Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Thendral
Puthiya ThendralPuthiya Thendral Logo
ஆகஸ்ட் 2007

சித்த மருத்துவத்தின் எதிர்காலம்
- கு. பச்சைமால்


இயற்கையில் பிறந்த உயிர்களுக்கு ஏற்படும் இடையூறுகளுக்கு எல்லாம் இயற்கைக்குள்ளேயே தீர்வும் உண்டு என்பது இயற்கை விதி.

விலங்குகள், பறவைகள் போல மனிதனும் இயற்கையின் கொடையாகிய தாவரங்களைத் தம் நோய்க்கு மருந்தாகக் கண்டுணர்ந்து பயன் கொண்டான். இதன் தொடர்ச்சியும் வளர்ச்சியுமே தமிழ் மருத்துவம், சித்த மருத்துவம்.

மூலிகைகளையே மருந்தாகப் பயன்படுத்தியதால் "மூலிகை மருத்துவம்" என்றும், இடைக்காலத்தில் சித்தர்கள் வளர்த்ததால் "சித்த மருத்துவம்" என்றும், அயலார் ஆட்சிக்காலங்களில் தமிழ்நாட்டில் புகுத்தப்பட்ட ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, அலோபதி போன்ற பிறநாட்டு மருத்துவமுறைகள் இங்கு செல்வாக்குப் பெற்றபின் 'தமிழ்நாட்டு மருத்துவம்' என்ற உரிமையில் தம்மை நிலைப்படுத்திக் கொள்ள "நாட்டு மருத்துவம்" என்றும் இது அழைக்கப்பட்டது.

தமிழ் மருத்துவ அறிஞர்களைத் தொல்காப்பியர் "நோய் மருந்து அறிஞர்" (பொருள் - 492) என்றும், நற்றிணைப் பாடலில் நற்றங் கொற்றனார்" மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன்" (136) என்றும், திருவள்ளுவர் "நூலோர்" (941) என்றும் போற்றியுள்ளனர்.

சங்ககால அரசர்களின் ஆட்சிச் சுற்றமான ஐம்பெருங் குழுவில் மருத்துவர் இடம்பெற்றிருந்தார். புலவர்கள் மருத்துவர்களாக விளங்கியமைக்கு மருத்துவன் தாமோதரனார், மருத்துவன் நல்லச்சுதனார் போன்றவர்கள் சான்று. மணிமேகலை பெண் மருத்துவரை "மருத்துவி" என்று சிறப்பித்துள்ளது.

தலைமுறை தலைமுறையாக வந்த தாவரவியல் அறிவினால் "மருந்து கொள்மரம்" (புறம் 180) எவை எவை என்பதைத் தேர்ந்துள்ளனர். "மருந்தாகித் தப்பா மரம்" - (217) பற்றித் திருவள்ளுவர் பேசுகிறார். தமிழர் தங்கள் நிலப்பிரிவுகளுக்கும் போர்த்துறைகளுக்கும் மரப்பெயர்களையே சூட்டியுள்ளனர். இவையெல்லாம் தற்செயல் நிகழ்வு அல்ல. மரபுவழிப் பெருமை ஆகும்.

"இரும்புச்சுவை கொண்ட விழுப்புண்" பெற்ற "வடுவாழ் மார்பில்", "நெட்டை" என்னும் நெடுவெள் ஊசியால் தைத்து சிகிச்சை செய்யும் மருத்துவமுறைப் பற்றிப் பரணரின் பதிற்றுப்பத்து (42) - பாடல் குறிப்பிடுகிறது. இம்மரபில் "அகத்தியர் சத்திராயுத விதி" என்ற சித்தர் நூல் உள்ளது. குலசேகராழ்வார் "வாளால் அறுத்துச் சுடும் (திவ்விய பிரபந்தம் - 691) மருத்துவ முறை பற்றிப் பேசியுள்ளார்.

தமிழ் மருத்துவத்தைத் தொடர்ந்து - வளர்த்துப் பேணுவதற்காகச் சங்கம் மருவிய காலங்களில் திரிகடுகம், சிறுபஞ்ச மூலம், ஏலாதி என்று மருத்துவத்தை இலக்கியத்தோடு இணைத்துள்ளனர். பழனிமலை முருகன் படிமத்தைப் போகர் மருந்தினால் செய்துள்ளார். தஞ்சை வைத்தீசுவரன் கோவில் இறைவனுக்கு வைத்தியநாதன் என்று பெயர் சூட்டியுள்ளனர். வாழ்வியல் கலைத்துறைகள் 64-ல் வைத்திய சாத்திரத்தையும் சேர்த்துள்ளனர்.

ஒன்பது வாயில் உடல்பெற்ற மனிதனுக்கு அதை நெடிது உய்க்கும் வழியான (குறள் 943) மருத்துவமுறையை வகுத்தும் பகுத்தும் துறைகளில் தேர்ந்த மருத்துவர்களும் மருத்துவ நூல்களும் இருந்தமையை அறிகிறோம்.

பெண் மருத்துவம், சூல் மருத்துவம், பாலவாகடம், நச்சு மருத்துவம், விலங்கு வாகடம், வர்ம மருத்துவம், காயகல்பம், நாடி சாத்திரம், யோகம் போன்றவை தமிழ் மருத்துவத்தின் தனிச்சிறப்பாகும்.

நீண்டகாலம் மருந்துகளைக் கெடாமல் பாதுகாக்கும் முறைகளையும் அறிவித்துள்ளனர். சூரணம்-3 மாதம், செந்தூரம் - 10 மாதம், கட்டு-50 வருடம், கழங்கு-100 வருடம் பயன்படுத்தலாம் என்பது அனுபவ உண்மை. அறம் பாடிய வள்ளுவனார் "மருந்து" என்று ஓர் அதிகாரம் படைக்கும் அளவுக்கு தமிழ் மருத்துவம் சிறப்புப் பெற்றுள்ளது.

இவ்வளவு சிறப்புகளும் சமூக முக்கியத்துவமும் உடைய சித்தமருத்துவம் இன்று நலிந்துபோய்க் கிடக்கிறது. அதன் எதிர்காலம் கேள்விக் குறியாக உள்ளது.

மிகவும் மலிவான-பக்க விளைவுகள் இல்லாத-எவ்வளவு நாட்பட்ட நோய்களையும் குணப்படுத்த வல்ல-இயற்கை முறையிலான - மக்கள் வாழும் நிலம், காலநிலை ஆகியவற்றுக்கு ஏற்புடைய மருத்துவ முறையை அழிய விடுவது மிகப்பெரிய இழப்பாகும்.

உலகளாவிய ஆட்சி பெற்றுள்ள அலோபதி இந்திய அளவில் செல்வாக்குப் பெற்றுள்ள ஆயுர்வேதம் ஆகியவற்றால் சித்த மருத்துவம் மிகவும் நெருக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. சில ஆயிரம் பரம்பரை மருத்துவர்களால் அதன் உயிர் பிடித்துப் போடப்பட்டுள்ளது. அவர்களுக்கு அரசு அங்கீகாரமோ மரியாதையோ இல்லை.

சில கட்டிடங்களைக் கட்டுவதாலோ-விழாக்கள் நடத்துவதாலோ-இரண்டு கல்லூரிகளை நடத்துவதாலோ ஒரு வாழ்வியல் துறை வளர்ச்சி பெற்றுவிடாது. அதற்கான திட்டமிட்ட பெரும் முயற்சியும் அரசுகள், அறிஞர்கள் பங்களிப்பும் வேண்டும்.

ஆயுர்வேதத்துக்கு இந்திய அளவில் 300-க்கு மேற்பட்ட கல்லூரிகளும் நூற்றுக்கணக்கான ஆய்வு மையங்களும் தனியே அமைச்சுத்துறைகளும் உள்ளன. இந்திய மருத்துவத்துக்கென ஒதுக்கப்படும் நிதியில் பெரும் பகுதியை அதுவே பெற்றுக் கொள்கிறது. சித்தா, யுனானி, ஹோமியோபதி, நேச்சுரோபதி, அலோபதி ஆகிய ஐந்து துறைகளுக்கும் பொதுவான பெயராக இருந்த "இந்திய மருத்துத்துறை" என்ற பெயரை "ஆயுஷ்" என்று மாற்றிப் பிற துறைகளின் முகம் அழிப்புச் செயலும் நடைபெற்றுள்ளது.

சித்த மருத்துவத்தை அதன் மரபு வழியில் ஆனால் 'புதிய அறிவியல் முறைகளில் மறு ஆக்கம் செய்ய வேண்டும். இந்த சவலைக் குழந்தையைக் கடமையுள்ள தமிழக அரசு தத்தெடுக்க முன்வர வேண்டும். சித்த மருத்துவ வளர்ச்சிக்கு ஏற்பட்டுள்ள தடைகளை முதலில் அகற்ற வேண்டும். "நவீனமுறை" என்ற பெயரில் சித்த மருத்துவத்துக்குள் ஊடுருவியுள்ள அலோபதி மருத்துவ உபயோகத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். சித்தம் சித்தமாகவே வளரவும் வாழவும் வேண்டும். மூல நூல்களும் அனுபவ முறைகளும் தமிழில், தமிழர்களிடமே இருப்பதால் தமிழ் வழியிலேயே இயக்கப்பட வேண்டும்.

நாடு முழுவதும் உள்ள பரம்பரை மருத்துவர்களின் மருத்துவ அனுபவங்கள், மருந்து செய்முறைகளைக் கவனமாகப் பதிவு செய்ய வேண்டும். பழைய நூல்கள், மருத்துவர் அனுபவ அறிவு ஆகியவற்றின் அடிப்படையில் மருத்துவ மூலிகைகளைக் கண்டறிய வேண்டும். மூலிகைகளுக்கு இடம் தோறும் பெயர் வேறுபாடு உள்ளது. இதற்கான முழு அகராதி தொகுக்க வேண்டும். பொதிகைமலை, கொல்லிமலை, கோடைமலை, பழனிமலை, வேளிர்மலை, மருந்து வாழ்மலை போன்ற மலைச்சாரல்களில் மிகப்பெரிய அளவில் மிகப்பெரிய முதலீட்டில் மூலிகைத் தோட்டங்களும் சித்த மருத்துவத் தொழிற்சாலைகளும் தொடங்க வேண்டும். வேண்டிய அளவு விளம்பரங்கள் செய்து சித்த மருந்துகளை மக்களிடையே அறிமுகப்படுத்தி சந்தை வாய்ப்பை உருவாக்க வேண்டும். இப்பொழுது இத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழில் முனைவோரையும் ஊக்குவிக்க வேண்டும்.

மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்கவுள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். அவற்றுள் பாதி அளவுக்கேனும் சித்தமருத்துவக் கல்லூரியாக இருக்க வேண்டும். அவற்றில் பரம்பரை வைத்தியர்களையும் உரிய முறையில் தேர்வு செய்து பணியில் அமர்த்த வேண்டும். சித்தமருத்துவப் பல்கலைக் கழகம் அமைக்க வேண்டும். தமிழ் அறிஞர்களையும் சித்தமருத்துவ அறிஞர்களையும் கொண்ட குழு அமைத்து மருத்துவச் சுவடிகளைத் தொகுத்து ஒப்பாய்வு செய்து தகுதியானவைகளைப் பதிப்பிக்க வேண்டும். அவற்றிலிருந்துதான் பாட நூல்களை உரைநடையில் உருவாக்க வேண்டும்.

இவற்றுக்கெல்லாம் நிதி ஆதாரங்களைத் தமிழக அரசும் மத்திய அரசும் ஏற்படுத்த வேண்டும். பிற மருத்துவ முறைகளில் மருந்துகள் இல்லாத பல உயிர்க்கொல்லி நோய்களுக்கு சித்தத்தில் மருந்துகள் உள்ளன. அவற்றை உலகுக்கு அறிமுகப்படுத்தி சர்வதேச உதவிகள் பெறமுடியும். கோடிக்கோடியான நிதியை இத்துறையில் பெருக்கினால்தான் இப்பணிகளை மேற்கொள்ள முடியும். அரசு மனம் வைத்தால் முடியாதது ஒன்றும் இல்லை.

தமிழ் மருத்துவம் எல்லாத் தகுதிகளும் உடையது. காலத்தை வென்ற வரலாறு உடையது. "நாலாவது தமிழ்" என்று போற்றத்தக்கது. இன்று நலிந்துள்ள அதை வளர்ப்பதும் காப்பதும் தமிழக அரசின் கடமை. இதற்குப் பேராதரவு அளிக்க வேண்டியது மருத்துவர்கள், தமிழ் அறிஞர்கள் மற்றும் தமிழ் மக்களின் முதல்கடமை.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com