Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Thendral
Puthiya Thendral Logo
செப்டம்பர் 2007

இந்தியா அடிமை நாடா?
ஆதி வள்ளியப்பன்


இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தம் பற்றி நிறையவே பேசப்பட்டுவிட்டது. இந்த ஒப்பந்தம் நமது நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு எதிரானது என்று அணுஆயுத ஒழிப்பு மற்றும் அமை திக்கான மக்கள் இயக்கங்களும், பொது அமைப்புகளும் தீவிரமாக வலியுறுத்தி வருகின்றன.
இந்த ஒப்பந்தம் ஜனநாயகத்துக்கு எதிரான ஒன்று மட்டுமல்ல, அமைதிக்கு எதிரானது, நிலைத்த எரிசக்தி உருவாக்கத்துக்கு எதிரானது, சுயசார்பு பொருளாதார வளர்ச்சிக்கு எதிரானது.

இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன் மக்கள் கருத்தை அறிவது இருக்கட்டும், நமது பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓட்ட ளிக்கக்கூட மத்திய அரசு அனுமதியளிக்கவில்லை. பாரதிய ஜனதா கட்சி, மதவாதக் கட்சி என்றால், காங்கிரஸ் அமெரிக்காவின் அடிமைக்கட்சியாக இருக்கிறது. இரண்டுக்கும் பெரிய வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை.

இந்தியாவில் உள்ள அனைத்து அணுமின்நிலையங்களும், நமது மின்சாரத் தேவையில் வெறும் 3 சதவிகிதத்தை மட்டுமே தற்போதுள்ள பூர்த்தி செய்கின்றன. இதை 7 சதவிகிதமாக உயர்த்தப் போகிறார்களாம். அதற்காகத்தான் இந்த ஒப்பந்தமாம். எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை இது. 3யை 7 ஆக்கவா, பிரதமர் சவால் விடுக்கிறார்? பதவியை ராஜினாமா செய்வேன் என்று மறைமுக மிரட்டல் விடுக்கிறார்?

மன்மோகன் சிங், ப. சிதம்பரம் போன்ற பொருளாதார மேதைகளின் (!) கைகளில் இந்தியா இருப்பது எவ்வளவு மோசமானது என்று இப்பொழுது புரிகிறது.

இந்த ஒப்பந்தத்தின் சாராம்சம் இதுதான். இந்தியா இனி அமெரிக்க அடிமை. நமது வெளியுறவுக் கொள்கைகள் இனி அமெரிக்காவின் கட்டளைப்படியே இயங்கும். இரானை அமெரிக்காவுக்குப் பிடிக்கவில்லையா. இந்தியாவுக்கும் பிடிக்காது. எரிசக்தித் தேவையை பூர்த்தி செய்ய அணுஆற்றல் அவசியம் என்று மன்மோகன் சிங் ஆக்ரோஷமாகப் பேசுகிறார். சரி, இதே எரிசக்தித் தேவையை பூர்த்தி செய்யத்தானே இரானுடன் குழாய் மூலம் எண்ணெய் கொண்டு வருவது பற்றி ஆலோசிக்கப்படுகிறது. அதை ஏன் இரண்டாம் பட்சமாக ஒதுக்க வேண்டும்.

அப்படியானால் அணுசக்தியை அதிகரிப்பது, எரிசக்தி ஆகிய இரண்டும் இந்த ஒப்பந்தத்தைப் பொருத்தவரை முக்கியமானவை அல்ல என்பது புரிகிறது. அதைத் தாண்டி எது முக்கியம்? இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை. சீனாவின் பொருளாதார போட்டியைச் சமாளிக்க பாகிஸ்தான் பயன்படுமா என்று அமெரிக்கா பரிசோதித்துப் பார்த்தது. பாகிஸ்தான் ஒத்துவரும் என்று தோன்றவில்லை. அதைத் தொடர்ந்து அவசரஅவசரமாக இந்தி யாவை கபளீகரம் செய்யப் பார்க்கிறது அமெரிக்கா. அதன் முழுமையான வெளிப்பாடுதான் இந்த ஒப்பந்தம்.

இப்படி இந்தியாவின் எதிர்காலம், வெளியுறவுக் கொள்கைகள், மற்ற நாடுகளுடனான உறவில் ஏற்படும் விரிசல் போன்றவற்றைப் பற்றி மக்கள் கருத்தை துளியும் அறியாமல், ஒப்பந்தத்தை நிறை வேற்றுவது தவறு என்று இடதுசாரிக் கட்சிகள் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தின. மக்கள் சார்பில் இடதுசாரி கட்சிகள் ஏற்படுத்திய இந்த நெருக்கடி வரவேற்கத்தக்க அம்சம். நினைத்துப் பாருங்கள், பாரதிய ஜனதா ஆட்சியில் தொடர்ந்திருந்தால், இதுபோன்ற ஒரு ஒப்பந்தத்தை அனைத்து எதிர்ப்புகளையும் மீறி நடைமுறைப்படுத்தி இருப்பார்கள். அதுதான் அந்தக் கட்சியின் கொள்கை.

இந்த ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க சட்டத்தில் மேற்கொள்ளப்படும் மாற்றம் சாதகமா, பாதகமா என்பது பற்றி அமெரிக்க நாடாளுமன்றம் முழுமையாக ஓராண்டு விவாதிக்கப்பட்டது. இந்தியாவில் என்ன நடந்தது? உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று ஒவ்வொரு விடுதலை நாள், குடியரசு நாளின்போது மார்தட்டிக் கொள்ளும் இந்தியா, எந்த வகையிலும் ஜனநாயகத் தன்மையுடன் நடந்து கொள்ளாததையே இது காட்டுகிறது.

இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியாவுக்குள் நேரடியாக கால்பதித்துள்ள அமெரிக்கா, இந்தப் பகுதியில் உள்ள நாடுகளின் உள்நாட்டு, வெளிநாட்டு விவகாரங்களை நேரடியாக கட்டுப்படுத்தத் தொடங்கும்.

இந்த ஒப்பந்தம் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் அமைதி முயற்சிகளைத் தொடராமல், ஆயுதப் போட்டியில் இறங்கும். ஆயுத விற்பனையின் ஒரு பாகமாகத்தான் ஆப்கானிஸ்தான், இராக்கில் அமெரிக்கா போர் நடத்தியது. அவை முடிவுக்கு வந்துவிட்ட நேரத்தில், இந்த ஒப்பந்தம்
கையெழுத்திடப்பட்டுள்ளது. இதில் சோகம் என்னவென்றால், இந்தியா, பாகிஸ்தான் இரண்டுக்குமே அமெரிக்கா பெருமளவு ஆயுதங்களை ஏற்கெனவே விற்று வருகிறது. சென்னைக்கு நிமிட்ஸ் கப்பல் வருகை அதன் ஒரு பகுதிதான்.

அணுசக்தி?

மற்றொருபுறம் அணு எரிபொருள், அணு தொழில்நுட்ப பயன்பாடு இந்தியாவில் அதிகரித்துவிடும். இது மிகவும் ஆபத்தானது. தாங்களே அழிவோம் என்ற ஆபத்தை உணராமல், இந்தியாவும் பாகிஸ்தானும் ஏற்கெனவே அணு ஆயுதங்களை காட்டி பரஸ்பரம் மிரட்டி வருகின்றன.
அந்த அம்சத்தை ஊக்குவிப்பதாகவே இந்த ஒப்பந்தம் அமையும். அணு உலைகள், அணுஆயுதங்களால் இவ்வளவு காலம் நாம் ஆபத்தை எதிர்நோக்கி இருந்தோம். இனி, இந்த வகை போக்குவரத்து கணக்குவழக்கின்றி அதிகரித்து விடும்.

அணுஆயுதமோ, அணு சக்தியோ இரண்டுமே வெடிக்கக் காத்திருக்கும் வெடிகுண்டுகள்தான். எந்த வித்தியாசமும் இல்லை. அது பற்றி எந்த அடிப்படை கவலைகளும் இன்றி இந்த ஒப்பந்தம் இடப்பட்டுள்ளது. யுரேனியம் வெட்டியெடுப்பது முதல் அணுக்கழிவை மறுசுழற்சி செய்வது வரை கதிரியக்கம் ஏற்கெனவே கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஜார்கண்டில் உள்ள ஜடுகுடா (யுரேனியம் வெட்டி யெடுத்தல்),
ராஜஸ்தானில் உள்ள கோட்டா, போக்ரான் (அணுஆயுத சோதனைகள்) ஏற்கெனவே பல பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. இது பற்றிய செய்திகள் மறைக்கப்படுகின்றன. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஒப்பந்தம் இடுவதன் மூலம், இந்தியாவே அமெரிக்காவை விருந்துக்கு அழைத்துள்ளது.

இந்தியாவின் எரிசக்தித் தேவையை பூர்த்தி செய்ய சூரியசக்தி, காற்றாலை, கடல்அலை, மனித உழைப்பு போன்றவற்றை மேம்படுத்துவது பற்றி கிஞ்சித்தும் சிந்திக்கப்படுவதில்லை. இந்த மாற்று எரிசக்திகளை மேம்படுத்துவதில் அரசு அக்கறை காட்டுவது போல் பெயருக்கு மட்டும் செயல்படுகிறது. மாற்று எரிசக்திகள் மூலமே நமது எரிசக்தித் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

உண்மையிலேயே அரசு கூறுவது போல் அணுசக்தி சிறந்தது என்றால், அது பற்றி வெளிப்படையாக மக்களுக்கு தெரிவிக்கலாமே. விவாதம் நடத்தலாமே. எல்லா நேரமும் ஏன் மூடிமறைத்து நடத்த வேண்டும்?

அடுத்து...

இதுபோன்று நாட்டின் பாதையையே மாற்றியமைக்கக் கூடிய ஒப்பந்தங்கள், சர்வதேச புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போன்றவற்றைப் பற்றி ஜனநாயக ரீதியிலான எந்த ஆலோசனைகளும் நடத்தாமல் நிறைவேற்ற இந்திய அரசியல் சாசனத்தில் வழியுள்ளது. முதலில், இது போன்ற ஒப்பந்தங்கள் பற்றி முன்கூட்டியே அறிவித்து, பொது விவாதம் நடத்த வேண்டியது கட்டாயம் என்று அரசியல் சாசனத்தை திருத்த வேண்டும். அதில் நமது கருத்தை உறுதியாக வெளிப்படுத்த, நாம் ஒவ்வொரு வரும் ஓட்டளிக்கும் நடைமுறை வேண்டும். இதுவே நமது அடிப்படை கோரிக்கையாக இருக்க வேண்டும். (விஷயமே என்ன வென்று சொல்லாமல் கருத்துக் கணிப்பை நடத்தி தொலைக்காட்சி அலைவரிசைகள், இதழ்கள் தங்களுக்கு வசதியான முடிவை பிரபலப்படுத்துகிறார்கள்.)

இந்த ஒப்பந்தத்தின் எந்த அம்சத்துக்கும் அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால், அதே உரிமை இந்தியா நாடாளுமன்றத்துக்கு இல்லை. அப்படியானால், இது அடிமை ஒப்பந்தம் இல்லாமல் வேறு என்ன? ஓர் அடிமையே, 'என்னை உங்கள் அடிமையாக வைத்துக் கொள்ளுங்கள். நான் நன்கு உழைப்பேன்' என்று கையெழுத்திட்டு ஒப்படைத்துக் கொண்டது போல் இருக்கிறது.

இந்த ஒப்பந்தம் மூலம் நமது இயற்கை வளம், அறிவு, குறைந்த கூலியில் உழைப்பு ஆகியவை அமெரிக்க முதலாளிகளுக்கு விற்கப்பட்டுள்ளன. பொருளாதார மேதைகள் ஒட்டுமொத்தமாக நாட்டையே விற்க ஒப்பந்தம் இட்டுள்ளனர் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

வெள்ளையர்களை வெளியேற்றி நாடு விடுதலையடைந்து 60வது ஆண்டுவிழா கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில், புதிய காலனி ஆதிக்கத்துக்கு மத்திய அரசே வரவேற்று வழியமைத்துக் கொடுத்துள்ளது.

(இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் பற்றிய அருணாராய், மேதா பட்கர், சந்தீப் பாண்டே அறிக்கை)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com