Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Thendral
Puthiya Thendral Logo
செப்டம்பர் 2007
சிறுகதை
ஒதிய மரம்
- எஸ். சந்திரசேகரன்


அகலமான தெருவின் தெற்குப்பகுதி வீட்டொன்றை ஒட்டி எத்தனை ஆணடாய் நின்று கொண்டிருக்கிறேன்?

வெய்யிலில் மாம்பழம், கொய்யா, வாழைக் கனிகளைத் தலைச்சுமையாய் தாங்கிவரும் பெண்மணிகள் என் நிழலில் இளைப்பாறுவார்கள்.

அப்போது, "எவ்வளவு உயர்ந்த மரம்? இதன் நீண்ட கிளைகள் இந்த வீட்டின் வெளிமுற்றம் வரை தொட்டு நிற்கின்றனவே! இந்த வீட்டிலிருப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள். வெயிலின் உக்கிரம் இவர்களைப் பாதிக்க வழியில்லை" என்று தங்களுக்குள் கூறிக்கொள்வர்.
இம்மாதிரி நேரங்களில், கர்வம் கலந்த மகிழ்ச்சியோடு 'சலசல'ப்பேன்.

இந்த வீட்டில் வசித்து வரும் மனிதர்களுக்குள்ளே மட்டும் என்னையே மையமாகக் கொண்ட சச்சரவுகள் அடிக்கடி நிகழும்.

ஒருநாள் வீட்டுத்தலைவி விரக்தியோடு சொன்னாள், "வீட்டின் முன்னுள்ள மரத்தால் என்ன பயன்? வீண் தொல்லைதான்! முற்றத்தில் குப்பைகளாய் உதிரும் இலைகள்.. பூக்கள்... மரத்தில் வந்து தங்கும் பறவைகள் போடும் எச்சங்கள்.... காகங்கள் அலகால் தூக்கிச் செல்லும்போது நழுவவிட்ட செத்த ஒலிகள், புழு பூச்சிகள், முட்டை ஓடுகள்,... சுற்றுப் புறத்தை மாசுபடுத்தும் அசுத்தங்கள், ... ஒருநாளில் இவற்றை கூட்டியள்ளி வெளியே கொட்டுவதில் எவ்வளவு தொல்லை தெரியுமா...?"

வீட்டுத்தலைவியின் புலம்பல் இதோடு நிற்காது. மேலும் தொடரும்போது என் மனம் என்ன பாடுபடும் தெரியுமா?

"இந்த மரம் - மா, கொய்யாவாக இருந்தால் உண்ணக் கனியாகும்... புளியாக இருந்தால் சமையலுக்காகும்! முருங்கையாக இருந்தால் இதன் இலைகளும் காய்களும் சமையலுக்காகும்... ஆனால் உத்தரத்துக்கூட உதவாத ஒதிய மரம் ... ஏங்க, உங்களைத்தானே, இந்த உதவாத மரத்தை வெட்டச் சொல்லி மனுப்போடச் சொன்னேனே என்ன ஆச்சு! "என்று வீட்டுத் தலைவி தன் கணவர் மீது பாய்ந்தாள்.

"நானென்ன செய்யட்டும்? மனுக்கொடுத்த பின்னும் பலமுறை முயற்சித்துப் பார்த்தேன்... அரசில் மரம் நடும் திட்டம் இருக்கிறதாலே ஏற்கனவே வளர்ந்த மரங்களை வெட்டச் சட்டமில்லேன்னுட்டாங்க...." என்றார் வீட்டுத் தலைவர் பரிதாபமாக.

"வெட்டச் சட்டமில்லையாக்கும்? தெருக்கோடியிருந்த வேப்பமரத்தை எப்படி வெட்டினாங்க? பல சரக்குக்கடையை ஒட்டி இருந்த மாமரத்தை எப்படி வெட்டினாங்க? அந்த மரங்களெல்லாம் ஊராட்சிக்கு லாபம் தரும் மரங்கள்! இந்த உதவாக்கரை மரத்தை வெட்டினா கிடைப்பது எதுவுமில்லை... அதனாலே தான் வெட்டலை!" என்று ஆவேசமாய்ப் பேசினாள் வீட்டுத் தலைவி.

அப்போது, தலைவியின் மாமனார் சொன்ன வார்த்தைகளில் நான் மனம் நெகிழ்ந்து போனேன்.

"தேவகி, இந்த மரத்தைப் பத்தி அப்படிச் சொல்லாதேயம்மா... கடவுள் எந்தப் பொருளையும் பயனின்றிப் படைப்பதில்லையம்மா... இந்த மரம் மட்டுமில்லேன்ணா... கோடை வெயிலில் புழுங்கி அவதிப்படுவோமேயம்மா..."

"உங்களுக்கென்ன? சாய்வு நாற்காலியில் சாய்ந்தவாறு தத்துவம் பேசுவிங்க. குனிந்து, நிமிர்ந்து தினமும் குப்பையை அள்ளிக்கொட்டற எனக்குத் தானே உடல் நோவு தெரியும்?" என்றாள் மருமகள்.

பெரியவர் வாயடைத்துப் போனார்.

ஒருநாள் அதிகாலைப் பொழுது நான் மகிழ்ச்சியடையவே அந்த நிகழ்வு நடந்தது போலும்!

பக்கத்துக் கிராமத்துக்காரர் ஒருவர் கையில் சுத்தியோடும், உளியோடும் வந்தார். வந்தவர் எனது அடிப்பாகத்தில் இருந்த பட்டைகளைச் செதுக்கியெடுத்து தான் கொண்டு வந்திருந்த துணிப்பையொன்றில் பத்திரப்படுத்திக் கொண்டார்.

வாசலில் கோலமிட்டுக் கொண்டிருந்த வீட்டுத்தலைவி கேட்டாள். "யோவ், யாரய்யா நீர்? உதவாக்கரை மரத்துப் பட்டைகளை எடுத்துச்சென்று என்னய்யா செய்யப் போகிறீர்...?"

"தாயே, ஒதியமரம், உதவாதமரம், பயன்தரா மரமென்று யாரம்மா சொன்னது? இயற்கை தந்த மரங்களும், செடிகளும் எல்லாமே நமக்கு ஏற்படும் பிணிகள் பலவுக்கும் மருந்தாகும்மா. ஒதிய மரப்பட்டையைத் தீயில் சுட்டுக் கரியாக்கி தேங்காய் எண்ணெய் கலந்து வெட்டுக் காயங்களுக்குப் பூசினால் சீக்கிரம் குணமாகுமம்மா. இந்தப் பட்டை பல்பொடி தயாரிக்கவும் பயன்படுகிறதம்மா".

இந்த நிகழ்வுக்குப் பிறகு என்னை வெட்டிச்சாய்ப்பது பற்றி தலைவி பேசியதேயில்லை.

நானும் பயன்படும் மரம் தான் என்று, பெருமையில் இன்றுவரை கம்பீரமாக நின்று காற்றில் 'சலசல'த்து கொண்டிருக்கிறேன்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com