Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Thendral
Puthiya Thendral Logo
அக்டோபர் 2007

இந்தியாவின் சுற்றுச்சூழல்: கரடுமுரடான ஒரு பயணம்
அசிஷ் கோத்தாரி
தமிழில்: ஆதி வள்ளியப்பன்

இப்போது சுற்றுச்சூழல் செய்திகள் நாளிதழ்களின் தலைப்புச் செய்தியாவது முன்னைப் போல அரிதான ஒரு விஷயமாக இல்லை. காலநிலை மாற்றத்தை சமாளிக்க இந்தியா ஆற்றவுள்ள எதிர்வினை பற்றி, ஜூலை 15ம் தேதி பிரதமர் கூட்டிய கூட்டச் செய்தி பல நாளிதழ்களின் முதல் பக்கத்தில் இடம்பிடித்தது. அதற்கு சில தினங்கள் முன்பாக, வழக்கமான தரம்தாழ்ந்த அரசியல் சதியாலோசனை செய்திகளை புறந்தள்ளிவிட்டு, புலிகளின் எண்ணிக்கை குறைந்த அதிர்ச்சிச் செய்தி முக்கிய இடம்பிடித்தது. கோலா பாட்டில்களில் பூச்சிக்கொல்லிகள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மற்றும் பேரணைகளை எதிர்க்கும் மக்கள் போராட்டங்கள் மற்றும் அது போன்ற செய்திகள் காலைஉணவு நேரங்களில் நாம் படிக்கும் வழக்கமான செய்திகள் ஆகிவிட்டன.

முதல்பக்கத்தில் அதிக அளவு இடம்பிடித்தாலும் அதற்கு நேர்முரணாக, நாட்டின் சுற்றுச்சூழல் மிகமோசமான அழிவைச் சந்தித்து வருகிறது. நமது இயற்கை வளங்கள் மோசமாக அழிந்து வரும் நிலையில், அவற்றை பாதுகாக்க வேண்டிய மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் போன்ற அமைப்புகளும் நிறுவனங்களும் தப்பித்து ஓடுபவையாகவும், 'வேலியே பயிரை மேயும்' வகையிலும் செயல்பட்டு வருகின்றன.

எந்தக் காலத்திலும் இதேபோன்ற மோசமான நிலைமை இருந்ததில்லை. நாடு விடுதலை பெற்று முதல் 20 ஆண்டுகளில் காடுகள் மற்றும் காட்டுயிர்களை கணக்குவழக்கின்றி அதிவேகமாக அழித்தது மற்றும் கடுமையான மாசுபடுத்துதல் தீவிர கவலையை தோற்றுவித்தது. அதைத் தொடர்ந்து ஓங்கிஒலித்து கவனத்தைக் கவர்ந்த முதல் குரல்களில் ஒன்று, உத்தராகண்ட் என்று தற்போது அழைக்கப்படும் பகுதியில் சிப்கோ இயக்கப் பெண்கள் நடத்திய போராட்டம்தான்.

தங்கள் வாழ்க்கையாகவும், வாழ்வு ஆதாரமாகவும் திகழ்ந்த காடுகளை அழிப்பதற்கு எதிராக அவர்களே ஒருங்கிணைந்தனர். 1970, 1980களில் அரசு கொண்டு வந்த பல சட்டங்கள், கொள்கை முடிவுகள் (எடுத்துக்காட்டுக்கு, காட்டுயிர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்தும் கொள்கைகள்), சுற்றுச்சூழலை கையாள ஒரு தனி அமைச்சகத்தை உருவாக்கக் காரணமாக அமைந்தன.

வெகுமக்கள் இயக்கங்கள்

இன்று முக்கியத்துவம் பெற்றுள்ள பல வெகுமக்கள் இயக்கங்கள் மற்றும் சமூக உரிமை அமைப்புகள் அந்தக் காலத்தில் பிறந்தவையே. அமைதிப் பள்ளத்தாக்கில் கேரள அரசு ஒரு புனல் மின்நிலையத்தை அமைக்கத் திட்டமிட்டது. இந்தியாவில் எஞ்சியுள்ள ஒரு சில மழைக்காடுகளை காக்க வேண்டிய போராட்டத்தின் தொடக்கப் புள்ளியாக அது அமைந்தது. ஆனால், 1980களின் மத்தியில் முன்வைக்கப்பட்ட நர்மதை அணைகளுக்கு எதிராகத் தோன்றிய இயக்கம், பேரணைகளுக்கு எதிரான உலகின் மிக முக்கியமான இயக்கங்களுள் ஒன்றாக உருவெடுத்தது. சுற்றுச்சூழல்-வளர்ச்சி இடையே எதைத் தேர்ந்தெடுப்பது என்ற பெரும் விவாதத்தை நடுத்தரவர்க்க மக்களிடையே இந்த இயக்கம் உருவாக்கியது.

அதற்குப் பிறகு சுற்றுச்சூழல் கல்வி ஒரு மதிப்புமிக்க துறையாக மாறியது. தொடர்ந்து பல மாற்றங்கள் ஏற்பட்டன. அவை மிகக் கடுமையான நாட்கள், தங்கள் போராட்டம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் சுற்றுச்சூழல் குழுக்கள் செயல்பட்டு வந்தன. ஆனால் அந்த நம்பிக்கை, வீண்போய்விட்டது.

நம்பிக்கை வீண்போனது உண்மைதான், ஆனால் போராட்டம் நின்று போய்விடவில்லை. காடுகள் மற்றும் காட்டுயிர்கள் அவ்வளவு காலம் சந்தித்து வந்த அழிவு, வெளிப்படையாகக் குறையத் தொடங்கியது. ஆனால் மிக மோசமான விஷயம் அதற்குப் பிறகுதான் வந்தது.

1991ல் அழிவு சக்திகளுக்கு பெரும் ஊக்கம் கொடுக்கப்பட்டது. புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய பொருளாதார கொள்கைகள், இந்தியாவை உலகமயமாக்க காலத்துக்குள் தள்ளிய அதேநேரம், முந்தைய பத்தாண்டுகளில் பெற்றிருந்த சுற்றுச்சூழல் லாபங்கள் தலைகீழாக்கப்பட்டன. மீன், கனிம வளம் போன்றவற்றை ஏற்றுமதி செய்ய ஊக்கமளிக்கப்பட்டது, கனிமச் சுரங்கத் தொழில் போன்ற துறைகளில் வெளிநாட்டு மூலதனம் வரவேற்கப்பட்டது, அந்தத் துறையில் உரிமம் வழங்கும் நடைமுறை எளிமையாக்கப்பட்டது. இந்தியாவின் பண்பாட்டு மற்றும் சூழலியல் நுண்ணுணர்வுமிக்க பகுதிகள் என்ற அடையாளத்துடன் அதுவரை பாதுகாக்கப்பட்டு வந்த பகுதிகள், திறந்துவிடப்பட்டன. 21ம் நுாற்றாண்டுக்குத் தாவும் ஆர்வத்தில், இதுபோன்ற பெரும் தவறுகள் கவனிக்காமல் புறந்தள்ளப்பட்டுவிட்டன.

1980க்குப் பிறகு காட்டுப் பகுதிகள், காடுகள் சாராத நடவடிக்கைகளுக்காக திறந்துவிடப்பட்டன. கடந்த 6, 7 ஆண்டுகளில்தான் இது போன்ற நடவடிக்கைகள் 50 சதவிகிதம் மேற்கொள்ளப்பட்டன. தொழிற்சாலைகள் அமைக்கவும், கட்டமைப்பு வசதியை மேம்படுத்திக் கொள்ள நினைப்போரும் இப்படிப்பட்ட காட்டுப்பகுதிகள் வேண்டும் என்று கேட்பதே, அவற்றின் அழிவுக்கு முக்கிய காரணம்.

1980க்குப் பிறகு கனிமச் சுரங்கம் தோண்டுவதற்காக 95,000 ஹெக்டேர் காட்டுப் பகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் 63 சதவிகிதம் 1997 மற்றும் 2005க்கு இடையிலான எட்டு ஆண்டுகளில் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. உயிரியல் ரீதியிலும், பண்பாட்டு ரீதியிலும் அதிக நுண்ணுணர்வுமிக்க பகுதிகளான சட்டிஸ்கர், ஒரிசா, ஜார்கண்ட், மேகாலயா மற்றும் பல மாநிலங்கள் திறந்துவிடப்பட்டுள்ளன. இதன்காரணமாக அந்தத் திணைக்கே உரிய பழங்குடிகளும் காட்டுயிர்களும் முற்றிலும் அழிவை சந்திந்து வருகின்றன. 'உள்நாட்டு காலனி ஆதிக்கம்' என்ற புதிய அலை நாட்டை விழுங்கி வருகிறது.

விடுதலைக்குப் பிறகு பெரும் ஏற்றஇறக்கங்களைச் சந்தித்த நமது சுற்றுச்சூழல், இன்று கடுமையான சரிவைச் சந்தித்து வருகிறது. இதைவிட மோசம் என்னவென்றால், சுற்றுச்சூழலைக் காக்க ஏற்கெனவே இடப்பட்டிருந்த சில தடுப்பு நடவடிக்கைகள் தற்போது கழற்றிவிடப் பட்டுவிட்டன.

கடந்த 3 அல்லது 4 ஆண்டுகளில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைக்கு பொறுப்பாக இருந்த முன்னாள் அமைச்சர் மற்றும் செயலாளர் (ஆ. ராசா, முன்னாள் செயலாளர் ஆகிய இருவரும் தற்போது வேறு துறைக்கு மாற்றப்பட்டுவிட்டனர்), பல முக்கிய சுற்றுச்சூழல் விதிமுறைகளை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கைக்கு தலைமை தாங்கிச் செயல்பட்டனர்.

வளர்ச்சித் திட்டங்கள், சூழலியல் சார்புத்தன்மையைக் கொண்டிருக்கின்றனவா என்பதைக் கண்டறிய வடிவமைக்கப்பட்டு, 'சுற்றுச்சூழல் பாதிப்பு முன்மதிப்பீடு அறிவிக்கை' 10 ஆண்டுகளுக்கு முன் கொண்டு வரப்பட்டிருந்தது. தொழிற்சாலைகள் எளிதில் உரிமம் பெற வசதியாக, இந்த அறிவிக்கை மாற்றியமமைக்கப்பட்டது. பல கடற்கரையோர சூழல் அமைப்புகளை பாதுகாக்க உதவிகரமாக கடலோர ஒழுங்காற்றுச் சட்டம் இருந்தது. நாட்டின் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தக் கடற்கரைகளையே நம்பி உள்ளனர். வர்த்தக நடவடிக்கைகள் எளிதில் நடைபெற ஏற்ற வகையில், இந்த சட்டம் திருத்தியமைக்கப்பட்டது. நிலைத்த வளர்ச்சியை உறுதிப்படுத்தும் வகையில் நிறுவனங்கள் அமைத்திருந்த, மக்கள் பிரநிதிகளை இடம்பெற்றிருந்த 'சூழலியல் நுண்ணுணர்வு பகுதி குழுக்கள்' போன்றவற்றைக் கலைப்பதற்கு அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

அதேபோல பங்கேற்பு நடைமுறைகள் மீது சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் காட்டிய அலட்சியம் குறிப்பிடத்தக்கது. வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக ஆலோசனை வழங்க அமைக்கப்பட்டிருந்த நிபுணர் குழுக்களில் 'ஆமாம்சாமி போடுபவர்களே' (அதிலும் பலர் ஆண்கள்) நியமிக்கப்பட்டனர். 2004ம் ஆண்டு நடத்தப்பட்ட ஒர் அலசலில், ஆறு நிபுணர் குழுக்களில் இருந்த 64 உறுப்பினர்களில், வெறும் இரண்டு காட்டுயிர் நிபுணர்கள் மற்றும் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் மட்டுமே இடம்பிடித்திருந்தனர்.

தேசிய சுற்றுச்சூழல் கொள்கையை வரையறுப்பதற்கு நடத்தப்பட்ட ஆலோசனைகள் மற்றும் 'சுற்றுச்சூழல் பாதிப்பு முன்மதிப்பீடு அறிவிக்கையை மாற்றியமைக்க நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டங்கள் பெரும்பாலும் அரசுத் துறைகள் மற்றும் தனியார் நிறுவனங்களோடு நிறுத்திக் கொள்ளப்பட்டன. கண்துடைப்பு நடவடிக்கையாக சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பங்கெடுக்கச் செய்யப்பட்டன. தேசிய பல்லுயிரிய செயல் திட்டத்தை உருவாக்க, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் முன்பு தேசிய அளவில் செயல்படுத்திய திட்டத்தில் பங்கேற்பு நடைமுறைக்கு வழி இருந்தது. ஆனால் அமைச்சகம் தற்போது அந்தத் திட்டத்தை புதைத்துவிட்டது.

அதேநேரம், இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை அடையத் துடிக்கும் மத்திய அரசு, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தை பற்றி எந்தக் கவலையும் படவில்லை. இந்தியாவின் சுற்றுச்சூழலை காக்க வேண்டிய அடிப்படை பணியை அமைச்சகத்தின் பொறுப்பில் புதிதாக அமர்ந்துள்ளவர்கள் கையில் எடுப்பார்களா என்பது போகப்போகத்தான் தெரியும்.

புத்தாயிரம் ஆண்டின் இரண்டாவது பத்தாண்டுகளை நோக்கி நாம் நகர்ந்து வரும் வேளையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பைப் பொருத்தவரை இந்தியா பெருமைப்பட்டுக் கொள்ள ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா? முதல்கட்டமாகப் பார்க்கும்போது, வாய்ப்பு இருப்பதாகத் தோன்றவில்லை.

இந்தத் துறை கவனம் பெறத் தொடங்கி பல பத்தாண்டுகள் ஆகிவிட்ட போதிலும், நிலத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பது பற்றிய அடிப்படைத் திட்டம் நம் நாட்டில் இல்லை. அப்படி ஒரு திட்டம் இருந்தால், நீர்த்தேவை மற்றும் உணவுத்தேவையை பூர்த்தி செய்யும் பகுதிகளை பாதுகாக்க முடியும். நிலைத்த வளர்ச்சியை ஏற்படுத்த ஒரு திட்டம் தேவை என்று உலக நாடுகளிடம் இந்தியா ஒப்புக்கொண்டு 10 ஆண்டுகளுக்குப் பின்னும், அதை சுட்டிக்காட்டுவதற்கான அடையாள முறையோ, அளவீடுகளோ நம்மிடம் இல்லை. நாம் எந்த திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்பதில் தெளிவில்லை என்பதை இந்த அம்சம் உணர்த்துகிறது.

நம் நாட்டில் புவி வெப்பமடையும் வாயுக்கள் வெளியீடு குறைவதற்கான எந்த அடையாளமும் தென்படவில்லை. மேற்கிலுள்ள பன்னாட்டு நிறுவனங்கள் நம் மீது எந்த மாசுபாட்டைச் சுமத்தி வந்தனவோ, அதையோ டாடா போன்ற நம்முடைய பன்னாட்டு நிறுவனங்களும் பிற நாடுகளின் மீது சுமத்தி வருகின்றன. கனிமச் சுரங்கம் தோண்டுவதற்காக நிலத்தை வாங்குவது அல்லது அழிவை ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை நிறுவுவது போன்ற நடவடிக்கைகள் சமூக மற்றும் சூழலியல் ரீதியில் அழிவை ஏற்படுத்தும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பின்பும், இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வளவுக்கும், நம் மக்கள் தொகையில் பாதிக்கு மேற்பட்டோர் தங்களது அனைத்து தேவை களுக்கும் நேரடியாக இயற்கை வளங்களைச் சார்ந்துள்ளனர். தொழிற்சாலைகள் மற்றும் நகர்ப் புறங்கள் இயற்கை வளங்களை உறிஞ்சி வருவதால், அவற்றை சார்ந்திருப்போர் வாழ்க்கை நடத்த கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர். நம்பிக்கை அடையாளங்கள் இருந்தபோதும், நம்பிக்கை வற்றிவிடவில்லை. அழிவை ஏற்படுத்தும் வளர்ச்சி நடவடிக்கை களால் பாதிக்கப்படும் மக்கள் தெரிவிக்கும் எதிர்ப்பு, அதிகரித்து வருவது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. அவற்றில் சில: வர்த்தக மீன்பிடித்தல் மற்றும் மீன் பண்ணைகளுக்கு எதிராக பாரம்பரிய மீனவர்கள் வெளிப்படுத்தும் எதிர்ப்பு, சீர்குலைக் கப்படாத இயற்கைகாட்சிகளை அழிக்கும் ஆபத்தை விளைவிக்கும் பேரணைகளுக்கு எதிராக சிக்கிம் புத்தத்துறவிகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் தெரி விக்கும் எதிர்ப்பு, கோகோ கோலா தொழிற்சாலைகளை மூட வேண்டும் என்று கிராமமக்கள் வற்புறுத்துவது, சிறப்புப் பொருளாதார மண்டலம் எனும் புதிய பைத்தியக் காரத்தனத்துக்கு தங்கள் நிலங்களைத் தர மறுக்கும் விவசாயிகள் என்று பல நம்பிக்கை ஒளிக்கீற்றுகள் ஆங்காங்கு தென்படுகின்றன.

மற்றொரு நம்பிக்கை அமைதியான ஒன்று. மாற்றுகளை முன் வைக்கும் புரட்சியை உள் ளடக்கமாகக் கொண்டது: மகாராஷ்டிராவில் பரவிவரும் இயற்கை வேளாண் வலையமைப்புகள், ராஜஸ்தானில் உள்ள ஆல்வாரில் வறட்சி தாக்கக்கூடிய பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட மையப்படுத்தப்படாத நீர் சேகரிப்புத் திட்டங்கள், ஒரிசா, உத்தராகண்ட், மகாராஷ்டிரா, நாகாலாந்து மற்றும் பல மாநிலங்களின் ஆயிரக்கணக்கான கிராமங்களில் தன்னார் வமாக நடைபெறும் காடு மற்றும் காட்டுயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் முக்கியமானவை.

இவைதவிர, சில தனியார் நிறுவனங்கள் வேறு முறைகளை கையாண்டு வியாபாரத்தை நடத்தத் தொடங்கியுள்ளன. அதேநேரம், 'தனியார் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு' என்ற பெயரில் ஊதிப் பெருக்கப்பட்ட நடவடிக்கைகள், பெரும்பாலும் கண் துடைப்புத் தன்மை கொண்டவை.

நம்மை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கும் காலநிலை மாற்றப் பிரச்சினையைக்கூட, நம்பிக்கை அளிக்கும் ஒன்றாகப் பார்க்க வாய்ப்பு உள்ளது. பிரதமர் உண்மையிலேயே அக்கறையுடன் பேசினார் என்று வைத்துக் கொண்டால், பொது போக்குவரத்து மற்றும் எரிசக்தி சேமிப்பு போன்ற நடவடிக்கைகள் ஊக்கப்படுத்தப் படும். அதேநேரம் உலக அளவிலான தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றால், எல்லாம் மூழ்கிப்போக நேரிடும் என்பதை இந்தியாவின் மூலதனச் சந்தை உணர வேண்டும்.

தோல்விகள் பலவற்றைச் சந்தித்து இருந்தாலும், தொந்தரவுக்கு உள்ளாகியுள்ள பூவுலகின் பிரச்சினைகளுக்கு தீர்வு உருவாக வாய்ப்புள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. அறிவு சார்ந்த பன்னெடுங்காலப் பாரம்பரியம் கொண்ட பல சமூகங்கள் இன்னமும் நம் நாட்டில் வாழ்ந்து வருகின்றன. நவீன காலத்திய புத்தாக்கச் சிந்தனை கொண்ட சிறந்த சிந்தனையாளர்கள் மற்றும் செயல்பாட்டாளர்கள் நம் நாட்டில் உள்ளனர். உண்மையிலேயே புரட்சிகரமான தொழில்நுட்பங்கள் மற்றும் நிறுவனங்களை அவர்கள் அமைத்துள்ளனர்.

ஒடுக்குமுறைகளை சுமத்தும் வலிமையான சக்திகளைக்கூட அசைக்கக்கூடிய, அமைதியான வெகுமக்கள் இயக்கங்களை ஒருங்கிணைக்கும் திறன் நம்மிடம் உள்ளது. அதிகாரம் பரவலாக்கப்பட்ட நிர்வாக அமைப்பு தொடர்பாக நாம் மேற்கொண்ட பரிசோதனைகள் எதிர்காலத்திலும் பலனளிக்கக் கூடியவையே. இன்னும் சில பத்தாண்டுகளில் விடுதலை நுாற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், சூழலியல் மற்றும் சமூகப்புரட்சியை ஒருங்கிணைக்கும் தொலைநோக்குப் பார்வை நமக்குக் கிடைக்கும். இயற்கையுடன் இயைந்த வாழ்க்கையை அந்தப் பார்வை மீட்டெடுக்கும் என்று நம்புவோம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com