Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Thendral
Puthiya ThendralPuthiya Thendral Logo
ஆகஸ்ட் 2007

அம்பானி கட்டும் ஆடம்பர மாளிகை
இரா.அரிகரசுதன்


இந்தியாவிலேயே பணக்காரரான முகேஷ் அம்பானி, நாட்டின் வணிகத் தலைநகரான மும்பையின் மையத்தில் 27 மாடிகள் உடைய ஆடம்பர மாளிகையை கட்டி வருகிறார். இதன் மொத்த மதிப்பு 4500 கோடி ரூபாய் ஆகும். அதாவது இது 15 லட்சம் இந்தியர்களுடைய சராசரி ஆண்டு வருமானத்திற்கு சமமாகும்.

இந்த பகட்டான "வீட்டை" 70 இலட்சம் மக்கள் சேரியில் வாழும் ஒரு நகரத்தில் அம்பானி கட்டுகிறார். இங்கு நல்ல ஊதியம் பெறும் மத்தியதர வர்க்கத்தினர் கூட ஒரு நல்ல வீட்டை கட்டிக் கொள்ள முடியாது. ஆனால், அம்பானி யோ தன்னுடைய மாளிகைக்கு "அந்தீலியா" என்று ஒரு கற்பனைத் தீவின் பெயரிட்டுள்ளார்.

இந்தியாவின் மிகப் பெரிய தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் குழுமத்திற்கு முகேஷ் அம்பானியும் அவருடைய சகோதரர் அனிலும்தான் வாரிசுகள். ரிலையன்ஸ் குழுவில் முகேஷின் பங்கில் மிகப் பெரிய பெட்ரோ கெமிக்கல் பிரிவும், ஜவுளி உற்பத்தி ஆலைகளும் அடங்கியுள்ளன. 2007ம் ஆண்டு போர்பஸின் உலகப் பணக்காரர்கள் பட்டியலின்படி, 50 வயது முகேஷ் அம்பானி உலகின் 14வது பெரும் பணக்காரர் ஆவார்;

அம்பானியின் கட்டிடத்தின் முதல் 6 தளங்கள் வாகன நிறுத்ததிற்காக அமைக்கப்படும். அதற்கு மேல் தளங்களில் 600 பணியாட்கள் மற்றும் அவர்கள் குடும்பங்களுக்கான உறைவிடங்கள் அமைக்கப்படும். எட்டு மாடிகள் அல்லது தளங்கள் "கேளிக்கை, களிப்பிற்காக" ஒரு சிறு அரங்கும், நிறைய நீச்சல் குளங்களும் உட்பட அமைக்கப்படும்; இன்னும் பல மாடிகள் சுகாதார கிளப் ஒன்றையும், விருந்தினர்களுக்கான அறைகளையும் கொண்டிருக்கும்.

முகேஷ் அம்பானி, அவருடைய மனைவி, மூன்று குழந்தைகள் மற்றும் தாயார் மேல் நான்கு மாடிகளில் இருப்பார்கள்; கட்டிடத்தின் கூரையில் இருக்கும் மூன்று ஹெலிகாப்டர் தளங்களுக்கு எளிதில் இவர்கள் செல்ல முடியும்.

டைம்ஸ் ஆன்லைனிடம் பேசிய மும்பையை தளமாக கொண்ட கட்டிடக் கலை வல்லுனர் "எமது பெருஞ் செல்வந்தர்கள் முன்பு தங்களுடைய பணத்தை மறைத்து வைக்கும் பழக்கத்தை கொண்டிருந்தனர்... அவர்கள் மெர்சிடஸில் கூடச் செல்ல மாட்டார்கள்; சிறிய அடுக்கு வீட்டில் வசித்து வந்தனர். மிஸ்டர் அம்பானியின் தந்தை கூட ஒரு சிறிய அடுக்கு வீடுகள் நிறைந்த பகுதியில்தான் வாழ்ந்து வந்தார். அவர்கள் வரி போடுபவர்களை கண்டு அஞ்சினர். இப்பொழுது அந்த அணுகுமுறை மறைந்துவிட்டது; முகேஷ் பணம் சம்பாதித்துள்ளார்; அதை டாம்பீகமாக காட்ட முற்பட்டுள்ளார்" என்கிறார்.

இந்தியாவின் மக்கட்தொகையான 110 கோடியில் 75 சதவிகித்தினர் சொல்லொணா வறுமையில் வாழ்கின்றனர்; பல கோடி மக்கள் ஊட்டமற்ற உணவைத்தான் உண்கின்றனர்.

அதிகாரபூர்வ அரசாங்க மதிப்பீடுகளின்படி, குறைந்த தர, சேரி போன்ற வீடுகளில் வாழ்பவர்களின் எண்ணிக்கை கடந்த 20 ஆண்டுகளில் இரு மடங்காக, (1981ல் 2.79 கோடியில் இருந்து 2001ல் 6.18 கோடியாக) உயர்ந்து விட்டது.

தற்போதைய தலைவர்கள் இந்தியாவை உலக முதலாளித்துவ பொருளாதாரத்துடன் முழுமையாக இணைத்து, இந்தியாவின் ஒரு மலிவான தொழிலாளர் உழைப்பை கொண்டு உலக சந்தைக்கு உற்பத்தி செய்யும் நாடாக மாற்ற முற்பட்டுவிட்டனர்.

மற்றொருபுறம், மும்பையை தலைநகராகக் கொண்டுள்ள மகாராஷ்டிர மாநிலம் கடன் சுமையினால் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளைக் காண்கிறது. இந்த ஆண்டு மட்டும் பருத்தி உற்பத்தி செய்யும் மாநிலத்தின் விதர்ப்பாப் பகுதியில் 416 உழவர் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்தியாவில் மிக அதிகமாக சேரி வாழ் மக்களை கொண்டுள்ள மும்பை, ஆசியாவில் மிகப் பெரிய சேரியான தாராவியை கொண்டுள்ளது.

பல இலட்சம் மக்கள் வாழும் இச்சேரி, மும்பையின் அரசியல், பொருளாதார மேல் தட்டினரால் நகரத்தின் இழிவாகக் கருதப்படுகிறது. இந்த இழிவை "சேரி ஒழிப்பு" திட்டத்தின் மூலம் - அதாவது குடிசை வாழ் மக்களையும் வீடிழக்கச் செய்வதின் மூலம் (இந்தியாவின் பல நகரங்களிலும் செய்திருப்பது போல்) அகற்ற விரும்புகிறது.

அண்மையில் அரசாங்கம் 223 ஹெக்டேர் சேரியை சர்வதேச நில, கட்டிட வளர்ச்சியாளர்களுக்கு விற்பதற்காக ஏற்ப்பாடு செய்தது. தாராவியின் சேரி வீடுகள் ஏழு மாடி அடுக்கு மாளிகைத் தொகுப்புக்களாக, மருத்துவமனைகள், பள்ளிகள், பூங்காக்கள், மென்னடை பயிலும் தடங்கள், கோல்ப் விளையாட்டிற்கான வசதி உட்பட பலவும் இங்கு வரும் என்றும் இதற்கான மதிப்பீடு 10000 கோடி ரூபாய்க்கு மேல் என்றும் கூறப்படுகிறது.

தேசிய சேரிவாழ்வோர் கூட்டமைப்பின் தலைவரான அற்புதம் ஜோக்கின் சமீபத்தில் "இரக்கமற்ற முறையில் நிலப் பறிப்புத் திட்டம் மாநில அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டால் அது "குருதிக்குளியலுக்கு" வழிவகுக்கும் என்று அவர் எச்சரித்தார்.

மும்பையில் வீடுகள் கிடைப்பது அரிதாகவும், மிக அதிக விலையுடைதாகவும் மாறிவிட்ட நிலையில், தாராவியில் ஒரு சிறிய 8 - 10 அடி குடிசைவீடு 150,000 ல் இருந்து 300,000 ரூபாய் வரை மதிப்பிடப்படுகிறது. இதன் விளைவாக மும்பையின் சேரிவாழ் மக்களில் 42 சதவிகிதத்தினர் பத்து சதுர மீட்டருக்கும் (108 சதுர அடிக்கும்) குறைந்த இடத்தில் வசிக்கும் கட்டாயத்தில் உள்ளனர்; கிட்டத்தட்ட 800 பேர் ஒரே கழிப்பறையைத்தான் பயன்படுத்த வேண்டியுள்ளது.

இழிவானது தாராவியின் சேரி அல்ல, ஆடம்பரம் கொப்பளிக்கும் அம்பானியின் புதிய மாளிகைதான்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com