Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Thendral
Puthiya ThendralPuthiya Thendral Logo
ஜூலை 2007

அசுரனிடம் கேளுங்கள்


இந்த ஆண்டு போதை எதிர்ப்பு நாளின்போது நாங்கள் ‘ஸ்டிக்கர்கள்’ வெளியிட்டோம். நீங்களும் ஏதாவது செய்யுங்கள்!
- சரவணன், மதுரை.

பெரிய தேசவிரோத கூட்டமாக இருப்பீர்கள் போலிருக்கிறதே. மதுவிற்பனை மூலம் அரசுக்கு எவ்வளவு லாபம் கிடைக்கிறது தெரியுமா? (நந்தனின் செய்தியை படியுங்கள்). இந்த பணம் இல்லாவிட்டால், ‘இலவச டிவி’ போன்ற நலத்திட்டங்களை எப்படி செயல்படுத்துவது?

கொஞ்சம் அடக்கி வாசியுங்கள் நண்பரே, நள்ளிரவு கடந்தும் டாஸ்மாக் மூலம் சேவையாற்றுவதற்கு விரோதமாக செயல்படுவதாக, ஏதேனும் அவசர சட்டம் போட்டு அரசு உங்களைப் போன்ற ‘குடி’ மக்களுக்கு விரோதமானவர்களை சிறையில் தள்ளிவிடக்கூடும்.

ஒரு பெண் நமது குடியரசுத் தலைவராவது குறித்து?
- அமிர்தா, புதுக்கோட்டை.

முதன்முறையாக ஒரு பெண் குடியரசுத்தலைவராக ஆகிறார் என்பதைத் தவிர வேறெந்த ‘சிறப்பும்’ இருக்காது என்றே எதிர்பார்க்கிறேன். ஆனால், பதவிக்கு வரும்முன்பே இந்தளவு சர்ச்சைக்குள்ளானவர் வேறெவரும் இல்லை என்று உறுதியாக நம்பலாம்.

தன் வாயாலே பல சர்ச்சைகளில் பிரதீபா சிக்கி வருகிறார். முதன் முதலாக இவர் ஆரம்பித்த சர்க்கரை ஆலை ஒன்று வங்கி கடன் திருப்பி செலுத்த முடியாமல் திவாலானதாக தகவல் வெளியானது. பின்னர் இவரது தம்பி கொலைக்குற்றம் ஒன்றில் சிக்கியிருப்பதாகவும், அதிலிருந்து தம்பியை காப்பாற்ற இவர் முயன்றதாகவும் செய்திகள் வெளியாயின. இவர் தலைவராக இருந்த கூட்டுறவு வங்கியில் உறவினர்களுக்கு லட்சக்கணக்கில் கடன் கொடுத்ததாக புகார் எழுந்தது. இந்த குற்றச்சாட்டுகளில் பிரதீபாவுக்கு நேரடி தொடர்பு இல்லை என அவரது சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. இருப்பினும் தன்னுடைய பேச்சால் அவர் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் ஜெய்ப்பூரில் பொது மேடையில் பேசிய பிரதீபா வடநாட்டு பெண்களுக்கு முகத்தை மூடும் பழக்கம் முகலாய ஆதிக்கத்தால் வந்தது என சர்ச்சையை எழுப்பினார்.

இந்தியாவில் நீண்ட காலமாகவே பெண்கள் முக்காடு போடும் பழக்கம் இருந்ததாக இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சம்பவத்துக்கு முன்பு ராஜஸ்தான் மாநில கவர்னர் என்ற வகையில் பிரம்மகுமாரிகள் நடத்திய விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், ‘பிரம்மகுமாரி இயக்கத்தை தொடங்கிய பாபா, ஆவியாக வந்து என்னிடம் பேசினார். உயர்ந்த பதவி காத்திருப்பதாக கூறினார்’ என்றார்.

இந்திய ஜனாதிபதியாவதற்கு வாய்ப்புள்ள ஒருவர் ஆவியுடன் தொடர்பு கொண்டதாக பேசியிருப்பது தற்போது புது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அப்துல்கலாம் (அணு) ஆயுதங்களிடம் சுத்த காதல் கொண்டவராக இருந்தபோதிலும் சட்டப்படி, நியாயப்படி நடந்தார் என்றே நம்பலாம். ஆனால், இவரோ நாட்டில் ஆவி ஆராய்ச்சி துறையையே ஏற்படுத்திவிடுவார் போலிருக்கிறதே!

தமிழகத்திலுள்ள வெகுமக்கள் ஊடகங்கள் குறித்து உங்கள் கருத்து என்ன?
-விநாயகமூர்த்தி, அறந்தாங்கி.

இவற்றை ‘மக்கள்’ ஊடகங்கள் என்பது எவ்வகையிலும் பொருந்தாது என்றே கருதுகிறேன். அவர்கள் யாரும் மக்களுக்கான செய்திகளைத் தருவதை விட தம் எஜமானர்களின் கருத்தை, விளம்பரங்களை மக்களிடம் திணிக்கவே பணி செய்கின்றனர். மாறாக, மக்களுக்காக இதய சுத்தியோடு குரல் கொடுக்கும் ஊடகங்கள் ஏதும் இல்லை.

ஒரு எடுத்துக்காட்டு, அண்மையில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் வெடிகுண்டு வீசி தாக்கியதாக ஒரு செய்தி வந்தது. ஆனால், தி இந்து நாளிதழ் என்ன சொன்னது தெரியுமா, “புலிகளுக்கு வெடிமருந்து கடத்தியபோது வெடித்ததாக” செய்தி சொன்னது. அதன் ஆசிரியர் என். ராம் சந்திரிகா இலங்கை அதிபராக இருந்தபோது ஸ்ரீலங்கா ரத்னா விருது பெற்றதோடு நன்றிக்கடனோ இது என நாம் எண்ண வேண்டியிருக்கிறது.

குருவாயூர் கோயில் பிரச்சினை பார்த்தீர்களா?
- வள்ளி, மந்தைவெளி.

பகுத்தறிவுக்கும், படிப்பறிவுக்கும் சம்பந்தமே இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டு இது. மத்திய அமைச்சர் வயலார் ரவியின் மகன் தனது துணைவியாருடன் கோயிலினுள் சென்றதற்காக, சுத்திகரிப்பு பூஜை நடத்தப்பட்டுள்ளது. இதில் விவாதிக்கப்பட ஏதும் இல்லை. உடனடியாக அந்த சாமியார்கள் மீது தீண்டாமை ஒழிப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். மத நம்பிக்கை இல்லாதவர்களும் வேற்று மதத்தினரும் உள்ளே போகக்கூடாது என்றால் - அதை கண்டறிய ஒரு கருவி அமைக்கப்பட்டால் நிச்சயம் வெளியே நிற்பது இந்த பூசாரிகள் கூட்டமாகத்தான் இருக்கும்.

இங்கே, மட்டும் என்ன வாழ்கிறது. சிதம்பரத்தில் தேவாரம் பாட முடியவில்லை. நெல்லையப்பர் சந்நிதியில் தமிழ் வழிபாடு இல்லை. இன்னமும் நிறைய சொல்லலாம்.

மக்களுக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது என்பதற்காக அமெரிக்க அணுசக்தி போர்க்கப்பலை சென்னை துறைமுகம் வரவிடாமல் தடுக்க முதலில் குரல் கொடுத்தது சி.பி.எம் தானே. வேறு யாருக்கு இந்த உணர்வு வரும்?
- பினு, புதுச்சேரி.

சி.பி.எம். முக்கு மக்கள்மேல் இருக்கற அக்கறைய பாத்து ரொம்ப புல்லரிக்குதுண்ணே. ரெண்டு அணுஉலை இருக்குவு, அது கதிர்வீச்சால மக்களுக்கு கேடு செய்யுமுண்ணு என்னா அக்கறை!

ஆனா அண்ணே! ரெண்டு அணு ஒலைக்கு இந்த கூப்பாடு போடற சி.பி.எம் கூடங்குளத்துல சுமார் 7 முதல் 10 அணுஉலைகள இந்திய அரசு அமைக்குதே. அத கண்ணமூடி ஆதரிக்கியது ஏன்?

ரெண்டு பெருசா? பத்து பெரிசா? நம்ம தோழர்கள் கிட்ட கேட்டு சொல்லுங்களேன்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com