Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Thendral
Puthiya Thendral Logo
செப்டம்பர் 2007
வேண்டாம் டைட்டானியம் தொழிற்சாலை
அசுரன்


தமிழகமே ஒரு திரைப்படக் கொட்டகை போல ஆக்கப்பட்டுவிட்டது போல் தோன்றுகிறது. மக்களிடம் வாக்கைப் பொறுக்கியவர்கள் இரண்டு அல்லது மூன்று அணிகளாகப் பிரிந்து நடித்துக் கொண்டிருக்க, தம் பிரச்சினைகளை முன்னிறுத்தி பேச வேண்டிய மக்களோ 'வாக்காளர்கள்' என்ற 'லேபிளை' பெருமையுடன் தாங்கியபடி வெறும் பார்வையாளர்களாக அமர வைக்கப்பட்டுள்ளனர்.

'சுதந்திரம்' அடைந்து விட்டதாக சொல்லப்படும் கடந்த 60 ஆண்டுகளில் பெரிய அணைகள், சுரங்கங்கள், அனல் மின் நிலையங்கள், பெருவழிப் பாதைகள், துப்பாக்கி சுடும் பயிற்சி பகுதிகள், ,அதிவிரைவு நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள், தேசிய பூங்காக்கள், காப்பகங்கள், தொழில் நகரங்கள், ஏன் கால்நடை பண்ணைகள் போன்ற மேம்பாட்டுப் பணிகளின் மூலம் இந்தியா சுதந்திரத்தின் உச்சத்தை அடைந்திருப்பதாக சொறிந்து கொள்கின்றனர் பொருளாதார 'மாமேதைகள்'.

ஆனால், மக்களின் நிலை என்னவாக இருக்கிறது?.

இந்த 'வளர்ச்சித்' திட்டங்களால் இதுவரை ஏறத்தாழ 5 கோடி மக்கள் தம் வாழிடங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். இந்திய திட்டக்குழுவின் முன்னாள் உறுப்பினரான எல்.சி. ஜெயின், 2000 ஆம் ஆண்டின் மத்தியில் வெளியிட்ட ஒரு குறிப்பில், "1950க்கு பின்னர் மேற்கொள்ளப்பட்டு உள்ள மேம்பாட்டுப் பணிகளால் மட்டும் இரண்டரை கோடிபேர் இவ்வாறு தம் வாழிடங்களிலிருந்து இடம் பெயர்க்கப்பட்டு உள்நாட்டு அகதிகளாக ஆக்கப்பட்டு உள்ளதாகவும் அதில் 40% பேர் பழங்குடியினர் என்றும், அதில் 50% பேருக்கு கூட உரிய மறுவாழ்வு கிடைக்கவில்லை" என்றும் தெரிவிக்கிறார். ஆனால், மக்கள் தொகையில் இப்பழங்குடி மக்களின் அளவு 8% மட்டுமே, இந்த மேம்பாட்டுப் பணிகளால் பெரிதும் பாதிக்கப்படுபவர்களில் நிலமற்ற உழைப்பாளர்கள், மீனவர்கள், கைவினைஞர்கள் ஆகியோரின் தொகை பொதுவாகவே கணக்கில் வருவதில்லை.

ஆக, இதிலிருந்து தெரிய வருவது என்னவென்றால், யார் அதிக மக்களை உள்நாட்டு அகதிகளாக ஆக்கி உள்ளார்களோ அவர்களே மாபெரும் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தியவர்கள் என்பதே. ஏற்கனவே இதில் அனுபவம் பெற்ற டாடா குழுமத்தினர் இப்போது தமிழகத்தின் தென் பகுதிக்கும் தமது வளர்ச்சி புல்டோசருடன் வந்துவிட்டனர்.

அதுதான் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் திட்டமிடப்பட்டுள்ள டாடா ஸ்டீல் நிறுவனத்தின் டைட்டானியம் ஆலை, சூன் 28 ஆம் நாள் தமிழக முதல்வர் மு. கருணாநிதி, டாடா குழும தலைவர் இரத்தன் டாடா ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

முதலில் 16,000 ஏக்கர் தேவை என்றாலும், இப்போது கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் இப்போது நெல்லை மாவட்டம் வேண்டாம், தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் அரசூர்-1, அரசூர்-2, தச்சை மொழி, நடுவக்குறிச்சி, சாஸ்தா விநல்லூர், புதுக்குளம், குலசேகரபட்டினம் ஆகிய வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட 48 கிராமங்களில் இருந்து நிலம் கையகப்படுத்தப் போகிறார்கள். இப்பகுதியிலுள்ள 7,538 நில உரிமையாளர்களிடம் இருந்து 9,825 ஏக்கர் நிலம் வாங்கப்பட இருக்கிறது. இது முதல் கட்டம் தானாம்.

சரி, இந்திய தேச நலனுக்காக ஏற்கனவே தியாகிகளாக ஆக்கப்பட்டுள்ள மக்களுடன் இன்னும் அரை இலட்சம் மக்களை தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து தியாகிகளாக ஆக்குவதில் யார் தான் பெருமைப்படாமல் இருக்க முடியும்?. ஆனால், மக்கள் தலைமுறை தலைமுறையாக தாம் வாழ்ந்த இடத்திலிருந்து விரட்டப்பட்டு தியாகியாக்கப்பட வேண்டிய அளவுக்கு டைட்டானியம் அவசியமான பொருளா? 50,000 மக்களின் வாழ்க்கை, சுற்றுச் சூழல் நலனை விட டைட்டானியம் முக்கியமா?

இல்லை, என்பதே உண்மை.

7 மீட்டர் ஆழம் வரை தோண்டி எடுக்கப்படும் இந்த மண்ணிலிருந்து இல்மனைட், கார்னட் போன்ற கனிமப் பொருட்கள் பிரித்தெடுக்கப்படும். இல்மனைட்டில் இருந்து டைட்டானியம் டை ஆக்ஸைடு தயாரிக்கப்படும். இது தயாரிப்பு குறிப்பு. உலகில் பயன்படுத்தப்படும் டைட்டானியத்தில் 96% டைட்டானியம் டை ஆக்சைடாகத்தான் பயன்படுத்தப்படுகிறது. இது பெயின்ட் தயாரிப்பதில் 51%மும் பிளாஸ்டிக் தொழிற் துறையில் 19%மும் உயர்ரக வெண் தாள் தயாரிக்க 17% ஆகவும் பயன்படுத்தப்படுகிறது.

சாத்தான்குளம் பகுதியில் உள்ள தேரி மண்ணில் இல்மனைட் எனப்படும் கறுப்பு மணல் ஏராளம். தவிர சிர்கான், கதிரியக்கமுடைய மோனோ சைட் ஆகியவையும் உள்ளன. கடற்கரையில் கார்னட் அதிகளவில் கிடைக்கிறது. மத்திய அரசின் அணுசக்தித் துறையின் கீழ் இயங்கும் அணு கனிம ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில் தமிழக கடற்பகுதி மற்றும் தேரி மணல் பகுதியில் 34.8 கோடி டன் இல்மனைட், 13 கோடி டன் சிலிமனைட், 10.7 கோடி டன் சிர்கான், 1.8 கோடி டன் மோனோசைட் படிவுகள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

10 டன் மண்ணை எடுத்து தூய்மைப்படுத்தினால் அதிலிருந்து ஒரு டன் இல்மனைட் கிடைக்கும். இத்தொழிற் சாலை மூலம் முதலில் ஆண்டுக்கு 5 இலட்சம் டன் இல்மனைட் தயாரிக்கலாம். அதன் மூலம் ஒரு இலட்சம் டன் டைட்டானியம் தயாரிக்கலாம். இதன் சந்தை விலை டன்னுக்கு ஒன்று முதல் ஒன்றரை இலட்சம் ரூபாய். ஆக, முதலீட்டுச் செலவை இரண்டே ஆண்டுகளில் பெற்றுவிடலாம். அதன் பின் உற்பத்தியை இரு மடங்காக்கி இரு மடங்கு ஆதாயமும் பெறலாம். இப்படி பலநூறு ஆண்டுகளுக்கு இந்த நிறுவனம் செயல்படும். (இது ஒரு உத்தேச மதிப்பீடு தான். உண்மையில் அதிகமாகவே இருக்கும்). ஒரு கணக்கு ஆசிரியரின் துணையுடன் குறைந்த பட்சம் 300 - 500 ஆண்டுகளில் டாடா நிறுவனம் பெறப் போகின்ற இலாபத்தை கணக்கிட்டு பார்த்துக் கொள்ளுங்கள். (மயக்கம் வருவதை தவிர்க்க அமர்ந்து கொண்டோ, படுத்துக் கொண்டோ கணக்கு போடவும்). டைட்டானியத்தின் தற்போதைய சந்தை விலை ஒரு இலட்சத்து 40,000 ரூபாய். இது இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என்பதும் நிச்சயம்.

இவ்வளவு ஆதாயம் அடையும் டாடா, ஆனால் நிலத்திற்கு மட்டும் ஏக்கருக்கு 50,000 ரூபாய் தான் தருவேன் என்று அடம் பிடிக்கிறது. ஆனால், தமிழக அரசின் சார்பில் பேசும் அமைச்சர் பொன்முடியோ அரசின் வழிகாட்டி மதிப்பே ஏக்கருக்கு ஒரு இலட்சத்து 16 ஆயிரம் ரூபாய். அதற்குமேல் டாடாவிடம் எவ்வளவும் கேட்கலாம் என்கிறார்.

சும்மா பாலைவனம் போல் கிடக்கும் நிலத்திற்கு 50,000 ரூபாயே அதிகம் என்று ஏ.சி. அறைகளில் புரள்வோர் புலம்புவதும் கேட்கிறது. அது அப்படியென்ன வருவாயற்ற நிலமா?

இல்லை. தமிழக அரசும், டாடா ஆதரவாளர்களும் குறிப்பிடுவது போல அது முற்றிலும் வறண்ட பகுதி அல்ல. நீர்வளம் குறைவு. ஆனால், இருக்கின்ற நீரைக் கொண்டு சிறப்பாக வேளாண்மை மேற்கொள்கின்றனர். தோட்டப் பயிர்கள் அவர்களுக்கு உதவுகின்றன. ஆண்டிற்கு ஓரிருமுறை மழை பொழிந்தாலே போதுமான வருவாய் ஈட்டமுடியும்.

அப்பகுதியில், முருங்கை, முந்திரி, பனை, தென்னை, சவுக்கு, வாழை போன்றவை வளர்க்கப்படுகின்றன. காய்கறிப் பயிரும் உண்டு. இவை ஏதும் இல்லாத இடங்களிலோ ஏராளமான மூலிகைகள் உள்ளன. அதுவும் இல்லாவிட்டால் கரியாகியும், தாளாலைக் கூழாகியும் வருவாய் தருகிறது சீமைக்கருவேல் மரங்கள்.

இந்திய பொதுவுடைமைக் கட்சி குழுவினர் நல்லகண்ணு தலைமையில் வந்தபோது பேசிய நடுவக்குறிச்சி மக்கள் தாம் முருங்கை மூலம் ஒரு ஏக்கர் நிலத்தில் ஆண்டுக்கு 50,000 ரூபாய் முதல் ஒரு இலட்சம் ரூபாய் வரை வருவாய் பெறுகிறோம் என்று தெரிவித்தது மிகையில்லை. ஏனென்றால், இவ்வட்டார முருங்கைக் காய்கள் கப்பல், விமானம் மூலம் கனடா முதலான மேலை நாடுகளுக்கும் செல்கின்றன. இந்த ஒரு கிராமத்தில் இருந்து மட்டும் நாள்தோறும் ஒரு லாரி முருங்கைக்காய் ஏற்றுமதி ஆகிறது.

முற்றிலும் பாசனமே இல்லாத பகுதியில்கூட செழித்து வளரக்கூடியது முந்திரி. முந்திரி பயிரிடும் விவசாயிகள் அதன் மூலம் தமக்கு ஒரு ஏக்கரில் ஆண்டுக்கு 40,000 ரூபாய் ஆதாயம் கிடைக்கிறது என்று உரத்து கூறுகின்றனர்.

இதுவா டாடாவின் "ஜீரோ" வருவாய் பூமி?

இப்பகுதியை 7,538 நில உடமையாளர்கள் உள்ளனர் என்பது அரசின் கணக்கு. இப்பகுதியில் மொத்தம் 40,000 பேர் வசிக்கின்றனர் என்பது டாடாவின் கணக்கு. (நிச்சயமாக இவை குறைவாகவே கணக்கிடப்பட்டிருக்கும்). இதனை அப்படியே ஏற்றுக் கொள்வதாக இருந்தால்கூட 8,000 பேருக்காவது வேலை கொடுக்க வேண்டியிருக்கும்.

ஆனால், டாடாவோ அதிகபட்சம் 1000 பேருக்குத்தான் வேலை கொடுப்பேன் என்கிறது. 40,000 பேரின் வாழ்வை பறித்து, நிலத்தை பறித்து, அகதியாக்கி விட்டு 1000 பேருக்கு வேலை கொடுப்பது சாதனையா?

இந்த இலட்சணத்தில் சென்னைக்கும் கோவைக்கும் வேலை தேடி இடம்பெயர்ந் துள்ள இளைஞர்கள், நாங்கள் தொழிற்சாலை தொடங்கும் போது அங்கு வந்து வேலையோ, வேறு வேலைகளோ செய்யலாம் என்று ஆசை காட்டுகிறது டாடா.

நில உரிமையாளன் என்று அரை ஏக்கர் நிலமாவது சொந்தம்கொண்டு, தோளில் துண்டுபோட்டு மிடுக்காய் நடந்த தமிழனை நிலமற்ற கூலியாக விரட்டியடிப்பது தான் உங்கள் சாதனையா? நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் என்று சொல்லிவிட்டு, இப்போது இருக்கின்ற நிலத்தையும் பிடுங்குவது என்ன நியாயம்?.

தன் உறவின் ஆவிகூட தன்னை விட்டு பிரிந்துவிடக் கூடாது என்பதற்காக வீட்டிற்கு அருகிலேயே, புதைத்து, கல்லறை கட்டி வாழும் மக்களுக்குச் சொந்தமான அந்த 6 அடி நிலத்தின் மதிப்பு, மரபு என்ன வென்று உங்களுக்குத் தெரியுமா?

பொருளாதார அடியாட்களாய் மாறி நாட்டை விற்று, தம் இருப்பை பெருக்க நினைக்கும் பிசாசுகளுக்கு இந்த இழப்பின் வலி எப்படித் தெரியும்?. டாடாவிடம் கடன்பட்டவர்கள் வைகுண்டராஜனை எதிரியாக பார்க்கிறார்கள், வைகுண்டராஜனிடம் கடன்பட்டவர்கள் டாடாவை எதிரியாகப் பார்க்கிறார்கள் என்ற நிலையே இன்றுவரை நிலவுகிறது. மாறாக, மக்களுக்கு கடன்பட்டவர்கள் என்று யாரையும் பார்ப்பதே அரிதாக இருக்கிறது.

ஈழத்தமிழர் சிக்கலை தீர்ப்பதற்காக இந்தியாவும் இலங்கையும் ஒப்பந்தம் செய்து கொண்டதைப்போல, இங்கு சிக்கலுக்குள்ளான தமிழர்களையும் ஓரமாக அமரவைத்துவிட்டு டாடாவா தாதாவா என்று கலைஞரும் ஜெயலலிதாவும் அணிபிரிந்து விவாதித்துக் கொண்டிருப்பது எவ்வகையில் நியாயம்?.

சுமார் 65 சதுர கி.மீ பரப்பளவு இடத்தை (16,000 ஏக்கர்) 25 அடி ஆழம் (7 மீட்டர்) தோண்டினால் அந்நிலத்தின் சூழலமைப்பு என்னவாகும்? சுற்றுச்சூழல் கண்ணோட்டத்தில் பார்த்தால் தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்ட கடற்கரைகளை சூறையாடி வருகின்றன சில தனியார் நிறுவனங்களும் ஒரு அரசு நிறுவனமும், தற்போது அரசு வி.வி. மினரல்ஸ் வைகுண்ட ராஜனுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதால் அவர் மட்டுமே தவறு செய்தவர் என்பதில்லை. வைகுண்டராஜன் உள்ளிட்ட அனைவருக்குமே கார்னட், இல்மனைட் உள்ளிட்ட கனிம மண்ணை, கடற்கரை மணல் வழித்து எடுத்து சேகரிக்கவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், நமக்குத் தெரிந்தவரையில் வழித்து அள்ளுவதெல்லாம் இல்லை. கனரக எந்திரங்களைப் பயன்படுத்தி தோண்டியே எடுக்கிறார்கள். இவ்வாறு மணல் எடுப்பதால் பல கடலோர கிராமங்களில் நிலத்தடிநீர் உப்பாகி லாரியில் வரும் தண்ணீரை நம்பியிருக்க வேண்டிய நிலைக்கு ஆளாகிவிட்டன.

கடற்கோள் போன்ற காலங்களில் பாதுகாவலாக இருக்கவேண்டிய கடலோர மணற்குன்றுகள் காணாமல் போய்விட்டன. ஆவுடையார் புரத்தில் கடற்கரையிலிருந்து சுமார் 30 அடி தூரம்வரை கடலுக்குள்ளேயே கனரக எந்திரங்களை இறக்கி கனிம மணலை வாரி எடுக்கின்றனர். இவ்வாறு எடுக்கப்படும் மணலை சுத்திகரிப்பதற்காக கடலில் இருந்தே ஒரு கால்வாய் வெட்டி கடல்நீரை எடுத்து சென்று பயன்படுத்துகின்றனர். இதனால் அவ்வட்டாரத்தின் நிலத்தடிநீர் உப்புநீராகிவிட்டது.

கூடங்குளம், இடிந்தகரை, பஞ்சல் முதலான கடற்கரை பகுதிகள் சென்னை, கோடியக்கரையைப்போல பங்குனி ஆமைகள் (ஆலிவ் ரிட்லி) டிசம்பர் மாதத்தில் முட்டையிட வரும் பகுதிகளாகும். இவ்வாறு ஆமைகள் வந்து முட்டையிட வேண்டுமானால் கடலையொட்டி நல்ல மணற்பரப்பு இருக்கவேண்டும். ஆனால் இருக்கின்ற மணலை எடுப்பதோடு நிற்காது, ஆமைகளின் போக்குவரத்திற்கு இடையூறாக, தமது போக்குவரத்திற்காக வி.வி. மினரல்ஸ் நிறுவனத்தினர் கடலுக்கு மிக அருகாமையில் சாலைகள் அமைத்துள்ளனர். மற்றொரு கொடுமையான அணுகு முறையாக ஏதோ கடற்கரைக்கே தாமே ஏகபோக முதலாளிகள் என்பதுபோல பல இடங்களில் வேலிகள் அமைத்துள்ளனர். அதனை மீறி அப்பகுதி கடற்கரைக்கு யாரேனும் செல்ல வேண்டுமானால் உயிரைப் பணயம் வைத்துத்தான் செல்ல வேண்டும்.

ஆனால் இவற்றையெல்லாம் தட்டிக்கேட்கவேண்டிய அரசோ வைகுண்டராஜனுக்கு "சிறந்த ஏற்றுமதியாளர்" விருது வழங்கி "கெளரவிக்கிறது". துணைக் குடியரசுத்தலைவர், மத்திய அமைச்சர்கள் முதல் தமிழக முதல்வர் வரை அவருக்கு விருது கொடுத்தவர்களின் பட்டியலில் உள்ளனர். தனியார் நிறுவனங்களின் நிலை இப்படியிருக்க அரசு நிறுவனமான மணவாளக்குறிச்சி மணல் ஆலையோ கடற்கரை மணலையும் மணற்குன்றுகளையும் விழுங்கியுள்ளதுடன் பலநூறு அடி ஆளத்திற்கு ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து நிலத்தடி கனிம மணலையும் உறிஞ்சி எடுக்கிறது.

ஒப்பீட்டளவில் ஏற்கனவே சிறிய அளவில் நடக்கும் தொழிற்சாலைகளாலேயே இத்தகைய மீறல்கள், சுற்றுச் சூழல் கேடுகள் எல்லாம் நடக்க... மாபெரும் டாடாவின் டைட்டானியம் திட்டம் என்ன சீரழிவுகளை ஏற்படுத்துமோ?.

பொதுவாகவே, 50 கோடி ரூபாய் மதிப்பீட்டிற்கு மேற்பட்ட எந்தவொரு திட்டம் செயல்படுத்துவதாக இருந்தாலும் அதுகுறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டாய்வை நடத்தி, அதன் அறிக்கையை மக்கள் மன்றத்தில் விவாதத்திற்கு வைத்து மக்கள் ஏற்றுக் கொண்டால் மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்பது விதி. இதுவோ 2500 கோடி ரூபாய் திட்டம் ஆயிற்றே?.

ஆனால், எல்லா கட்சியினரும் ஆளுக்கொரு குழுவை அனுப்பி பரபரப்பாய் செயல்பட... இனி மக்களின் கருத்தை கேட்டுத்தான் அரசு செயல்படும் என்று அறிவித்தார் தமிழக முதல்வர். சரி விடிவுகாலம் பிறந்துவிட்டது என்று மகிழ்ந்திருந்தால், அமைச்சர் பொன்முடி தலைமையில் ஒரு குழுவை அனுப்ப, எல்லா கட்சியினரையும் போல அவரும் கருத்தை கேட்டார். பிறகு, "நாங்கள் அறிவியல் பூர்வமாக கருத்துகேட்பு நடத்தி உள்ளோம்" என்று ஒரு வெடிக்குண்டை வீசிவிட்டு சென்னை சென்றுவிட்டார்.

இந்த 16,000 ஏக்கரில் சுரங்கம் தோண்டுவதோடு மட்டுமல்லாமல், இல்மனைட்டிலிருந்து டைட்டானியம் தயாரிக்கும் ஆலையும் அமைக்கின்றனர். குலசேகரப்பட்டினத்தில் கடல்நீரை நன்னீராக்கும் ஆலையை அமைக்கப் போகிறார்களாம். அதற்கு அப்பகுதியிலிருந்து 213 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதிலிருந்து நாளொன்றிற்கு ஒரு கோடியே 20 இலட்சம் காலன் (ஏறத்தாழ நாலரை கோடி லிட்டர்) தண்ணீர் தூய்மையாக்கி பயன்படுத்தப்படும். அதனால் வெளிப்படும் கசடுகளால் அப்பகுதிக்கும் கடலுக்கும் எத்தகைய பாதிப்பு ஏற்படும் என்பதெல்லாம் பற்றி இன்னும் யாரும் பேசவே தொடங்கவில்லை.

இதுபோதாதென்று "எங்களுக்குத் தேவையான மின்சாரத்தை நாங்களே உற்பத்தி செய்துகொள்வோம்" என்றும் கூறியுள்ளனர் டாடா அதிகாரிகள். அது எவ் வகையானது என்றே இன்னமும் தெரியவில்லை. தெரிந்த ால்தானே கருத்து சொல்லமுடியும்.

இப்படி எல்லாவற்றையும் மூடிமறைத்துவைத் துக்கொண்டு, "தாதுக்களை பிரித்தெடுக்க பயன்படுத்தும் நீர் அதன் பயன் முடிந்த பிறகு (அதாவது கழிவு நீர்) மண்ணுடன் சேர்ந்து மீட்கப்பட்ட நிலத்திலேயே விடப்படும். இதனால் இப்பகுதியின் நிலத்தடி நீரின் நிலைமை மாறும்" என்கிறது டாடா தரப்பு. இந்தக் கழிவுநீரினால் நம் நிலம் என்ன நிலைமைக்கு ஆகும் என்று யாராவது விஞ்ஞானிகள் கணித்து சொல்லுங்கய்யா...!

டைட்டானியம் ஆலை மாசு பற்றி தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் கேரளத்தில் திருவனந்தபுரத்திற்கு அருகில் வேளியில் அமைந்துள்ள டைட்டானியம் ஆலையை போய் பார்க்கலாம். இது உலகின் நச்சு ஆபத்தான பகுதிகளில் ஒன்று என்ற பெருமையை அவ்வட்டாரத்திற்கு பெற்றுக்கொடுத்துள்ளது. இப்படி எண்ணற்ற ஓட்டை உடைசல்களுடன் வருகிறது டாடாவின் டைட்டானியம் ஆலை. இன்றுவரையிலும் இத்திட்டம் குறித்த அறிவியல்பூர்வமான எந்த தகவலையும் எத்தரப்பிட மிருந்தும் பெற முடியவில்லை. ஒப்பந்த விபரங்கள்கூட கிடைக்கவில்லை. ஆனால், ஆதரவாகவும் எதிராகவும் அனல்பறக்க விவாதம் (வெட்டிப்பேச்சு!) நடக்கிறது. வாழ்க அறிவியல்பூர்வமான நடைமுறைகள்!.

ஆக, கடைசியாக, கூடங்குளத்தில் மாபெரும் கொள்ளிகள் தயாராக உள்ளன. அருகிலேயே சாத்தான்குளம் வட்டாரத்தில் நமக்கு ஆழமான மாபெரும் குழி தயாராகிறது. அப்படியே கடலூர், திருப்பூர், திண்டுக்கல், வாணியம்பாடி பகுதிகளில் நச்சு தாராளம். கழுத்தை இறுக்கி, மூச்சு திணறச்செய்து, கதைமுடிக்க சென்னை- மணலி முதல் ஏராளமான இடங்களில் வானளாவ புகை கக்கியபடி நிற்கின்றன புகைபோக்கிகள். உண்மையிலேயே தமிழக மக்கள் பாக்கியசாலிகள். எப்படி சாவதென்று அவர்கனே முடிவெடுத்துக்கொள்ளலாம் பாருங்கள்! யாருக்குக் கிடைக்கும் இந்த பேறு?. குண்டடிபட்டுத் தான் சாகவேண்டும் என்றே ஆசைப்பட்டாலும் "என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட்டுகள்" தயாராகவே இருக்கிறார்கள்.

டாடாவின் திட்டம்

இந்த 9828.78 ஏக்கர் நிலத்தில் இருந்து வெளியேற்றப்படவிருக்கும் மணலின் மொத்தக் அளவு 27.84 கோடி கன மீட்டர். இந்த நிலத்தில் இருக்கும் "கனத்த கனிமங்களின்" மொத்த எடை சுமார் பன்னிரண்டரைக் கோடி டன் பிரித்தெடுக்கப்பட்ட கனத்த கனிம வரவில் இல்மனைட் 70%, ரூட்டைல் 6%, ஜிர்கான் 4%, சிலிமானைட் 16%.

ஒரு ஏக்கரில் கிடைக்கும் கனிமத்தின் மதிப்பு விலை குறைந்த பட்சம் சுமார் 5.5 கோடி ரூபாய். 9828.78 ஏக்கரில் இருந்து கிடைக்க விருக்கும் கனிமங்களின் மதிப்பு 54,550 கோடி ரூபாய். இல்மனைட் மற்றும் ரூட்டைல்-இல் இருந்து டைட்டானியம் டை ஆக்சைடு தயாரிக்கும் பட்சத்தில் கிடைக்க வாய்ப்புள்ள மொத்த வருமானம் (சிலிமானைட்டை சேர்க்காமல்) ரூ.7 லட்சம் கோடி ஆண்டுக்கு ஒரு லட்சம் டன் டைட்டானியம் டை ஆக்சைடை உற்பத்தி செய்தால் 3-7 கோடி டன் டைட்டானியம் டை-ஆக்சைடை உற்பத்தி செய்யத் தேவைப்படும் காலம் சுமார் 700 ஆண்டுகள்!

டைட்டானியம் டை ஆக்சைடு-வின் விலை 2002 ரூ.87,000. அதுவே 2007ம் ஆண்டு ரூ.1,40,000. என்ற விகிதத்தில் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. மேற்கண்ட மதிப்பீடானது ஒரு டன் டைட்டானியம் ஆக்சைடின் விலை ரூபாய் ஒரு லட்சம் என்பதை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது. உண்மையில் டாடாவின் இலாபம் மேலும் பல்லாயிரம் கோடி ரூபாய் ஆகும்.

அதுபோல ஒரு டன் டைட்டானியம் உலோகத்தின் விலை 2005 ஆம் வருடத்தில் ரூ.3.5 லட்சத்தில் இருந்து ரூ.4.5 லட்சம் வரை இருந்தது. 1981 ஆம் ஆண்டில் இதன் விலை டன்னுக்கு சுமார் 7 லட்சம் ரூபாயாக இருந்தது. இதற்குக் காரணம் அந்த வருடத்தில் அமெரிக்காவில் போர் விமானங்களும், சரக்கு விமானங்களும் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டதுதான்.

அடுத்த 20 வருடங்களில் எஃக்கிற்குப் பதிலாக அதைவிட எடை குறைந்ததும், உறுதி மிக்கதும், துருப்பிடிக்காத உலோகமான டைட்டானியமே கூடுதலாக உபயோகப் படுத்தப்படும் என்பது நிபுணர்களின் கருத்து. டைட்டானிய உலோகத்தின் விலை அடுத்த சில வருடங்களில் வேக வேகமாகக் கூடும் என்பதுதான் உண்மை நிலை.

இதைவிடக் கனிமவளம் குறைந்த மண்ணை டன்னுக்கு 155.71 ரூபாய் கொடுத்து வாங்குகிறது கேரளாவிலுள்ள கேரள மிட்டல்ஸ் மற்றும் மினரல்ஸ் நிறுவனம். அதன்படி கணக்கு பார்த்தால் ஒரு ஏக்கரில் எடுக்கப்படும் மண்ணிற்கு இப்பகுதி மக்களுக்கு கிடைக்கவேண்டிய தொகை சுமார் ரூ.80 இலட்சமாகும். நிலமும் மக்களுக்கே சொந்தமாக இருக்கும். டாடாவோ டன்னுக்கு 99 காசுதான் தருகிறது. நிலமும் பறி போகிறது.

- என்று டாடாவின் திட்டம் தொடர்பாக பல உண்மைகளை வெளிப்படுத்தி உள்ளார் டாக்டர் இரமேஷ்.

மேலும் தெரிந்துகொள்ள :www.tatatitanium.blogspot.com


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com