Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Thendral
Puthiya Thendral Logo
அக்டோபர் 2007

பேரிடர் துயர் குறைப்பு
பேராசிரியர் பி.கே. மனோகரன்

சர்வதேச பேரிடர் துயர் குறைப்பு நாள் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 2வது புதன்கிழமை கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில் தேசிய பேரிடர் துயர் துடைப்பு நாள் அக்டோபர் மாதம் கடைசி புதன்கிழமை அன்று கடைபிடிக்கப்படுகிறது. இயற்கையாகவும் மற்றும் மனிதனின் கவனக் குறைவினாலும், தீவிரவாதச் செயல்களாலும் ஏற்படும் இன்னல்கள் போன்ற பேரழிவிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் முக்கிய நோக்கமாகும்.

2007ம் ஆண்டின் கருப்பொருள் பேரிடர் துயர் குறைப்பு பள்ளிகளில் தொடங்கட்டும்' என்பதாகும். ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளில் பேரிடர் துயர் குறைப்பு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சென்ற ஆண்டும் இதே கருப்பொருள் பின்பற்றப்பட்டது. பேரிடர் பாதிப்பிலிருந்து எதிர்கால உலகமாகிய இன்றைய சிறுவர்களை பாதுகாப்பதும், பள்ளிப் பாடத்தின் ஒரு அங்கமாக பேரிடர் துயர் குறைப்பு இடம்பெற வேண்டும் என்பது இதன் முக்கிய நோக்கமாகும்.

நிலநடுக்கம், வெள்ளம், புயல், இடி, மின்னல், எரிமலை போன்றவை பேரழிவை ஏற்படுத்தும் இயற்கை இன்னல்களாகும். சாலை விபத்து, தீ விபத்து, நீரில் மூழ்குதல், கட்டிட விபத்து போன்றவை மனிதனின் கவனக் குறைவாலும், அறியாமையினாலும் தோற்றுவிக்கப்படும் இன்னல்களாகும். இன்னல்களின் தன்மைகளை அறிந்து, அவற்றால் ஏற்படும் தீமைகளிலிருந்து விடுபட உதவும் உத்திகளை அறிந்து செயல்படுவதை பேரிடர் மேலாண்மை என்கிறோம்.

ஒன்றும் அறியா பள்ளிக் குழந்தைகள் கூட இத்தகைய பேரிடர்களால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். கும்பகோணம் மழலைப் பள்ளி தீ விபத்து இதற்கொரு எடுத்துக்காட்டு.

உலகெங்கும் பெரும் இயற்கைப் பேரிடர்கள் ஏற்படும் ஆபத்து பெருகி வருகிறது. இதிலிருந்து எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக் கொள்வது என்று மக்களுக்கு விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, ஐக்கிய நாடுகள் சபை 1990 மதல் 10 ஆண்டுகளை இயற்கைப் பேரிடர் குறைப்பு பத்தாண்டுகளாக அறிவித்தது. உலக நாடுகளில், குறிப்பாக வளரும் நாடுகளில் இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் மோசமான விளைவுகள் நிகழாமல் செய்வதும், பாதிப்பைக் குறைப்பதும் இந்தப் பத்தாண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட திட்டத்தின் நோக்கங்கள் ஆகும்.

உலகத்தில் ஏற்படும் இயற்கைப் பேரிடர்களில் 60 சதவிகிதத்திற்கும் அதிகமானவை ஆசிய பசிபிக் பகுதியில்தான் ஏற்படுகின்றன. புவியியல் அமைப்பாலும், வானிலையாலும், பூகோள அமைப்பாலும் இந்தப் பேரிடர்களில் பெரும்பாலானவை இந்தியாவில் ஏற்படுகின்றன.

புயலால் 41% நிலநடுக்கத்தால் 37%, வெள்ளத்தால் 16%, சூறாவளிப் புயலால் 2%, பனிப்புயல், எரிமலை, வெப்ப அலை, நிலச்சரிவு, பேரலைகளால் ஒவ்வொன்றுக்கும் 1% குறைவான உயிர்சேதம் ஏற்படுகிறது என ஆய்வுகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

நமது நாட்டில் 55% நிலப்பரப்பு நில நடுக்கத்தால் பாதிக்கப்படும் பகுதியாகும். இந்தியாவில் நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளை ஐந்து மண்டலாகப் பிரித்துள்ளார்கள். தமிழ்நாடு இரண்டாவது மண்டலமாக உள்ளது.

இதுவரை நிகழ்ந்த பூகம்பங்களின் விவர அடிப்படையிலும் அந்தந்தப் பகுதியில் உள்ள புவிக் கட்டமைப்பின் அடிப்படையிலும், இந்தியத் தர நிர்ணயக் கழகத்தின் கீழ் இந்திய பூகம்பவியல் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.

1. பூகம்ப அபாயம் இல்லா மண்டலம், 2. குறைவான பூகம்ப அபாயம், 3. மிதமான அபாயம், 4. அதிக அபாயம், 5. மிக அதிக அபாயம் என 5 மண்டலங்கள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. முன்பு தமிழகம் குறைவான அபாயம் உள்ள பகுதியில் இருந்தது. 1990 களிலும், 2001லும் நடந்த நிகழ்ச்சிகளுக்குப் பின்னால் 2002ஆம் ஆண்டு வெளியான வரைபடத்தில் சென்னை, வேலூர், திருப்பத்தூர், சேலம், கோவை, கம்பம் பகுதிகள் மிதமான அபாயம் உள்ள பகுதிகளாகவும் (3) தமிழகத்தின் பெரும்பாலான ஏனைய பகுதிகள் குறைவான அபாயம் உள்ள பகுதிகளாகவும் (2) காட்டப்பட்டுள்ளன.

இத்தகைய நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கான சமுதாய அணுகுமுறையின் இரண்டு முக்கிய அம்சங்கள் - ஒன்று ஆயத்த நிலை, மற்றொன்று உதவி நடவடிக்கை. ஆயத்த நிலை இருவகைப்படும். அதில் ஒன்று பேரிடர் விளைவுகளைச் சமாளிப்பதற்கான ஆயத்த நிலை. பேரிடர் குறித்த எச்சரிக்கையை அறிமுகப்படுத்துவதுடன் மக்களிடையே பேரிடர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது. மற்றொரு வகையான ஆயத்த நிலை எத்தகைய பேரிடராயினும் அது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் குறிப்பதாகும்.

இதைப் போன்றே 'உதவி' என்பதும் இருவகைப்படும். ஒன்று பேரிடர் நிகழ்ந்த சமயத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, உடை, உறைவிட வசதிகளை உடனடியாக ஏற்பாடு செய்வது. பேரிடருக்குப் பின் உதவி குறித்து மக்களுக்குத் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை ஒன்றை அமைத்து, அப்பகுதி தலைவர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை உதவிப் பணிகளில் ஈடுபடுத்துவது.

உதவியில் மற்றொரு வகை பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க நடவடிக்கை மேற்கொள்வது. அவர்களுக்கு நம்பிக்கை உணர்வை ஊட்டுவது. அத்யாவசிய சேவைகளை அப்பகுதியில் உடனடியாக இயக்கச் செய்வது போன்றவை.

பேரிடர் ஏற்படும் பகுதியில், தனிநபர், சமுதாயம், தொண்டு நிறுவனங்கள், மத்திய, மாநில அரசுகள் மற்றும் பல்வேறு தன்னார்வ நிறுவனங்கள் மக்களிடையே பேரிடர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இத்தகைய பேரிடர் ஏற்படாமல் தடுப்பதிலும், பேரிடர் சமயத்தில் பாரபட்சமின்றி உதவுவதிலும், பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் மக்கள் பொறுப்புணர்வுடனும் பொறுப்பேற்கும் தன்மையுடனும் நடந்துகொள்ளுமாறு அந்நிறுவனங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.

1981 முதல் 1990 வரையான பத்து ஆண்டுகளை விட 1991 முதல் 2000 வரையான பத்து ஆண்டுகளில் உயிரிழப்பு இருமடங்கு உயர்ந்துள்ளது. உலக அளவில் இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் இழப்பை கணக்கிடும் போது வளரும் நாடுகளில் இழப்புகள் அதிகம் உள்ளதாக தெரிய வருகிறது. வானிலை பற்றிய முன்னெச்சரிக்கைகளைக் குறித்த நேரத்தில் மக்களுக்கு வானொலி, தொலைக்காட்சி, செய்திப் பத்திரிக்கை வாயிலாக வழங்குவதாலும், மக்கள் மத்தியில் ஏற்படும் விழிப்புணர்வாலும் பெரும்பாலான உயிர் இழப்புகளைக் குறைக்க இயலும்.

பேரிடர் மேலாண்மையானது 1, முன்னேற்பாடு 2, எச்சரிக்கை 3, தாக்கும் நிலை 4, காப்பாற்றும் நடவடிக்கை 5, மீட்பு நடவடிக்கை 6, புனர் வாழ்வளித்தல் 7, மறுசீரமைத்தல் 8, இன்னலைத் தவிர்க்க நீண்டகாலத் திட்டம் 8, திட்டச் செயலாக்கம் என்னும் படிநிலைகளில் அமைகின்றது.

இயற்கைப் பேரழிவை முற்றிலுமாகத் தடுக்க இயலாது. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் நூற்றுக்கணக்கான மனித உயிர்களை மரணத்தின் பிடியிலிருந்து மீட்கலாம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com