Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Thendral
Puthiya ThendralPuthiya Thendral Logo
ஆகஸ்ட் 2007

அரசு ஆட்சி செய்ய வேண்டும்! வணிகமல்ல!
வெண்மைப் புரட்சியின் தந்தை குரியன் நேர்காணல்


இந்திய உழவர்களின் வாழ்வில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்திய ஏதாவது ஒரு திட்டம் உண்டு என்றால் அது 'வெண்மைப் புரட்சி' மட்டும் தான். அதன் தந்தை என்று போற்றப்படுபவர் திரு. வர்க்கீஸ் குரியன். சுமார் 25 இலட்சம் உழவர்களை பங்குதாரர்களாகக் கொண்டு அமுல் என்ற கூட்டுறவு பால் உற்பத்தியாளர் நிறுவனத்தை உருவாக்கினார் அவர். அது நாட்டிலேயே மிகப்பெரிய உணவுப்பொருள் உற்பத்தி நிறுவனமாகத் திகழ்கிறது. பத்ம விபூசன் விருதுபெற்ற இவர் சர்ச்சைக்குரிய முறையில் ஓராண்டிற்கு முன்பு குஜராத் மாநில கூட்டுறவு பால் விநியோகிப்பாளர் சங்கத்திலிருந்து வெளியேறி/வெளியேற்றப்பட்டு தற்போது தேசிய பால்வள வாரியம் மற்றும் ஊரக மேலாண்மை நிறுவனத்தின் தலைவராக உள்ளனர். தெகல்காவிற்கு அளித்த நேர்காணலின் தமிழ்வடிவம் இது. - தமிழில் : அசுரன்

அமுல் என்ற வெற்றியை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

இவை அனைத்தையும் செய்த அமுலின் நிறுவனர் - தலைவரான திரிபுவன்தாஸ் பாட்டீலிடம் கேட்டால், அவர் அமுலின் வெற்றிக்கு குரியன் தான் காரணம் என்று கூறுவார். நீங்கள் என்னிடம் கேட்டால், நான் திரிபுவன் தாஸ் குப்தா தான் காரணம் என்பேன். ஆனால், உண்மை என்ன என்றால் நானின்றி அவரோ, அவரின்றி நானோ இதனை செய்திருக்க முடியாது. நாங்கள் ஒரு நல்ல இணையாக இருந்தோம்.

அப்போது அவர் குஜராத் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்தார். அவர் அமைச்சராக விரும்பவில்லை. ஆனால், குஜராத்தில் யார் அமைச்சராக வேண்டும் என்று தீர்மானிப்பவராக இருந்தார். அவர் மிக செல்வாக்கான மனிதர், ஆனால், அமுலை நடத்துவதில் என்னை சுதந்திரமாக அனுமதித்தார்.

இந்திய கூட்டுறவில் உள்ள தவறுகள் என்ன?

இந்திய கூட்டுறவில் உள்ள சிக்கல் என்னவென்றால் தமக்கு என்ன தேவை என்று தமக்கானதை முடிவுசெய்யும் சுதந்திரம் அவற்றுக்கு இல்லை. பதிலாக, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக உள்ள, அரசு அதிகாரியானவர் - அரசு என்ன எதிர்பார்க்கிறதோ அதை செய்யக்கூடியவராக உள்ளார். இவரே தீர்மானிக்கும் சக்தியாக உள்ளார்.

ஆனால், பாட்டீல் தலைவராக இருந்தபோது எந்தவொரு பதிவாளரும் அமைப்பின் செயல்பாட்டில் தலையிடவில்லை. அமுலை பொறுத்தளவில் நான் என்னை உழவர்களின் ஊழியனாக கருதினேன். அது முழுமையாக உழவர் அமைப்பாக இருந்தது. ஒரு கூட்டுறவில் உறுப்பினர்களுக்கே முடிவெடுக்கும் அதிகாரம் வேண்டும். அரசு அதில் ஏதும் செய்யக்கூடாது. தமக்காக முடிவெடுக்கும் திறனுடையவர்களாக உள்ள இடத்தில் கூட்டுறவுகள் வெற்றிபெறும்.

கூட்டுறவுகள் சிறப்பாக செயல்பட என்ன செய்யவேண்டும்?

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் என்ற பதவியை ஒழிக்கவேண்டும். அதுபற்றி ஏதும் தெரியாத ஐ.ஏ.எஸ் அதிகாரிகளே அந்த பதவியை ஆக்கிரமிக்கின்றனர். அதோடு, மத்திய வேளாண்துறை செயலாளராக வேளாண்மை பற்றி எதுவுமே தெரியாதவர்களே இருப்பது ஏனென்று எனக்கு புரியவில்லை. அவர் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி, இதற்காக என்ன செய்வார் ?

இது ஐ.ஏ.எஸ் பதவியை ஒழிக்கவேண்டிய நேரம் என்று கருதுகிறேன். கூட்டுறவை நடத்தக்கூடிய திறமை, தகுதிவாய்ந்த எண்ணற்றோர் நமது நாட்டில் இருக்கின்றனர். ஆனந்தில் உள்ள ஊரக நிர்வாக நிறுவனம் இந்த தேவைக்காகவே உருவாக்கப்பட்டது. அது நூற்றுக்கணக்கான குரியன்களை உருவாக்கியுள்ளது. அது நாட்டிலேயே மிகத்திறமையானவர்களை பெற்றுள்ளது.

பால் கூட்டுறவு நிறுவனங்களின் செயல்பாட்டை மேம்படுத்த ஏதேனும் வாய்ப்பு உள்ளதா?

ஒரு நாளைக்கு இருமுறை விற்கக்கூடிய தேவை உடைய ஒரே வேளாண்பொருள் பால்தான். இது ஆப்பிள், ஆரஞ்சு போல பருவகாலத்தில் மட்டும் கிடைப்பதல்ல. பாலை உடனடியாக விற்காவிட்டால் அது இழப்பாகிவிடும். எனவே பாலுக்கு கூட்டுறவு தேவையாக இருக்கிறது. நாம் மிகவும் சிறப்பாகவே செயல்படுகிறோம். ஆனால், கூட்டுறவு முறையை இன்னமும் வலுப்படுத்தவும் விரிவுபடுத்தவும் வேண்டும். பால்வளத்துறையில் அதிகார வர்க்கத்தை ஒழித்து உழவர்களை பொறுப்பில் அமர்த்தினால் தான் இது சாத்தியம். உழவர்கள் வேண்டுமானால் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்ய நிபுணர்களை வேலைக்கு அமர்த்தலாம். நான் உழவர்களின் ஊழியன்தான். அவர்கள் தான் எனக்கு ஊதியம் தருகிறார்களே தவிர அரசு அல்ல. உழவர்கள் தான் இந்த வணிகத்தின் பொறுப்பாளர்கள். இந்த மாதிரியை வேளாண் துறையிலும் பின்பற்றலாம்.

அமுல் மாதிரி என்றால் என்ன?

ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பால் உற்பத்தியாளர் சங்கம். அது பாலை சேகரிக்கும். ஒரு மாவட்டத்தில் உள்ள பல சங்கங்கள் சேர்ந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்கி, ஒரு பால் பதப்படுத்தும் நிலையம் அமைக்கும். இவ்வாறான பல கூட்டமைப்புகள் சேர்ந்து ஒரு இணையத்தை அமைக்கும். அதுவே விநியோக/விற்பனை முகவாண்மையகமாக இருக்கும். இப்படித்தான் இந்தியா உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக ஆனது. இது தற்செயலாக நடந்ததல்ல. அதற்காக நிறைய திட்டமிடப்பட்டது.

இந்த நாட்டில் நடக்கும் உழவர்கள் தற்கொலையை தடுக்க ஏதேனும் வழி இருக்கிறதா?

எங்கெல்லாம் உழவர்கள் கூட்டுறவை பெற்றிருந்தார்களோ அங்கே தற்கொலைகள் நடக்கவில்லை. எங்கே உழவர் நிறுவனங்கள் இல்லையோ எங்கே உழவர்கள் (பேரம்) பேசமுடியாது இருக்கிறதோ, எங்கே தமது பொருளை சந்தைப்படுத்த முடியாமல் இருக்கிறதோ, எங்கே இடைத்தரகர்களால் சுரண்டப்படுகிறார்களோ அங்குதான் அவை நடக்கின்றன.

எங்கே அமுல் இருக்கிறதோ அங்கே தற்கொலை இல்லை. நாடு முழுவதும் கூட்டுறவுகளை உருவாக்குவதில் தான் தீர்வு அடங்கியிருக்கிறது. நீங்கள் உழவர்களின் நிர்வாகத் திறமையை குறைத்து மதிப்பிடாதீர்கள்.

இந்தியாவில் ஊரக - நகர வேறுபாடு உள்ளதே. நகர்ப்புறம் சார்ந்த வளர்ச்சிதானே நடக்கிறது? இதற்கு மாற்று உள்ளதா?

இந்த வினாக்களை எல்லாம் இங்கே - நகரில் தான் நீங்கள் கேட்கிறீர்கள். ஆனால், மெக்சான மாவட்டத்தில் நீங்கள் இந்த வினாவை கேட்கமாட்டீர்கள். நாங்கள் அங்கு இரண்டாவது அமுல் பால்பண்ணையை தொடங்கினோம். அது அனந்தில் இருந்து 100 மைல் தொலைவில் உள்ளது. அது ஒரு வறண்ட பகுதி. அங்கு நிலத்தடி நீர்மட்டம் 700 அடிக்கு கீழே இருப்பதால் வேளாண்மையும் இல்லை.

அங்கு அடிக்கல் நாட்ட மொரார்ஜி தேசாயை அழைத்தோம். அவரோ, "இங்கே என்ன செய்கிறீர்கள்? இங்கே நிலத்தடி நீர்மட்டம் 700 அடிக்கு கீழே இருப்பது தெரியுமா! இங்கே எவ்வாறு பால் கிடைக்கும்?" என்றார்.

நான் சொன்னேன், இங்குள்ள கூட்டுறவு தலைவர் சொன்னார், நான் அவரை நம்புகிறேன் என்று. நான் ஒரு உழவனை நம்பினேன். அவன் சொல்வது என்னவென்று அவனுக்குத் தெரியும்.

ஆனால், தேசாயோ, "அது எப்படி நடக்குமென்று எனக்குத் தெரியவில்லை" என்றார். அது இந்தியாவின் மிகப்பெரிய பால்பண்ணையாக உள்ளது. இப்போது அங்கே நாளொன்றிற்கு 20 இலட்சம் லிட்டர் பால் பதப்படுத்தப்படுகிறது.

இது இந்தியாவின் திறன் என்னவென்றும் அதிகார வர்க்கத்திடம் இல்லாதது என்னவென்றும் காட்டுகிறது. அதிகாரவர்க்கமானது மக்களின் வேலையாளாக மாறவேண்டும். ஆனால், அவர்கள் மாறமாட்டார்கள், போகவும் மாட்டார்கள்,

உங்களின் வெற்றிகரமான மாதிரிக்கு பதிலாக தனியார் பங்கேற்பு தானே வேளாண்மை உட்பட அனைத்து துறைகளிலும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இது இந்தியாவில் சரிப்படுமா?

அமுல் உருவாக்கப்பட்ட நேரத்தில் கிளாக்கோ, நெஸ்ட்லே, ஹார்லிக்ஸ் மற்றும் காட்பரி ஆகியவை இந்தியாவில் இருந்தன. அமுல் என்ன செய்தது? அமுல் அவர்களை கோவணத்துடன் விரட்டியடித்தது. நான் இதை தனியார் பங்கேற்புடன் செய்யவில்லை.

ஒப்பந்த முறை வேளாண்மையில், ஆதாயம் உழவர்களுக்கு, கிடைப்பதில்லை. அதேமுறையில், தனியார் வியாபாரிகள் உழவர்களிடமிருந்து விளைச்சலை வாங்கி, சந்தையில் ஆதாயத்துடன் விற்கின்றனர். அந்த ஆதாயம் உழவர்களுக்கு கிடைப்பதில்லை. ஆனால், அமுல் நிறுவனத்தில் ஆதாயமானது ஒவ்வொராண்டும் உழவர்கள் அளிக்கும் பாலின் அளவுக்கு ஏற்ப விகிதப்படி பகிர்ந்து அளிக்கப்படும்.

சிறப்பு பொருளாதார மண்டலம் குறித்து உங்கள் கருத்து என்ன?

அமுல் மிகப்பெரிய வணிகம். யாரும் பெரிய வணிகத்தை உருவாக்கியதாக கருதவில்லை. இதன் ஆண்டு விற்று முதல் 4000 கோடி ரூபாயாகும். வேளாண்மையானது பொருளாதாரத்தில் 72% ஆக உள்ளது. அரசு இதற்குதான் உயர் முன்னுரிமை அளிக்கவேண்டும். அது தொழில்துறைக்காக நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது. அரசு என்பது ஆட்சிதான் செய்யவேண்டுமே தவிர வணிகம் செய்யக்கூடாது.

ஊரக இந்தியாவின் மேம்பாட்டிற்கு நீங்கள் பரிந்துரைக்கும் மாதிரி என்ன?

உழவர்களை பொறுப்பில் அமர்த்தினால் என்ன நடக்கும் என்று நாங்கள் பாலில் செய்துகாட்டியுள்ளோம். அதன் மூலம் நாம் உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக உருவாகியுள்ளோம். அது வேளாண்துறைக்கு போதுமான மாதிரியாகும். இதற்குமேல் வேறென்ன தேவை?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com