Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Thendral
Puthiya ThendralPuthiya Thendral Logo
ஜூலை 2007

மன்னிப்பால் மானுடம் உயர்த்துவோம் - விவேக் பின்டோ
தமிழில்: ஜீவா

அக்டோபர் 7- சார்லஸ் கார்ல் ராபர்டின் கல்லறையில் பிரார்த்தனை. ரெவாரிண்ட் ப்ரூஸ் போர்டர் கண்ணீருடன் இறுதி மரியாதை செலுத்துகிறார். சுற்றிச் சிறுகூட்டம். பெரும்பான்மையினர் அவருக்கு உறவற்ற 'அமிஷ்' இனத்தவர்.

"இதுதான் அன்பு. இதுதான் ஏசு சொன்ன மன்னிப்பு. அவர்கள் இக்குடும்பத்திடம் காட்டிய அன்பும், மன்னிப்பும் என்னை உலுக்கியது. கதறி அழச் செய்தது" என்று ரெவரெண்ட் கூறினார்.

யார் அந்த ராபர்ட்ஸ்? யார் அந்த அமிஷ்கள்?

2006 அக்டோபர் 2- திங்கள் கிழமை பென்சில்வேனியாவின் நிக்கல் மைனஸின் அந்தச் சிறிய பள்ளி அமைதி யாக நடந்து கொண்டிருந்தது. 32 வயது மனிதன் ஒருவன் கையில் துப்பாக்கியுடன் வெறிகொண்டவனாக உள்ளே நுழைகிறான். கையில் கிடைத்த குழந்தைகளையெல்லாம் கட்டிப்போட்டு சுவரோடு நிறுத்திக் கண்மூடித் தனமாகச் சுட்டுத் தள்ளுகிறான். கடைசியாகத் தன்னையும் சுட்டுக்கொண்டு சாகிறான். ஐந்து குழந்தைகள் செத்தார்கள். ஐந்துபேர் படுகாயமடைந்தனர். குழந்தைகளைச் சுட்டுக் கொன்றவன் சார்லஸ் கார்ல் ராபர்ட்ஸ். இறந்த குழந்தைகள் அனைவரும் அமிஷ் இனக் குழந்தைகள்.

ராபர்ட்ஸின் இறுதிப் பிரார்த்தனையில் பெருமளவில் கலந்து கொண்டவர்கள் 'அமிஷ்' இன மக்களே.

அவர்கள் பிரியும் முன் தனியாக நின்ற ராபர்ட்சின் மனைவியைக் கண்டு "எங்கள் அமிஷில் சேர்ந்து கொள்ள அழைக்கிறோம். வாருங்கள்" என்று அழைப்பு விடுத்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கும், மரணங்களுக்கும் கலங்காத துப்பாக்கிக் கலாச்சார நாடு அமெரிக்கா. வன்முறைகள், மரணமெல்லாம் செய்தித்தாளகளின் ஓரத்தில் புதைந்து போகும் சின்ன விஷயங்கள். ஆனால் அந்த கடைக்கோடி கிராமத்தில் நிகழ்ந்த படுகொலையும், கண்ணீரின் ஈரம் காயும் முன்பே, தங்கள் பிள்ளைகளைப் பறிகொடுத்த அமிஷ் இன மக்கள், கொன்றவனின் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டது, கல்நெஞ்ச அமெரிக்காவையும் கலங்கச் செய்துவிட்டது. இத்தனை வன்முறைகள் நடந்தாலும் எவரும் துப்பாக்கி கட்டுப் பாடின்றி வைத்துக் கொள்ளலாம் என்ற சுதந்திரத்தை இழக்க அவர்கள் தயாராக இல்லை. ஆயுத விற்பனை அதிபர்களுக்கு, அரசு மீது அத்தனை ஆளுமை.

யார் அந்த 'அமிஷ்' இனமக்கள்? கிறிஸ்துவப் பிரிவில் ஒருவர் தான் இவர்கள். அமெரிக்க தேவாலயக் கிறிஸ்துவர்களிடமிருந்து பெரிதும் மாறுபட்டவர்கள். இவர்கள் ராணுவத்தில் பணியேற்க மாட்டார்கள். ஆயுதங்கள் ஏந்தமாட்டார்கள். அரசு உதவிகளைப் பெறமாட்டார்கள். நவீன வாழ்வின் ஆடம்பரங்கள் அனைத்தையும் புறக்கணிப்பவர்கள். மின்சாரம், தொலைக் காட்சி, வானொலி, பாடல், வீடியோ விளையாட்டு, செல்போன் எதையும் ஏற்காதவர்கள். தானியங்களையும், பாலையும் மட்டும் உண்ணுபவர்கள். எளிமையும், புனிதமும் நிறைந்த வாழ்வு அவர்களது.

தமது மதம் இதயம் கொண்டது உயிர்த்துடிப்புள்ளது என நம்புபவர்கள். மன்னிப்பு அவர்களுள் வேர் விட்டு வளர்வது. கடவுளின் சித்தத்திற்குத் தம்மை அர்பணித்துக் கொண்டவர்கள். அதனால் தான் தமது பிள்ளைகள் சிந்திய ரத்தம் உலரும் முன், கொன்றவனின் குடும்ப துயரத்தில் பங்கேற்று, அவனை மன்னித்தார்கள்.

வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது என நம்புபவர்கள். வலது கன்னத்தில் ஒருவன் அறைந்தால், இடது கன்னத்தைத் திருப்பிக்காட்டு என்ற ஏசுவின் உண்மை சீடர்கள். ராபர்ட்ஸ் குழந்தைகளைக் கட்டிப்போட்டுச் சுடும் முன் மரியன் பிஷர் என்ற 13 வயதுச் சிறுமி "என்னைச் சுட்டுக் கொல். மற்றவர்களை விட்டு விடு" என்று மன்றாடினாளாம். அரும்பிலும் பதிந்தது அமிஷ் அன்பு.

அந்த அபூர்வமக்களின் வாழ்வு பற்றி 'கீமிஜிழிணிஷிஷி' எனும் ஹாலிவுட் திரைப்படம் 1985ல் தயாரிக்கப்பட்டது. (பேராசிரியர் டோனாலி க்ரேபில்) அவர்களின் வாழ்வு பற்றிப் பல நூல்களை எழுதியுள்ளார். ஏசுவை வாழ்க்கையாக்கும் இவர்கள். "கடவுளிடம் விவாதம் செய்யாதே, அவர் தருவதை ஏற்றுக்கொள்" என ஏற்பவர்கள்.

"கண்ணுக்குக் கண் எனும் காட்டுமிராண்டி கால நீதி உலகையே குருடாக்கி விடும்" என்ற மகாத்மாவின் வாசகத்தின் வாழும் வாரிசுகள் இவர்கள்.

வன்முறையே வாழ்வாக, ஆயுதங்கள் அணிகலன்களாக மாறிவரும் உலகில், அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, மனிதகுலம் முழுமைக்கும் வாழும் அன்பு வழிகாட்டும் அமிஷ்களை நம்முள் பதிப்போம். மன்னிப்பால் மனிதகுலத்தை மாண்புறச் செய்வோம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com