Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Thendral
Puthiya Thendral Logo
அக்டோபர் 2007

குதிரை சக்தி தரும் அமுக்கூரம்
-மரு. என்.கே. சுரேஷ் MD(S)

அஸ்வம் என்றால் குதிரையை குறிக்கும். குதிரை என்று சொன்னாலே முதலில் நமது மனதில் தென்படுவது, அதன் ஓடும் வேகம், சக்தி, பலம், திடமான உடலமைப்பு போன்றவை ஆகும். மேற்கண்ட குணத்தை தரக்கூடிய ஒரு மூலிகை உள்ளது அதுதான் அமுக்கூரம் என்றழைக்கப்படும் அஸ்வகந்தா வேர்.

இதனுடைய வேறு தமிழ் பெயர்கள்: அசுவம், அசுவகந்தி, அசுவகந்தம், அசுவகந்தா, அமுக்குரா, அமுக்கூரம், அமுக்குரவு, இருளிசெவி, வராககர்னி, நகுடவேர் போன்றவை ஆகும். இதன் தாவரவியல் பெயர் : Withania Somnifera (வித்தானியா சோம்னி பெரா)

முக்கியமாக பயனபடும் பகுதி : வேர்

இதன் சுவை : கசப்பு

பயிராகும் இடங்கள்: மேற்குவங்காளம், பீகார், ஒரிஸா, குஜராத், கர்நாடகா ஆகிய இடங்களில் பயிராகிறது. விதை மூலம் பயிரிடப்படுகிறது. அறுவடை செய்வதற்கு 5 மாதம் முதல் 6 மாதம் வரை ஆகும். அமுக்கூரத்தில் இரு வகைகள் உள்ளன. அவை 1. நாட்டு அமுக்கூரம், 2. சீமை அமுக்கூரம்.

நாட்டு அமுக்கூரம், 3 விரல் கனத்தில் கட்டைகளாக கிடைக்கும். கசப்பு சுவை இருக்காது. லேகியங்களில் அதிகமாக சேர்க்கப்படுகிறது. சீமை அமுக்கூரம் கசப்பு சுவை உடையது. சிறு குச்சி போன்று வெளிறிய நிறத்தில் இருக்கும். நாட்டு அமுக்கூரத்தை காட்டிலும் வீரியமிக்கது. சூரணங்களில் அதிகமாக சேர்க்கப்படுகிறது.

அமுக்கூரத்தால் தீரும் நோய்கள்:

வாத நோய்கள், நரம்பு தளர்ச்சி, கை கால் நடுக்கம், இருமல், வீக்கம், தூக்கமின்மை, உடல்வலி, நரம்புவியாதிகள், ஆகிய நோய்களை நீக்கி ஆண்மை பெருக்கம் உண்டாக்கும். உடலுக்கு நல்ல பலம், அழகு, நீண்ட ஆயுள் போன்றவற்றை தரும்.

இதன் செய்கைகள்

இரத்த அழுத்தத்தை குறைத்தல், நோய் எதிர்ப்பு சக்தி உண்டாக்குதல், வலி நிவாரணி, உடல் சூட்டை குறைத்தல், மனநிலை பாதிப்பை சரிசெய்தல், இதயபடபடப்பை குறைத்தல், நுரையீரல் ஊக்கியாக செயல்படல் போன்ற செய்கைகளை கொண்டுள்ளது. மேற்கண்ட நோய்களை தீர்க்க, அமுக்கூரம் வேரை இடித்து பொடியாக்கி, 2 கரண்டி (சுமார் 5கி) வீதம் தினம் இருவேளை பசும்பாலில் சாப்பிடவேண்டும்.

இதில் உள்ள வேதிப்பொருட்கள்:

Withanine, Somniferine, Amino Acids, Glucose, Choline, Hydroxy Prolin, Glycin, Alanine போன்றவை ஆகும்.

பயன்படுத்தும் வீதம்:

சீமை அமுக்கூரம் வேர் நன்கு இடித்து தூளாக்கி கொள்ளவும். இதனை 2 கரண்டி (5கி) வீதம் இரவில் ஆகாரத்திற்கு பிறகு பசும்பாலில் உண்ண நல்ல தூக்கம் வரும். மேற்படி அளவு மருந்தை காலை, மாலை பசும்பாலில் தொடர்ந்து உண்டுவர கைகால் நடுக்கம், இரத்த அழுத்தம், நரம்பு தளர்ச்சி மாறும். நரம்பு வலிமை நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.

அதிமதுரம் பொடி 100கிராம், சீமை அமுக்கூரம் பொடி 100 கிராம் இதனை கலந்து ஒரு கரண்டி வீதம் தினம் 3 வேளை ஆகாரத்திற்கு முன் அல்லது பின் சாப்பிட்டு வர வயிற்றுவலி, வயிற்றுபுண் மாறும்.

அமுக்குரா சூரணம்:

கிராம்பு 5கிராம், சிறுநாகப்பூ 10கிராம், ஏலஅரிசி 20கிராம், மிளகு 40கிராம், திப்பிலி 80கிராம், சுக்கு 160கிராம், சீமை அமுக்கூரா வேர் 320கிராம், சீனி 640கிராம் மேற்கண்ட மருந்துகளை இடித்து பொடித்து கொள்ளவும். ஒரு கரண்டி வீதம் தினம் 3 வேளை பாலில் அல்லது தேனில் சாப்பிட்டு வர, இருமல், உடல் வறட்சி, நரம்பு தளர்ச்சி மாறும். நல்ல பசி உண்டாகும். காக்காய் வலிப்பின் வேகம் குறையும். குழந்தை பெற்ற தாய்க்கு ஒரு வாரத்திற்கு பிறகு கொடுத்துவர பால் சுரக்கும்.

இரவு 2 கரண்டிவீதம் பசும்பாலில் ஆகாரத்திற்கு பின் சாப்பிட உடல் அலுப்பு, உடல்வலி, களைப்பு மாறும். நெய்யில் இருவேளை தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் பருமனாகும். சிக்கன்குனியா காய்ச்சல் உண்டானபின் ஏற்படும் உடல்வலி, சந்துவலி, வீக்கம், அசதி போன்றவற்றிற்கு இச்சூரணத்தை பாலில் தொடர்ந்து தினம் இருவேளை உண்டு வரலாம்.

ஆண்மைபெருக்கம் உண்டாக:

பூனைகாலி விதை 100கிராம், சீமை அமுக்குரா வேர் 100கிராம் இவற்றை இடித்து பொடியாக்கி, 2 கரண்டி வீதம் தினம் இருவேளை பசும்பாலில் உண்டுவர ஆண்மை பெருக்கம் உண்டாகும்.

பத்தியம்: எலுமிச்சம் பழம், புளிப்புப் பதார்த்தங்கள் நீக்கவும்.

சுத்திமுறை: ஒரு வாய் அகன்ற சட்டியில் பசும்பாலும், நீரும் கலந்து வைத்து அதன்மேல் அமுக்குரா வேரை அத்துணியின் மீது பரப்பி, மேல்சட்டியால் மூடி அவிக்கவும். பால் ஆவியால் அமுக்கூரம் வேக வேண்டும் (சுமார் 1/2 மணிநேரம்) பின்னர், அதனை உலர்த்தி இடித்து பயன்படுத்தலாம். இப்படி, பால் ஆவியில் வேகவைத்த அமுக்கூரத்தை மேற்படி மருந்துகளில் சேர்த்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பக்கவிளைவுகள்:

2 கரண்டிக்கு மேல்(5கிராம்) உண்ணும்போது சிலருக்கு (முதியவர்களுக்கு) கழிச்சல் ஏற்படலாம். கழிச்சல் ஏற்பட்டால் அளவை குறைத்தால் போதும். இது குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தவர்கள் வரை பயனபடுத்தலாம்.

பிள்ளைபெற்ற பெண்கள், பால் கொடுக்கும் காலங்களிலும் பயன்படுத்தலாம். வேறு பக்கவிளைவுகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com