Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Thendral
Puthiya ThendralPuthiya Thendral Logo
ஆகஸ்ட் 2007

எங்கள் பேனாக்கள் வீழாது!
- ந. வித்தியாதரன்


இலங்கையில் ஊடக சுதந்திரம் மிக இக்கட்டான நிலைக்குச் சென்றுள்ளது. குறிப்பாகத் தமிழ் ஊடகவியலாளர்கள்- அதுவும் "உதயன்", "சுடரொளி" ஊடகவியலாளர்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்களுடைய ஊடகப் பணியாளர்கள் ஐந்து பேர் கடந்த ஒரு வருடத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். எங்களுடைய களஞ்சியப் பகுதி எரிக்கப்பட்டிருக்கிறது. அலுவலகம் தாக்குதலுக்குள்ளாகி இருக்கிறது. அந்த வரிசையில் இக்கட்டுக்களையும் நெருக்கடிகளையும் நாம் தொடர்ந்து எதிர்நோக்கி வருகிறோம்.

ஆனால் ஒரு விடயத்தை அரசாங்கமும் மற்ற தரப்பினரும் நோக்க வேண்டும். எந்த ஒரு அச்சுறுத்தலுக்காகவும் மசிந்து கொடுத்தோ அதனையொட்டி எமது ஊடகங்களை நாம் வெளியிடாமல் இருக்கவில்லை. தொடர்ந்து தமிழ் மக்களுடைய அபிலாசைகளை எங்களுடைய பத்திரிகைகள் வெளிப்படுத்துவதிலே வீறுகொண்டு செயற்பட்டு வந்திருக்கின்றன. அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதன் காரணமாக தொடர்ந்து நெருக்கடிகளை நாம் சந்தித்து வருகிறோம் என நினைக்கிறேன்.

எங்களுடைய யாழ்ப்பாண அலுவலகத்தில் பணியாற்றுகிற பிரதம ஆசிரியர் மற்றும் சிரேஷ்ட செய்தியாளர் குகநாதன் ஆகியோர் ஏறத்தாழ ஒரு வருடமாக உயிர்ப் பாதுகாப்பு கருதி அலுவலகத்தை விட்டு வெளியே வராமல் அலுவலகத்திற்குள்ளேயே இருந்து கொண்டு சிறை வைக்கப்பட்ட நிலையிலேயே பத்திரிகைகளை வெளியிட்டு வருகின்றனர்.

கொழும்பில் எங்களுக்கான நெருக்கடி உச்சத்தை அடைந்துள்ளது. இருப்பினும் பத்திரிகைகளை வெளியிடுவதில் நாம் மிகுந்த ஆர்வத்துடனும் ஊக்கத்துடனே உள்ளோம். நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நாம் பத்திரிகைகளை வெளியிடுவோம்.
தொடர்ச்சியாக கொழும்பிலிருந்தும் யாழ்ப்பாணத்திலும் தமிழ் மக்களின் அபிலாசைகளை உரிமைக்கான போராட்டத்தை ஒரு துணிச்சலோடு வெளிப்படுத்தி வருகின்ற ஊடகம் என்ற வகையில் அந்த ஊடகத்தின் தொடர் செயற்பாட்டை சிதைப்பதற்காக எங்களின் உயிருக்கு உலை வைக்கக்கூடும்.

ஒரு போராளியின் துப்பாக்கி சரிகின்ற போது அதனை மீண்டும் தூக்க ஒரு புதிய போராளி வருவதைப் போல் உரிமைக்காகக் குரல் கொடுக்கின்ற எங்களுடைய தமிழ் ஊடகவியலாளர்களின் பேனாக்கள் சரிகின்றபோது அடுத்தவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.

"உதயன்" நாளிதழின் எத்தனையோ பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்ட போதும்
"உதயன்" வெளிவராமல் இருந்தது இல்லை.

கடந்த வருடம் மே 2 ஆம் நாள் ஐந்து ஆயுததாரிகள் உள்நுழைந்து 200-க்கும் அதிகமான துப்பாக்கி வேட்டுகளைத் தீர்த்து எமது ஊழியர்கள் இருவரை கொலை செய்து- இருவரை காயப்படுத்தி எங்களுடைய கணணிகளை அழித்தனர். கொலை செய்யப்பட்ட ஊழியர்களின் சடலங்கள் மரண விசாரணைகளின் பின்னர் அதிகாலை 5 மணிக்குத்தான் எமது அலுவலகத்திலிருந்து பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் அதற்கு முன்னர் அதிகாலை 3 மணிக்கே கொலை செய்யப்பட்ட ஊழியர்களின் படங்களோடு- அந்தக் கொடூர சம்பவத்தைத் தாங்கிய செய்திகளுடன் "உதயன்" வெளியாகியிருந்தது.

"சுடரொளி" அலுவலகத்தின் மீது மாலை 5.45 மணிக்கு கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. வாசலில் இருந்த காவலாளி கொல்லப்பட்டார். ஆனால் கொலை செய்யப்பட்ட காவலாளியின் படங்களுடனான விபரங்களுடன் அன்று இரவே திருகோணமலை மட்டக்களப்புக்குரிய ‘சுடரொளி" பத்திரிகைகள் தொடருந்தில் அனுப்பி வைக்கப்பட்டன.

ஆகவே, எக்காரணத்தை முன்னிட்டும் ஊடகவியலாளர்கள் தங்களது வரலாற்றுக் கடமையிலிருந்து ஒதுங்கிவிடவும் முடியாது- விலகிவிடவும் முடியாது.

என்னுடைய உயிருக்கு உலை வைக்க முயற்சிப்பவர்கள் ஒன்றைக் கருதவேண்டும். என்னை அழிப்பதன் மூலம் - என்னைக் கொல்வதன் மூலம் தங்களுடைய இலக்கில் அவர்கள் எதனை அடைவார்களோ அதனையும்விட மோசமான விளைவுகளை பத்திரிகையாளர்களை அழிக்கின்ற விவகாரம் அதனைச் செய்யத் தூண்டுபவர்களுக்கு ஏற்படும் என்பதுதான் இன்றைய நிலைமை.

சிவராம் கொல்லப்பட்டபோது இருந்த நிலையைப் பார்க்க இன்று மிகவும் மோசமான நிலைதான் உள்ளது. தென்னிலங்கையை அனைத்துலகம் உற்றுப்பார்த்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் இது போன்ற ஒரு தவறை செய்வார்களேயானால்-நான் இருந்து என்னுடைய சமூகத்துக்கு செய்ததைவிட நான் மறைந்து என்னுடைய சமூகத்துக்கு செய்யக் கூடியது போன்ற நிலையைத்தான் ஏற்படுத்தும்.

ஆகவே இதற்காக அஞ்சுவதனைக் காட்டிலும் துணிவாக எதிர்கொள்வதே மேலானது- முறையானது. ஆகையால் இந்த விடயத்தை பொருட்டாகக் கருதவில்லை. தற்போதும் வழமை போல் உந்துருளியில் அலுவலகத்துக்குச் சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பி வந்திருக்கிறேன்.

ஐந்து அனைத்துலக ஊடகவியலாளர்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் வருகை தந்து இலங்கையில் ஊடக சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரம் பற்றி தன்னுடைய ஆய்வை முடித்திருக்கிறது. உலகத்திலேயே மிக மோசமான பத்திரிகை சுதந்திரம் மீறல் உள்ள நாடாக இலங்கையை அவர்கள் அடையாளம் கண்டிருக்கின்றனர்.

அதிலும் உலகிலேயே பத்திரிகைத்துறைக்கு மிக ஆபத்தான இடமான யாழ்ப்பாணத்தை அவர்கள் கண்டிருக்கின்றனர். யாழ்ப்பாணத்திலே "உதயன்" அலுவலகம் எதிர்கொண்டிருக்கும் மோசமான நிலையை அவர்கள் கரிசனையோடு சுட்டிக் காட்டியிருக்கின்றனர்.

தனக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல் குறித்தும் அதன் பின்னணி மற்றும் எதிர்விளைவுகள் குறித்தும் ஆஸ்திரேலியா, சிட்னியிலிருந்து ஒலிபரப்பாகும் "தமிழ்முழக்கம்" வானொலிக்கு இலங்கை "உதயன்", "சுடரொளி" நாளிதழ்களின்
ஆசிரியர் ந.வித்தியாதரன் அளித்த சிறப்பு நேர்காணல்:

தப்பியோடும் இராணுவ 'வீரர்கள்'

கடந்த 2005 ஆம் ஆண்டு சனவரி 1 ஆம் நாளில் இருந்து 2007 ஆம் ஆண்டு ஏப்பிரல் 20 ஆம் நாள் வரையிலான காலப்பகுதியில் இலங்கை இராணுவத்தில் இருந்து 93 அதிகாரிகளும் 10,060 இராணுவத்தினரும் தப்பியோடியுள்ளதாக இராணுவத்தினரின் பதிவேடுகள் கூறுகின்றன.

சிலர் தொடர்ச்சியான பொது மன்னிப்புக்களின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர்.
கடந்த சனவரி 20 ஆம் நாள் முதல் பெப்ரவரி 12 ஆம் நாள் வரை இறுதியான பொது மன்னிப்பு வழங்கப்பட்டிருந்தது. இதன் போது 3,979 பேர் மீண்டும் சேவைக்கு திரும்பியிருந்தனர்.

இதனுடன் சமர்களில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த படையினரின் வெற்றிடங்களும் உள்ளன.

சாதாரணமாக ஒரு பற்றாலியன் 855 பேரைக்கொண்டதாக இருத்தல் வேண்டும். ஆனால் சிறிலங்காப் படையில் உள்ள சில பற்றாலியன்கள் 400 - 500 துருப்புக்களை கொண்டதாகவே உள்ளன.

யாழ்ப்பாணத்தில் ...

சிறிலங்கா கடற்படையினரின் பாரிய தடை நடவடிக்கைகளால் யாழ். மக்கள் தொகையில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த 9 விழுக்காடு கடற்றொழிலாளர்கள் தங்களது தொழிலைச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் 17,498 குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.

யாழின் மொத்த மக்கள் தொகையில் 51 விழுக்காட்டினர் (98,525 குடும்பத்தினர்) விவசாய செய்கையில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் அதி உயர் பாதுகாப்பு வலய நடைமுறைகளால் பல நிலங்கள் கையகப்படுத்தபட்டு விட்டன. 6,627 ஹெக்டேர் பரப்பளவில்தான் விவசாய செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

அதேபோல் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் பெருமளவில் மோதலினால் கொல்லப்பட்டு விட்டன. பல விவசாயத் தொழிலாளர்கள், அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக கால் நடைகளை விற்பனை செய்து விட்டனர்.

மீன்பிடித் தொழில் மற்றும் விவசாய செய்கைகள் வீழ்ச்சியடைந்தமையால் பொருட்களின் விலை உயர்ந்தே உள்ளன. ஒரு கிலோ மீன் தற்போது 600 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ கோழிக்கறி விலை 700 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு முட்டையானது 23 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com