Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Thendral
Puthiya Thendral Logo
செப்டம்பர் 2007
அறிவியல் அறிவோம் - தொடர் 5

ஹிஸ்டீரியாவும் பில்லி சூனியமும்
- மரு. த. இராஜேந்திரன்


(மனச்சோர்வு நோய் பற்றி தகவல்களை சென்றமாத இதழில் கண்டோம்... அதனை சார்ந்து மனம் - உடல் - நரம்புமண்டலம் இவைகளின் இயக்கசலனம் சார்ந்த ஹிஸ்டீரியா நோய்பற்றி காண்போம்.

நாகரீக வளர்ச்சியால் மக்கள் அறிவியல் நீரோட்டத்தில் கலந்து இயற்கை ரகசியங்களை காணத்துடிக்கின்றனர். இதில் முன்னோர் விட்டுச்சென்ற அறிவுப்பாதைகளும் கலாச்சாரங்களும் பிற்கால சிந்தனைகளுக்கும், கண்டுபிடிப்புகளுக்கும் வழிகோலுகின்றன. இத்தகைய சூழலில் மனித உடலில் இயற்கையின் பிரதிபலிப்பாக சிந்தனையின் தொகுப்பாக அமைந்துகிடப்பது தான் மனம். இந்த மனமும், உடலும் இவையிரண்டின் இயக்க சலனத்துக்கு ஊக்கமளிக்கும் நரம்புமண்டலமும் தத்தம் செயல்களில் ஒருங்கிணையாமல் ஏற்படுத்தும் ஒருவித நோயே இந்த ஹிஸ்டீரியா ஆகும்.

இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலோர் பில்லிசூனிய, பேயாட்டங்களால் துன்பப்படுபவர்களாகவே காணப்படுகின்றனர். இன்றும் இத்தகைய நோயாளிகளை கிராமப் புறங்களில் பில்லிசூனிய பாதிப்புக்குள்ளானவர்களாகவே கருதுகின்றனர்.

பழங்காலத்தில் கருப்பையானது உடலில் சுற்றி வருவதாக நம்பி, அதனால் தான் பருவ பெண்களுக்கு இந்நோய் வருவதாகவும் கருதினர்.

பிற்கால அறிவியல் ஆய்வுகளின் படி, இது ஆண், பெண் இருபாலர்களையும் பாதிக்கும் நோய் என்றும் பெரும்பாலும் பருவ பெண்களே இந்நோய்க்கு ஆட்படுவதனையும் கண்டறிந்துள்ளனர். இந்த நோயினால் பாதிக்கப்பட்ட பல்வேறு நோயாளிகளின் வரலாறுகள் மிகவும் அனுபவ ரீதியாக பார்க்கும்போது ஆச்சரியத்தையும் அதிசயத்தையும் கொண்டதாகவே நமக்கு தோன்றும்.

சுமார் பதினைந்து வயது இளம் பெண் ஜெய்சி. இவள் வீட்டின் மூத்த பிள்ளை. மிகவும் செல்லப்பிள்ளையும் கூட, எளிமையான தோற்றமும், இனிமையான பேச்சும் கொண்டவள். அவள் ஆள்மனதில் பல்வேறு லட்சிய போராட்டங்கள் பிரதிபலித்தன. ஆனால், படிப்போ சுமாரான நிலையில் தான் இருந்தது.

ஒருநாள் திடீரென பள்ளிக் கூடத்திலிருந்து அவளை ஆசிரியர் இருவரும் நண்பிகள் இருவருமாக மயக்கநிலையில் வீட்டிற்கு அழைத்து வந்தனர். அவள் மிகவும் தளர்ந்த நிலையில் காணப்பட்டாள். எனவே பெற்றோர்கள் அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆயத்தமாகினர்.

ஆனால், அவர்களை வழி மறித்த வீட்டின் மூத்த குடிமக்களாகிய தாத்தாவும், பாட்டியும் அருகிலிருந்து ஒரு பூசாரியை அழைத்து வந்தனர்.

அவரும் வந்த உடன் ஜெய்சியின் கையைப் பிடித்து நாடி பார்த்துவிட்டு, பிள்ளைக்கு பள்ளிக்கூடம் செல்லும் வழியில் ஏதோ பேய் பிடித்துவிட்டதாகக் கூறினார்.
பெற்றோர்கள் அதனை மாற்றுவதற்கு பூசாரியின் கரந்தொட்டு பயபக்தியோடு கேட்டுக்கொண்டனர்.

அவரும் சரியென ஒப்புக்கொண்டு, அடுத்த வாரம் வந்து பல்வேறு பரிகாரங்களை செய்தார். செய்துமுடித்து ஒருவாரம் கழிந்ததும் மீண்டும் தொடங்கிவிட்டது, அந்த மயக்கமும் பழைய குறி குணங்களும். மறுபடியும் ஆசிரியர்களும் சகமாணவிகளுமாக மயக்கநிலையில் கொண்டு தாய் தந்தையரிடம் ஒப்படைத்தனர்.

பெற்றோர் செய்வதறியாது திகைத்து, மீண்டும் முன்னர் பூசைகள் செய்த பூசாரியிடம் கேட்க அவரோ, அறிவுபூர்வமாக சிந்தித்து, இந்த பிள்ளைக்கு வேறு குற்றங்கள் இருப்பதாக தெரியவில்லை. எதற்கும் நீங்கள் ஏதாவது மருத்துவரிடம் காட்டுங்கள் என பதிலளித்துவிட்டார்.

பெற்றோர்கள் மருத்துவமனைக்கு கொண்டுசென்று மருத்துவம் செய்தனர். ஒருமணி நேரத்தில் மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிட்டாள் ஜெய்சி... மருத்துவர்கள் தொடர்ந்து சாப்பிடுவதற்கு மருந்துகள் கொடுத்து அனுப்பி வைத்தனர்.

வாரங்கள் - மாதங்கள் கடந்து மறுபடியும் ஜெய்சிக்கு மயக்கம் வர ஆரம்பித்தது. திடீரென தானாகவே அழத் தொடங்கினாள்... திடீரென வாய்விட்டு சிரித்துவிடுவாள்... சில நேரங்களில் எதுவும் பேசாமல் இருந்துவிடுவாள்... பண்பும், பணிவும் உடைய வளாக சிலநேரம் காட்சியளிப்பாள். இதனை மிகவும் கவனமாக பார்த்துக் கொண்டிருந்த தாயின் நெஞ்சம் சில்லிட்டுக் கொண்டே வந்தது.

கிராமத்து நாகரீகத்தில் உயிரும் உறவுமாக கலந்திருக்கின்ற பல்வேறு கலாச்சாரங்களில் ஒன்று சோதிடம் பார்ப்பது. வெற்றிலைமென்று சிவந்துபோன மலைவாசல் போன்ற வாய்திறந்து கிராமத்து வாசத்தில் இரண்டு பாட்டிகள் ஜெர்சியின் சாதகத்தைப் பார்த்து அந்த குறிப்ப வச்சு மருந்தோ, பூசையோ செய். எந்த பேயோ நாயோ பிடிச்சிருக்கா என்று தெரிஞ்சிடும். பிள்ளைக்கு நேரம் சரியில்ல, ஒடனே பாரு... என்று கூறி சென்றுவிட்டனர். அடுத்ததாக தாயின் நண்பிகள் பலர் இது ஒன்றுமில்ல, நம்ம ஊருல புதுசா ஒரு பாஸ்டர் வந்து இருக்காரு. அவரிடம் கொண்டுபோய் ஜெபம் பண்ணினால் போதும்... இது ஒபத்திரவம் தான்... ஏதோ அறுகொலை பிடிச்சிருக்கு... என்று சொன்னார்கள்.

இப்படி வருகிறவர்... போகிறவர்கள் எல்லாம் உபதேசம் செய்ய தாயும் தந்தையும் என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்துப்போய்... இறுதியாக பாஸ்டரிடம் கொண்டுசென்று ஜெபம் பண்ணினார்கள்... பல நாட்கள் தொடர்ந்தன. கொஞ்சம் பரவாயில்லாமல் இருந்தது. ஆனால் மீண்டும் தொடர்ந்து பலபல மாற்றங்களுடன் உருமாறி காட்சிதந்தாள் ஜெய்சி.

பெற்றோர்கள் உற்றோர்கள் சொற்களை எல்லாம் கைவிட்டு துணிச்சலாக ஒரு மன நோய் மருத்துவரை பார்ப்பது என முடிவு செய்து... இருபது கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் டவுணில் உள்ள மனநோய் நிபுணரிடம் ஜெய்சியை கொண்டு சென்றனர். அவர் அந்த பிள்ளையிடம் நன்றாக பேசி அவள் மனதினை ஆய்ந்து, பல்வேறு வழிமுறைகளையும் கூறி புத்துணர்வு ஊட்டி அனுப்பினார். ஜெய்சியின் பெற்றோர்களிடமும் பல அறிவுரைகளை கூறினார்.

இது ஆழ்மனதில் பதிந்த எண்ணங்களின் பிரதிபலிப்பு. அது வெளிப்படும்போது அதற்கு சாதகமான சூழ்நிலை இல்லாத காரணத்தால் தனக்குத்தானே ஏற்படுத்திக்கொள்ளும் ஒரு பாதுகாப்பு தான் இந்த மயக்கம். இத்தகைய மன உணர்வுகளுக்குள் தனக்கு மிகவும் பிடித்த நினைவுகளும் பிடிக்காத, வெறுப்படைந்த பழைய நினைவுகளும், நிகழ்கால தடைகளின் நினைவுகளும் சேர்ந்து குழம்பி விடுவதால் பல்வேறு குறிகுணங்கள் ஏற்படுகிறது. எனவே நீங்கள் அவளை அன்போடும், மகிழ்ச்சியோடும் நடத்தவேண்டும். அவள் விரும்பிய லட்சியங்களை அறிந்து அதற்கான வழிகாட்டுதலை செய்யுங்கள் என்று கூறி மருந்து மாத்திரைகளோடு அனுப்பி வைத்தார்.

பிள்ளை மிகவும் சந்தோசமாக இருந்தாள்.. நல்ல குணமடைந்தது போல் இருந்தாள்... மூன்று மாதங்கள் கழித்து அடிக்கடி பலபல குறிகுணங்களுடன் மீண்டும் பழைய நிலைக்கே சென்று விட்டாள் ஜெய்சி... இப்படிப்பட்ட நிகழ்வின் போதெல்லாம் மருந்து மாத்திரை என சாப்பிட்டு வருவதை குடும்பத்தில் உள்ளோர்... விரும்பவில்லை... ஏனென்றால் 24 மணிநேரம் உள்ள ஒருநாளில் பதினெட்டு மணிநேரம் தூக்கத்திலேயே கழிந்துவிட்டது. எனவே மனநோய் நிபுணரிடம் ஒழுங்காக மருந்து எடுக்காமல் விட்டு விட்டார்கள்.. நாட்டு மருத்துவர் ஒருவரிடம் கொண்டு சென்று தொடர்ந்து வேண்டுமானாலும் மருந்து செய்யலாம்.. என முடிவுசெய்தனர். சுமார் 40 கி.மீ தூரத்திலுள்ள தமிழ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு மருத்துவர் குழந்தையின் பெற்றோர்களைப் போலவே அன்பாக பழகி மூலிகை மருந்துகளை கொடுத்து வந்தார். அந்த பிள்ளையும் மருத்துவரிடம் தனது லட்சியம், தனக்கு ஏறபட்ட கசப்பான உணர்வுகள் அனைத்தையும் மனந்திறந்து பேசிவிட்டாள். இப்போது நல்லநிலையில் உள்ளாள். தமிழ் மருத்துவர் அந்த பிள்ளையிடம் நீ டவுணில் மருந்து சாப்பிட்டு நன்றாகதானே இருந்தாய் பின் ஏன் மீண்டும் பழையநிலைக்கு போனாய் என்று கேட்டிருக்கிறார்... அந்த டாக்டர் சொன்ன உபதேசங்களும்.. அவர் எனக்கு சொன்ன அறிவுரைகளும் எனக்கு நன்றாக புரிந்தது.
அவர் கேட்ட கேள்விகளும் தந்த பதில்களும் என் மனதிற்கு ஒரு பெரிய சக்தியாக இருந்தது. ஆனால் ஏதோ ஒரு பயத்தினால் என்னால் முழுமையாக அவரிடம் எல்லாவற்றையும் பேசமுடியவில்லை.. மட்டுமல்ல அவர் தந்த மருந்துகள் எப்போதும் என்னை தூங்க வைத்து விட்டதால், அது எப்போதும் எனக்கு சோர்வையே தந்து மீண்டும் வெறுப்பை உண்டாக்கியது. என்று கூறிமுடித்தாள்...

உங்களிடம் எனக்கு பயமே இல்லை... இப்போது எனக்கு நல்ல துணிச்சல் வந்துவிட்டது. உடலும் நல்ல ஆரோக்கியமாக இருக்கிறது... என்று கூறினாள்.

தமிழ் மருத்துவர், பெற்றோர்களை அழைத்து, இந்த பிள்ளைக்கு பயப்படும்படிக்கு பெரிய நோய்கள் ஒன்றுமில்லை. உண்மையைச் சொன்னால் அவள் சிறு வயதில் உங்களுக்குள் ஏற்பட்ட வாய்த்தகராறுகள்.. அடிக்கடி உங்கள் வீட்டில் நடந்த பிரச்சினைகள்.. குழப்பங்கள்... அனைத்தும் பிள்ளையை வெகுவாக ஆழ்மனதில் பாதித்து, வாழ்க்கையில் ஓர் வெறுப்பையே ஏற்படுத்தி உள்ளது. எனவே நீங்கள் உங்களுக்குள் அமைதியாக பேசுங்கள்... உங்கள் கோபங்களையும் சண்டைகளையும் பிள்ளைகள் கண்ணிற்கும் காதிற்கும் எட்டாவண்ணம் நடந்துகொள்ளுங்கள்...

அவர்களின் ஆழ்மன குறிக்கோள்களை அறிந்து அதற்கு தூண்டுகோலாக இருங்கள்... இதுதான் இந்த நோய்க்கு மிகச்சிறந்த மருந்து எனக்கூறி வழியனுப்பி வைத்தார்.. மூன்று ஆண்டுகளுக்கு பின் அந்த பிள்ளை நல்ல முறையில் குணமடைந்து விட்டதாக பெற்றோர்கள் மருத்துவரிடம் சென்று நன்றியுணர்வோடு கூறிச் சென்றனர்...

ஹிஸ்டீரியா என்ற நோயின் ஒருசில குணங்களையும் ஒரு நோயாளியையும் கண்டோம்... அதிசயிக்கும் வண்ணமுள்ள குறிகுணங்கள்... அனுபவங்கள்... நோய்கள்... காரணங்கள் பற்றி அடுத்த கட்டுரையில் காண்போம்.

... தொடரும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com