Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Thendral
Puthiya ThendralPuthiya Thendral Logo
ஜூலை 2007

மாமனிதர் ஜே.சி. குமரப்பா
சு.தியடோர் பாஸ்கரன்


இந்தியா நினைவுகூர மறந்த தேசியத் தலைவர்களில் முக்கியமானவர் ஜே.சி. குமரப்பா. காந்தியப் பொருளாதாரச் சித்தாந்தத்திற்கும் ஊரக மறுகட்டமைப்பிற்கும் இந்த பொருளியலாளரின் பங்களிப்பிற்கு வரலாற்றில் தனியிடம் உண்டு.

தஞ்சாவூரில் அரசு பொதுப்பணித்துறை ஊழியரான சாலமன் துரைசாமி கொர்னிலியசுக்கும், எஸ்தருக்கும் பிறந்த பத்துக் குழந்தைகளில் ஏழாவது குழந்தையாக 4-1-1892 அன்று குமரப்பா பிறந்தார். பெற்றோர் இட்டபெயர் ஜோசப் செல்லதுரை கொர்னிலியஸ். குடும்பத்தினருக்கு அவர் 'செல்லா'. ஆச்சாரமான தமிழ்க்கிறிஸ்தவக் குடும்பம்.

குமரப்பா 12 வயதாயிருக்கும் போது, தந்தையின் பணிமாற்றத்தைத் தொடர்ந்து குடும்பம் சென்னையில் குடியேறியது. பள்ளிப்படிப்பு முடித்து, சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் வரலாறு முதல் பாடமாக மேற்படிப்பை முடித்தார். 1913-இல் இங்கிலாந்து சென்று வாணிபக் கணிதவியலை ஐந்து ஆண்டுகள் படித்துக் கணக்காளராகத் தேறினார். மேல்நாட்டு வாழ்க்கைப் பாணியில் நாட்டம் கொண்ட அவர் முதலில் ஒரு வங்கியிலும் பின்னர் ஒரு தணிக்கை நிறுவனத்திலும் லண்டனில் பணியாற்றினார்.

1927 - இல் அமெரிக்காவில், சைரக்யூஸ் பல்கலைக்கழகத்திலும், கொலம்பியா பல்கலைக்கழகத்திலும் பொருளாதாரம் பயின்றார். அங்கு மாணவராக இருந்தபோது ஒரு திருச்சபையில் இவர் ஆற்றிய 'இந்தியா ஏழ்மையாக இருப்பது ஏன்?' என்ற உரையின் சாரம் நியூயார்க் டைம்ஸ் நாளேட்டில் வெளியானது. அதைக் கண்ணுற்ற குமரப்பாவின் பேராசிரியர் இ.ஆர்.ஓ. செலிமன், இந்தத் தலைப்பையே முதுகலை ஆய்விற்கு எடுத்துக் கொள்ளலாமே என்று குமரப்பாவிடம் ஆலோசனை சொன்னார்.

இந்திய மக்களின் வறுமைக்கான பொருளாதார, அரசியல் காரணிகளைத்தேடி, 'பொது நிதியும் நமது வறுமையும்' என்ற தலைப்பில் ஆய்வு செய்யும் போதுதான் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்தியாவின் ரத்தத்தை உறிஞ்சுகிறது என்பதையும் இந்நிலை மாறவேண்டுமென்றால் காலனி அரசுக்கு முடிவுகட்ட வேண்டும் என்பதையும் தெளிவாகக் கண்டறிந்தார். இந்திய தேசிய இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு, காந்தியுடன் தொடர்பு கொள்ளத் தீர்மானித்தார். இந்த ஆய்வேட்டிற்கு முகவுரை வேண்டி அதை காந்திக்கு அனுப்பியிருந்தார்.

அதைப்படித்த காந்தி, சுதேசி இயக்கத்தின் அடிப்படைத் தத்துவத்தை குமரப்பாவின் கருதுகோள்கள் பலப்படுத்துவதை உணர்ந்தார். தனது எண்ணங்களுக்குக் கருத்தாக்க வடிவம் கொடுக்கவும், கிராமப்புற மேம்பாடு பற்றிய தனது கனவுகளை நனவாக்கவும், அவருடைய பணி உதவும் என நம்பினார். அந்தக் கட்டுரையைத் தனது ஏடான 'யங் இந்தியா'வில் வெளியிட முடிவு செய்தார்.

இவரது கொள்கைப்பிடிப்பால் ஈர்க்கப்பட்ட காந்தி, குமரப்பாவைச் சபர்மதி ஆசிரமத்திற்குத் (அகமதாபாத்) தன்னைச் சந்திக்க வருமாறு அழைத்தார். இந்தியப் பொருளாதாரத்தில் குமரப்பாவிற்கு இருந்த புலமையை இனம் கண்ட அவர், குஜராத்தில் கெரா மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களைப் பற்றிப் பொருளாதாரப் புள்ளிவிவரங்கள் சேகரித்து, ஒரு அறிக்கை தயாரிக்குமாறு குமரப்பாவைப் பணித்தார்.

இந்த அளவீட்டுப்பணி சர்தார் படேல் தலைமையிலான குழு ஒன்றின் மேற்பார்வையில் நடந்தது. அந்தப்பணி தொடங்குமுன் காந்தி கூறிய அறிவுரை, "இந்தியப்பொருளாதாரம் கீழிருந்து மேல்நோக்கி எழுப்பப்பட வேண்டும். இதற்கு இறுக்கமான தர்க்கவியல் மூலம் அசைக்க முடியாத முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். இந்தப்பணிக்கு அடிப்படையானவை ஆதாரபூர்வமாகமானவை புள்ளிவிவரங்கள்."

அகமதாபாத்தில் உள்ள, குஜராத் வித்தியா பீடத்தின் ஒன்பது மாணவர்கள், இரண்டு பேராசிரியர்கள் உதவியுடன் குமரப்பா, மூன்று மாதங்கள் 54 கிராமங்களில் சுற்றித்திரிந்து தயாரித்த 'மாதார் தாலுக்கா பொருளாதார அளவீடு' என்ற அறிக்கை காந்தியப் பொருளாதாரக் கருதுகோளுக்கு ஒரு அடித்தளமாக அமைந்தது.

ஒரு நாளைக்கு ஏழு பைசாவே (ரூபாய்க்கு 192 பைசா இருந்த காலம்) வருமானமுள்ள குடியானவர்கள், அன்றாடத் தேவைகளுக்கே அல்லல்படுவதைக் காட்டியது. கிராமவாசிகள், விவசாயிகள் எவ்வாறு நிலச்சுவான்தார்களாலும் அரசாலும் சுரண்டப்படுகிறார்கள், காலனி அரசின் திட்டங்களின் பலன்கள் எப்படி அவர்களை அடைவதில்லை என்பதைத் துல்லியமாக விளக்கும் இந்த ஆவணம் இந்தியப் பொருளியல் வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற ஒன்று.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் தன்மையைக் கணித்துக் காட்டியது இந்த அறிக்கை. காந்தி குமரப்பா உறவு உறுதிப்பட்டது. குமரப்பாவின் பொருளியல் சித்தாந்தத்திற்கு ஒரு அஸ்திவாரமாக அமைந்தது அவரது மாதார் தாலுகா அனுபவம்.

இந்திய மக்களின் வறுமை வாழ்வு, அடிமை நிலையினாலேயே என்று அறிந்திருந்த அவர் காந்தியைத் தன் அரசியல் வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டார். மேற்கத்திய மோகம், நம் பார்வையை மறைத்து, இந்திய மக்களையும் அவர்கள் சிக்கல்களையும் புரிந்து கொள்வதைச் சிரமமாக்குகிறது என்று அவர் நம்பினார். கோட்டு, டை என மேற்கத்திய உடையிலேயே இருந்த அவர், கதர் ஜிப்பா, வேட்டிக்கு மாறினார். கதர்க்குல்லாயும் சேர்ந்தது. கொர்னிலியஸ் என்ற தனது பெயரை மாற்றி, தனது குடும்பத்தின் பாரம்பரியப் பெயரான குமரப்பாவை ஏற்று, ஜோசப் செல்லத்துரை குமரப்பாவாக ஆனார்.

தண்டி யாத்திரை மேற்கொண்ட காந்தி, தன்னை எதிர்நோக்கியிருந்த சிறைவாசத்தைக் கருதி, தன் குரலாக இயங்கிய 'யங் இந்தியா' பத்திரிகையின் ஆசிரியராக குமரப்பாவை நியமித்தார். குமரப்பாவின் எழுத்தில் இருந்த ஆழமான கருத்தாக்கம், ஆணித்தரமான தொனி, நடையின் ஆவேசம், வாசிப்பவர்களின் கவனத்தை ஈர்த்தன. காந்தி நினைப்பதை குமரப்பா உலகிற்குச் சொல்வார் என்ற நிலை ஏற்பட்டது.

மதன்மோகன் மாளவியா காந்தியைக் குமரப்பாவிற்கு நல்ல பயிற்சி அளித்திருந்ததற்குப் பாராட்டினார். "இல்லை. நான் அவருக்குப் பயிற்சி ஏதும் கொடுக்கவில்லை. அவர் எனக்கு 'ரெடிமேடாக'க் கிடைத்தார்" என்றார் அண்ணல். குமரப்பாவை அன்புடன் 'கு' என்றழைப்பார் காந்தி, பொருளியல் சார்ந்த பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை, நடைத்தெளிவும் நேரடித்தன்மையும் கொண்ட எளிய நடையில் எழுதினார். சீரிய அரசியல் இதழாளராகப் பரிணமித்த குமரப்பாவின் எழுத்துக்கூர்மை பிரிட்டிஷ் அரசைத் தடுமாறச் செய்தது. காலனி அரசு யங் இந்தியா அச்சகத்தைப் பறிமுதல் செய்து மூடியபோது, அப்பத்திரிகையை, தட்டச்சு செய்து நகல்பெருக்கி மூலம் பிரதிகள் எடுத்து வெளியிட்டார்.

1931-இல் இவருக்கு முதல் சிறைவாசம் ஒன்றரை ஆண்டு, "இன்றைய இந்திய அரசு, பிரிட்டிஷ் மக்களின் எண்ணத்தை மட்டுமே பிரதிபலிப்பதால், இது சட்டப்படி லண்டனில் மட்டுமே செயல்பட முடியும். பெகிங்கிலோ, டிம்பக்டுவிலேயோ டெல்லியிலேயோ முடியாது. அப்படி இயங்கினால் அது சட்ட விரோதமானதாகும்" என்று எழுதினார் குமரப்பா. 1932-இல் மறுமுறை சிறைத் தண்டனை. 1942 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தின்போது "அப்பத்திற்கு பதில் கல்லா?" என்ற இவர் எழுதிய கட்டுரையால் ஆடிப்போன பிரிட்டிஷ் அரசு இவரை மறுபடியும் சிறையிலடைத்தது. மூன்றுமுறை இவருக்குக் கிடைத்த சிறைத்தண்டனை - மொத்தம் மூன்றரை ஆண்டுகள் - யாவும் அவரது எழுத்துக்காகவே.

ஏகாதிபத்திய அரசின் ஒரே நோக்கம் இந்தியாவைக் கொள்ளையடிப்பதே என்பது குமரப்பாவின் நிலைப்பாடு. இதை 1947-இல் எழுதிய From Clive to Keynes என்ற நூலின் முன்னுரையில், "அவரை (க்ளைவ்) கிழக்கிந்தியக் கம்பெனியில் குமாஸ்தா வேலை பார்க்குமாறு இந்திய தேசத்திற்கு அவருடைய 15 வயதில் அனுப்பினார்கள். அவர் இந்தியாவில் 17 வருடம் வேலை பார்த்துவிட்டு, 35 - ஆவது வயதில் இங்கிலாந்து திரும்பினார். அப்போது அவர் கையில் ரொக்கமாக 3 லட்சம் பவுனும் வருஷத்தில் 27 ஆயிரம் பவுன் வருமானம் வரக்கூடிய ஆஸ்தியும் இருந்தது.

இந்தச் சூழ்ச்சிக்கார ராஜதந்திரி எவ்வாறு இந்தியப் பொதுப்பணத்தைக் கொள்ளையடிக்க வேண்டும் என்று திட்டம் வகுத்துச் சென்றாரோ, அதே முறையைத்தான் இன்றுவரை அரசாங்கமும் கையாண்டு வருகிறது" என்று விளக்கினார்.

குமரப்பாவின் பல நூல்களுக்குக் காந்தி முன்னுரை வழங்கியுள்ளார். பிரசுரிக்கப்படும் தன் எழுத்துகள் யாவும், கையால் செய்யப்பட்ட தாளிலேயே அச்சிடப்பட வேண்டும் என விதித்திருந்தார் குமரப்பா.

சுரண்டலற்ற பொருளாதாரம் சாத்தியமானதொன்று என்றும், அந்நிலையே இந்தியாவின் பிரச்சனைகளுக்கு விடை என்றும், இது மெய்ப்படக்கூடிய கனவு என்றும் உறுதியாக நம்பினார் குமரப்பா. இந்த இலக்கை அடையச் சுற்றுச்சூழலை அழிக்கத் தேவையில்லை. வாழ்வின் ஆதாரமான இயற்கையைச் சீரழிக்க வேண்டியதில்லை, எரிபொருள்களை வீணடிக்க வேண்டியதில்லை என்று குமரப்பா நம்பினார். சுற்றுச்சூழல் பேணலில் அவருக்கிருந்த அக்கறையின் ஒரு வெளிப்பாடே கிராமியத் தொழில்களில் அவர் காட்டிய ஆர்வம். நிலத்தடி எரிபொருள் சார்ந்த பொருளாதாரம் நிலையற்றது மட்டுமல்ல, சுற்றுச்சூழலை நாசப்படுத்தக் கூடியது என்று கூறினார். வன்முறையற்ற பொருளாதாரம் பூமியின் இயற்கை வளத்தைச் சுரண்டி அழிக்காமல், அதைச் சமநிலைப்படுத்தி வைக்க வழிவகுக்கும் என நம்பினார்.

சூழலியலாளர்கள் இன்று போற்றும் நிலைப்பாடுகளை ஹரிஜன் போன்ற காந்திய சஞ்சிகைகளில் எழுதிய கட்டுரைகள் மூலம் முப்பதுகளிலேயே குமரப்பா பிரகடனம் செய்தார். அவரது தொலைநோக்கும் முன்னோடித் தன்மையும் அவரது பொருளியல் சித்தாந்தத்தில் வெளிப்பட்டன.

"இயற்கை வளம் நம் பாரம்பரியச் சொத்து. நம் சந்ததிகளுக்கு நாம் அவைகளை விட்டுச்செல்ல வேண்டும், பெட்ரோலை அதிகமாகப் பயன்படுத்துவதால்தான், யோர்தான், ஈரான், போர்னியோவிலுள்ள எண்ணெக் கிணறுகளை அமெரிக்கா வன்முறையில் நாடுகிறது" என்று குமரப்பா எழுதினார். Small is Beautiful (1973) என்ற மகத்தான நூலை எழுதிய ஜெர்மானியப் பொருளியலர் ஷ¨மாக்கர் 'இந்தியத் தத்துவ மேதை' எனக் குமரப்பாவைக் குறிப்பிட்டு, அவரது சித்தாந்தத்தைத் தனது வாதங்களுக்கு மேற்கோளாகக் காட்டுகிறார்.

தன் மாணவப் பருவத்திலிருந்தே பலமுறை மேற்கத்திய நாடுகளுக்குச் சென்று வந்த குமரப்பா, மேற்கத்திய முறையிலான பொருளாதார வளர்ச்சி நம் நாட்டிற்கு உகந்ததல்ல என்று கண்டார். 1946-இல் கப்பல் துறை பற்றிய ஒரு கருத்தரங்கிற்கு ஐரோப்பா சென்ற இவரை உலகப்போர் ஏற்படுத்திய நாசம் உலுக்கியது.

1952, 1954 வருஷங்களில் நான்கு முறை கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் சோவியத் ரஷ்யாவிற்கும், அங்குள்ள பொருளாதார நிலைமையைக் கண்டறிவதற்காகச் சென்றார். ஒவ்வொரு முறையும் காந்தியப் பொருளாதாரச் சித்தாந்தத்தின் மீது இவர் கொண்ட நம்பிக்கை உறுதிப்பட்டது.

1950-இல் சைனாவுக்கும் ஐரோப்பாவுக்கும் சென்று நாட்டுப்புறப் பிரச்சினைகளை அங்கு எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் எனக் கண்டறிந்தார். மாசேதுங்கின் தலைமையில் குடிநீர், வசிப்பிடம், மக்கள்தொகை போன்ற குமரப்பா கம்யூனிஸ்ட்டாக மாறிவிட்டார் என்று சில நண்பர்கள் அவரைக் கேலிசெய்யும் அளவுக்குச் சைனாவின் புகழ் பாடினார்.

பம்பாயில் 1934-இல் நடந்த காங்கிரஸ், அகில பாரத கிராமத் தொழிற்சாலைகளின் அமைப்பை நிறுவத் தீர்மானித்தது. காந்தியைத் தலைவராகக் கொண்டு, வார்தாவிற்கருகிலுள்ள மகண்வாடி என்ற இடத்திலிருந்து இயங்கிய இந்த அமைப்பிற்குக் குமரப்பா செயலராக நியமிக்கப்பட்டார். இரவீந்திரநாத் தாகூர், ஜே.ஸி.போஸ், சி.வி. ராமன் மற்றும் பி.சி. ராய் இதன் ஆலோசனைக் குழுவிலிருந்தனர். குமரப்பா தன் முழு மூச்சுடன் அமைப்பின் பணிகளில் ஈடுபட்டார். ஆராய்ச்சி, உற்பத்தி, பயிற்சி, கருத்து விரிவாக்கம் மற்றும் நூல்வெளியீடு என ஐந்து அம்சங்களாகப் பிரித்து இயக்கினார். குடிசைத் தொழில்களுக்கேற்ற பல உபகரணங்கள் இங்கு இயங்கிய ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டன.

நூற்றி ஐம்பதே ரூபாய் செலவில், மண், மூங்கில் இவற்றைக் கொண்டு ஓடு வேய்ந்த 12 அடி 14 அடி குடிசை ஒன்றைக் கட்டி, அதில் 20 வருடம் வாழ்ந்தார். அவர்தான் திருமணம் செய்து கொள்ளவேயில்லையே! இவ்வமைப்பின் பணத்தைக் கணக்கு வைப்பதில் கறாராக இருந்தார். ஒருமுறை, காந்தி வார்தாவிலிருந்து பாட்னா சென்றதற்குப் பயணப்படி தர மறுத்து விட்டார்.

பொருளாதாரச் சித்தாந்தத்தில் காந்தியுடன் நேரு கொண்டிருந்த கருத்து வேறுபாடு, குமரப்பா - நேருவின் உறவிலும் வெளிப்பட்டது. 1937-இல் நேதாஜி காங்கிரஸ் செயலாளராக இருந்தபோது, நேரு தலைமையில் தேசியத் திட்டக்குழுவை அமைத்தார். அதில் குமரப்பாவும் ஒரு அங்கத்தினர்.

பாரம்பரியக் கிராமத் தொழில்களையும், கிராமம் சார்ந்த பொருளாதாரத்தையும், கைவினைகளையும் பேணுவதில் நேருவிற்கு நம்பிக்கையில்லை. All India Village Industries Association என்பதை All India Village idiots Association என்று கிண்டல் செய்வாராம். முதல் நான்கு அமர்வுகளில் பங்கேற்ற குமரப்பா, சோவியத் ரஷ்யாவை முன் மாதிரியாகக் கொண்டு, கனரகத் தொழில்களுக்குத்தான் நேரு சிறப்பிடம் அளிப்பார் என உணர்ந்தார். சுதந்திர இந்தியாவில் கிராமத் தொழில்களின்பால் அலையென எழுந்த புதிய ஆர்வம் ஓய்வதைக் கண்டார். நேரு நாட்டை இட்டுச்செல்லும் இப்பாதை, பொருளாதாரப் பின்னடைவையும், வேலை வாய்ப்பின்மையையும், இயற்கை வளத்திற்குக் குந்தகத்தையும், சுற்றுச்சூழல் மாசுபடுதலையும், ஏற்படுத்தும் என அறிந்து, திட்டக் குழுவிலிருந்து விலகினார்.

பிரம்மாண்டமான தொழிற்சாலைகளும், எந்திரமயமாக்கலும், ராட்சத அணைகளுமே இந்தியாவைப் பொற்காலத்திற்கு இட்டுச்செல்லும் என நம்பிய நேரு பிரதமராக இருந்த காலகட்டத்தில், குமரப்பா ஓரங்கட்டப்பட்டதில் வியப்பில்லையே?

மேலைநாட்டுத் திருச்சபைகள் மூலம் கிறிஸ்தவ சமயம் நம் நாட்டுக்கு வந்ததால் மேற்கத்தியக் கலாச்சாரப்பூச்சு அதிகமாக இருக்கிறது என்று எண்ணினார். "ஏசுவைக் காண வேண்டுமென்றால், இவைகளின் கட்டுகளிலிருந்து, நம்மை விடுவித்துக்கொள்ள வேண்டும்" என்றார். ஏசுவை அவர் ஒரு கடவுளின் அவதாரமாகக் காணாமல், ஞானியாகவே காண்கிறார். காந்தியடிகளின் மறைவுக்குப்பின், குமரப்பாவின் கவனம் வேளாண்மைச் சீர்த்திருத்தத்திலும் ஆசிரம வாழ்க்கையிலும் சென்றது. 1948-இல் சுதந்திர இந்தியாவில், விவசாயச் சீர்திருத்தக் குழுவின் செயலராக நாடு முழுவதும் சுற்றினார். நாடெங்கும் பயணம் செய்ய இந்திய ரயில்வே, அவருக்கு ஒரு வெள்ளிப் பாஸ் அளித்திருந்தது.

அக்குழு சமர்ப்பித்த அறிக்கை 'நிலம் தனி உடமையாக இருக்கக்கூடாது: உழுபவனுக்கே நிலத்தின் பலன் நேரடியாகச் சேரவேண்டும்' என்பன போன்ற புரட்சிகரமான பரிந்துரைகளைக் கொண்டிருந்ததால், அவை ஏற்கப்படாமல் போனதில் வியப்பொன்றுமில்லை.

ஆனால் நம் நாட்டின் நில, விவசாயப் பிரச்சினைகளை ஆழமாக ஆராய அவருக்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமைந்தது. வேளாண்மை பற்றியும், எந்தப்பயிர்கள் எப்போது பயிரிட வேண்டும் என்பது பற்றியும் பணப்பயிர்களினால் வரும் கேடு பற்றியும் பல கட்டுரைகள் எழுதினார். "உணவுப் பஞ்சம் ஏற்பட்டதற்குச் சுயதேவைப் பூர்த்தியைப் பிரதானமாகக் கொண்ட கிராமியப் பொருளாதாரத்தை நாம் கைவிட்டதுதான் அடிப்படைக் காரணம். ஒவ்வொரு கிராமமும், தன்னுடைய எல்லாத் தேவைகளையும் பூர்த்திசெய்யும் அளவுக்கு உணவுப் பொருட்களை உற்பத்திசெய்வது வழக்கம்... சுயதேவைப் பூர்த்தி என்ற நோக்கத்தோடு சமன்முறைச் சாகுபடிப் பிரச்சினைகளில் மனப்பூர்வமாக ஈடுபட்டாலொழிய, உணவு, துணிப்பஞ்சத்தைத் தீர்ப்பதென்பது சாத்தியமில்லை" என்று எழுதினார்.

மோட்டார் சைக்கிள்தான் குமரப்பாவின் வாகனம். அதில், காடு, மலைகளைச் சுற்றித்திரிவதில் தனி ஆர்வம். புகைப்படமெடுப்பதில் ஈடுபாடு கொண்ட இவர், தான் எடுத்த படங்களை தானே கழுவி, பதிவு செய்வார். இதைத்தவிர, எழுதுவதிலும் படிப்பதிலுமே அவர் நேரத்தைச் செலவிட்டார்.

உடல்நலம் குறைவுற்ற குமரப்பா, 1953-இல் தமிழ்நாட்டில் தங்க முடிவு செய்தார். மதுரைக்கருகே கல்லுப்பட்டியில், 1940-இல் ஜி. வெங்கிடாசல பதியால் நிறுவப்பட்ட காந்திநிகேதன் என்ற ஆசிரமத்தைத் தேர்ந்தெடுத்து அங்கு வந்து சேர்ந்தார். அங்கு அவர் வசித்த ஐந்து வருடங்களில், சுற்றியிருந்த கிராமங்களில் நிர்மாணப் பணியாற்றினார். பூதான இயக்கத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். பல்லாண்டுகளாக ரத்த அழுத்த நோயால் அவதியுற்ற குமரப்பா, தன் வாழ்வின் கடைசி இரண்டு வருடங்களைச் சென்னை மருத்துவமனையிலேயே கழித்தார். 1960-ஆம் ஆண்டு காந்தி மரித்த அதே நாளில், பன்னிரண்டு ஆண்டுகளுக்குப்பின் ஜனவரி 30-ஆம் தேதி குமரப்பா காலமானார்.

('விடுதலை வேள்வியில் தமிழகம்' நூலில் எழுதப்பட்ட கட்டுரையின் சுருக்கம்)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com