Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Thendral
Puthiya ThendralPuthiya Thendral Logo
ஜூலை 2007

பண்ணி
இரா.அரிகரசுதன்


சிமெண்ட் படிந்திருந்த காலை சவுரிபோட்டு நல்லா தேய்ச்சுட்டு இருந்தேன். பக்கத்தில் அசோகண்ணன் என்ன பாத்து சிரிச்சுக்கிட்டே, தொட்டில இருந்து பெயிண்ட் டப்பாவால தண்ணீரைக் கோரி தலையோடு ஊத்திக்கிட்டிருந்தார்.

அப்பந்தான் கழுவிபோட்ட சிலிப்பர் செருப்பு என்னப் பாத்து வெள்ளையாய் சிரிச்சுட்டு கெடக்கு. செருப்புல சிமெண்டுக்க அடையாளமே தெரியல.

என்கால சவுரியப்போட்டு நல்லா அழுத்தி தேய்ச்சேன். கால்ல இருந்த சிமெண்ட் அப்படியே உருண்டு சவுரியோட வந்துச்சு. திரும்ப திரும்ப போட்டு தேய்க்க தேய்க்க கால் காந்த ஆரம்பிச்சுட்டுது. வலிச்சதால டக்குண்ணு தேய்கத நிப்பாட்டினேன்.

“போதும் டேய் ... காலை பிச்சி எடுத்துறாத...” சிரிச்சுக்கிட்டே அசோகண்ணன் சொன்னாரு. எனக்கு வெட்கமாயிட்டு. நானும் இன்னொரு பெயிண்ட் டப்பாவ தூக்கி கிட்டு குளிக்க ஆரம்பிச்சேன்.

தண்ணி மேல பட்டவுடனேயே அப்பாடா என்ன சுகமா இருக்கு.. டப்பால கோரி கோரி தண்ணிய தலையோட ஊத்த ஆரம்பித்தேன்.

“தொட்டி தண்ணிய எல்லாத்தையும் தீத்துறாத, இன்னும் கையாள் பையனுவ குளிக்கணும்டே ...” சொல்லிக் கொண்டே அசோகண்ணன் சாரத்தை எடுத்து உடுத்துக்கிட்டு கட்டியிருந்த துண்ட கழத்தி, புளிஞ்சி, உதறி தலையில போட்டு துவர்த்திட்டே நடந்து போனாரு.

அசோகண்ணன் கொத்தனாரு, என்னோட சேத்து ஆறு கையாளுவ. அதில மூணுபேருக்கு என் வயசுதானிருக்கும். இதில படிச்சிக்கிட்டே பரிட்சை லீவுல வேலைக்கு வந்திருக்கிறது நான் மட்டுந்தான். ஒவ்வொரு லீவுலயும் நான் இவங்க கூடாலயே கொத்த வேலைக்கு வந்துடுவேன். இப்பம் வேலைக்கு வந்திருக்கது வள்ளியூருக்கு. ஒரு ஆஸ்பத்திரி வேலைக்கு. ஏற்கனவே ஒரு மாடி உள்ள ஆஸ்பத்திரிதான் இது. மேல இரண்டாவது மாடி கட்டதுக்குதான் வந்திருக்கோம். கீழ ஆஸ்பத்திரி நடந்துட்டுதான் இருக்குவு.

ஒன்பதாம் வகுப்பு பரீட்சை லீவுக்கும் இப்படித்தான் தோவாளை பக்கம் மெயின் ரோட்டுல இருக்க கூடிய பாலம் ஒண்ணு கட்டப் போயிருந்தேன். முதல் முதல்ல அப்பந்தான் கையாள் வேலைக்கு ரொம்ப தூரம் தாண்டி வந்தது. வெயிலு தாங்க முடியாம சூடு பிடுச்சிடுச்சி. ஒண்ணுக்கு போற இடத்தில ஒரே காந்தல் தாங்க முடியல சொட்டு சொட்டா ஒண்ணுக்கு போச்சு.

புளியக் கரைச்சு கரைச்சு குடிக்க தந்தாங்க. எங்க மாமாதான் பெரிய கொத்தனாரு. அப்பம் இந்த அசோகன் அண்ணனும் கொத்தனாருதான்.

எலுமிச்சம் பழத்த கடிச்சு உறியச் சொல்லி அசோகண்ணன் எங்கையில தந்தாரு. அதுக்க பெறவு யாருமே என்னிய அண்ணைக்கு வேலை செய்ய உடல. சாயங்காலம் எல்லோரும் வேல முடிஞ்சு கரையேரும் போது அசோகண்ணன் சொன்னாரு, “கொத்தவேல ஒண்ணும் ஈசி கெடையாது ரொம்ப கஸ்டம், பழகிச்சுண்ணு வைச்சுக்க அதுக்கப் பெறவு அது ஈசிதான். பெரியப் பிரச்சனை இல்லை. ஆனா நீ மட்டும் இந்த வேலையைப் பழகாத”ண்ணு ... சொல்லிட்டு நான் திரும்பி பாக்கதுக்க முன்னால டக்குண்ணு போயிட்டாரு. ஏன் பழகாதண்ணு சொல்றாருண்ணு எனக்கு புரியல.

“லேய்... என்ன குளிக்காம கனவு கண்டுட்டு இருக்க, சீக்கிரம் கீழப்போ... அசோகண்ணன் கூப்பிடுறாருண்ணு”ட்டு ரமேஷ் என்ன ஒரு தட்டு தட்டினான்.

அவன் என்கூட வேலப்பாக்ககூடிய இன்னொரு கையாளு. மட மடண்ணு குளிச்சுக்கிட்டு துணிமாத்திட்டு அந்த மொட்ட மாடிய விட்டு கீழ இறங்கி போனேன். வேலைக்காக லாரியில அடிச்சுப் போட்டிருந்த அந்த மணல்ல சாய்ஞ்சு இருந்து அசோகண்ணன் மத்த கையாளுங்ககூட பேசிட்டு இருந்தாரு.

என்னப் பாத்தவுடனேயே...

“வாடேய் இந்த மணல்ல இரு. வாளிவுட்டு வெளையாடத் தெரியுமா உனக்கு?” என்றார்.

“தெரியும்ணே...“ “பரவாயில்லியே இப்ப விடுவமா... ?”

“வேண்டாம்ணே... இப்பதான குளிச்சிட்டு வந்திருக்கோம். கையெல்லாம் மணல் ஆகும்ணே”.

“அதுவும் சரிதான். சரி கருக்கல் கழியது வரைக்கும் அளிப்பாங்கதையாவது சொல்லுங்க. என்னவோ தெரியல இண்ணைக்கு நேரமே பசிக்குது. சமையலுக்கு நமக்குண்ணு ஒருத்தன் வந்து வாச்சிருக்கான் ஒண்ணும் ஒழுங்காச் செய்யத் தெரியாது. என்னத்தப் போட்டு மத்தியானம் சமைச்சு வைச்சானோ தெரியல இரண்டு தடவ ஒடங்காட்டுக்குள்ள வேற ஒதுங்கியாச்சு. நைட்டு திங்க கடைக்கு போனாதான் தப்ப முடியும்”.

“வந்திருக்கது ஆஸ்பிட்டலுக்கு. ஆனா என்னச் செய்ய? பத்துபேரு தங்கி வேலை செய்றானுவளே, அவனுவளுக்கு ஒரு கக்கூசாது பயன்படுத்த கொடுப்போம்ங்கிற அக்கறை இந்த டாக்டருக்கு இருக்கா?

ஒடங்காட்டுக்குள்ளதான் அவசரத்துக்கு ஒதுங்க வேண்டியிருக்கு. அதிகம் படிச்சாலே இப்படிதான் போலயிருக்கு அடுத்தவன் எக்கேடு கெட்டாலும் சரி நாம மட்டும் வாழ்ந்தாபோதும்ணு திரியானுவ. டேய் நீ ஏண்டே சிரிக்கா. நான் பேசது காமடியா இருக்கோ... ?” என்றார்.

பக்கத்தில வந்திருந்த ரமேஷ்தான் சிரிச்சிட்டிருந்தான். அவனைப் பாத்துதான் அசோகண்ணன் அப்படி கேட்டார். கேட்ட கேள்வியில கொஞ்சம் வேதனை கலந்திருக்கத்தான் செய்தது.

என்னைப் பாத்து நமட்டுச் சிரிப்போட ரமேஷ் அசோகண்ணட்ட,

“இண்ணைக்கு காலையில ஒடங்காட்டுக்குள்ள நடந்த கதை தெரியுமா உங்களுக்கு?”ண்ணுட்டு நடந்தத சொல்ல ஆரம்பித்தான்.

“லேய் உனக்கு மண்டையில எதாவது இருக்கா அதைபோய் இங்கச் சொல்லிட்டிருக்கிறியே”. கோபத்தோட ரமேஷைப் பாத்தேன்.

“நீ ஏண்டே சத்தம்போடா அவன் சொல்லட்டும். என்னடே சொல்லு அதையும்தான் கேப்போம் “ அசோகண்ணன் என்னிய அதட்டினாரு.

“அவன் என்னச் சொல்ல நானே சொல்றேன், அந்த கேவலத்த”.

“காலையில வெளிக்கு போகதுக்காக ஒடங்காட்டுக்குள்ள ஒதுங்கினேன். திடீருண்ணு ரெண்டு பண்ணிங்க மலத்த திங்க சண்டைபோட்டுக்கிட்டு ஓடி வந்துச்சு. சத்தம் கேட்டு திரும்பி பாத்த நான் அரண்டுபோய்ட்டேன். இரண்டும் உறுமிக்கிட்டே ஒண்ணை ஒண்ணு முட்டி மோதிக்கிட்டு மலத்த திங்க ஆரம்பிச்சி. அவ்வளவு பெரிய பண்ணிய நான் அதுவரைக்கும் பாத்தது கிடையாது. அதுவும் அந்த உறுமல் கேட்டு ரொம்பவே பயந்துட்டேன். உட்டாபோதுண்டா சாமிண்ணு இருந்தது பாதி இருக்காதது பாதிண்ணு அலறி அடிச்சு ஒடிவந்தேன். என்ன பாத்துட்டு இவனுவ ஒரே சிரிப்பா சிரிச்சானுவ.

“ஏற்கனவே நெறைய தடவ சொல்லி சொல்லி சிரிச்சிட்டாணுவ. இப்ப திரும்பவும் ஆரம்பிக்கான்” ஒருவித அருவருப்போடேயே நான் சொல்லி முடிச்சேன்.

“அதுல்லண்ணே... இவன் ஓடிவரும்போது இவனுக்க மூஞ்சியப் பாக்கணுமே சாகப்போறவனப் போல. ஒரு பண்ணிக்கு போய் இப்படி ஓடி வாரானேண்டுதான் அப்படிசிரிச்சோம். “சொல்லிவிட்டு திரும்பவும் சிரிக்க ஆரம்பிச்சான் ரமேஷ். கூடவே மத்த கையாளுவளும் அசோகண்ணணும் சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க.

இது எல்லாமே அந்த ஆஸ்பத்திரி முன்னால கிடந்த மணல் கூட்டத்துலதான் நடந்தது. சூரியன் தாந்து இருட்ட வேற ஆரம்பிச்சுட்டிருந்தது. என்ன பாக்க பாக்க எல்லாருக்கும் சிரிப்பு கூடதான் செஞ்சதே தவிர குறையல. எனக்கு ஒருமாதிரி ஆயிட்டுது.

“ஐயோ.. என் புள்ளய பாம்பு கடிச்சிட்டே காப்பாத்துங்க, டாக்டரைய்யா... நர்சம்மா....”

திடீர்ணு கேட்ட அலறல்ல நாங்க பதறி போயிட்டோம். டக்குண்ணு எந்திரிச்சி ஆஸ்பிட்டல் வாசல்ல வந்து நின்ன மாட்டுவண்டிய பாத்து போனோம்.

மாட்டுவண்டியில ஒருத்தன் மலந்து கிடந்திருந்தான் வாய்ல நுரையோட 25 வயசுதானிருக்கும் அவனுக்கு. ஒரு வயசான அம்மா வண்டியிலயிருந்தே கத்திட்டு இருக்காங்க. “ஏ.. நர்சம்மா சீக்கிரம் வாங்கம்மா என் புள்ளய பாம்பு கடிச்சிடுச்சும்மா சீக்கிரம் வாங்க ஐயோ ஆண்டவா... சொள்ளமாடா ஒனக்கு என்னப்பா கொற வைச்சேன்....”

எங்கயிருந்துதான் வந்தாங்களோ தெரியாது கம்பவுண்டரும் நர்சுகளும் கையில ஸ்டெச்சரோட. டக்குண்ணு வண்டியில கிடந்த அந்த ஆளை அப்படியே தூக்கி ஸ்டெச்சருல வைச்சு தூக்கிட்டு ஆஸ்பத்திரிக்குள்ள ஓடினாங்க.

இன்னொரு நர்சு அந்த அம்மாட்ட. “சத்தம் போடாதீங்க. உங்களுக்கு எந்த ஊரு. பாம்பு கடிபட்ட ஆளு உங்களுக்கு யாருண்ணு” ஒரு அதட்டலோட கேட்டாங்க.

“என் புள்ளதாங்க அது. பக்கத்து ஊரு மலை பொத்தைதாமா எங்க இடம். வேலைக்கு போய்ட்டு வந்து கொஞ்சம் காத்தாட குடிசை முத்ததுல அசந்து போய் படுத்துக் கிடந்தான். பாழா போன விதி ரெண்டு பாம்புகளா விளையாடிட்டு கெடந்திருக்கு.

எப்படியோ இவனுக்க பக்கத்துல வந்து கிடந்திருக்குதுவ. இவன் புரண்டு படுத்திருக்கான் நெஞ்சுக்கடியில ஒரு பாம்பு மாட்டிகிட்டு. நெஞ்சிய அப்படியே கடிச்சி பிச்சி எடுத்திருச்சு. பாவி மவன இப்படியா கடிக்கணும்?

புள்ள போட்டச் சத்தத்துல ஓடிவந்து பாத்தா ரெண்டு பாம்புங்க. ஒண்ண அடிச்சிக் கொன்னோம். ஒண்ணு தப்பி ஓடிட்டு. எங்கபோச்சுதுண்ணு தெரியல. ஒடனேயே வண்டி கட்டி தூக்கிட்டு வாரோம்மா. எப்படியாவது என் புள்ளய காப்பாத்திருங்க உங்களுக்கு புண்ணியமா போகும்.

அழுது கொண்டே அந்த தாய் நர்சம்மாவிடம் வேண்ட ஆரம்பித்தாள்.

“சரி சரி சத்தம் போடாதீங்க. டாக்டரு உங்க புள்ளய பாத்திட்டிருக்காரு. அடிச்சு கொன்னது?”

“என்ன பாம்புண்ணே தெரிய மாட்டேங்குதே. நான் இதுவரைக்கும் இப்படி ஒரு பாம்ப பாத்ததே இல்லியே. நாங்க வந்த வண்டியிலேயே ஒரு கவர்ல போட்டு செத்த பாம்ப கொண்டு வந்திருக்கோம் அத காட்டட்டா...”

“வேண்டாம்.. வேண்டாம். அங்கேயே இருக்கட்டு நான் டாக்டர பாத்துகிட்டு வரேன். அந்த பெஞ்சுல போய் இருங்க. சத்தம் போடக்கூடாது சரியா”. அதட்டிவிட்டு சர்ரென்று உள்ளே சென்றுவிட்டாள் அந்த நர்சு.

பெத்த புள்ள பாம்பு கடிச்சு வாய்ல நுரையோட கிடக்கத பாத்தபெறவு எப்படி ஒரு தாயால சத்தம்போடாம இருக்க முடியும்? அந்த அம்மா பெஞ்சில போய் உக்காந்து மருண்டுட்டேயிருந்தாங்க. பக்கத்துல கூடால வந்திருந்தவங்க வருத்தத்தோட நின்னுட்டு இருந்தாங்க.

எல்லாத்தையும் பாத்துட்டே நின்ன எங்களுக்கு ரொம்ப வருத்தமாயிட்டுது. மாட்டுவண்டிக்க பக்கத்துல போய் பாம்ப பாக்க மத்தவங்க எல்லாரும் போனாங்க. எனக்கு அதுக்க பக்கத்துல போவதுக்கே பயமா இருந்தது. பேசாம மணல்ல வந்து இருந்துட்டேன்.

அதுக்குள்ள இருட்டிருச்சு. வானத்துல நிலா கொஞ்சம் மேல எழும்பி வந்திருந்தது. சுத்தி இருட்டாதான் கிடந்தது. கொஞ்சநட தள்ளிக் கிடந்த அந்த உடங்காடு ஞாபகம் வர திரும்பி பார்த்தேன். காத்துல ஒட மரங்க அசைஞ்சுட்டு கிடந்துச்சு. அசைஞ்சதெல்லாம் பாம்புபோல தெரிய முகத்த திருப்பி மத்தவங்களப் பாக்க ஆரம்பிச்சேன். மணல்ல இருக்க பிடிக்காம மனசு கெடந்து நெளிய ஆரம்பிச்சி எந்திருச்சி திரும்பவும் அசோகண்ணன்கிட்ட வந்து நின்னுகிட்டேன்.

“என்னடேய் ஒரு மாதிரியாயிட்ட”, இது அசோ கண்ணன்.

“பாவம்ணே அந்த அம்மா ...” அழுததப் பாக்க பாக்க மனசு ஒருமாதிரி இருக்கு... “

“சின்னப் பையன்தானே அப்படித்தான் இருக்கும். ரொம்ப மனச போட்டு உளப்பாத.” அசோகண்ணன் என்னிடம் அக்கறையோடு பேசினார்.

கூட்டமா நின்னவங்ககிட்ட சலசலப்பு கேட்கவே. நாங்க அங்க திரும்பி பாத்தோம். டாக்டரு பாம்ப வந்து பாத்துட்டு நின்னாரு.

“என்னண்ணே டாக்டரு பாம்ப பாத்துட்டு நிக்காரு”.

“என்ன பாம்புண்ணு தெரிஞ்சா மருந்து கொடுக்க ஈசியா இருக்கும்ணுதான் டாக்டர் பாப்பாராயிருக்கும்”.

“பிழைச்சுருவாரா அந்த ஆளு?”.

“இதுவரைக்கும் நெஞ்சில பாம்பு கடிச்சு ஒருத்தரையும் என் வாழ்நாள்ல பாத்துட்டு இல்ல. அதிசயமாட்டுதான் இருக்குது. பிழைக்கது கஸ்டம்ணுதான் நினைக்கிறேன்”.

அதைகேட்டபிறகு அமைதியாயிட்டேன். அந்த அம்மா அழுதுட்டேதான் நின்னாங்க. பெஞ்சில உக்காரவும் இல்ல. எப்படியும் ஒரு அறுவது வயசு இருக்கும். ரவிக்க இல்லாம சேலையை சுத்திக் கட்டியிருந்தாங்க. பரட்டமுடி, உடம்பு வெயில்ல வெடிச்சு கிடக்ககூடிய நிலம்போல காஞ்சு போய் கிடந்தது.

ஒவ்வொரு நர்சயா பாத்து பாத்து பரிதவிப்பாய் நெஞ்சுல கைவைச்சுட்டு நின்ன நிலை அப்படியே என் மனசுக்குள்ள ஆழ பதிஞ்சு போச்சு. அத என்னால சொல்ல முடியல. அத பாக்க தெம்பு இல்லாம மீண்டும் மணல்ல வந்து உக்காந்துட்டேன்.

“ஐயோ நான் பெத்த மவனே... “ அலறல் அடிவயித்த கிழிக்க பதறிப்போய் எல்லோரும் எந்திரிச்சு உள்ள ஓடினோம்.

“கும்பிட்ட சாமி எல்லாம் கைவிட்டுட்டியளே... ஏ.. சொள்ளமாடா ஏமாத்திட்டியே என்னிய.. கிடா வெட்டி பொங்கபோடேன் என் புள்ளய காப்பாத்துப்பா என் உயிரை எடுத்துக்குப்பா ஏ.. கருமலை நீலி என் புள்ளய காப்பாத்து.. என்று வயிற்றில் ஓங்கி ஓங்கி அடித்து வயதான அம்மா அடிக்குரலில் இறந்துபோன மகன் மேல் விழுந்து அழுது கொண்டிருந்தாள்.

“ஏ கெழவி இது ஆஸ்பத்திரியா வேற என்னதும்மா. இப்படி கிடந்து சத்தம்போடா... வேற நோயாளிய எல்லாம் இருக்காண்டாமா வெளிய போய் சத்தம்போடு”. கம்பௌண்டர் எரிச்சலோட சத்தம்போட்டான். அழுது அழுது குரல் கம்ம அந்த தாய் கதறிக் கொண்டுதான் இருந்தாள்.

எத்தனை கனவுகளோடு இருந்திருப்பாள்.

தாங்க முடியாம வெளிய வந்து ஒர ஓரத்துல யாரும் பார்க்காம அழுதுக்கிட்டு நின்னேன். அசோகண்ணன் தூரத்துல நின்னு என்னிய பாத்துட்டே நின்னிருக்காரு. என்ன நோக்கி அவர் நடந்து வர நான் முகத்த துடைச்சிட்டு பேசாமலேயே நின்னேன். எல்லோரும் அந்த மணல்லயே படுத்துக் கிடந்தோம். அமைதி உடலை ஊடுருவி வலித்தது. அசோகண்ணன்தான் பேச ஆரம்பிச்சாரு. சரி சாப்பிட வரக்கூடியவங்க என்கூட வாங்கண்ணாரு. எல்லாரும் எந்திரிச்சாங்க நான் மட்டும் எந்திரிக்கல. நீ வரலயான்னு என்னப் பாத்து கேட்ட அசோகண்ணன்ட, “எனக்கு பசிக்கல நான் இந்த மணல்லயே படுத்து கிடக்கேன். நீங்க போய்ட்டு வாங்க” ண்ணுட்டு நான் அப்படியே படுத்துவிட்டேன்.

ஒரு நிமிசம் என்னிய பாத்துட்டே நின்னவரு எல்லாரையும் கூப்பிட்டுட்டு சாப்பிட போயிட்டாரு.

சாப்பிட கொஞ்ச தூரம் நடந்து பஸ்ஸ்டாண்டுக்கு போவணும். எப்படியும் வர ஒரு மணி நேரம் ஆகும். ஆஸ்பத்திரி வாசலையே பாத்துட்டு மணல்ல படுத்துக் கிடந்தேன். வந்த அதே மாட்டு வண்டியில திரும்ப செத்துபோனவர ஏத்தி அழுகை சத்தத்தோடே மாட்டு வண்டி திரும்பி போனது.

எல்லோரும் போன திசையையே பாத்துட்டு எவ்வளவுநேரம் அப்படியே படுத்துக் கிடந்தேன்ணு எனக்கே தெரியவில்லை. ரொம்ப நேரம் ஆனதுபோல தெரியவே. மாடிக்கு போய் படுத்து உறங்கலாம்ட்டு எந்திரிச்சேன். மேல இருந்த மணல் எல்லாத்தையும் தட்டிட்டு மெதுவா மாடிப் படி ஏற ஆரம்பித்தேன். கொஞ்ச தூரம் படி ஏறியிருப்பேன். எங்கிருந்தோ ரெண்டுபேரு பேசியதுபோல சத்தம் கேட்டு காதைத் தீட்டி, நின்னு கேட்க ஆரம்பிச்சேன். டாக்டரும் நர்சும் பேசிக்கிட்டு இருக்காங்க. கட்டிட சாரப் பாந்து வழியா தெளிவா கேட்க ஆரம்பிச்சு.

“என்ன டாக்டர் அந்த இஞ்சக்சன போட்டிருந்தா ஒரு வேள அந்த ஆளு பொழச்சிருப்பாம்ல.. “இஞ்சக்சன் பேரு சரியா காதுல விழல.

“நீ வேற... வந்தது பரதேசி கூட்டம். மாட்டுவண்டியில தூக்கி போட்டுட்டு வந்திருக்குதுவ. அந்த இஞ்சக்சன் ஒண்ணோட வெலயே பத்தாயிரத்துக்க மேல வரும். ஏற்கனவே பத்தாயிரத்துக்க மேல பில்லு போயாச்சு. அத்தனையும் தண்டம்தான் அளந்திருக்கு. அதுல இந்த பணத்த போய் யார்கிட்ட வாங்க...”

“ஆனா ஒருவேளை அவன் பிழைச்சிருப்பாம்ல டாக்டர்.”

“ஒரு வேளதான பிழைச்சிருப்பான். ஓசி வைத்தியம் பண்ணதுக்கா பணம் செலவழிச்சி டாக்டருக்கு படிச்சி ஆஸ்பத்திரியும் கட்டி போட்டிருக்கேன். யார்கிட்டயும் போய் இப்படி பேசிகிட்டு நிக்காத. போ போ ஒன் வேலையப் பாரு” என்றார்.

எப்படி மாடிக்கு வந்தேன் என்றே தெரியவில்லை. வெறுப்போடு தூங்கிப்போனேன்.

நல்லாத் தூங்கிகிட்டு இருக்கேன். தலைமாட்டில் ஒரு பண்ணி வந்து நின்னுட்டு இருக்கு, அதுக்க மூஞ்சில மலம் வடிஞ்சிட்டிருக்கு. அந்த மலத்தோடேயே மெதுவா என்ன மணத்தி பாக்குது. அறுவறுப்பு தாங்க முடிய வசமாட்டு என் மொவத்தை அது தொடவருது. பக்கத்துல வரவர அது பண்ணி தலைபோலவே இல்லை. மனித தலைபோல தெரியுது. அதுவும் எங்கேயோ பார்த்த முகம். அருவருப்போடு உத்து பாக்கிறேன். அது டாக்டர் முகம்.

துடித்துபோய் எழும்புனேன். பக்கத்தில அசோகண்ணன் படுத்துக் கெடந்தார். நெஞ்சு சீரா ஏறி இறங்கிட்டு இருக்கு. இனிம உறங்குனதுபோலதான்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com