Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Thendral
Puthiya Thendral Logo
அக்டோபர் 2007

நஞ்சில்லாத உணவுக்கு இயற்கை வேளாண்மை
பி. கோமதிநாயகம்

30 ஆண்டுகளுக்கும் மேலாக புளியங்குடி விவசாய சேவா சங்கத்தின் பொறுப்பாளராக தனது அயராத உழைப்பாலும், தெளிந்த சிந்தனையாலும் அப்பகுதி விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பயன்படும் பல்வேறு செயல் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வரும், 74 வயது இளைஞர் இயற்கை உழவர் திரு. பி. கோமதிநாயகம் அவர்களுடன் நேர்காணல்.

சந்திப்பு : அ. செல்வதரன்

உங்களோட விவசாய சேவா சங்கத்த பத்தி நெறைய கேள்விப்பட்டிருக்கேன். அத ஆரம்பிக்க வேண்டிய எண்ணம் எப்படி வந்தது?

இந்த பகுதியில பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கைக்கான ஆதாரம் வேளாண்மை தான். எலுமிச்சை, காய்கனி, மலர், நெல், கரும்புன்னு எல்லாமே பயிரிடுவாங்க. விவசாயிகளுக்கு தொழில் நுட்ப ரீதியான உதவிகளை செய்யனும்னு 1975-ஆம் ஆண்டு ஜுலை 13ம் தேதி திரு.ர.பி.சி. வீரபாகு அவர்கள வச்சு இத தொடங்குனோம்.

அடிப்படையா மூணுநோக்கம் இருந்துச்சு. ஒன்று விவசாயம் தற்சார்புடையதா இருக்கணும். இரண்டாவதா விவசாயியோட உண்மையான சொத்து நிலமோ, பணமோ அல்ல. அவங்களோட தொழில்நுட்பம் தான். அத வளர்த்து விவசாயத்தை லாபகரமா நடத்தணும். மூணாவதா அறிவு வளர்ச்சிக்காக நூலகம் நடத்தறது, பிற பகுதியில உள்ளவங்களோட தொடர்பு கொண்டு கற்றுக்கொள்றது, வேளாண் சுற்றுலா செல்வது, கருத்தரங்குகள் நடத்துவது, பயிற்சிகள் நடத்துவது, மேலும் அரசு அலுவலகங்களுக்கு விவசாயிகளின் பிரச்சனையை கொண்டுபோய் தீர்வு காண்பதுன்னு ஆரம்பிச்சோம்.

ஆரம்பத்துல எல்லாரையும்போல விவசாயத்துல இருந்த நீங்க எப்ப இயற்கை வேளாண்மைக்கு மாறினீங்க?

ஆரம்பத்துல விதைகள், இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள், தெளிப்பான்கள் எல்லாம் விவசாயிகளுக்கு விற்பனை செஞ்சிக்கிட்டிருந்தோம். சங்கத்துக்கு நல்ல வருமானம் இருந்துச்சு. ஆனா விவசாயிகளோட வாழ்க்கை நாளுக்கு நாள் நலிஞ்சுக்கிட்டே போச்சு.

1981-ல தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில ஆராய்ச்சி கவுன்சில் உறுப்பினரா இருக்கும்பொழுது அங்கு நடந்த ஆய்வுகள், சோதனைகள் எல்லாம் வெளிநாட்டு நிறுவனங்களின் வழிகாட்டுதல்கள் மூலமா நடந்தது தெரிந்தது.

அது எல்லாம் அதிக உற்பத்தி என்பதை மட்டுமே மையமா கொண்டு இருந்தது. அதுக்கென மேற்கொள்ளப்பட்ட இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளின் உபயோகங்கள் மண்வளத்தை பெரிய அளவில் பாதிச்சது. மண்ணில் கோடிக்கணக்கான கண்ணுக்கு தெரியாத நுண்பொருட்களும், மண் புழுக்களும் இரசாயன உரங்களால பாதிப்படைஞ்சது.

அதோட வீரிய ரக பயிர்களால் விளைவிக்கப்பட்ட தானியங்களில் மருத்துவ பயன்களும், சத்துக்களும் மிகக் குறைவாகவே இருந்தது. பாரம்பரிய பயிர்களுக்கு உண்டான ருசியும், மணமும் ஒட்டு இரகங்களுக்கு இல்ல. அதோட இந்த வீரிய விதைகள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட காலம் மட்டுமே வீரியத்தோடு இருக்கு. அதன் பிறகு வயல்வெளிகளில் இருந்து மறைந்து விடுகிறது. அதனால புதிய, புதிய இரகங்கள் விஞ்ஞானிகளால் தொடர்ந்து கண்டுபிடிக்கப்படுகிறது.

நிலையற்ற தன்மையுள்ள வீரிய விதைகளை அதிக உற்பத்தி என்பதற்காக மட்டும் விவசாயிகள் கைகொண்டார்களே தவிர மற்ற வகைகளில் இந்த இரகங்களால் பாதிப்பு தான் அதிகம் என்பதை நான் உணர்ந்தேன்.

இதனால நமது பாரம்பரிய விவசாயத்தில கவனம் செலுத்த தொடங்கினேன். பாரம்பரிய இரகங்களுக்கு மண்வளத்த கெடுக்கக்கூடிய இரசாயன உரங்களோ பூச்சி கொல்லிகளோ தேவையில்லை. இவை குறைந்த செலவில் அதிக பராமரிப்பில்லாம போதிய விளைச்சல் தந்தன. அதனால இயற்கை முறைக்கு மாறினேன்.

எந்த ஒரு மாற்றமும் எளிதானதில்லை. நீங்க எப்படி மாற்றத்த எதிர் கொண்டீங்க...?

செயற்கை வேளாண்மையில இருந்து இயற்கை வேளாண்மைக்கு வரும்போது (1981) அன்றைய நிலையில சரியான வழிகாட்டிகள் இல்ல. மேலும் மாற்று முறைகள் (பாரம்பரிய முறைகள்) பற்றியும் தெளிவா தெரியல. திடீர்ன்னு மாறினதால மகசூல் குறைவு, பொருளாதார நஷ்டம். என்ன ரொம்ப பாதிச்சுது. பல தோல்விகளுக்கு பிறகு தான் சரியான வழிகளை கண்டறிய முடிஞ்சுது. இப்போ தெளிவா இயற்கை விவசாய வழிமுறைகள் சுலபமா கிடைக்குது. என்றாலும் இதுக்கு மனித உழைப்பு, கால்நடைகளின் பக்கபலம் மிகமிக அவசியம்.

மனித உழைப்புன்னதும் ஒன்று ஞாபகத்துக்கு வருது. இப்ப விவசாய கூலி தொழிலாளர்களோட வாழ்நிலை எப்படி...?

கிலோவுக்கு இரண்டு ரூபாய் அரிசிக்கு பின்னால கூலியாள் கிடைப்பது பெரும்பிரச்சனையாதான் இருக்கு. விளிம்புநிலை மனிதர்கள் தான் கூலியாட்களாக இருக்காங்க. அவங்க எந்தவித வாழ்க்கை லட்சியமோ, பிடிப்போ இல்லாம போதிய கல்வி அறிவும் இல்லாததால சிறந்த வாழ்வு பற்றிய கனவு கூட அவங்கட்ட இல்ல. மாசத்துக்கு சிலநாள் வேல பாத்தா போதும் அவங்க சாப்பாட்டுக்கு, தேவைக்கு போதுமான தொகை கிடைக்கறதால பலர் தொடர்ந்து வேலைக்கு போறதில்ல. மது அருந்துபவர்கள் தான் தினமும் வேலைக்கு போறாங்க. அதுவும் சாயங்கால செலவுக்காக - வேலையில்லா திண்டாட்டம் இப்ப இல்ல வேலைக்கு ஆள் இல்லாம தான் திண்டாட்டமா இருக்கு.

இயற்கை வேளாண்மைக்கு நீங்க மாறுனத பத்தி பேசினோம்.. இப்ப ஒரு தெளிவான விவசாய முறையை அடைஞ்சிருக்கீங்க அதுக்கு யார் காரணம்?

இந்த முறைகள்ல நான் வெற்றிகரமா செயல்படுவதற்கு புளியங்குடி விவசாய சேவாசங்கம் மூலமா திரு. நம்மாழ்வார் போன்றவர்களுடன் தொடர்புகொண்டு பயன்பெற முடிஞ்சது. மேலும், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள இந்திய பாரம்பரிய அறிவியல் மையம், சத்தியமங்கலத்தில் உள்ள தமிழ்நாடு உழவர் தொழில்நுட்ப கழகம் போன்ற அமைப்புகள் எங்களுக்கு பல்வேறு வழிகளில் உறுதுணையா இருந்துச்சு.

தமிழகத்தில் உள்ள பல விவசாய பண்ணைகள நேரில பாத்து அந்த விவசாயிகளோட அனுபவத்தை நாங்க பயன்படுத்த முடிந்தது. விவசாய சங்கத்துக்கு சுமார் 22 வகையான விவசாய பத்திரிக்கைகள் தருவிக்கப்பட்டன. இதனால தொழில் நுட்பங்களை எளிதா பெற முடிஞ்சது.

நீங்க புதுசா கண்டுபிடிச்சது பற்றி...

விவசாயத்துல புதியது எதுவும் இல்ல. பசுமை புரட்சியின் பேரால நாம மறந்த நல்ல விசயங்கள மறுபடி புதுப்பித்தல் ஒன்னே போதும். புதிய கண்டுபிடிப்பு தேவையே இல்ல.

பழைய முறைகள் மட்டும் பெருகி வரும் மக்கள் தொகையின் உணவு தேவைக்கு போதுமா?

போதும். இன்றைய பரபரப்பான அவசர உலகத்திற்கு இந்த முறைகள் (பஞ்ச கவ்யம், அமுதகரைசல், வளர்ச்சிஊக்கி, பூச்சி விரட்டி, கழிவுகளை மறு சுழற்சி செய்து உரமாக்குவது) மட்டுமே போதுமானது இல்லை என்று சொல்பவர்கள் பன்னாட்டு கம்பெனிகள் மட்டுமே. அதன் நோக்கம் அவர்களது பொருட்கள் விற்பனை பாதிப்பது பற்றியது மட்டுமே.

வரலாற்றுப் பூர்வமாக பார்த்தாலும் பஞ்சங்கள் ஏற்பட்ட காலத்தில் பற்றாக்குறையினால் இறந்தவர்களை விட விநியோக கோளாறால் இறந்தவர்களே அதிகம். அந்நிலை இன்று இல்லை.

விவசாயிகள் பலரின் தற்கொலை எதிர்காலம் பற்றிய பயத்தை ஏற்படுத்துகிறது. விவசாயிகளின் தோல்வி ஏன்?

அவர்களது விவசாய முறையே தவறு எனும்போது அதில் எப்படி வெற்றி பெற முடியும்... மாற்றுமுறை பற்றி அவர்கள் சிந்திப்பதே இல்லை. அவர்களுக்கு தனது செலவை எப்படி குறைப்பது என்ற யோசனை இல்லை.

சில சின்ன, சின்ன சோம்பேறித்தனங்கள், சில தோல்வியினால் ஏற்படும் விரக்தி, அரசின் தவறான வழிகாட்டல்களே இதற்கு காரணம்.

விவசாயத்திற்கு தான் 70 ஆயிரம் கோடிக்கு மேல் மத்திய அரசு மானியம் வழங்குகிறதே அது...

மானியமா... அந்த பணம் யாருக்கு போய் சேருது. விவசாய மானியம் எல்லாம் உர, பூச்சிக்கொல்லி நிறுவனங்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கு பயணப்படியும், மீட்டீங் செலவுக்கும் தான், ஒத்த பைசா கூட விவசாயி கைக்கு வராது.

இயற்கை விவசாயத்துல இன்றைய பிரச்சனை என்ன?

இயற்கை இடர்பாடுகள் இப்ப அதிகரிச்சுட்டே வருது. போதிய மழையின்மை, காலநிலை மாற்றம், மேற்குமலை வறட்சி காரணமா அடிவாரங்களில் பன்றி, மயில் என விலங்குகளின் தொல்லை. அப்புறம் முக்கியமா அரசு அதிகாரிகள். பாமர விவசாயிகள் அரசு அதிகாரிகளை அணுக கூடி முடியறதில்லை.

உங்களோட பொருட்களை சந்தைபடுத்துதல் எப்படி?

நேரடியா விற்பனை பண்ணுறோம். அப்புறம் பல நட்பு வட்டங்களின் கூட்டு முயற்சியும் நடக்குது. இயற்கை விவசாய பொருட்கள் பற்றி விளம்பரம் இல்லை. காசு கொடுத்து வாங்குபவர்கள் சுத்தமான பொருள் வேண்டும்னு உணர்வதில்லை. விலை மலிவா எதிர்பார்க்கிறாங்க. தரத்தை பற்றி பெரிசா கவலைபடுவதில்லை.

நஞ்சில்லாத உணவு வேண்டுமென்ற சிந்தனையே இங்கு இன்னும் எழவில்லை. கூட்டுப்பண்ணை, பால் உற்பத்தி, சாண எரிவாயு, உரத்தொழிற்சாலை, இயற்கை வேளாண் பொருட்களை வணிக பொருட்களாக மாற்றுதல், மரம் நடுதல், கூட்டு குடும்பவாழ்வு என இன்னும் எவ்வளவோ இருக்கிறது பேசிக்கொள்ள...

புளியங்குடி விவசாய சேவா நிலைய வெளியீடான “வளமான வாழ்க்கைக்கு இயற்கை வழி வேளாண்மை” எனும் நூல் வேண்டுவோர் தபால் கட்டணம் ரூ. செலுத்தி இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

முகவரி :
பி. கோமதி நாயகம்
விவசாய சேவா நிலையம்,
சி.பி. காம்ளக்ஸ், காந்தி பஜார்
புளியங்குடி - 627855


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com