Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Thendral
Puthiya ThendralPuthiya Thendral Logo
ஜூலை 2007

ஆண்களுக்கு ஓட்டுப்போடாதே!: ஓவியா
சந்திப்பு: ஸ்ரீதேவி, தினகரன்


மதுரை அம்சவல்லி ஹோட்டலில் தந்தை பெரியாருடைய கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அய்யா வரும்வரையில் அங்கே ஒரு குட்டிப் பெண் 'கடவுள் இல்லை' என்கிற கருத்தை அழுத்தம் திருத்தமாக சொல்லிக் கொண்டிருந்தார். அவரிடம் 'கடவுள் இல்லைன் னு எப்படி சொல்றே?' என்று பெரியவர்கள் மடக்கி மடக்கி கேட்க, சளைக்காமல் அந்தக் குழந்தை பதில் சொல்லிக் கொண்டிருந்தது.

கூட்டத்துக்காக வந்த பெரியாரிடம் அந்தக் குழந்தை யை அறிமுகப்படுத்த, அய்யாவுக்கு ஒரே சந்தோஷம். தனது கடவள் மறுப்பு வாசகத்தை அந்த குழந்தையை சொல்லச் சொல்லிக் கேட்டு பூரித்தார். தன்னுடன் நிற்கவைத்து போட்டோவும் எடுத்துக் கொண்டார். அந்தக் குழந்தைதான் ஓவியா.

இன்று ஓவியாவுக்கு 45 வயது. இவரது துணைவர் வள்ளிநாயகம் கடந்த மே 29 அன்று இயற்கை எய்திவிட்டார். திராவிட இயக்கத்தில் இருந்து பின் புரட்சிகர எண்ணங்களுடன் பல்வேறு தளங்களுக்கு மாறி தனது இறுதிக் காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றை மீட்கும் நோக்குடன் எழுதிக் கொண்டிருந்த அவரது இறப்பு, மற்ற சமூக ஆர்வலர்கள் போலவே ஓவியாவுக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. "இதிலிருந்து மீள எனக்கு அதிக சக்தி வேண்டும்" என்று குரல் கம்ம சொல்கிறார். சொந்த உணர்ச்சிகளுக்கு போராளிகள் என்றுமே முக்கியத்துவம் தருவதில்லை என்பதற்கு ஓவியா ஒரு உதாரணம். துணைவர் காலமான சூழ்நிலையிலும் பேட்டிக்காக நேரம் ஒதுக்கி பேச ஆரம்பித்தார்.

"சொந்த ஊர் அருப்புக் கோட்டை, அப்பா ஆசிரியரா இருந்தாரு. 6 வயசுலேந்து பாட்டிதான் எனக்கு எல்லாமா இருந்தாங்க. அந்தக் காலத்துலயே அவங்க கலப்புத் திருமணம் செய்துகிட்டவங்க. 'நான் நாத்திகவாதி'னு சொல்லிக்கறதுல பாட்டிக்கு அப்படி ஒரு பெருமை. அப்படிப்பட்ட பாட்டிதான் என்னை வளர்த்தாங்க. அதனால எனக்குள்ள இயல்பாகவே திராவிட இயக்க கருத்துக்கள் ஆழமா வேரூன்றிடுச்சு.

தொடர்ந்து அரசியல்லயும். மேடைப் பேச்சுலயும் ஈடுபட்ட தால படிப்பு மேல ஆர்வம் குறைவாகத்தான் இருந்தது. பாலிடெக்னிக் படிக்க சென்னை வந்தேன். ஆசிரியர் வீரமணி தான் எனக்கு லோக்கல் கார்டியனா இருந்தாரு. முதல் ஆண்டு படிக்கறப்ப தாத்தா இறந்துட்டாரு. அது வரைக்கும் சுதந்திரமா இயக்க செயல்பாடு கள்ல பங்கெடுத்துக்கிட்டிருந்த என் மேல குடும்பத்தோட தலையீடு ஆரம்பமாச்சு.

அப்பா படிப்பை நிறுத்தச் சொன்னாரு. எனக்கு அதுல உடன்பாடில்லை. வீட்டை விட்டு வெளில வந்தேன். பாட்டியும் என்கூடவே வந்துட்டாங்க. இருந்த பணத்தை வச்சு சின்ன வீட்ல வாழ்ந்தோம். ரொம்ப வேதனையான மன நிலைல இருந்த காலகட்டத்துல வள்ளிநாயகம் அறிமுகமானாரு. நட்பு காதலா மாறுச்சு. படிப்பு முடிஞ்சதும் திருமணம் செய்து கிட்டோம். நான் குடும்பப் பொறுப்பை ஏத்துகிட்டேன்.

13 வயசுல பொது வாழ்க்கைக்கு வந்தேன். அதுல கிடைச்ச பெருமிதம், சந்தோ ஷம்னு எனக்குள்ள நிறைய இருந்தது. ஆனா, குடும்பம் மட்டும்னு சுழல ஆரம்பிச்சதும் ஏமாற்றத்தையும், வெறுமையையும் சந்திச்சேன். 10 வருஷங்கள் வள்ளிநாயகத்தை சார்ந்தே என் வாழ்க்கை இருந்துடுச்சு. வேலை செய்யுறதும் சம்பாதிக்கிறதும்தான் வாழ்க்கைங்கற நிலை. என்னோட கட்டாயத்துனால அவர் செஞ்ச சில வேலைகளும் கடன்ல முடிஞ்சது. அவர் தன் சொந்த ஊருக்கு போக முடிவு செஞ்சுட்டார். நான் நாகர் கோயில் 'ஐஎஸ்ஆர்ஓ' ல வேலைக்கு சேர்ந்தேன். மாக்சிம் கார்கியோட 'வழித்துணைவன்' கதையை அப்ப படிச்சேன். அது என்னை திரும்பிப் பார்க்க வச்சது. பெண்களுக்காக தனி அரசியல் இயக்கம் உருவாக்கப்படணும்னு முடிவு செஞ்சேன்.

பல முயற்சிகள் செஞ்சு பார்த்துட்டு அலுவலக அளவுல 'மகளிர் விடுதலை மன்ற'த்தை தொடங்கி 7 வருஷங்களுக்கு தொடர்ந்து 'புதிய குரல்' பத்திரிகையை கொண்டு வந்தோம். பரவலா அதுக்கு ஆதரவு கிடைச்சது. அப்ப ஒரு பெண்ணுக்கு டிரைவர் வேலை கொடுக்கப்போறாங்கனு ஒரு செய்தி பார்த்தேன். உடனே அந்தப் பெண்ணை நேர்ல பார்த்து பேட்டி எடுக்கப் போனேன்.

அந்தம்மா பேர் வசந்த குமாரி. ஆனா, அவங்களுக்கு வேலை கிடைக்கலை. பல காரணங்கள் சொன்னாங்க. அவங்களுக்கு டிரைவர் வேலை கிடைக்க மறியல், ஊர்வலம்னு தொடர்ந்து போராடினோம். சென்னைல இது தொடர்பா வழக்குப் போட்டோம். சட்டரீதியா மறுக்க வழியில்லாததால் வேலைக்கான உத்தரவைக் கொடுத்தாங்க.

மத எதிர்ப்பு, இந்து கலாச்சார எதிர்ப்பு, பால் சார்ந்த வேலைப்பிரிவினைகளை ஒழித்தல், பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு... இதெல்லாம்தான் எங்கள் அமைப்புக்கான அடிப்படை. இதை முன்வச்சு 'தமிழின பெண்கள் விடுதலை இயக்கம்' தொடங்கினோம். அரசு வேலைல இருந்து கிட்டே இது மாரிரியான போராட்டங்கள்ல ஈடுபடறுதுல சில சங்கடங்கள் இருக்கு. அதனால விருப்ப ஓய்வு வாங்கி கம்பெனி செக்கரட்டரியேட் படிச்சேன். இப்ப பல தனியார் கம்பெனிகளுக்கு வேலை பாக்கறேன்.

அரசியல் அதிகாரத்துல கண்டிப்பா பெண்களுக்கு இட ஒதுக்கீடு வேணும். அதுக்காக 33 சதவிகித இட ஒதுக்கீடு கேட்டு ஆண்கள் நடத்தற பாராளுமன்றத்துல போராடிட்டு இருக்கோம். இன்னும் தீர்வு கிடைக்கலை. இதுக்கு ஒரே வழிதான் இருக்கு. எந்தப் பெண்ணும் எந்தக் கட்சியை சேர்ந்த ஆண் வேட்பாளருக்கும் ஓட்டுப் போடக்கூடாது. பெண்களை வேட்பாளர்களா நிறுத்துற இடத்துல மட்டுமே ஓட்டுப் போடுவோம்னு முடிவெடுக்கணும். அப்பதான் இந்த மசோதா நிறைவேறும்" என்கிறார் ஓவியா.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com