Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Thendral
Puthiya Thendral Logo
அக்டோபர் 2007

இராமர் பாலம் கலாச்சார சின்னமா?
-டாக்டர் இரா. இரமேஷ்

இது எப்படி “இந்துக்கள்” என்று கூறப்படும் மக்களின் கலாச்சார சின்னமாக இருக்க முடியும்? இது குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சரிதானா?

“இலங்கைக்கும் இந்தியத் துணைக் கண்டத்துக்கும் இடையில் அமைந்துள்ள பவளப்பாறை களால் ஆன தீவுத் திட்டுக்கள் இவ்விரண்டு நிலப்பரப்பையும் இணைக்கும் நிலப் பாலம் பேவுல காட்சியளிக்கின்றன” என்று அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையம் தெரிவிக்கிறது.

1788 ஆம் ஆண்டில் ஒரு வெள்ளைக்காரர் இந்த இடத்தை ராமர் பாலம் என்று குறிப்பிட்டிருக்கிறார். 1903 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட மெட்ராஸ் அரசு நிர்வாக அறிக்கையில் இது ராமர் பாலம் என்றும் ஆதாம் பாலம் என்றும் குறிப்பிடப் பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட பாலமே கேரளத்தை சுனாமியில் இருந்து காத்தது என்று சுனாமி குறித்த சர்வதேச நிபுணர் ஒருவர் கூறியிருக்கிறார். எனவே இது ராமாயணத்தில் குறிப்பிடப்படும் ராமர் கட்டிய பாலமாகத்தான் இருக்க வேண்டும். இது நம் கலாச்சாரச் சின்னம். இந்த கலாச்சார சின்னத்தை சேதுக் கால்வாயைத் தோண்டுவதற்காக இடிப்பதென்பது நாட்டில் உள்ள இந்துக்களின் மனதைப் புண் படுத்தும் செயலாகும்.

மேற்கூறிய கருத்துக்களின் அடிப்படையில் இவ்விடத்தை இந்திய அரசு நாட்டின் கலாச்சார சின்னமாக உடனடியாக அறிவிக்க வேண்டும்.”

இது உயர் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் “ராமர் பாலத்தைக் காப்பாற்ற வேண்டும்” என்று கூறுபவர்களால் வைக்கப்பட்ட வாதத்தின் சாரம்.

“இந்தப்பாலம் மனிதனால் கட்டப்பட்டதல்ல. இயற்கையால் உருவானது. எனவே இதை கால்வாயை வெட்டுவதற்காக இடிப்பதில் தவறேதும் இருக்க முடியாது”, என்பது சேது சமுத்திரத் திட்டத்தின் சார்பாக அரசு கொடுத்த பதில்.

“அரசு தரப்பு சொல்வது போல இந்த அமைப்பு இயற்கையாக உருவானது என்று வைத்துக் கொண்டாலும் கூட அது மக்களின் நம்பிக்கை சார்ந்ததாக இருக்கிறது. இந்தப் பாலத்தை ராமர்தான் கட்டினார் என்று இந்துக்கள் நம்புகிறார்கள். எனவே இது மக்களின் நம்பிக்கை சார்ந்தது. அறிவியல் தர்க்கங்களுக்கு அப்பாற்பட்டது.

இந்துக்களின் மனதில் நீங்காத இடத்தைப் பெற்றிருக்கும் இவ்வமைப்பை இடித்தால் அவர்களின் மனம் புண்படும். இப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்படாதவாறு நீதிமன்றம் வழிவகை செய்ய வேண்டும். இதற்குள்ள ஒரே வழி இன்று நிர்ணயிக்கப்பட்டிருக்கும் சேதுக் கால்வாயின் தெற்கு வழித்தடத்தை “ராமர் பாலத்தின்” ஊடாக அல்லாமல் வேறு வழியில் அமைப்பது தான்”. இது அரசின் வாதத்திற்கு ராமர் பாலத்திற்காக வாதிட்டவர்களின் பதில்.

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்டு உச்ச நீதிமன்றம் ஆகஸ்டு 30 ஆம் தேதியன்று “ராமர் பாலத்திற்கு சேதம் ஏற்படாமல் அடுத்த 15 நாட்களுக்கு திட்டத்தை நடை முறைப்படுத்த வேண்டும். இதற் கிடையில் அரசு இந்த வாதத்திற்குத் தன் பதிலை நீதிமன்றத் திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

“இது இயற்கையாக உருவான ஒரு நிலவியல் அமைப்பு. ராமரால் கட்டப்பட்டதல்ல. மேலும் ராமர் என்பவர் வாழ்ந்ததற்கான ஆதாரம் இல்லை. எனவே இல்லாத ஒருவரால், கற்பனையில் உருவான ஒருவரால், எப்படிப் பாலத்தைக் கட்டியிருக்க முடியும்?” என்ற அரசு தரப்பு வாதம் நீதிமன்றத்தில் பிரச்சினையைக் கிளப்பியது.

பிரச்சினையின் ஓட்டு அரசியல் விளைவைக் கற்பனை செய்து பார்த்து அச்சம் கொண்ட மத்திய அரசு இந்த வாதத்தை நீதிமன்றத்தில் இருந்து உடனடியாகத் திரும்பப் பெற்றுக் கொண்டது. மத்திய அரசின் இந்த செயல், இது ராமர்பாலம் தானா அல்லது இயற்கையால் உருவான பாலமா என்ற விவாதத்தை ராமர் என்ற பாத்திரம் உண்மைப் பாத்திரமா அல்லது கற்பனைப் பாத்திரமா என்ற வாதமாக உருவாக வழிவகை செய்தது.

“நாட்டில் வாழும் பெரு வாரியான இந்து மக்களின் இறை நம்பிக்கை சார்ந்த பிரச்சினையாக இது இருப்ப தால்” “ராமர் பாலத்தை” சேதப்படுத்தாமல் திட்டத்தை நிறை வேற்றக் கூறிய தீர்ப்பை மேலும் 3 மாதத்திற்கு நீட்டித்து, மாற்றுப் பாதைகளுக்கு வாய்ப்புள்ளதா என்ற அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆக, நிரூபணமாயிருப்பது என்ன?

1. ராமர் பாலம் இந்துக்களின் கலாச்சாரச் சின்னம
2. எனவே அது குறித்து அறிவியல் விவாதங்கள் தேவை இல்லை.
3. ராமர் பாலத்தை சேதுக்கால்வாய்க்காக இடித்தால் இந்துக்கள் மனம் புண்படும்.
4. எனவே ராமர் பாலத்தை இடிக்காமல் சேதுக்கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற முயற் சிக்க வேண்டும்.
இது, உச்ச நீதிமன்றத்தின் இன்றைய நிலைப்பாடு.

ஆனால் உண்மை என்ன?

ராமர் பாலம் இந்துக்களின் கலாச்சாரச் சின்னம்தானா? அல்லது ஏதேவு சிலரால் இன்றைய அரசியல் சூழ்நிலை யை ஒட்டி “இது கலாச்சாரச் சின்னமாக முன்மொழியப் பட்டிருக்கிறதா”?

ராமர் பாலம் என்று சொல்லப்படும் இடத்தை இந்துக்கள் என்று கூறப்படும் சைவர்களோ, வைணவர்களோ அல்லது இன்ன பிறரோ இன்றுவரை ஒரு புண்ணிய ஸ்தலமாகக் கருதி சென்று வந்ததற்கான தற்கால மற்றும் முற்கால நடைமுறை வரலாறு ஏதும் இல்லை. சமஸ்கிருதம் தெரிந்த சிலருக்கு மட்டுமே அறியப்பட்ட “மேல்மட்ட” புராணங்களை மேற்கோள் காட்டிப் புண்ணியமில்லை.

1948 ஆம் ஆண்டில் தனுஷ்கோடியும், ராமர் பாலம் என்று சொல்லப்படும் பகுதியும் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டு இடிந்து கடலுக்குள் சென்றன. 1964 ஆம் ஆண்டு புயலால் தனுஷ் கோடியும், அதை சுற்றியுள்ள பகுதியும் அடியோடு அழிந்தன. தவிர 1978 நவம்பர் மாதம் ஏற்பட்ட புயலிலும் இந்தப் பகுதிகள் கடுமையான சேதத்திற்கு உள்ளாகின. இந்த காலகட்டத்தில் இந்துக்கள் என்று சொல்லப்படுபவர்களுக்கு புண்ணியத்தலம் என்று அறியப்பட்டுள்ள ராமேஷ்வரத்திற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதோ என்ற கேள்வியே உதித்தது. இதற்கான சான்றுகள் இருக்கின்றன.

மாறாக, இன்று ராமர் பாலம் என்று முன்மொழியப்பட்டுள்ள இடம் பாதிப்புக்குள்ளாகி விட்டிருக்கிறதே என்று அவர்கள் கவலை கொண்டதற்கான சான்றுகள் இல்லை.

கடந்த 43 வருடங்களாகப் பாழடைந்த நிலையில் நிற்கும் தனுஷ்கோடி என்ற கடந்தகால நகரமோ, அதில் இருந்து அழிந்து போன கோவில்களோ இந்த மக்கள் மனதில் கவலையை ஏற்படுத்தி, அந் நிலையில் இருந்து மேற்கூறியவற்றை மீட்பதற்கான பணியில் அவர்களையோ அல்லது இந்துக்கள் என்று கூறப்படுபவர் களின் கலாச்சாரப் பிரதிநிகிகள் என்று சொல்லிக்கொள்பவர்களையோ ஈடுபடுத்தவில்லை என்பதுதான் வரலாறு.

1964 ஆம் ஆண்டுக்கு முன்பு தனுஷ்கோடிக்கும் தலை மன்னாருக்கும் இடையே விசைப்படகுப் போக்குவரத்து இருந்தது. இந்தப் படகுகள் இன்று ராமர் பாலம் என்று முன்மொழியப்பட்டிருக்கும் இடத்தை ஒட்டியேதான் சென்று வந்தன. அந்த சமயத்தில் இந்தப் படகுகளில் இந்துக்கள் என்று சொல்லப்படும் மக்களே பெரும்பாலும் பயணித்தனர். அவ்வாறு பயணிக்கும்பேவுது “இதுதான் ராமர் பாலம்” என்று பக்தியில் பரவசமாகி கன்னத்தில் போட்டுக் கொண்டதற்கான ஆதாரம் இங்கோ அல்லது இலங்கைவாழ் தமிழ் மக்களித் திடையோ இல்லை என்பது தான் உண்மை.

இராமாயணத்தில் இராமர் பாலத்தைக் கட்டினார் என்று கூறப்பட்டிருக்கிறது என்பது உண்மை. ஆனால் அவ்வாறு கட்டப்பட்ட பாலம் மக்களின் மனதில் “புண்ணிய ஸ்தலம்” என்ற இடத்தைப் பெற்றதா என்பதுதான் கேள்வி. அப்படிப்பட்ட ஒரு அந்தஸ்தை அது பெற்றிருந்தால் அப்படிப்பட்ட இடத்தை சேதுக் கால்வாயைத் தோண்டுவதற்காக அந்த மக்களே அனுமதித்திருக்க மாட்டார்கள்.

உதாரணத்திற்கு ராமேஷ் வரக் கோவிலை இடித்து விட்டுத்தான் சேதுக் கால்வாயைத் தோண்ட வேண்டும் என்று முன்மொழியப்பட்டிருந்தால் அதை அவர்களை நிச்சயம் புண்படுத்தியிருக்கும். அவர்களும் அப்படிப்பட்ட திட்டத்தை எதிர்த்துக் கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டிருப்பர். ஆனால் அப்படியேதும் நடக்கவில்லை.

ராமர்பாலம் என்றழைக்கப்படும் இடத்தினூடாக கால்வாய் அமையப் போகிறது என்ற அறிவிப்பு வெளியான 2004 ஆம் வருடத்திலிருந்து இன்றுவரை அவர்தம் மனதில் எப்படிப்பட்ட ஒரு பிரச்சினையும் இதனால் ஏற்படவில்லை. ஏன், இன்று ராமர் பாலம் என்னும் அமைப்பை முன்மொழிபவர்கள் கூட அதை எதிர்த்துக் குரல் எழுப்பவில்லை.

இந்த வாதம் உருவானது 2006 இறுதியில்தான். இந்து மக்களின் பிரதிநிதிகள் என்று தங்களைத் தாங்களே கூறிக் கெவுள்ளும் சில அரசியல் அமைப்புகளும், பன்னாட்டு நிறுவனங்களில் இருந்தும், அரசு நிர்வாகத் துறையில் இருந்தும் பதவி ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெற்றுக்கொண்டிருக்கும் சில பிராமண படிப்பாளிகளாலும் தான் இந்தவாதம் முதன் முதலில் முன்மொழியப்பட்டது.

தங்கள் வாதத்திற்குப் பக்க பலமாக அவர்கள் இணைய தளங்களில் இருந்து தகவல் களை திரட்டத் தொடங்கினார்கள். ஏன்? என்னையும் கூட உதவ முடியுமா என்று கேட்டுக் கொண்டனர். நான் மறுத்து விட்டேன். இதன் பின்னர், எமது (WWW.sethusamudram.in) இணைய தளத்தில் உள்ள தகவல்களை அவர்கள் பெரியதளவில் உபயோகித்துக் கொண்டனர்.

“இந்த நிலப்பகுதியை கலாச்சார சின்னமாக அறிவிக்க வேண்டும்” என்ற பிராமண சமூகத்தைச் சேர்ந்த இந்த சிலரின் வாதத்தை எவ்விதக் கேள்வியும் இல்லாமல் உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதுதான் ஆச்சர்யத்தை அளிப்பதாக இருக்கிறது.

“இவ்விடத்தைக் கலாச்சார சின்னமாக அறிவிக்க வேண்டும்” என்பதற்கான சான்றுகளை இந்துக்கள் என்று அறியப்படும் மக்களின் அன்றாட இறை வாழ்விலிருந்து நீங்கள் அளிக்க வேண்டும். அவ்வாறு அளித்தால் உங்களின் வாதத்தை அனுமதிக்கலாம். மேட்டுக் குடியினர் சிலரால் மட்டுமே அறியப்பட்டிருக்கும் புராணங்கள் சிலவற்றில் இந்த வார்த்தைகள் இருப்பதை மட்டுமே வைத்து இது வெகுஜன மக்களின் இறை நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது என்று கருத முடியாது” என்றுதானே உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்க வேண்டும்?

மாறாக இவர்களின் வாதத்தை நீதிமன்றம் அப்படியே ஏற்றுக் கொண்டதை எப்படிப் புரிந்துகொள்ள?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com