Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Thendral
Puthiya ThendralPuthiya Thendral Logo
ஆகஸ்ட் 2007

தாய்மை
- இ. புளோறா


பொழுது புலர்ந்து விட்ட மகிழ்வில் புல்வெளிகளில் படுத்துறங்கிய பனித்துளிகள் சூரியனின் வருடலால் தம்மை மாய்த்துக் கொண்டிருந்தன. பூத்துக் குலுங்கி நின்ற மலர்களை வட்டமிடும் வண்டுகளின் ரீங்காரம் தொடர்ந்து கொண்டிருந்தது. பூமித்தாயின் மடியில் தவழும் இயற்கையின் அழகுக்கு என்றும் இளமை தான்.
இந்த இளமையின் அழகில் மனம் லயித்த சங்கரியின் இதயத்தில் ஏனோ அமைதி இல்லை. குழப்ப அலைகள் இதயத்தில் அடித்துக் கொண்டே இருந்தன.

ஏதோ ஒரு சிலருக்குத்தான் வாழ்வில் எல்லாம் அமைந்து விடுகிறது. சிலருக்கு அடிப்படை தேவைகள் கூட அமைந்து விடுவதில்லை. பெண்ணின் பெருமை அவள் தாய்மையில் தான் இருக்கிறது. ஆனால் எனக்கு மட்டும் தாய்மையின் தகுதி வாய்க்காதது ஏன்? எத்தனையோ மருத்துவர்களின் சோதனை எவ்வளவோ மருந்துகள் ம்கூம்.. ஒரு பயனும் தரவில்லை.

எவ்வளவோ நேர்த்திக்கடன்கள் நேர்ந்திருக்கிறேன். ஒன்றும் ஏன் பலனளிக்கவில்லை? எடவுளின் சந்நிதியில் என் மன்றாட்டு மட்டும் ஏன் ஏற்றுக் கொள்ளப்படவில்லை?

அந்தக் காலையில் சங்கரியின் குண்டு கண்களில் சூடான கண்ணீர்த்துளிகள் பெருகியது. ஆக்கி வைத்த சமையலை தரையில் கொட்ட, சுத்தப்படுத்திய வீட்டை அழுக்காக்க, அடுக்கி வைத்த பாத்திரங்களை ஒழுங்கு குலைக்க, என் அலங்காரத்தை குலைக்க என் வீட்டில் மட்டும் ஏன் குழந்தை இல்லை? மனது வெறுத்துப் போனது சங்கரிக்கு, குடும்ப உறவுகளின் குத்தல் பேச்சு கேட்டு மனம் புண்ணாகிப் போனது.

கணவன் ராம்குமாரின் அன்பு மட்டும் என்னைத் தாங்கவில்லையென்றால் என்றே செத்துப் போயிருப்பேன்...

"சங்கரி..' டிபன் ரெடியா?" என்ற கணவனின் குரல் கேட்டு இயல்புக்கு வந்தாள்.

"இன்னும் ஆகலீங்க?

"எனக்கு டைம் ஆச்சி, இதுவரைக்கும் என்னப் பண்ணியிட்டிருந்த?"

"இதோ இப்போ ரெடியாகும்ங்க". கணவனை வழியனுப்பும் பரபரப்பில் தன் சோகத்தை கொஞ்சம் நேரம் ஒதுக்கி வைத்தாள் சங்கரி.

நேரம் மதியம் இரண்டு மணி. அம்பாள் மண்டபத்தில் அமர்ந்து அவள் அருளும் அமைதிக்காக கண்மூடி இருந்தாள் சங்கரி. மூடிய அவள் இமைகளை தாண்டி ஒழுகிய கண்ணீர்த் துளிகளை சுண்டுவிரலால் தட்டினாள்.

சங்கரி முப்பத்தி ஐந்து வயதை தொட்டிருந்தாள். எடுப்பான உயரம், உயரத்திற்கேற்ற சதையுடனும் மிளிர்ந்தாள். இளம் பச்சை கலரில் கட்டிய நூல்புடவை அவளுக்கு இன்னும் எடுப்பாகத் தெரிந்தது. இடுப்புக்கு கீழே வரை தவழ்ந்த முடியை இறுக்கமாய் பின்னி மல்லிகைச்சரம் சூட்டியிருந்தாள். மை தீட்டாத கண்கள், நீண்டமூக்கில் ஜொலித்த ஒற்றைக்கல் மூக்குத்தி, நெற்றியில் சாத்திய குங்குமம், அவளது உப்பிய கன்னத்தில் பொட்டிட்டது போன்ற தெரிந்த மச்சம், குவிந்த உதடுகள், சின்னதான ஜிமிக்கி ஆடிய காதுகள் என அவளை வர்ணித்தால் வர்ணித்துக் கொண்டே போகலாம். அவளைக் காண்போர் ராம்குமார் மீது பொறாமைபடுவார்கள் என்பது உண்மைதான்.

சாய்ந்திருந்த அவளின் மனத்தில் அம்பாளின் முகமே தெரிந்தது. பல்வேறு துன்ப புயல்களை வாழ்வில் சந்திக்கும் மனிதர்களுக்கு இறைவன் என்னும் சுமைதாங்கியே ஆறுதல். அந்த ஆறுதலை யாசித்த சங்கரியின் மனதில் ஏதோ அமைதி பூத்தது.

அம்பாள் சந்நிதானம் தாண்டி வந்து கொண்டிருந்தபோது அங்கு தெரிந்த கூட்டம் என்னவென்று எட்டிப்பார்க்க செய்தது. அங்கே குப்பைமேட்டில் அழுதபடி தெரிந்த குழந்தை சங்கரியின் அடிவயற்றை என்னமோ செய்தது. வேடிக்கை பார்த்த எவரும் அழுகின்ற குழந்தையை தூக்க துணியவில்லை, ஆனால் இவளுக்குள் தாய்மையின் உணர்வுகள் உடம்பெல்லாம் பூத்தது. அக்குழந்தையின் அழுகை இவள் இதயத்தை வெறுமையாக்கியது. கூட்டத்தை விலக்கி கொண்டு குப்பையில் நடந்து குழந்தையை குனிந்து தூக்கி மார்போடு அணைத்து முத்தமிட்டாள்.

காலையில் இருண்டது போன்றிருந்த வீடு இப்போது குழந்தையின் வருகையால் ஒளியாக இருந்தது. அதன் அழுகை சத்தம் அந்த வீட்டின் பாடலால் ஒலித்துக் கொண்டிருந்தது. சங்கரிக்கு தன்மீதே நம்பிக்கை வரவில்லை. நானா இப்படி நடந்துக் கொண்டேன்? கணவன் எத்தனையோ முறை குழந்தை தத்து எடுக்க சொன்னாப்போது ம் மறுத்த நானா இப்படி? ஆச்சரியமாக இருந்தது.

ராம்குமாரின் முகத்தில் தவழ்ந்த மகிழ்ச்சியை ரசித்த சங்கரி, "என்னங்க நான் செய்தது உங்களுக்கு குற்றமா தோணல்லியே" என்றாள். இதுல என்ன குற்றம் இருக்கு, நீ இப்பமாவது நல்ல முடிவை எடுத்துருக்கேறேண்ணு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். சங்கரி நீ வாழ்வது உனக்காக ஒவ்வொரு மனிதனோட மகிழ்ச்சியும் வேறு யார்க்கிட்டேயோ இல்லை. மாறாக அவனவன் மகிழ்ச்சி அவனிடம் தான் இருக்கிறது.

இதைத்தான் ஒரு மனிதனை சுகப்படுத்தும் சொர்க்கமும், நரகமும் அவனுக்குள்ளே இருக்குண்ணு சொல்லுவாங்க. ஒரு பொண்ணோட தாய்மை உடம்பு சம்பந்தப்பட்டதுண்ணு யாரு சொன்னது? மனசு தான் தாய்மை. உடம்பளவில் தாய்மைக் கொண்ட எத்தனையோ பெண்களுக்கு இதயத்தில் தாய்மை இல்லாமல் இருக்கிறது. ஏதோ ஒன்றிரண்டு பிள்ளைகளை பெற்றெடுத்தவுடனே அவள் தாய்மை ஆய்ட்டாண்ணு எப்படி சொல்லமுடியும்? நீ தூக்கிட்டு வந்த இந்த குழந்தையின் தாய் எந்த வகையில் தாயாக முடியும்? இந்த குழந்தையை வேடிக்க பார்த்த எவருக்காவது தாய்மை உணர்ச்சி இருந்திருந்தால் நீ வரும் வரை இந்தக் குழந்தை அங்கு இருந்திருக்காது.

தாய்மை என்பது உடம்பளவில் பேசப்படுவது மட்டுமன்று. அது இதய சம்மந்தப்பட்டதும் கூட, ஆக என் சங்கரி குட்டியின் தாய்மை எனக்குத்தெரியும். அது வேறு யாருக்கும் தெரிய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்றுப் பேசிய கணவன் ராம்குமாரின் அன்பில் மகிழ்ந்த சங்கரி அவனை கட்டிக்கொண்டு அழுதாள்.
"நீ இப்போ எதுக்கு அழுற? முதல்ல அழுறதை நிறுத்து, சங்கரி நீ என்னை கவனிக்கறது, ரொம்ப அன்பாக கவனிக்றது, என்மேல கொண்ட கரிசனம் எல்லாமே உன் தாய்மையை எனக்கு என்றைக்கோ எடுத்துக்காட்டிச்சுதுண்ணு உனக்கு தெரியாது.

ஒரு பொண்ணுக்கு இருக்க வேண்டிய முதல் பண்பே அன்பு தான். அன்பு என்ற அணிகலன் சுமந்த எந்தப் பொண்ணுமே தாய்மை நிலையை தொட்டுவிட்டாள் என்பது மிகவும் உண்மை. அன்னைத்தெரசா உடம்பளவில் ஒரு குழந்தைக்கு கூட தாயா ஆகல்ல, ஆனால் இந்த வையகமே அன்னை என்று அழைக்க அவர்களின் இதயக்கருவறை சுமந்த அன்பு தான் காரணம். எந்த பெண்ணிடம் அன்பு இல்லையோ அவள் ஆயிரம் பிள்ளையை பெற்றாலும், அவள் தாய் என்ற தகுதியாகமாட்டாள். ஆனால் நீ அந்த தாய்மையின் எல்லாத் தகுதியும் கொண்டவள். நீ தூக்கி கொண்டு வந்த இந்த குழந்தைக்கு மட்டுமன்று, அன்பு தேவைபடுற ஒவ்வொரு குழந்தைக்கும் அம்மாவாக உன்னால் முடியும்" என்று தோளில் சாய்ந்த சங்கரிக்கு ராம்குமார் ஆறுதலாக பேசி கொண்டிருக்க...

அழுகின்ற குழந்தையின் குரலைக்கேட்டு தாய்மையின் இதயத்தோடு ஓடினாள்... சங்கரி என்ற தாய்...


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com