சூடாகும் பூவுலகு
ஜே. ஜோ பிரகாஷ்
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் புவி வெப்பம், பருவநிலை மாற்றங்கள் ஒவ்வொரு நாட்டையும் புரட்டி போட தொடங்கி விட்டன. வங்கதேசம் போன்ற நாடுகளில் பருவநிலை மாற்றங்களால் மக்கள் வாழ வழியின்றி அகதி களாக இடம் பெயர்ந்து கொண்டு இருக்கின்றனர். ஆண்டுக்காண்டு மழை, வெயில், காற்று என எல்லாமே அளவுக்கு மீறி வருகிறது.
அதிகரித்து வரும் பருவ நிலை பாதிப்புகளை கட்டுப்படுத்தி, புவி வெப்பத்தை குறைக்காவிட்டால் அதிக வறட்சி காரணமாக 2050-ம் ஆண்டில் சுமார் 20 லட்சம் பேர் அருந்த தண்ணீர் இன்றி செத்து மடிவார்கள் என 600-க்கு மேற்பட்ட விஞ்ஞானிகளின் கூட்டமைப்பு கடுமையாக எச்சரித்துள்ளது.
அதிக வெப்பம் காரணமாக பனிமலைகளும், பனிபாறை களும் உருகி அதன் காரணமாக சுத்த நீர் கடலில் கலந்து உலகெங்கிலும் கடல் நீர் மட்டம் அதிகரிக்கும் என்றும் அதன் விளைவாக கடலோர பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ள தாகவும் அவர்கள் எச்சரித்து உள்ளார்கள்.
புவி வெப்பம் ஏற்பட காரணமே பசுமை இல்ல வாயுக்கள் என்றழைக்கபடுகிற கரியமில வாயு, மீதேன் போன்ற வாயுக்கள் அதிக அளவில் வளி மண்டலத்தில் பரவிவிட்டது தான். கடந்த 1973-ம் ஆண்டுக்கு பிறகு உலகெங்கிலும் தொழிற்சாலைகளும் வாகனங்களும் அதிகரித்ததன் விளைவாக பசுமை இல்ல வாயுக்களும் அதிகரித்தன, கடந்த 100 ஆண்டுகளில் கரியமில வாயு 30% மும், நைட்ரஸ் ஆக்ஸைடு 15% மும், மீதேன் 200% மும் அதிகரித்துள்ளன.
இதன் விளைவாக பூமியின் வெப்பநிலை கொஞ்சம் கொஞ்ச மாக அதிகரித்து வருகிறது. கடந்த 100 ஆண்டுகளில் ஒரு டிகிரி பாரன்கீட் அளவுக்கு பூமியின் வெப்பநிலை அதிக ரித்து உள்ளது. இன்றைய நிலை தொடர்ந்தால் 2100-ம் ஆண்டு பூமியின் வெப்பநிலை தற்போதைய அளவை விட 2-10 பாரன்கீட் அளவுக்கு அதிகரிக்கும்.
இதனால், உலகிலேயே மிக உயரமான மலை என்ற புகழுக்குரிய இமயமலைக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இமயமலைப்பகுதியில் மூன்று இடங்களில் சீன விஞ்ஞானிகள் நீண்ட துளை போட்டு ஆய்வு செய்ததில் அந்த பனிபாறைகளில் வாயு சேர்வதாகவும் கோடை காலத்தில் அந்த பனி பாறைகளின் வேகமாக உருகி வருவதாகவும் கண்டு அறிவித்து உள்ளனர். துருவப்பகுதிகளான ஆர்டிக், அன்டார்டிக் பனி பகுதிகள் ஏற்கனவே உருக தொடங்கிவிட்டன.
கரியமிலவாயு அதிகமாக வெளியேறுவதற்கு முக்கிய காரணம் அனல்மின் நிலையங் களும், பெட்ரோல், டீசல் போன்றவற்றின் பயன்பாடும் தான். பூமி வெப்பமடைதலை குறைக்க மரபு சாரா ஆற்றல் மூலம் மின்சாரம் தயாரிக்க வேண்டும். பெட்ரோல், டீசல் பயன்பாடுகளை குறைக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
காற்று, சூரிய ஆற்றல் போன்ற இயற்கை பொருட்களை கொண்டு ஆற்றலை அதிக அளவில் தயார் செய்து மக்களின் ஆற்றல் தேவையை பூர்த்தி செய்வதன் மூலம் இந்தியா உலகத்துக்கு ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும்.
இதனை ஒருசில ஆண்டுகளில் நிறைவேற்றும் வகையில் திட்டமிட்டு செயல்பட வேண்டும். எந்தவொரு நிர்பந்தத்திற்கும் அடி பணியாமல், பாகுபாடின்றி செயல்பட்டு ஐ.நா. சபையானது இச்சிக்கல்களை எதிர்கொள்ள உலகிற்கு வழிகாட்டவேண்டும்.
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|