ஆராரோ ஆரிரரோ
டி. லூமா பெர்னட்
ஆராரோ ஆரிரரோ
கண்ணே! நீயுறங்கு
ஆரிரரோ ஆராரிரரோ
பொன்னே! நீயுறங்கு
தங்கமே! தங்ககுடமே
மங்காத மாணிக்கமே!
மங்கையாய் பிறந்தேனே என்று
சிங்கார திருவுருவே நீ அழுகிறாயோ?
கள்ளமில்லா மனதுடன்
வெள்ளையாய் சிரிக்கும் கண்ணே
கள்ளிப்பால் தந்துனை மாய்ப்பேனென
துள்ளித்துள்ளி அழுகிறாயோ?
மண்ணில் நீ வளர்ந்து
கண்ணீரில் நனைவாயோயென
பெண்பூவே பொக்கை வாய்திறந்து
கண்மூடி நீயும் அழுகிறாயோ?
சீர்கெட்ட சமுதாயத்தில்
சீரழியுமோ வாழ்வென
சிந்தை நொந்து கண்ணே
சிரிக்க மறந்து அழுகிறாயோ?
பாவம் நிறைந்த உலகில்
பரிதவித்து போவேனே என்று
பச்சைக் கிளியே!
பவளவாய் திறந்து அழுகிறாயோ?
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|