Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Thendral
Puthiya Thendral Logo
அக்டோபர் 2007

பதவி
சிற்றார் பழ. தேவராஜன்

பதவியை பதில்+உதவி என்று கூட சொல்லலாம். ஒருவரை ஒரு பதவிக்கு ஒன்றுகூடி தேர்ந்தெடுப்பது, அவர் பதிலுக்கு ஏதாவது உதவி செய்வார் என்ற எதிர்பார்ப்பில்தான். பதவி வந்தால் அதிகாரம் வரும், அதிகாரம் வந்தால் ஆர்வம் அல்லது ஆணவம் வரும். ஆணவன் வந்தால் 'தான்' என்ற அகம்பாவத்தில் அத்துமீறல் வரும், அத்துமீறல் வந்தால் ஆபத்து வரும், ஆபத்து வந்தால் அழிவு நிச்சயம். சமீபத்திய பதவிகள் படுத்தும் பாடு இது.

ஆனால் பண்டை காலத்தில் ஏன் சமீப காலம் வரை மாபெரும் தலைவர்கள் கூட பதவியை விரும்பமாட்டார்கள். ஏனெனில் பதவி என்பது கடன். “கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கி”, மக்களுக்கு எந்த வகையிலாவது வேண்டும் என்ற எண்ணம் உறுத்திக்கொண்டே இருக்கும். பதவியால் மனிதருக்கு பெருமையா?! அல்லது மனிதரால் பதவிக்குப் பெருமையா?! என்றால் பதவியை அலங்கரித்தவர்கள் பண்டைய தலைவர்கள் பதவி ஏற்ற நாள் முதல் பொதுமக்களுக்கு உதவி செய்வதிலேயே குறிப்பாக இருப்பார்கள். ஆனால் இன்றைய நிலை!...

பதவிக்காக கட்டிய மனைவி, பெற்ற பிள்ளைகளைக்கூட இழக்கத் தயாராகிறார்கள். பதவி, அது தரும் சுகம், சுகத்தில் வரும் போதை, போதையேற்றும் அடிவருடிகள் என தன்னை மட்டுமின்றி தன்மானம், சுயமரியாதையை இழந்து கூட பதவி பெறக்காத்திருக்கும் பலரை நாம் அடையாளம் காணமுடியும்.
ஆன்மீக ஞானி வள்ளலார் அவர்கள் பசித்திரு, தனித்திரு, விழித்திரு என்றார். இந்த மூன்று வார்த்தைகளின் முதல் எழுத்துக்களைச் சேர்த்தால் 'பதவி' என்ற சொல் வரும். இந்தப் பதவி 'சிவலோகப்பதவியை'க் குறிக்கும். நாம் உயிர் கூட்டுடன் உலாவும்போது செய்யும் நன்மைகள், தானதர்மங்கள், உயிர்பிரிந்த பின் 'முக்தி' என்ற பதவியைத்தரும் எனக்கூறினார்.

ஆக பதவி என்பது பாவங்களற்ற செயல் எனப் பொருள்படுகிறது. ஆனால், இன்றைய நிலையில் பதவி என்பது அதிகாரத்தின் பொருட்டு அமைகிறது. எவன் ஒருவன் அதிக தவறு செய்கிறானோ அவன் அதிக அதிகாரம் படைத்தவனாக இருக்கிறான். இது கலியுகத்தின் நியதி என்றாலும் தமிழகத்தின் பாடு எதிர்காலத்தில் பெரும்பாடாய் அமையுமோ? என்ற அச்சம் வருகிறது.

புதுப்புது கட்சிகள், புதுப்புது தலைவர்கள் என வாரத்திற்கு ஒருவர் புதிதாக முளைக்கிறார்கள். முளைப்பவர்கள் மக்களுக்கு தொண்டு செய்வேன், சமுதாய சீர்திருத்தங்கள் செய்வேன் எனக் கூறாமல், ஏதேனும் ஒரு 'இனத்தைச்' சார்ந்தே செயல்படுகிறார்கள். அதிலும், குறிப்பாக மாநில முதல்வர் நாற்காலி மீது அனைவருக்கும் ஒரு கண் அல்ல வெறி. இத்தனை முதல்வர்களையும் தமிழகம் தாங்குமா? என்ற அளவிற்கு வெறிபிடித்து திரிகிறார்கள்.
இவர்கள் பொதுமக்களை பல்வேறு நிறங்களில் பிளவுபடுத்தி, துண்டாடி அதில் குளிர் காய்கிறார்கள். பிரித்தாலும் சூழ்ச்சியை மட்டுமே நம்புகிறார்கள். பதவி என்பது தன் சுயபலம் என்று நம்பி, அதற்காக எத்துனை சூழ்ச்சிகள் செய்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. முதல்வர் பதவி என்பது ஒரு மாநில மக்களின் ஒட்டுமொத்த நலனை அடக்கிய பதவி. ஆனால், அண்டை மாநிலமான கர்நாடகாவில் 'காக்காய்கடி' கடிப்பது மாதிரி முதல்வர் பதவியை ஆளுக்கு பாதி என பிரித்துக் கொண்டார்கள். சுகம் கண்டவர் பதவியை விட்டுத்தர மறுக்கிறார். சுகம் தேடுபவர் எப்படியாவது பதவி வேண்டும் என்ற வெறியில் ஒட்டுமொத்த மாநிலத்தின் நிம்மதியையும் கெடுக்கிறார். விளைவு : இடைத்தேர்தல். செலவு : மக்களின் வரிப்பணம்.

இப்படி சீரழிந்தாலும், அவமானப்பட்டாலும், நொந்து நூலாகிப் போனாலும் பொதுமக்கள் மட்டும் திருந்தவே மாட்டார்கள். ஏனெனில், “இவர்கள், ரொம்ப நல்லவர்கள்”. இந்த நல்லவர்கள் நம் மாநிலம், அண்டை மாநிலம் என இல்லாமல் நாடெங்கும் பரவி இருப்பதால் தான், வெளிநாட்டு ஏகாதிபத்தியங்கள் நம் நாட்டை 'நல்ல வணிகச்சந்தை' எனக்கூறி கடை விரிக்கிறார்கள். இதற்கு சுருக்கமான பொருள் ஏமாளிகள் அல்லது 'இளிச்சவாயர்கள்' என்பதாகும். முன்னேற்றம் என்பது ஒரு சாராருக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் பொதுவாகவும் இருக்கவேண்டும். ஆனால், பதவியாளர்கள் தங்கள் பதவியைத் தக்க வைக்க வெளிநாட்டு சதிகளைக்கூட செய்வதாக நாளேடுகளில் பிரகடனப்படுத்தப்படுகிறது.

ஆக, பதவி என்பது தொண்டு செய்வது என்ற நிலை மாறி, சூழ்ச்சி செய்வது என்றாகிவிட்டது. இப்படி பதவியைத் தக்க வைக்கவே பெரும்பாடுபடும் தலைவர்கள் இருக்கும்வரை 2020-ல் என்ன 2200-ல் கூட இந்தியா பதவிச் சிறைகளில் சிக்கி பரிதவிக்குமே தவிர 'உலக அரங்கில்' மகுடம் சூடாது.

அரசியல் அல்லது பதவி என்பதை சுய ஆதாயத்திற்காய் பயன்படுத்துவதை நிறுத்தும்வரை அல்லது அரசியலில் பொதுநலம் கொண்டவர்கள் ஈடுபடும் வரை 'பதவி' என்பது சுயநலம் மிக்கதாகவே இருக்கும். கானல்நீரை உண்மை என்று நம்பி வாழும் பொதுமக்கள் இருக்கும் வரை, பதவி என்ற சுகம் கண்ட சூழ்ச்சியாளர்கள் மட்டுமே ஆட்சி செய்வார்கள் என்பது மாறாத உண்மை. பதவிக்கான சூழ்ச்சிகளும் போட்டிகளும் முடியும்போது, மயானம் மட்டுமே மிஞ்சியிருக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது நாமும், பதவியாளர்களும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com