பட்ட ஜீவா காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய முடிவின்படி தமிழ்நாட்டின் தலைவர் ஈ.வெ.ரா பெரியார் தமிழ் நாட்டின் பிரதிநிதியாக புகழ் பெற்ற வைக்கம் போராட்டத்தில் கலந்துகொண்டார். மேட்டுக் குடியினர் தெருவில் தாழ்த்தப்பட்ட மக்கள் நடக்கக்கூடாது. தெருவிலேயே கால் வைக்க உரிமையில்லாதபோது கோவிலுக்குள் செல்ல முடியுமா?

இந்த மாபெரும் போராட்டம் சுமார் 20 மாதம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தின் முக்கியத்துவம் கருதி சுவாமி நாராயணகுருவே போராட்டப் பந்தலுக்கு வந்து போராடும் தொண்டர்களை வாழ்த்தினார். 1924-இல் நடந்த இந்தப் போராட்டத்திற்கு 17 வயதேயான ஜீவா தானே வலியச் சென்று கலந்து கொண்டார்.

வைக்கம் போராட்டத்திலிருந்து திரும்பிய ஜீவா இதே போன்று தனது மண்ணிலே நடைபெற்ற இன்னொரு போராட்டத்திலும் தொண்டராகத் தானே சென்று கலந்துகொண்டார். குமரி மாவட்டத்தில் டாக்டர் எம்.வி. நாயுடு தலைமையில் அங்க முத்து, காசிப் பண்டாரம், சிவமுத்து, கருப்பப் பிள்ளை, காந்திராமன், அக்கரை நீலகண்ட பிள்ளை, அவதானி செய்குத் தம்பி பாவலர் ஆகியோர் சுசீந்திரத்தில் ஆலயப் பிரவேசப் போராட்டத்தை நடத்தினர். போராட்டத்தில் பங்கு கொண்டவர்களுக்கு எதிர்ப்பு பலமாக இருந்தது. ஜீவா கடுமையாக தாக்கப்பட்டார். என்றாலும் "வழிவிடுவீர், வழிவிடுவீர்" என்று தானே எழுதிய பாடலைப் பாடிக்கொண்டே ஜீவா கோவிலுக்குள் நுழைந்தார்.

வ.வே.சு. அய்யர் நெல்லை மாவட்டத்தில் சேரன்மாதேவி என்னும் இடத்தில் பரத்வாஜ் ஆசிரமத்தைத் தொடங்கினார். ஆசிரமத்தில் பிராமணர்களுக்குத் தனியாகவும், பிராமணரல்லாத மாணவர்களுக்குத் தனியாகவும் உணவு அளிககப்பட்டு வந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் உதவி பெற்று வந்த ஆசிரமத்தில்தான் இந்த நிலை.

இந்த ஆசிரமத்தில் ஜீவாவும் பணியாற்றி வந்தார். ஜீவாவுக்கு இந்த வேறுபாடு பிடிக்கவில்லை. இந்தக் கொடுமை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவரான ஈ.வெ.ரா.வுக்குத் தெரிந்துவிட்டது. ஈ.வெ.ரா பெரியாரும், தலைவர் சேலம் வரதராஜுலு நாயுடுவும் ஆசிரமத்துக்கு வந்து நிலைமையை நேரில் கண்டறிந்தார்கள். இதன் உண்மை நிலையை அறிந்த ஜீவாவும் பெரியாரிடம் இந்தக் கொடுமையை எடுத்துரைத்தார்.

இந்த மனித உரிமை மீறலைக் கண்டு, மனிதனை பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் இழிவைக் கண்டு பெரியார் மனங்கொதித்தார். இது மிகப்பெரிய பிரச்சினையாகி மனித உரிமையைப் பாதுகாக்கும், மூடநம்பிக்கை, ஏற்றத்தாழ்வை எதிர்ப்பதற்கான சுயமரியாதை இயக்கம் பிறக்க வழிவகுத்தது. பெரியாருடன் ஜீவாவும் இணைந்து சமூக நீதிக்கான போராட்டத்தில் ஈடுபட்டார்.

பரத்வாஜ் ஆசிரமத்திலிருந்து வெளியேறிய ஜீவா காரைக்குடிக்கு அருகில் சிராவயல் என்னுமிடத்தில் புதிய ஆசிரமத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டார். சிராவயலைச் சேர்ந்த காசி விசுவநாதன் செட்டியாரின் ஆதரவுடன் செயல்பட்டார்.

காந்திய நிர்மாணத் திட்டத்தை நிறைவேற்றும் பணியில் இவ்வாசிரமம் ஈடுபட்டது.

இந்த ஆசிரமத்தில் ஜீவாவோடு இளமையில் ஒன்றாகப் பயின்ற நண்பர்கள் ஆசிரியர்களாகப் பணியாற்றினார்.

இவர்கள் அருகிலுள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளுக்குச் சென்று கல்விப்பணி செய்தனர். இவர்களை இணைத்துத் தீண்டாமை எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தினர்.

தாளாத தமிழ்ப்பற்றின் காரணமாக தனது பெயரை 'உயிர் இன்பன்' என்று மாற்றிக்கொண்டார். பின்னர், மக்கள் மொழியிலேயே பேசவேண்டும் என்பதைப் புரிந்து அதன்படியே பேசிவரலானார்.

1927-ஆம் ஆண்டு காந்தியடிகள் இலங்கை செல்லும்போது காரைக்குடி சிராவயல் ஆசிரமத்திற்கு வந்தார். ஜீவா தான் ஆசிரமச் செயலாளர் அப்போது காந்திக்கும் ஜீவாவுக்குமிடையே உரையாடல் நடந்தது.

காந்தியடிகள்: உங்களுக்கு என்ன சொத்து இருக்கிறது?

ஜீவா: இந்தியாதான் என் சொத்து.

காந்தியடிகள்: இல்லை, இல்லை. நீங்கள்தான் இந்தியாவின் சொத்து.

ஜீவா 1932-இல் கோட்டையூரில் கைதாகி கடலூர் சிறையில் வைக்கப்பட்டார். அப்போது லாகூர் சதி வழக்குத் தோழர்களான பூதகேஸ்வரதத், முகர்ஜி முதலியவர்களுடன் தொடர்புகொண்டு மார்க்சிய தத்துவங்களைப் படித்தார். ரஷ்யாவின் முதலாவது ஐந்தாண்டு திட்டத்தை மொழிபெயர்த்தார். வெளிவரும்போது சமதர்மவாதியாக வந்தார். அப்போதுதான் அவர் முதன்முறையாக மீசை வைத்துக்கொண்டார். காங்கிரஸ்காரராகச் சிறைசென்று கம்யூனிஸ்டாக வெளிவந்தார் ஜீவா.

ஜீவா சிறந்த தொழிற்சங்கவாதி. கோவையில் பஞ்சாலைத் தொழிலாளர்களை ஒன்றுதிரட்டி வீரஞ்செறிந்த போராட்டங்கள் நடத்தித் தொழிலாளி வர்க்கக் கோட்டையாக மாற்றினார். கோவை, நெல்லிக்குப்பம், மதுரை, தென்னக இரயில்வே தொழிலாளர் சங்கம் என இவரது தொழிற்சங்கப் போராட்டங்களைத் தொகுத்தால் அதுவே ஒரு வீரகாவியமாக விரியும்.

1935-இல் திருச்சியில் ஜீவா சுயமரியாதை சமதர்மக்கட்சி மாநாடு நடத்துகிறார். பொதுவுடைமை இயக்கத் தலைவர் எஸ்.ஏ. டாங்கே வந்து கலந்துகொள்கிறார். டாங்கேயின் அறிவுரைப்படி சமதர்மக் கட்சியைக் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியுடன் இணைக்கிறார்.

கோவை பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் - ஜீவாவின் ஒத்துழைப்போடு மில்தொழிலாளர் சங்கம் என்று மாற்றப்படுகிறது. கோவையில்தான் தொழிலாளர்கள் உருக்கு போன்ற வர்க்க ஒற்றுமையைக் காட்டி வீரஞ்செறிந்த போராட்டத்தை ஜீவா தலைமையில் நடத்தி வரலாறு படைத்தனர். தமிழகத்தில் இப்படி ஒரு தலைவர் இருந்தாரா என்று இந்தக் காலத்தில் நம்பக்கூட முடியாது. ஆனால் இருந்தார்.

எழுதுபவருக்குப் பேச்சு வராது. நன்றாகப் பேசுவோர் எழுதவராது. அரசியல் பேசுவோருக்கு இலக்கியம் வராது. இலக்கியவாதியாக இருப்பார் அரசியல் பிடிக்காது அல்லது அரசியல்வாதியாக இருக்கமாட்டார்.

ஆனால் ஜீவாவோ அரசியலில் அப்பழுக்கற்ற முழுநேர அரசியல்வாதி. அனல் கக்கும் பேச்சாளர். அரசியல் மேடையில் இலக்கியம் மணக்கும். எந்த மேடையிலும் இரண்டாவது இடம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

அவர் ஒரு கவிஞரா? ஆம்... மக்களுக்காக மக்களின் பிரச்சினைகளை மடை திறந்த வெள்ளமெனப் பாடல்கள் புனைந்தவர். அவர்காலத் தமிழகத்தில் காலுக்குச் செருப்புமில்லை என்ற பாடல் ஒலிக்காத மேடையில்லை. அதுவும் கோவை ராமதாஸ் தனது கணீர் குரலெடுத்துப் பாடினார் என்றால் ஆயிரக்கணக்கான மக்கள் உருகிப்போய் விடுவார்கள்.

ஐந்தாம்படிவம் படிக்கும் போதே கதர் வெண்பா 40 இராட்டின வெண்பா 40 என எண்பது வெண்பாக்களை இயற்றினார். இளம்பருவத்தில் "ஞான பாஸ்கரன், சுகுணாராஜன் அல்லது சுதந்திரவீரன் - என்ற நாடகங்களை இயற்றி பயிற்சி அளித்து, தானும் நடித்தார். நாடகக் கலைஞர் விஸ்வநாததாஸ் அவர்களுக்குச் சில நாடகங்களையும், பாடல்களையும் எழுதிக் கொடுத்தார். டி.கே.எஸ். சகோதரர்கள் உறவினராகவே பாவித்தனர். ஜீவா பல பாடல்களை இவர்களுக்கு எழுதிக் கொடுத்தார். இவர்களை ஊக்குவித்தார். கலைவாணர் என்.எஸ்.கே., டி.ஏ. மதுரம் நடிகவேள் எம்.ஆர். ராதா, டி.கே. பாலச்சந்திரன், சகஸ்ரநாமம், சிவாஜி, எம்.ஜி.ஆர், என கலைஞர்கள் கொண்டாடும் தலைவர் ஜீவா.

உண்டு களித்து தாம்பூலம் தரித்து ஓய்வாகச சாய்ந்துகொண்டு இலக்கியத்தை ரசனையோடு அசைபோட்டவர் அல்லர் ஜீவா.

ஜீவா இறப்பதற்குச் சில மாதங்களுக்கு முன்னர்தான் பூவுலகப் பொன்னுலகான சோவியத் ரசியாவை காண நேர்ந்தது.

நாஞ்சில் நாட்டுப்பகுதியான கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்ப்பகுதியாகும். இது திருவிதாங்கூர் மன்னர் ஆட்சிக்கு உட்பட்டது என்பதால் கேரள மாநிலத்துக்குரியது என்ற நிலை ஏற்பட்டது நேசமணி போன்றவர்கள் தெற்கெல்லையைக் காப்பாற்றப் போராடினார்கள். ஜீவா அப்போது தலைமறைவாக இருந்தார். இருப்பினும் தென்னெல்லைப் போராட்டத்தில் பங்கு கொண்டார்.

மாறுவேடத்தில் சென்னை வந்து, ம.பொ.சி., பக்தவச்சலம் முதலிய தலைவர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

"இன்று நமக்குச் சுதந்திரம் கிடைத்துவிட்டது. அன்னிய ஆதிக்கம் அகன்றுவிட்டது. தமிழ் ராஜ்யம் பெற்றுள்ள நாம் தமிழே எல்லாத்துறைகளில் அரசு வீற்றிருக்க வேண்டும் என்று விரும்புவது இயல்பே. சர்க்கார் காரியாலயங்களில் - அவை ராஜ்ய சர்க்கார் காரியாலயங்களாயினும் சரி, மாவட்ட, வட்ட ஸ்தல அரசாங்க அலுவலகங்களாயினும் சரி - எங்கும் தமிழே ஆட்சி செலுத்த வேண்டும். கல்லூரிகளில் தமிழ்! விஞ்ஞானத்தில் தமிழ்! தொழில் நுட்பத்தில் தமிழ்! உயர்நீதிமன்றம் முதல் சகல மன்றங்களிலும் தமிழ்". "இவ்வாறு தமிழகமெங்கும் தமிழ்மொழி தனி அரசு ஓச்சவேண்டும்.

இந்தியப் பாராளுமன்றத்தில் தமிழகப் பிரதிநிதிகள் தமிழில் பேசவும் சகல தஸ்தாவேஜுகளும் தமிழர்களுக்குத் தமிழில் கிடைக்கவும் ஆன உத்திரவாதம் வேண்டும்.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகளெல்லாம் தமிழனுக்குத் தமிழில் கிடைக்க உத்திரவாதம் வேண்டும். அதுமட்டுமல்ல தமிழ்நாட்டிலிருக்கும் மத்திய அரசாங்கத்தின் பல்வேறு துறைக்கிளைகள் தமிழ் மக்களோடு தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்று முழங்கினார் ஜீவா.

ஜீவா நமக்குப் படைத்தளித்த செல்வங்கள் ஜனசக்தி, தாமரை, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். 'தொல்காப்பியர் முதலாக சித்தர் ஈறாக உள்ள அத்தனை படைப்புகள் பற்றியும் நாம் ஆராய்ச்சி நடத்தவேண்டும் என்றும் ஒவ்வொரு துறையிலும் உள்ள ஆராய்ச்சியாளர்களைக் கூட்டுவித்து அத்துறை பற்றி விவாதித்து ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்றும் பல பாகங்களிலும் அமைந்துள்ள நாடக இசை நடன மன்றங்கள் ஒன்றுசேர்ந்து இந்த இணைப்பு சக்தியையும் புதுமைச் சக்தியையும் வேகப்படுத்தும் படியான ஒரு கலை இலக்கிய எழுத்தாளர் மாநாடு நடத்த வேண்டும்" என்றும் ஜீவா 1958 ஆகஸ்டு 9-ல் கட்சி எழுத்தாளர்கள், கலைஞர்கள் பிரதிநிதிகளின் கூட்டத்தில் பேசினார்.

கடைசி ஆசை

ஜீவாவின் நிறைவேறாத ஆசைகள் என்று தோழர் கி.நா. கிருஷ்ணன் குறிப்பிடுகிறார்.

1. நான் ஏன் கம்யூனிஸ்ட் ஆனேன். நான் ஏன் கம்யூனிஸ்ட்டாக இருக்கிறேன். நீங்கள் ஏன கம்யூனிஸ்ட்டாக வேண்டும். இப்படி மூன்று புத்தகங்களும், கம்பனை, வள்ளுவனை, பாரதியைப் பற்றி மூன்று புத்தகங்களும் எழுதி வெளியிடவேண்டும்.

2. மார்க்சீயம் தமிழ் மண்ணில், தமிழ் மணத்துடன் கலந்தே பரப்பப்பட வேண்டும்.

3. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் நாடு தழுவிய ஒரு நடுத்தர வர்க்க ஸ்தாபனமாக கட்சிகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட வேண்டும்.

4. ஓய்வு பெற்ற பெற வேண்டிய சகலதுறைப் பெரியவர்களையும் ஒன்றுசேர்த்து ஒரு அமைப்பை உருவாக்கி அதன் மூலம் நாட்டிற்கு எல்லா வழிகளிலும் நல்லமுறையில் வழிகாட்ட வேண்டும்.

இப்போது தெரிகிறதா யார் இந்த ஜீவானந்தம் என்று.

மக்களோடு மக்களாக மக்களுக்காக வாழ்ந்தவர். கலைகளை நேசித்தவர். கலைஞர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். சுருக்கமாகச் சொன்னால் ஜீவா தமிழ்ப் பண்பாட்டின் அடையாளம்.

பொதுவுடைமை வீரர் ப. ஜீவானந்தம்

தோற்றம் - 21.8.1906 மறைவு - 18.1.1963

ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தியாகங்கள் பல புரிந்தவர் பொதுவுடைமை வீரர் ப. ஜீவானந்தம் அவர்கள். தமது 56 ஆண்டுகால வாழ்வில் பத்து ஆண்டுகளை சிறையில் கழித்தவர். அப்பழுக்கற்ற எளிய வாழ்க்கை நடத்தியவர்.

காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்க வீரராக, தமிழ்ப் பற்றாளராக, அனைத்திற்கும் மேலாக ஒரு பொதுவுடைமை இயக்கத் தலைவராக படிப்படியாக உயர்ந்தவர். தம்மை நாத்திகராக பிரகடனப்படுத்திக் கொண்டவர்.

கலை இலக்கிய உணர்வுள்ள ஜீவா அவர்கள் பெரும் இலக்கியவாதியாகவும், பத்திரிக்ையாளராகவும் திகழ்ந்தவர். பாரதியின் பாதையைப் பின்பற்றி பாமரர்களை எழுச்சி பெறச் செய்த பாடல்கள் பலவற்றைப் பாடிவயர். பொதுவுடைமை கட்சிக் கூட்டங்களில் முதல் முறையாகத் தமிழ் இலக்கிய பெருமைகளை பேசி, தமிழ்க் கலாச்சாரத்தோடு, கட்சியை வளர்த்தவர்.

வைக்கம் சத்தியாகிரகம், சுசீந்திரம் தீண்டாமை இயக்கம், சுயமரியாதை, இயக்கம் போன்றவைகளில் தனிப் பங்கேற்றவர். 1952-ஆம் ஆண்டு வண்ணாரப்பேட்டை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவரது நினைவைப் போற்றும் வகையில் அரசு, நாகர்கோயிலில் மணிமண்டபம் எழுப்பியுள்ளது.