Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Puthiya Thendral
Puthiya Thendral Logo
அக்டோபர் 2007

முற்றுகை
- சுப்ரபாரதி மணியன்

பஸ்ஸின் புறப்பாட்டிற்கும் நிறுத்தலுக்கும் என்று பஸ்களில் கயிறுடனோ, டொயினுடனோ இணைக்கப்பட்ட ஒருவகை மணி டிரைவரின் தலைக்குமேல் தொங்கிகொண்டிருக்கும். ஆனால், கயிறோ, டொயினோ அறுந்த அல்லது சிதைந்த நிலையில் நகரத்து கண்டக்டர்கள் வரிசையாய் டிக்கெட்டுகளை பொருத்தின இரும்புக்கட்டையால் பஸ்ஸின் குறுக்குக் கம்பிகளையோ தலைக்குமேல் தெரியும் பஸ்ஸின் பரப்பையோ அடித்து மணிக்கு ஈடான ஒருவகை சப்தத்தை எழுப்புவார். நாராசமாக இருக்கும் தெருமுனைப் பம்பின் சப்தத்தை நினைவுபடுத்தும். உட்கார இடமின்றி நின்றிருப்பவர்கள் தலையை சற்று நிமிர்த்தி பார்த்தால் கொடிய அம்மை வந்தவனின் முகம்போல் இருக்கும். நகரினை பற்றின சரியான பிம்பத்தை தரவேண்டுமானால் அதை தான் ஒப்பிட்டு சொல்ல வேண்டும்.

டீக்கடைகள் பெரும்பாலும் அரட்டைக்கான இடங்களாக மாறிவிட்டன. ஈரானிய டீயைக் குடித்து விட்டு அடுத்த டீ வேண்டுமா என்று சர்வர் கேட்கிறவரைக்கும் உட்கார்ந்து பேசுபவர்கள் அதிகமாகி விட்டார்கள். டீக்கடைகளுக்கு இணையாக எண்ணிக்கையில் மதுக்கடைகளிலும் உட்கார்ந்து பாட்டில்களைக் காலி செய்து விட்டு வரும் தட்டுகளுக்காகக் காத்திருக்கிற கூட்டம் எப்போதும் உண்டு.

இரு இடங்களுக்கும் செல்ல வசதியற்றவர்கள் போல் பலர் வருகிற இடம் கிளாக் டவர் பூங்கா. மணிக்கூண்டில் இருக்கும் கடிகாரம் எல்லோரையும் உளவு பார்ப்பது போல வெறுமனே நின்றிருக்கும். அவ்வப்போது அக்கடிகாரத்தை ஓட்ட வைக்கிற ஏதாவது முயற்சி நடந்து கொண்டிருப்பதை அது காட்டும்.

கிளாக் டவர் பூங்காவிற்கு அருகில் ஒரு மர அறுவை மில் இருந்தது. பூங்காவிற்கு வருபவர்களைத் தொந்தரவு செய்யக்கூடாது என்ற எண்ணத்தில் மரம் அறுக்கும் இயந்திரம் தன் ட்ரீர்ர்ர்ரிர் குரலை ரொம்பவும் அடக்கி வெளிப்படுத்தும். பூங்கா கும்பல்கள் எப்போதும் அமைதியாய் இருந்ததில்லை. ஏதாவது ரகளை என்று வந்து விடுகிறபோது கும்பல்களில் யாராவது மர அறுவை மில்லுக்குள் சென்று கைக்கு அகப்பட்டதை எடுத்து வந்து ஆயுதங்களாக்கிக் கொள்வர். வீச்சிற்கும், தாக்குதலுக்குமான நீளமான கட்டைகளை மர அறுவை மில் தொடர்ந்து தயாரித்துக் கொண்டிருந்தது. அதன் உரிமையாளர் அவர் வயதிற்கு இணையான, அவருடன் வேறு வியாபாரிகளைத் தொடங்கினவர்களுக்கு இணையாக பெரும் செல்வந்தர் ஆகாததற்கு காரணம், வெவ்வேறு கும்பல்கள் இப்படித் தங்களைக் காத்துக் கொள்ளவென்று உருவும் மரக்கட்டைகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகமாகி அவரின் பெரும் லாபத்தைக் குறைத்து விட்டதுதான்.

ஏதாவது ரகளை என்று வந்து விடுகிறபோது கட்டைகளும், குச்சிகளும், அறுந்த செருப்புகளும், கற்களும் மர ஆலையிலிருந்து பூங்காவின் விஸ்தாரத்திற்கும் இறைந்து கிடக்கும். பூங்கா மர அறுவை மில்லின் விஸ்தாரத்திற்குள் அடைபட்டுப் போகிற நாள் வெகு தூரத்திலில்லை என்று தோன்றும்.

கிளாக் டவர் பூங்காவில் பல மொழியினர் கூடுவதுண்டு என்றாலும் அந்தப் பகுதியிலுள்ள பெரும்பான்மை மக்களை நினைவுபடுத்துகிற மாதிரி 'அரவாடு பார்க்' என்றுகூட ஒரு வழக்கு இருந்தது. பலருக்கு சின்னச்சாமி பூங்கா என்ற பெயரும் நினைவிற்கு வரும். சின்னச்சாமி வழிபாட்டிற்குரிய தலைவனாக இருந்து கொண்டிருந்தார். அவரை பழிபடுபவர்களின் புகலிடமாகத்தான் அந்தப் பூங்காவும் இருந்தது.

ஒரு படை வீரனுக்குரிய அம்சங்களோடு சின்னச்சாமி இருந்தார். அவரின் உடல்வலிமை அவருக்கு எந்தப் பட்டத்தையும் சூட்ட பொருத்தம் கொள்ளச் செய்யும். சின்னச்சாமியும் வெளியிலிருந்து வந்தவர்தான். நகரத்திற்கு வந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. நகரத்தோடு ஒன்றிப்போய்விட்டார் என்றாலும் அவரின் பிரதேச உணர்வு அவரைத் தனிமைப்படுத்திக் காட்டிக் கொணடிருந்தது. பல தருணங்களில் கிளாக் டவரின் உச்சியில் நிறுத்தி பெரிய மனிதனாக்கும் முயற்சிகள் நடந்திருக்கின்றன. ஆனால் அவர் எப்போதும் தான் சாதாரணமானவர் என்பதை நிலை நிறுத்திக் கொள்ள பூங்காவின் புல்தரையோடுதான் இருப்பார்.

கிளாக் டவர் பூங்காவில் எப்போதும் 'அரவாடுகள்' நிறைந்திருப்பார்கள். கூலி வேலை செய்கிறவர்கள், படுக்க இடமின்றி பூங்கா கம்பியைப் பற்றிக்கொண்டு உள்ளே புகுந்து கொள்கிறவர்கள், வேலையற்றவர்கள் என்ற ரீதியில் இருப்பவர்கள் இந்த அரவாடுகள். கல்யாண சீசன்களில் கல்யாண வீட்டு வேலை செய்யவென்றே அந்தக்கூட்டம் காத்திருக்கும். அரசியல் கட்சியின் ஊர்வலங்கள், கூட்டங்களுக்கு ஆள் சேர்ப்பதற்காக வருகிறவர்களுக்கு அகப்படுவார்கள். சின்னச்சாமி காண்ட்ராக்ட் வேலை செய்து வந்தபோது ஆட்களுக்காக குளிரும் இதமுமான காலை நேரத்தில் வருவார்.

அவர் பெரிய காண்ட்ராக்டராக பதினைந்து வருடங்களில் வளர்ந்து விட்டார் என்றாலும் பூங்காவோடு அவர் சம்பந்தம் இருந்து கொண்டே இருந்தது. அவருக்குத் தேவையான ஆட்களுக்காக அவரின் துணையாளர்கள் வந்து போவதுண்டு. எவ்வளவு வேலை இருந்தாலும் சின்னச்சாமியும் பூங்காவிற்கு வந்து சில நிமிடங்கள் இருந்து விட்டுப் போய்விடுவார். அப்போதெல்லாம் அவரை விக்ரகமாக்கி தொழுது கொண்டிருப்பர்.

எனக்கு சின்னச்சாமி அறிமுகமானது ஒரு நடு இரவில், பகல் தூக்கம் காரணமாக இரவில் தூக்கம் பிடிபட ரொம்ப நேரமாகும் என்று பாரடைஸ் தியேட்டர் பக்கம் நடந்து கொண்டிருந்தேன். விரையும் வாகனங்களும், தெரு விளக்குகளும் துணையாக இருந்தன. நாலைந்து பேர் கொண்ட கும்பல் போஸ்டர் ஒன்றை மொய்த்துக் கொண்டிருப்பது போல பட்டது. கூர்ந்து கவனித்த போது போஸ்டர் ஒன்றை ஒட்டிக் கொண்டிருப்பது தெரிந்தது. அது தமிழ் போஸ்டராக இருக்கவே நான் நின்று பார்க்க ஆரம்பித்தேன். எதிரில் போஸ்டர் ஒட்டுவதை கண்காணித்துக் கொண்டிருந்தார் சின்னச்சாமி. நீளமான இருசக்கர வாகனத்தின் முன் நின்றபடி சிகரெட்டைப் புகைத்துக் கொண்டிருந்தார்.

புகைச்சுருள் வட்டமாகி அவரின் முகத்தை அதற்குள் திணித்துக் கொண்டிருந்தது. அவரின் ஆகிருதி வளர்ந்த திடமான கிளாக் டவர் பூங்காவின் மரமொன்றை ஞாபகப்படுத்தியது. உள்ளூர் தமிழர்களின் பிரச்சினையொன்றைப் பற்றின போஸ்டர், எதையும் தாங்கிக் கொள்வார்கள் என்ற எச்சரிக்கை.

சினிமா போஸ்டர்களுக்கு முன்னால் இந்த வகையான போஸ்டர்களின் ஆயுள் சிலமணி நேரந்தான். போஸ்டர்களைப் பார்த்தபடியே நின்றிருந்த என் முக வெளிப்பாட்டில் போஸ்டரின் அற்ப ஆயுள் பற்றின தொனி தெரிந்திருக்க வேண்டும். சின்னச்சாமி அருகில் வந்தார். “உன் முகத்திலே ஒரு அலட்சியம் தெரியுது. காரணம் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா”

ஹிந்தியில் கேட்டார். நளினமான உருது கலந்திருந்தது. பண்டிதத்தனமான ஹிந்தி சற்று பிரமிப்பைத் தந்தது.

“போஸ்டர் தமிழ்ல இருக்கு, தமிழ் படிப்பியா...”

“தமிழ்தா நானும்”

“செரி. போஸ்டர் பார்த்ததும் உம் மூஞ்சியில் ஒரு வகையான அலட்சியம் தெரியுது. இதெல்லாம் தேவையில்லங்கற அலட்சியமா, இவங்களெல்லா என்ன சாதிக்கப் போறாங்கற அலட்சியமா.

“அப்படியெல்லாம் இல்லே. இன்னும் அரைமணி நேரத்திலெ இதுக்கு மேல ஏதாச்சும் போஸ்டர் ஒட்டிடுவாங்க. அத நெனச்சிட்டிருந்தேன்”

“அவ்வளவுதானா... இதெல்லாம் பண்ணனும்கிறியா...”

“ஆமா.. நிச்சயமா பண்ணணும்”

“சபாஷ்”

அவர் என் முதுகில் கை வைத்தார். குளிருக்கு வகைவகையான தடுப்புகளாய் உடையினை உடம்பில் சாத்தியிருந்தார். முரட்டுக் கைகளின் தன்மையை உணருவது போலிருந்தது. போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்தவர்கள் முடித்த கையோடு எங்களைச் சுற்றி நின்று கொண்டார்கள்.

“இதுக்கு மேல போஸ்டர் எதுவும் ஒட்டாமப் பாத்துக்கணும் இந்தப் பக்கம் இருக்கற நாலஞ்சு தியேட்டர்களுக்கு போன் பண்ணி சொல்லிடறேன். நாளைக்குப் பாரு. இது இப்பிடியே இருக்கும். நாலு நாளைக்கப்புறமும் இருக்கணும். அப்புறம் நீயெல்லா இதிலெ சேரணும். நாம ஒத்துமையா நம்மளெ நம்மளெ காப்பாத்தணும்...”

அந்தப் போஸ்டர்களின் ஆயுளை நிச்சயித்துக் கொள்வதற்காக நாலைந்து நாட்கள் அந்தப் பக்கங்களில் கவனித்துத் திரிந்தேன். போஸ்டர்கள் அப்படியே இருந்தன. சின்னச்சாமியின் செல்வாக்கு பற்றி மனதில் திடமாய் எண்ணம் ஏற்பட்டது. சின்னச்சாமியை காரணமின்றிப் பார்ப்பதற்காகவே கிளாக் டவர் பூங்காவிற்கு நான் போவதுண்டு. ஆனால், அபூர்வமாய் தென்பட்டு மறைந்து விடுவார். எப்போதைக்குமான புன்னகையை முகத்தில் தேக்கிக் கொண்டிருப்பவர் போல் எல்லோரையும் பார்த்துச் சிரித்து விட்டுக் கிளம்பி விடுவார்.

ஒரு தரம் “வேலைக்கு வர்றியா” என்று கேட்டார். இரவு தூக்கமின்றி களைத்துப் போயிருந்தேன். உடைகளின் அழுக்குத் தோற்றம் வேறு என்னைக் கசங்கலாகக் காண்பித்துக் கொண்டிருந்தது. கட்டிட வேலைக்குத்தான் கூப்பிடுகிறார். பக்கத்திலிருந்தவர் அதை மறுப்பதுபோல “படிச்ச பையன்” என்ற வார்த்தையை உதிர்த்தார். மன்னிப்புக் கேட்கும் தோரணையாக அவர் “ஓ” வென்றதை எடுத்துக்கொண்டேன்.

“ரொம்ப நாளாத்தா பாத்துக்கிட்டிருக்கேன். ஏதாச்சும் பண்ண முடியுமான்னு பாக்கறேன்”.

அவர் சொன்னது ஆறுதலாக இருந்தது. அவர் கிளம்பிப் போன பின்பு, சிலர் அண்ணாச்சி நிச்சயம் பண்ணுவார். அவர் கண்லே அப்பப்போ பட்டுகிட்டிரு... நேரில போயி பாரு... உதவி பண்ணுவாரு...” அவர் கண்களில பட்டுக்கொண்டிருந்தேன். நான் வாழ்க்கையில் விரித்துக்கொண்ட முதல் தலைவனாக சின்னச்சாமி ஆனார். அவர் செய்யும் உதவிகள், அவரின் பரோபகார குணம், நம்மவர்களுக்காக அவர் சிந்தின ரத்தம் என்பது பற்றின பிரஸ்தாபங்கள் இருந்துகொண்டே இருந்தன.

கிளாக் டவர் பூங்கா ஆள் நடமாட்டம் இல்லாமல் போகிற காலங்கள் என்றால் அது நகரம் மதக்கலவரத்தில் சிக்கிக் கொள்ளும்போதும், அரசியல் தகராறுகள் பெரிதாகி தடைச்சட்டம் அமுலாகும் போதும், “நம்ம ஆளுகளை எந்த ஊர்ல, நாட்ல அடிச்சாலும் நாம சும்மா இருக்கக்கூடாது. எதிர்ப்பைக் காட்டாமெ இருந்தா நாம செத்ததுக்குச் சமானமாயிருக்கும். நாம உசிரோட இருககறதெ கொண்டாடிக் காட்ட வேண்டியதில்லே. இது மாதிரி சமயங்கள்ளதா காட்டணும்” என்பார் சின்னச்சாமி.

அப்படி நிலைமை தொனிக்கிற போது, அவர் கிளாக் டவர் பூங்காவிற்கு வரத்தவற மாட்டார். “இந்தச் சமயத்திலெ நாம சிதறினதா காட்டக்கூடாது.” அவரைப் பார்த்தும் மெல்ல கும்பல் சேரும், அந்தக்கும்பலின் முழுமைக்குமான புன்னகையை அவர் முகம் தேக்கி வைத்திருக்கும்.

போலீஸின் பலத்தகாவல் அம்முறை பூங்காவிலிருந்தது. யாரையும் உள்ளே விடாமல் துரத்திக் கொண்டிருந்தார்கள். ஆனால் சின்னச்சாமி மட்டும் காலையும், மாலையும் புல்லட்டில் வந்து சிகரெட் புகைத்தபடி நின்று கொண்டிருந்தார். யாரும் அவரை நெருங்க முடியவில்லை. அவர் பக்கம் வருகிறவர்களைத் தடுத்து போலீஸ் மிரட்டிக் கொண்டிருந்தது. அவரை அண்ட விடவில்லை.

மூன்றாவது தினம் அவர், மிரட்டின போலீஸ்காரர்களை ஏதோ கேட்க அவரைக் கைதுசெய்து கொண்டு போனார்கள். மூன்று தினங்கள் சிறையிலிருந்தார். அதில் ஒரு நாள் இரவுதான் நகரின் ஒரு பகுதி கலவரப்பட்டது. குடிசைகள் தீயிடப்பட்டன. வீடுகளை நொறுக்கித் தள்ளி வீடுகளில் புகுந்து தாக்குதல் நதிநீர் தகராறு சம்பந்தமில்லாமல் நகரின் ஒரு பகுதியைச் சின்னா பின்னப்படுத்தி இருந்தது.

சிறையிலிருந்து வெளிவந்த சின்னச்சாமி கிளாக் டவர் பூங்காவிற்கு வந்தார். வெகுநேரம் பூங்காவினுள் தனியே உடகார்ந்திருந்தார். பூங்கா முனையில் நின்றுகொண்டு புகைத்துக் கொண்டிருந்தார். யாரும் அவரை அணுக போலீஸ் விடவில்லை. அவர் எங்கு போய் நின்றாலும் அவரைச் சுற்றி வளைத்தார்கள். அவர் பார்வை ரொம்பதூரம் சொல்லாதபடி மறைத்துக் கொண்டார்கள். நோய்வாய்ப்பட்டவரின் முகச்சிதைவு போலாகிவிட்டது.

தொடர்ந்து சில தினங்கள் சிகரெட்டைப் புகைத்தபடி தொடர்ந்து பூங்காவை சுற்றிச் சுற்றி நடக்க ஆரம்பித்தார். அவர் கால்கள் இலக்கின்றித் திரிந்து கொண்டிருந்தன. அவருக்குத் தேவை அவரின் புன்னகையை ஏற்றுக்கொள்ள குறைந்தது நாலைந்து பேர்களாவது கொண்ட சிறு கும்பல் என்று தோன்றியது.

நகரம் சீக்கிரம் சீர்பட்டுவிட்டாலும் கூட பூங்கா போலீஸின் ஆக்கிரமிப்பிற்குட்பட்ட எல்லை என்பது போலவே இருந்தது. வாசலில் பொறியில் மாட்டித் தவிக்கிற ஒரு பிராணிபோல சின்னச்சாமி ஆகிப்போனார். சிக்கிராமத்திலிருந்த நண்பனின் அறையில் இரவு சினிமாவுற்குப் பிறகு தங்கிவிட்டு, அதிகாலையில் கிளம்பும்போது குளிர் உடம்பை இம்சித்துக் கொண்டிருந்தது. பனி ஆள்மாறாட்டம் செய்து காண்பித்துக் கொண்டிருந்தது. என்னை நெருங்கியவர் சின்னச்சாமி என்று கண்டு கொள்ளவே ரொம்ப நேரம் பிடித்தது. என்னைத்தாண்டி ஒரு பர்லாங் சென்றிருப்பார். முற்றின நோயாளியின் நடை எனவே சீக்கிரம் அவரருகில் சென்றுவிட்டேன்.

எதிரிலிருந்த பனியை விலக்குவது போல் வாயிலிருந்து வந்த சிகரெட் புகையினை விலக்கினார். “நீயா”, “இந்த நேரத்திலெ எங்கியோபோயிட்டு இருக்கீங்க”. “ஆமா... செரி வரட்டுமா” அவர் துரிதமாகிவிட்டிருந்தார். பேரேட் கிரெளண்ட் ஓர எல்லையில் நுழைந்தார். அவர் பின்னால் நடக்க ஆரம்பித்தேன். அடர்ந்த பனியில் உருவம் மறைந்துவிட்டது. என் கால்கள் சின்னச்சாமியை நோக்கித்தான் சரியாகச் சென்று கொண்டிருக்கின்றன என்று நினைத்தேன். ஆனால் பனி, எல்லா உருவங்களையும் கல்லறையில் புதைத்த அழுகின பிணங்களைப் போலாக்கி இருந்தது.

அந்த பங்களாவின் வேலி ஓரத்தில் சின்னச்சாமி நின்றார். வேலியின் ஓரத்துக் கல்தூண் போல் ரொம்ப நேரம் நின்று கொண்டிருப்பது போல் பட்டது. பங்களாவிலிருந்து வந்த அழுகைச் சப்தம் அவரை அங்கே நிற்க வைத்திருக்கலாம். புரோகிதர் போல தென்பட்டவரை சின்னச்சாமி நிறுத்தினார். அவரின் வெற்றுடம்பு குளிரில் அடிபட்ட பறவைபோல் நடுங்கிக் கொண்டிருந்தது. அல்லது சின்னச்சாமியை அறிந்துதான் அந்த நடுக்கமா என்ற கேள்வியும் எழுந்தது.

சின்னவரோட கொழந்தை செத்துப்போச்சு” சொல்லின படி அவல் பனியில் மறைந்து போனார். சற்றுக் கூர்ந்து கவனித்தபோது அழுகை உரத்துத் தேய்ந்து கொண்டிருப்பது கேட்டது. திசை மாற்றிக்கொள்கிற நோக்கில் அவர் திரும்பிய போது நான் அவர் கண்ணில் பட்டேன்.

“என்ன”

“ஒண்ணுமில்லை...”

“எம்பின்னாலியே வர்ரே...”

“அப்பிடியில்லே...”

“இந்த வூட்லே வுழுந்த சாவு இன்னொரு சாவை தள்ளி வெச்சிருச்சு”. அவரின் இடுப்பில் பருமனாய் ஏதோ துருத்திக் கொண்டிருந்தது. என் உடம்பு குளிரை முதலாக உணர்ந்தது போல நடுங்க ஆரம்பித்தது.

“என்னை மூணு நாள் ஜெயிலுக்கு அனுப்பிச்சிட்டா நம்ம ஆளுகளெ பத்தி கேக்க யாருமில்லன்னு நெனச்சிட்டானுக போலிருக்கு...”

அவர் சிறையில் இருந்த ஒரு நாளின்போது ராத்திரிக் கலவரம் பற்றி மனதில் வந்து போனது. இதையெல்லாம் தட்டிக் கேட்க சின்னச்சாமியால்தான் முடியும் எனிபது போல் கிளாக் டவர் பூங்கா பக்கம் ஓடிவந்து போலீசால் துரத்தப்பட்டவர்களை பார்த்திருந்தேன், மார்பில் அடித்துக்கொண்டு அவர்கள் அழுத அழுகை.

“நம்ம ஆளுகளுக்குப் பரம எதிரியா இவன் இருந்துட்டே இருக்கான். ஒரு தரம் கத்தி முனையை ஈரம்பட வெச்சிட்டாப் போதும் அவனுக நம்ம ஆளுக மேலக்கையைத் தொடமாட்டாங்க.. அதுக்குத்தா...”

“அதுக்கு நீங்களா....”

“என் இடுப்புக் கத்தி ஈரமாகி ரொம்ப நாளாச்சு. யாராச்சும் இதை செஞ்சுதா ஆகணும்”

அவரின் வலதுகையை நான் பற்றிக் கொண்டேன். அவரை ஏதேதோ துயரங்களிலிருந்து தடுப்பதற்காக அப்படி செய்தது போலிருந்தது.

“இன்னிக்கு ஏதோ சாவு வுழுந்திருச்சு அவங்க வீட்லே. அது அவனுகளெ உசுப்பியிருக்கும். ஏனோ சந்தோஷமாத்தா இருக்கு, இது போதும் ஆனா அவனுக வூட்லே என் கத்தியாலே ஈரம் படறது ரொம்ப நாளாகாது...”

அப்படி எதுவும் ஆகக்கூடாது என்று நினைத்தேன். பனியில் மறைந்து கொண்டிருந்த மனிதர்கள் ரத்தக்கறைபட்ட பிணங்களாய் நடமாடிக் கொண்டிருப்பது போல் தோன்றியது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP