Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Thendral
Puthiya ThendralPuthiya Thendral Logo
ஆகஸ்ட் 2007

ஏழ்மை
சிற்றார். பழ. தேவராஜன்


காலகாலமாய் புரட்சிகளுக்கும், எழுச்சிகளுக்கும் அடித்தளமாய் அமைந்தது இல்லாமையும், இயலாமையும் தான். ஆம், உலகத்தில் மேல்தட்டு, கீழ்தட்டு என எத்தனை மட்டங்கள் இருந்தாலும், வணிகர்களுக்கும், பொருட்களுக்கும் தெரியுமா?

இவன் ஏழை, இவன் பணக்காரன் என்று. இந்த வேறுபாட்டு விகிதம் அதிகரிக்கும்போது தான் புயலென எழுகிறது முடியாத கூட்டம். இவர்கள் தீவிரவாதிகள் என்று ஒடுக்கப்படுகிறார்கள். ஆனால், அவர்களின் ஆதங்கம், அடித்தளம் எல்லாம் அரை சாண் வயிற்றின் பசித்'தீ' தணித்தல்தான்...

சமீபத்தில் ஒரு பணக்கார முதலாளி தொழிலாளியின் மாதச்சம்பளத்தை முடிந்த அளவு குறைத்து வாதாடிக் கொண்டிருந்தார். தொழிலாளி சம்பளம் கட்டுப்படி ஆகாது என சொல்லி, வேலைக்கு வரத்தயாரில்லை என்றான்.

நான் தனியே அழைத்து வந்து காரணம் கேட்டபோது "ஐயா, எனக்கும் என் முதலாளிக்கும் பவர் சோப் ஒரே விலைதான். அவருக்கு இதை எப்படி புரியவைப்பது" என்பது விளங்கவில்லை என்றான். எனக்கு எங்கோ உறைத்தது. அவன் சொல்வது சரிதானே.

இந்த தேசத்தின், ஏன் இந்த உலகத்தின் பொருட்கள் எல்லாம் வணிகர்களால் விலைநிர்ணயம் செய்யப்பட்டு அவை அதே விலைக்கு கறாராக விற்கப்படுகிறது. ஒரு ஏழை அந்தப் பொருளை வாங்கமுடியுமா? என யாரேனும் நினைத்துப் பார்த்ததுண்டா?

சமீபத்திய விலைவாசி ஏற்றம் மிகக் கடுமையாக இந்த சமுதாயத்தை பாதித்துள்ளது.

இன்னும் கிராமத்துப் பகுதிகளில் விவசாயக்கூலிகளுக்கு 100 ரூபாய்க்கு மேல் கொடுப்பதில்லை. ஆணுக்கு 90 முதல் 100 ரூபாயும், பெண்ணுக்கு 70 முதல் 80 ரூபாயும் கொடுக்கப்படுகிறது. ஆனால், ஒரு எண்ணெய் பாக்கட்டின் விலை 70 முதல் 100 ரூபாய்க்கு கம்பெனி வாரியாக விற்கப்படுகிறது. ஆக ஒரு ஏழையின் கூலியில் ஒரு பாக்கட் தரமான எண்ணெய் வாங்க முடியவில்லை என்றால், என்று தான் நமது பொருளாதாரம் சமச்சீராய் வளர்வது?

இன்னும் பேருந்து வசதியோ, மின்சாரம், மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகளோ இல்லாத எத்துணையோ கிராமங்கள் நாட்டில் உள்ளன. நிர்வாணத்தையே ஆடையாகக் கொண்ட ஆப்பிரிக்கா போன்ற நாடுகள் உள்ளன.

இவர்கள் எல்லோரும் ஒருவேளை உணவிற்கு கூட உத்திரவாதமின்றி வாழ்கிறார்கள். இவர்களின் வாழ்க்கை கேலிக்குரியதாக உள்ளது. கல்வி என்றால் என்னவென்றே தெரியாத பல குக்கிராமங்கள் இன்னும் கூட உள்ளன. தன் பெயரைக்கூட எழுதத் தெரியாத, அடிப்படை வசதி எதுவுமில்லாத ஏழைக்கும் சேர்த்துத்தான் விலைவாசியும், சட்டங்களும் இயற்றப்படுகின்றன. இவற்றை பழரசம் குடிக்கும் அதிகாரிகளும், பஞ்சு மெத்தையில் புரளும் அரசியல்வாதிகளும் அறிவார்களா?

இந்த பூமியில் தோன்றும் ஒவ்வொரு உயிரும் ஏதோ ஒரு வகையில் தனித்தன்மையுடன் காணப்படும். ஆனால் சுயம் இழந்து, தன்மீதே தன்னம்பிக்கை இல்லாமல் வாழும் உயிர்களை சந்தித்ததுண்டா? அருகிலுள்ள ஏதேனும் அகதிகள் முகாமிற்கோ, அடிமைகள் மறுவாழ்வு மையத்திற்கோ செல்லுங்கள்.

சமீபத்தில் ஒரு கல்லூரியில் சேர்வதற்காக இரு மாணவிகள் வந்தனர். அவர்கள் ஈழ அகதிமுகாமைச் சேர்ந்தவர்கள். பதினேழு வருடமாக தங்க இடமின்றி அகதி முகாமில் தஞ்சமடைந்து உள்ளனர். அரசு இவர்களுக்கு தேவையானவற்றை கொடுத்தாலும், இவர்கள் சொன்ன சில சம்பவங்கள் ஈரநெஞ்சத்தில் இடியாய் இறங்கியது.

மின்சார வசதியோ, கழிப்பறை வசதியோ இல்லாத அகதிமுகாம் இல்லங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பதே இல்லையாம். முகாமிலுள்ள பல ஆண்கள் கவலையை மறக்க மது அருந்திவிட்டு எங்கேதும் விழுந்து கிடக்க, பெண்கள் சொந்தபந்தங்களாலேயே அல்லது சக மனிதர்களிடமோ சிக்கி சீரழிவதாக கூறி அழுதனர்.

1200-க்கு 950-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற மாணவிகள் படிக்க வழியின்றி தவிப்பதும், சில நன்கு படிக்கும் மாணவர்கள் அந்த நாட்டின் சான்றிதழை மட்டுமே வைத்துள்ளதால், இங்கு பள்ளி, கல்லூரிகளில் சேரமுடியாமல் புலம்புவதும் வேதனையாக உள்ளது. இந்த நாட்டின் 'கல்வி அதிபர்களோ' இந்த மாதிரி ஏழைகள் மீது இரக்கம் காட்டுவதே இல்லை. உரிய கட்டணம் அல்லது நன்கொடை கொடுத்தே ஆக வேண்டும் என்ற நிலையிருப்பதால், பல மாணவ, மாணவிகள் மேல்படிப்பு இன்றி அவதிப்படுகின்றனர். ஆக, கல்வியின் விலை அதிகரித்து விட்டதால் இங்கு பல இளைஞர்களின் வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது.

மருத்துவத்தைப்பற்றி கேட்கவே வேண்டாம். ஆங்கிலவழி மருத்துவமனைகளின் வாசலை மிதிப்பதற்கே பல ஆயிரங்கள் தேவைப்படுவதால், உரிய மருத்துவம் இன்றி பலர் மடிவதை பார்க்கிறோம். கிடைக்கும் இலவச மருத்துவம் நிவாரணத்திற்கு உதவுமே தவிர, நிரந்திர தீர்வு தருமா? என்றால் சந்தேகமே.

இப்படி பல வகையிலும் எட்டாத உயரத்திலுள்ள பொருட்களை நோக்கி, கொட்டாவிவிட்டே நொந்துபோன ஏழைகள் இந்த நாட்டின் பொருளாதார எச்சங்களாக, மனித மிச்சங்களாக வாழ்வது என்பது மிகப்பெரிய விசித்திரமே.

சத்தமின்றி எகிறும் விலைவாசி, அந்நிய முதலீட்டுப்போட்டி என ஆதிக்க உணர்வுகள் பெருகிவிட்டதால் கீழ்மட்டத்து ஏழைகள் படாத பாடுபடுகின்றனர். அதே நேரத்தில் கூலிவேலை செய்வதற்கு ஆட்கள் இல்லாததால் கூலி பெருகிவிட்டது. இதனால் நடுத்தர வர்கத்தினரும் பாதிக்கப்படுகின்றனர். இப்படி ஒன்றின் தொடர்ச்சியாக ஒன்று என வாழ்வு இன்னும் கீழாக சென்று கொண்டிருக்கிறது.

மேலோட்டமாக பட்ஜெட் போடுவதும், கணக்கு காட்டுவதும் வேண்டுமானால் மதிப்பாக இருக்கக்கூடும். ஆனால் அடிப்படை வசதியின்றி ஒரேயொரு மனித உயிர் தவிக்குமெனில், அதுவரையிலும் எந்த ஒரு வளர்ச்சியும் 'ஏட்டுச்சுரைக்காயே' என்பதை உணர்வதே இன்றைய அவசியம். வலிகள் இல்லாத வாழ்க்கை எல்லோருக்கும் கிடைக்கும் வரை 'புதிய தென்றல்' புயலென வீசும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com