Keetru Puthiya Thendral
Puthiya Thendral Logo
அக்டோபர் 2007

நாட்டைச் சீரழிக்கும் இன்றைய கல்விமுறை
முனைவர் மார்கண்டன்

கல்வி என்றால் என்ன என்பது குறித்த தெளிவான அணுகுமுறை அரசுக்கோ, பெற்றோர்களுக்கோ இல்லை. கல்வி என்பது சிறந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் திறனைத் தருவதாக இருக்கவேண்டும். ஆயின் செல்வத்தை ஈட்டும் திறனைத் தருவதே கல்வி என தவறான புரிதல் இருக்கின்றது. எனவே கல்வி வியாபார நிறுவனங்களில் இன்று தரப்படுகின்றது. ஏழை எளிய குடும்பங் களின் குழந்தைகளுக்கு பொருளாதார நிலையில் மேல்தட்டில் வாழும் குடும்பங்களின் குழந்தைகளுக்கு கிடைப்பது போன்று கல்வி கிடைப்பதில்லை. மழலையர் கல்வி முதல் உயர்கல்வி வரை கிடைக்கின்ற கல்வியும் ஒழுக்கத்தையும் பண்பாட்டினையும் வளர்க் கின்ற கல்வியாக இல்லை.

இன்றைய கல்வி ஏழை பணக்காரர் என்ற பாகு பாட்டை அதிகப்படுத்துவதாகவே இருக்கிறது. தாய்மொழி வாயிலாக கல்வி எல்லோருக்கும் வேறுபாடின்றி கிடைப்பதுடன் தொழிற்பயிற்சி - பொது அறிவு - ஒழுக்கம் மூன்றும் இணைந்ததாக கல்வி இருக்க வேண்டும். உலக மொழியாகிய ஆங்கிலத்தை ஒரு மொழி என்ற முறையில் சிறப்பாக கற்பிக்க வேண்டும். இப்படிப்பட்ட கல்வியே சமுதாயத்தில் புரட்சிகரமான மாறுதல் ஏற்பட துணை செய்யும்.

கணினிப் பொறியியல் கல்வி பல ஆண், பெண்களையும் உயிர்த்துடிப்பற்ற எந்திரமாக மாற்றிக் கொண்டிருக்கிறது. மனிதாபிமான உணர்வுகள் அருகிப்போய் மேற்கத்திய கலாச்சாரத்தில் அவர்கள் மூழ்கத் தொடங்கி விட்டார்கள். பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் அளிக்கப்படும் கல்வி பணமே வாழ்க்கை என்று மாணவர்கள் எண்ணும் நிலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

மனித உறவுகளை வளர்க்க உதவும் மொழியறிவு, இலக்கியம், சமூகவியல், புவியியல், வரலாறு, பொருளாதாரம், மனோதத்துவம் இவை பற்றியெல்லாம் பொதுவாக அறிந்திருப்பதுதான் ஒரு முழுமை பெற்ற ஆளுமை வளர்ச்சிக்குத் துணை செய்யும் என்ற கருத்தை பலர் சிந்திப்பதாகத் தெரியவில்லை. நம் பள்ளிகளிலும் உயர்கல்வி நிலையங்களிலும் கற்பிக்கப்படும் பெளதிகம், ரசாயனவியல், உயிரியல், கணிதம் போன்ற பாடங்கள் இயற்கையின் படைப்புகளை சிதைக்காமல் எவ்வாறு நிலைத்த தன்மையுடைய வளமான வாழ்வுக்கு அறிவியல் உதவ முடியும் என்பதை சொல்லிக் கொடுப்பதாக அமைய வில்லை.

விவசாயம், மருத்துவம், பொறியில் போன்ற துறைகளிலும் அறிவியல், சமூகவியல் பாடங்கள் போன்ற துறைகளிலும் நம் இளம் ஆண்களும், பெண் களும் பெறும் உயர்கல்வி அல்லது பல்கலைக்கழகக் கல்வி அவர்களை நம் சமுதாயத்தின் அடித்தள மக்களிடமிருந்தும், அவர்களின் பெற்றோர்களிடமிருந்தும் அந்நியப்படுத்திக் கொண்டிருக்கக் காண்கிறோம்.

உயர் கல்வி நிலையங்களால் நல்ல பயனுள்ள குடிமக்களை உருவாக்க முடிந்திருந்தால் இன்றைய பல பிரச்சனைகள் எளிதில் தீர்ந்திருக்கும். நம்முடைய பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி மையங்கள், ஏழை, எளிய மக்களின் வாழ்வுக்கு உதவும் வகையில் பல துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்டு உதவ முடியவில்லை. வசதி வாய்ப்புக்களை பெரும்பாலும் ஒரு சாராருக்கு அளிப்பதற்கே இந்த கல்வி பயன்படுகிறது என்றால் அதில் ஏதோ குறையிருக்கிறது.

நாட்டிற்கேற்ற கல்வி முறையை நம்மால் இன்னும் உருவாக்கிக் கொள்ள முடியவில்லை. உழைக்காமல், உற்பத்தியைப் பெருக்காமல் ஆடம்பரமாக சொகுசு வாழ்க்கை வாழ நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும். சொத்து சேர்த்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களைப் பற்றியும் இயற்கை வளங்கள் சிதைந்து போவது பற்றியும் கவலையில்லை என்பதற்கு வகை செய்யும் ஒரு கல்வி முறையை நம்மால் இன்னும் மாற்ற முடியவில்லை.

தீண்டாமை (சாதிவெறி), சமய வெறி, பதவி வெறி, வறுமை, வேலையின்மை, கலாச்சாரச்சீரழிவு, வன்முறை, பயங்கரவாதம் இவற்றிற்கெல்லாம் முக்கியக்காரணங்களில் ஒன்றாக இருப்பது இன்றைய தவறான கல்விமுறை என்றால் மிகையாகாது.