Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Thendral
Puthiya Thendral Logo
செப்டம்பர் 2007
ஓணம் சொல்லும் உண்மைகள்
ராம் குமார்


அண்மையில் கோலாகலமாக நடந்து முடிந்துவிட்டன மலையாளிகளின் ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள். உழவர் பெருநாளாக, உழைப்பாளர் திருநாளாக, தமிழர் திருவிழாவாக மத எல்லைகளைக் கடந்து தமிழர் கொண்டாடும் பொங்கல் போன்றதே மலையாளிகளின் ஓணம் என்ற திருவோணம்.

கொல்லம் ஆண்டு மாதம் அத்தம் (அஸ்தம்) நட்சத்திரத்தில் தொடங்கி திருவோண நட்சத்திரம் வரை 10 நாட்கள் கொண்டாடப்படும் ஓணமானது, தமிழரின் பொங்கலைப் போலவே மலையாளிகள் நல்ல விளைச்சலுக்கும், அறுவடைக்கும் நன்றி தெரிவிக்கும் திருவிழா என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது மலையாளிகளின் தேசிய திருவிழா.

ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் கடந்த காலத்தில் தாம் பெருமையுடன் வாழ்ந்த பொற்காலம் குறித்த ஒரு கனவுக்கதை இருக்கும். அத்தகைய ஒரு பொற்காலக் கதை ஓணத்தின் பின்னணியிலும் உள்ளது.

நீண்ட காலத்திற்கு முன்பு கேரளத்தை மகாபலி என்ற அசுர பேரரசர் ஆண்டு வந்தார். அவரது பொற்கால ஆட்சியில் சாதி வேறுபாடுகளே இல்லை. அனைவரும் சமம், யாரும் ஏழைகள் அல்லர். மதிநுட்பம், ஈகை முதலிய குணம் படைத்த நீதி தவறாத சிறந்த அரசர் அவர். அவர் மிகப்பெரும் புகழ்பெற்றவராக இருந்தார். அதனால், அவரது ஆட்சி வானுலகையும் எட்டிவிடும், அவரது அதிகாரம் தம்மையும் ஆள்வதாகிவிடும் என்று தேவர்கள் அச்சப்பட்டனர். அவர்கள் தமது தாயான அதிதியிடம் முறையிட்டனர். மகாபலி மன்னரின் அதிகாரத்தை குறைக்குமாறு கடவுளான விஷ்ணுவிடம் வேண்டினார்கள்.

தம்மவர்களின் அச்சம் போக்குவதற்காக, மகாவிஷ்ணு வாமனன் என்ற பார்ப்பனனாக குள்ள உருவம் தாங்கி மகாபலி மன்னனிடம் வந்தார். தான் ஒரு யாகம் நடத்தப் போவதாகவும் அதற்கு வேண்டியது தருமாறும் மன்னரிடம் பிச்சை கேட்டார். மன்னரின் குருவான சுக்கிராச் சாரியாரோ, "இவருக்கு எந்தப் பரிசும் அளிக்க வேண்டாம். வந்திருப்பது சாதாரண மனிதனல்ல" என்று எச்சரித்தார்.

ஆனால், அந்த நல்ல அரசரோ, தான் நல்லவன் என்பதால் தனக்கு எதிராக கடவுள் எதையும் செய்யமாட்டார் என்று கருதி வேண்டியதை கேட்குமாறு வாக்களித்தார். அதோடு கொடுத்த வாக்கை திரும்பப் பெறுவது மாபெரும் பாவம் என்றும் அவர் நம்பினார்.

தனக்கு 3 அடி நிலம் வேண்டும் என்று வாமனன் கேட்டான். சரி என்று அரசர் சொல்லவும், வாமனன் தனது குள்ள உருமாறி மகாவிஷ்ணுவாக பேருருவர் (விஸ்வரூபம்) தாங்கி, முதலடியில் வானை அளந்ததோடு விண்மீன்களையும் பறித்தார். இரண்டாவது அடியில் கீழுலகை அழித்தார்.

3வது அடியில் உலகம் அழியும் என்ற நிலையில்... மக்கள் மீதும் நாட்டின் மீதும் பேரன்பு கொண்ட மகாபலி மன்னன், நாட்டையும் மக்களையும் காப்பதற்காக 3 வது அடியை வைக்க தனது தலையைக் காட்டினார். மகாவிஷ்ணு மன்னரின் தலையில் காலை வைத்து கீழுலகில் அமிழ்த்தினார். மன்னரால் உலகம் காக்கப்பட்டது.

தான் இறக்கும் தருவாயிலும், தன் நாட்டையும் மக்களையும் சந்திக்க வாய்ப்பு கேட்க, பெரிய மனம் கொண்ட மகாவிஷ்ணு அதற்கு வரம் அருளி, ஆண்டிற்கு ஒருமுறை மகாபலி மக்களை சந்திக்க வழிசமைத்தார்.

அவ்வாறு மகாபலி மன்னர் மக்களைக் காணவரும் நாளில், மக்கள் செழிப்புடனும், மகிழ்ச்சியுடனும் இருக்கின்றனர் என்பதைக் கண்டு மகிழ்வதற்காகவே புத்தாடை அணிந்து, பூக்களால் அத்தப்பூ கோலமிட்டு ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் வரவேற்கின்றனர் மக்கள். ஓண ஊஞ்சல், (குழு நடனம்), அத்தப்பூ கோலம், கைகொட்டிக் களி, யானை ஊர்வலம், வள்ளக்களி (படகு போட்டி) என கொண்டாடப்படுகிறது ஓணம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com