Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Thendral
Puthiya ThendralPuthiya Thendral Logo
ஜூலை 2007

நெகிழும் நிஜங்கள்
சிற்றார். பழ. தேவராஜன்


அண்மையில் ஒரு வெளிநாட்டுப் பயணியை சந்திக்க நேர்ந்தது. "எங்கள் நாட்டில் உங்களுக்குப் பிடித்ததது புராதனச் சின்னங்களா, கோயில்களா, அல்லது மற்ற விசயங்களா?" என்றேன்.

அவரின் பதில் ஆச்சரியத் தையும், அதிர்ச்சியையும் ஒருசேர கொடுத்தது. அவர், "உங்கள் நாட்டில் குடும்பங்களே கோயில்களாக உள்ளது என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது" என்றார்.

“எப்படி?" என்றேன்.

"உங்கள் கலாச்சாரத்தில் கூட்டுக் குடும்பம் என்பது அற்புதமான விசயம். குடும்பத் தின் மூத்த நபர் மூலஸ்தானத்தில் உள்ள பிரதான தெய்வம் மாதிரி. மற்ற மூத்த குடும்ப அங்கத்தினர்கள் பிற சந்நிதிகள் மாதிரி. அவரவர்க்கென்று ஒரு தனிப்பட்ட அதிகாரம் உள்ளது. ஆனால் பொதுவான அல்லது முக்கியமான தீர்வு என்றால் குடும்பத்தின் மூத்த நபரின் தீர்வே இறுதியானது. அவர் குடும்பத்தினரின் அபிப்பிராயம், கருத்து ஆகியவற்றை மனதில் கொண்டே பதிலளிப்பார். மேலும் ஒருவரை ஒருவர் சார்ந்து விட்டுக்கொடுத்து போவது ஏகாந்தமாயிருக்கிறது".

"ஆனால், மேலை நாடுகளில் குடும்பம் ஒன்றாக இருப்பினும் அனைவரும் தனித்தனி. சுதந்திரம், தனித்துவம் என்ற பெயரில் ஒவ்வொருவரும் தனித்தீவாக உள்ளனர். எனவே தான் வன்முறை, அத்துமீறல் என்பது அங்கு சகஜம். ஒரு பள்ளிச் சிறுவன் சக நண்பனை துப்பாக்கியால் சுட்டுக்கொல்லும் துர்பாக்கியம் இந்தியா போன்ற கலாச்சாரமிக்க நாடுகளில் இல்லை" என்றார்.

"அதே சமயம், நாங்கள் எதையெல்லாம் புறக்கணிக்கிறோமோ அதை நீங்கள் நாகரிகம் என்ற பெயரில் பின்பற்றுவது வேடிக்கையாயிருக்கிறது, வேதனையளிக்கிறது" என்றார்.

“எங்கள் நாட்டில் தனிமனித ஒழுக்கத்தைப்பற்றி அவ்வளவாக அக்கறை இல்லை. ஏனெனில் அவனின் அடித்தளமே அப்படி. ஆனால் எங்களை ஆளுபவர்கள் கண்டிப்பாக, ஒழுக்கமிக்க, முன்மாதிரி தலைவர்களாக இருக்கவேண்டும். இல்லையேல் சட்டத்தின் உதவியுடன் அவர்களை புறக்கணிப்போம். ஆனால் உங்கள் நாட்டில் சட்டங்கள் தனிமனிதனை மட்டுமே குறிவைத்து தகர்க்கிறது. தலைவர்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். குடிமக்கள் மட்டும் அனைத்து சட்டதிட்டங்களுக்கும் உட்பட்டு நடக்க வேண்டும் என்பது வேடிக்கையாயிருக்கிறது” என்றார்.

“தர்மம், நீதி, நேர்மை, அன்பு, ஈகை, விட்டுக் கொடுத்தல் போன்றவை இம்மண்ணின் எச்சங்கள். ஆனால் இங்கே குடும்ப நலநீதிமன்றங்களும், முதியோர் இல்லங்களும் பெருகுவது வேடிக்கையாய் இருக்கிறது. வேதனையாக இருக்கிறது” என்றார்.

எனக்கோ எங்கோ வலித்தது? உண்மைதானே.

மேலைநாட்டு இளைஞர்கள் தலைக்கு கருப்பு சாயம் அடித்துக் கொள்ளும்போது, நாம் கருப்புமுடியை கலராக மாற்றுகிறோம். அவர்கள் கம்ப்யூட்டர் மயத்திலிருந்து, இயற்கைக்கு மாறும்போது, நாம் இயந்திர மனிதனுக்காக ஏங்குகிறோம். கணினி என்பது ஆக்க சக்திக்கு பயன்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் நமது நாடு வல்லரசாக மாறும். அதில் சந்தேகமில்லை. ஆனால் குழந்தைகள் கம்ப்யூட்டருக்கும், ஊடகங்களுக்கும் அடிமையாகி தனித்துவம் கெட்டுப்போனது வேதனையளிக்கிறது. சிங்கக்குட்டிகள் ஆட்டுக்குட்டிகளாய் 'பே', 'மே' என்று கத்தும் போது வேதனை மிஞ்சுவது இயல்புதானே.

மேலைநாடுகளில் வயசுப் பெண்கள் ஒழுக்கத்தின் வலிமை அறிந்து "கண்ணியம் காப்போம், கன்னித்தன்மையை இழக்க மாட்டோம்" என உறுதி எடுத்துக் கொள்ளும்போது, நம் பேஷன் ஷோ, டிஸ்கோதே, நைட்கிளப் என அவர்கள் விட்டொழித்த சமாச்சாரத்துடன் சமரசம் செய்து கொள்கிறோம்.

ஒரு மழலையர் பள்ளி நிர்வாகியுடன் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்ன ஒரு செய்தி திடுக்கிட வைத்தது. எல்.கே.ஜி படிக்கும் குழந்தைகள் ஒரு ஆணையும், பெண்ணையும் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விளையாட்டு கல்யாணத்தை நிஜ திருமணம் போலவே செய்து வைத்து வாழ்த்தியிருக்கிறார்கள்.

அந்தப் பெண் குழந்தை "அம்மா நான் அவனை கட்டிக்கொண்டேன். இனி என்ன செய்ய வேண்டும்" எனக்கேட்டதும் அத்தாய் பதறியடித்து பள்ளி நிர்வாகத் திடம் சொல்லி கதறியழுதது நெஞ்சே வெடித்து சிதறிவிடும் வேதனையைத் தந்தது என்றார்.

விசாரித்தபோது மாலை வேளை வீட்டினருகே விளையாடும் போது இப்படி நடந்திருக்கிறது என்றாலும் இந்த பிஞ்சு மனதில் நஞ்சை விதைத்த ஊடகங்கள் மீதும், கலாச்சார அத்துமீறல்கள் மீதும் வன்மம் தெறித்தது. ஆம் இரண்டு மூன்று திருமணங்கள் செய்து கொண்டு கலாச்சார எல்லையை தாண்டியவர்கள்தானே ஆதர்ஷ் நாயகன், நாயகியாய் ஊடகங்களில் ஊடுருவிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நடத்தும் கூத்தைப் பார்த்து கூத்தடிக்கும் சமுதாயத்தை நாம் எதைச் சொல்லி கடிந்து கொள்வது?

கம்ப்யூட்டர் கம்பெனிகள் டேட்டிங் அலவன்ஸ் கொடுப்பதும், அதன் விளைவாக குடும்பங்கள் சிதைவதும் அத்துமீறல் இல்லையா?

பிளாஸ்டிக் பொருட்கள், பாலித்தீன் பைகள் போன்றவை மேலை நாடுகளில் சுமார் இருபது வருடங்களுக்கு முன்பே புறக்கணிக்கப்பட்ட விசயம். ஆனால் நாம் விபரீதம் அறிந்து இப்போதுதான் போராட்டத்தை புதுப்பித்துக் கொண்டிருக்கிறோம்.

கல்வி, கேள்விகளில் நமக்கென்று ஒரு தனி அடையாளம் இல்லாமல், மேலை நாட்டு யுக்தியை கையாளுவதும் கேலிக்குரியதே. பணம், பதவி என்று உலகத்தர வரிசையோடு ஒப்பிட்டு, அடித்தளம் இழந்து போன நாம், பணத்தை பெருக்குவதில் குறிவைத்து மனங்களை புதைத்து விட்டு கல்லறைகள் மீது கலாச்சார விவாதம் நடத்திக் கொண்டிருக்கிறோம். பிணந்தின்னி கழுகுகளாய் நாம் இறக்கை விரித்து அடுத்தவர்களை அடித்துக் தின்தில் சுகம் கண்டுவிட்டோம். இனி என்ன ஓதினாலும் என்ன பயன்?

உடல் வளையாத விஞ்ஞான யுக்திகள், சமஉரிமை கோரும் ஓரினச்சேர்க்கையாளர்கள், குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க கற்றுக் கொடுக்கும் அரசியல், கலை, ஒருமுறையேனும் பெற்றெடுத்த குழந்தைகள் வந்து பார்த்துச் செல்லாதா என வழிபார்த்து விழி பூத்துக் கிடக்கும் ஆதரவற்ற முதியோர்கள், அர்ஜூன் பிறந்தால் ஆரோக்யா பால் அர்ச்சனா பிறந்தால் கள்ளிப்பால் என பெண்சிசுக்களை நஞ்சுக்கொடி காய்வதற்குள் குப்பைத் தொட்டியில் வீசும் தாய்மார்கள், புதிதாய் பெண்சிசுவை காக்க முளைத்திருக்கும் தொட்டில் குழந்தைத் திட்டம், குழந்தைத் தொழிலாளர்கள் மறுவாழ்வு மையம், கொத்தடிமைகள் மீட்பு இயக்கம் என எத்தனையோ புதிய சமுதாய அவலங்கள்.

அந்த காலத்தில் நாகரிகமற்ற நிர்மூடர்கள் அல்லது முதியோர்கள் செய்த தவறுகளை விஞ்ஞான, நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் மனம் கூசாமல் செய்கிறோமே. இவையெல்லாம் மேலைநாட்டு மிச்சங்கள் தானே. முற்றிக் கனிந்த பின் கசியும் எதுவும் கழிவுதானே?

வெளிநாட்டு நண்பரிடம் விடைபெறும் போது அவரின் கருத்தைக் கேட்டேன். நிம்மதி தருவதுதான் வாழ்வு. நாங்கள் நிம்மதியைத் தேடி இங்கே வரும்போது நீங்கள் நிம்மதியில்லாவற்றின் பின்னே வேகமாக செல்வதைப் பார்த்து வாயடைத்துப் போகிறோம். உங்கள் மகான்கள் போதிக்காததையா நாங்கள் போதித்து புரிய வைக்கப் போகிறோம். தெளிவு தருவது தானே அனுபவம். நீங்கள் அனுபவித்துத் தெளியும்போது, அநேகமாக உங்கள் அடையாளத்தை, அடிப்படையை இழந்திருப்பீர்கள். மீண்டும் எங்களிடம் யாசித்து, இரந்து நிற்கும்போது எங்களால் கொடுக்கவும் முடியாது. உங்களால் உணர்ந்து உள்வாங்கவும் முடியாது. ஏனெனில் உணர்வுகளை யாரும் கொடுத்து உதவமுடியாது. அப்போது உங்களுக்காக போராட யாரும் முன்வரவும் மாட்டார்கள். முடவனே முடங்கிக் கிடக்கும்போது, அடுத்தவனை முதுகில் தூக்கி சுமக்கவா முடியும்?” என்றார்.

“காடுவரை பிள்ளை, கடைசி வரை யாரோ, என்று தத்துவம் போதித்து தனி அடையாளமாய் நின்ற உங்கள் பண்பாடு இப்போது தடுமாறி, தடம்மாறி நிற்கிறது” என்றார்.

நீண்ட விவாதத்திற்குப் பின் வெளிநாட்டு நண்பர் விடைபெற்றார். என் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com