Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Thendral
Puthiya ThendralPuthiya Thendral Logo
ஆகஸ்ட் 2007

நான் விஞ்ஞானி அல்ல!
ஜே.சி. டேனியல் நேர்காணல்


நாட்டின் முதுபெரும் காட்டுயிரியலாளர் ஜே.சி. டேனியலுக்கு இப்போது 80 வயது ஆகிறது. சர்வதேச அளவில் 'ஜே.சி.' என்று அறியப்படும் ஜீவநாயகம் சிரில் டேனியல் நாகர்கோவிலில் பிறந்தார். திருவனந்தபுரத்தில் வளர்ந்தார். இளம் வயதிலேயே இயற்கையுடன் அவருக்கு இணக்கமான ஓர் உறவு ஏற்பட்டது. காட்டுயிர்கள் மீதான பிணைப்பை அவரது அன்னையும், கல்வித் தேடலை அவரது தந்தையும் தொடர்ந்து ஊக்குவித்தனர்.

சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை படித்தார். டாக்டர் சாலிம் அலியின் பணியால் உத்வேகம் பெற்ற டேனியல், 40 ஆண்டுகளுக்கு மேல் பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தில் பணியாற்றினார். 1950களில் காப்பாளராக பணியைத் தொடங்கிய அவர், 1991ம் ஆண்டில் அந்த கழகத்தின் இயக்குநராக (கழகத்தின் முதல் இயக்குநர்) ஓய்வு பெற்றார். அதற்குப் பிறகு, கெளரவ உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், தற்போது கெளரவச் செயலாளராக இருக்கிறார்.

யானைகள் பற்றி ஆராய்ந்தவர்களில் முதன்மையானவர். பறவைகள் வலசை போதல் பற்றி விரிவாக ஆராய்ச்சி செய்துள்ளார். நீர்நில வாழ்விகள், ஊர்வன, பறவைகள், பாலுாட்டிகள், அவற்றில் குறிப்பாக அழியும் ஆபத்தில் உள்ள ஆசிய யானை, காட்டு எருமை, புலி, வரையாடு, உப்புநீர் முதலை, கானமயில் போன்றவற்றையும், கோடியக்கரை, கிழக்குத் தொடர்ச்சி மலை, மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் உயர்ந்த பகுதிகள், சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தாரில் உள்ள தீபகற்ப காடுகளையும் ஆராய்ந்துள்ளார்.

உலக பாதுகாப்பு அமைப்பு (World Conservation Union), உலக ஊர்வன மாநாடு ஆகியவற்றிலும், குரங்கினம், ஆசிய யானை, முதலை, பாம்புகள் ஆகியவற்றுக்கான மதிப்புமிக்க நிபுணர்கள் குழுக்களிலும் இடம்பெற்றுள்ளார். இந்திய காட்டுயிர் நிறுவனத்தின் (Wildlife Institute of India) பயிற்சி, ஆராய்ச்சி, கல்வி குழுக்களில் இடம்வகித்துள்ளார்.

பீட்டர் ஸ்காட் பாதுகாப்பு விருது, சாஞ்சுவரி இதழ் வாழ்நாள் சாதனையாளர் விருது, ஆசிய யானைகள் பற்றி ஆராய்ந்ததற்காக கேரள வேளாண்மை பல்கலைக்கழக விருது, இந்திராகாந்தி பரியாவரன் புரஸ்கார் போன்றவற்றை பெற்றுள்ளார்.

இந்திய ஊர்வன (The Book of Indian Reptiles), ஒரு நுாற்றாண்டு இயற்கை வரலாறு (A Century of Natural History), வளர்ந்துவரும் நாடுகளில் பாதுகாப்பு (Conservation in Developing Countries) ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார். Indian Wildlife - Insight Guides புத்தகத்தில் சிங்கங்கள் பற்றிய பிரிவை எழுதியுள்ளார். சாலிம் அலியின் The Book of Indian Birds புத்தகத்தின் 12வது மறுபதிப்பைக் கொண்டு வந்தார்.

பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழக ஆய்வு இதழின் நிர்வாக ஆசிரியராக 37 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறார். இயற்கை ஆர்வலர்களுக்காக ஹார்ன்பில் என்ற இதழைத் தொடங்கினார். 2001ம் ஆண்டு இந்த இதழ் வெள்ளிவிழா கொண்டாடியது. தற்போது 31ம் ஆண்டாக வெளிவந்து கொண்டுள்ளது. சாங்சுவரி ஏசியா இதழில் வெளியான டேனியலின் நேர்காணலின் தமிழ்வடிவம் இது.
- தமிழில் : ஆதி

இந்தத் துறையில் உங்களுக்கு எப்படி ஆர்வம் துாண்டப்பட்டது?

குறைந்த அளவே கல்வி பெற்றாலும், நன்கு அறிவுபெற்றிருந்த எனது தாய்தான், இயற்கையான பொருட்கள் மீது தனி மதிப்பு உருவாக முக்கிய காரணமாக இருந்தார். கல்வியாளரும், கொலம்பியாவில் முனைவர் பட்டம் பெற்றவருமான எனது தந்தை, திட்டமிட்டு ஆழ்ந்து சிந்திப்பதன் மதிப்பை எனக்குக் கற்றுக் கொடுத்தார்.

வீட்டில் நிலவிய சூழல் எனக்கு கிளர்ச்சியை உருவாக்கியது.

எருக்கஞ்செடி, அரளிச் செடிகளில் இருந்து கம்பளிப்புழுக்களை சேகரித்து வளர்க்கும் எனது பழக்கத்தை தாய் ஊக்குவித்தார். திருவனந்தபுரம் கடற்கரைகளில் கிடைக்கும் சின்னஞ்சிறு பொருட்கள், கிளிஞ்சல்களை சேகரிப்பதிலும் எனக்கு கட்டுக்கடங்காத ஆர்வம் இருந்தது.

எப்படி டாக்டர் சாலிம் அலியைச் சந்தித்தீர்கள்?

பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தில் 1950ல் நான் ஆராய்ச்சி உதவியாளராக சேர்ந்தேன். 1951ல் அந்த முதியவருடன் பெராரில் இருந்த சிகால்டா பகுதிக்குச் சென்றேன். இரவுஉணவுக்குப் பின் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்தபோது, திருவனந்தபுரத்தில் உள்ள முனைவர் ஜீவநாயகத்தை உங்களுக்குத் தெரியுமா என்று என்னிடம் கேட்டார்.

(மாநில கல்விக் குழுவின் செயலாளராக இருந்த எனது தந்தை ஜீவநாயகமும், பறவைகள் கணக்கெடுப்பு நடத்தச் சென்றிருந்த சாலிம் அலியும் சுற்றுலா விடுதிகளில் முன்பு தங்கியபோது சந்தித்து இருந்தனர்.)

அவர்தான் எனது தந்தை என்று நான் கூறியபோது, எங்கள் இருவரிடையே இருந்த உருவ ஒற்றுமையைக் கண்டு அவர் வியந்துபோனார். அடுத்து வந்த ஆண்டுகளில் அவரிடம் படித்த எல்லா மாணவர்களிடமும் இந்தக் கதையை அவர் கூறினார்.

பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தில் சேர விண்ணப்பித்தபோது, நானோ, எனது தந்தையோ அவர்கள் இடையே நிலவிய நட்பு பற்றி எதுவும் குறிப்பிடாதது அவரிடம் மிகுந்த நல்லெண்ணத்தை ஏற்படுத்தியது. அதற்குப் பிறகு சாலிம் அலியுடன் நான் ஏற்படுத்திக் கொண்ட உறவு வாழ்நாள் முழுவதும் நீடித்தது.

இயற்கை வரலாற்றுக் கழகத்தை எப்படி மாற்ற வேண்டும் என்று நீங்கள் கனவு கண்டீர்கள்?

இயற்கை வரலாற்றுக் கழகம்தான் எனது வாழ்க்கை. என்னைப் பொருத்தவரை அது வெறும் நிறுவனம் மட்டுமல்ல. பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகம், மனிதகுல நன்மையை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு, குறிப்பிடத்தக்க சாதனைகளை செய்த ஒரு குழு. அதன் தற்போதைய உறுப்பினர் எண்ணிக்கை 5,000ல் இருந்து 20,000 ஆக உயர வேண்டும். அப்பொழுதுதான், யாரும் கேள்விக்கு உள்ளாக்காத வகையில் இயற்கை பாதுகாப்பை வலியுறுத்தும் சுதந்திர குரலை கழகம் எழுப்ப முடியும்.

இயற்கை வரலாறு தொடர்பாக எந்த வகையான அறிவு கிடைக்கும், அதை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதற்கு எடுத்துக்காட்டு தருவீர்களா?

வெப்பமண்டல மழைக்காடுகளில் வாழும் உயிரினங்களை எடுத்துக் கொள்வோம். இங்கு, உயிரின வகைகள் அதிகமாக இருந்தாலும், அவற்றின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. ஆனால் இங்குதான் சிறந்த பல்லுயிரிய வளம் இருக்கிறது.

நிலநடுக்கோட்டுப் பகுதியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்த மலைப்பகுதிகளுக்கு சென்றால், பல்லுயிரிய வளம் குறைந்துபோகிறது. ஆனால், சுவாரசியமான வகையில், காட்டுயிர்களின் வகைகள் குறைவாக இருந்தாலும், எண்ணிக்கையோ அதிகமாக இருக்கிறது.

காட்டுயிர் பாதுகாப்பு செயல்திட்டங்கள் மேற்கு உலகில் உள்ள குளிர்ந்த காட்டுப் பகுதிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை. தென்கிழக்கு ஆசியாவில் உள்ள வெப்பமண்டலக் காடுகளில் அவை பலனளிக்காது. இங்கு இருப்பவை நிலநடுக்கோட்டு மழைக்காடுகள், பசுமைமாறாக் காடுகள், ஈரப்பதம் மிகுந்த இலையுதிர் காடுகள், வறண்ட இலையுதிர் காடுகள், வறண்ட முட்காடுகள், புல்வெளிகள் போன்றவையே.

மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களில் உள்ள மழைக்காடுகள், பசுமைமாறாக் காடுகளை எடுத்துக் கொண்டால், மர உச்சிகளில் வாழும் உயிரினங்கள், குறிப்பாக குரங்கினங்கள் அதிகமுள்ளன. ஒரு உயிரின வகையின் சூழலியல் தேவைகளை புரிந்து கொள்ள தாவரவியல் அறிவு மட்டுமின்றி, அங்குள்ள பூச்சிகள், ஊர்வன, பறவைகள், பாலுாட்டிகள் போன்றவற்றின் இருப்பைப் பொருத்து அமைகிறது என்பதை உணர வேண்டும். இவற்றையெல்லாம் தாண்டி குரங்கினத்துக்குத் தேவைப்படும் மரஉச்சிகளில் பசுமை எப்பொழுதும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஏனென்றால், இந்தியாவில் பருவமழை கடுமையாகப் பெய்யும்போது, நன்கு பாதுகாக்கப்பட்ட மரங்கள் மண்அரிப்பைத் தடுக்கின்றன.

இந்திய துணைக்கண்டத்தில் உள்ள ஒவ்வொரு சூழல் அமைப்பும் தட்பவெப்ப நிலையைப் பொருத்து பசுமைமாறாக் காடுகள் முதல் மிதமான வெப்பம் நிலவும் காடுகள், ஆர்டிக் பனிப்பிரதேச சூழ்நிலைகள் வரை உள்ளன. இவற்றை தனித்தனியாக ஆழ்ந்து ஆராய்வதுடன், அவற்றை நிர்வகிக்க தனிப்பட்ட மேலாண்மை செயல்திட்டங்களை கலந்தாலோசித்து உருவாக்க வேண்டும். இந்த வகையான அறிவை உருவாக்குவதுடன், உறைவிடங்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும் போது, நமது பல்லுயிரியம் செழித்திருக்கும் என்று உறுதியாகச் சொல்லலாம்.

நீங்கள் ஏற்கெனவே பலமுறை கூறியது போல, நாம் மேற்கொண்டிருப்பது உயிரினங்கள் அழிவதை காக்கும் போராட்டம். இது போன்ற செயல்திட்டங்கள் இந்தியாவில் பலனளிக்கும் என்று நினைக்கிறீர்களா?

மண்ணியல் கால அளவீடுகளின்படி, உயிரின வகைகள் முற்றிலும் அழிந்து போவது என்பது பூவுலகின் ஓட்டத்தில் தவிர்க்க முடியாத அம்சம் என்பதை மறந்துவிடக் கூடாது. மறுபுறம் மனிதர்கள் ஏற்படுத்தும் அழுத்தங்களால் ஏற்படும் அழிவை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காகத்தான் நாம் போராடுகிறோம்.

1949ம் ஆண்டு சர்குஜா மகாராஜா, இந்தியாவின் கடைசி மூன்று சிவிங்கிப்புலிகளை சுட்டுக் கொன்ற செய்தியை கேட்டது, இப்பொழுதும் என் நினைவுகளில் பசுமை மாறாமல் இருக்கிறது. அந்த முரட்டு நடவடிக்கையை எதிர்த்த ஒற்றைக் குரல் சாலிம் அலியுடையது. இயற்கை வரலாற்றுக் கழக இதழ் தலையங்கத்தில் அவர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அப்பொழுது வேறு பாதுகாப்பு இயக்கங்கள் எதுவும் இல்லை.

இன்று, 51 ஆண்டுகளுக்குப் பிறகு, ஓரிடத்தில் மட்டுமே வாழும் உயிரினங்களுக்கு இதே தலைவிதி நேரலாம் என்ற ஆழ்ந்த அக்கறை திரும்பியுள்ளது. கிர் காடுகளில் உள்ள சிங்கங்கள், டாசிகாமில் உள்ள ஹாங்கல் மான், மணிப்பூரில் உள்ள புரோகொம்பு மான், கானாவின் கடினநிலப்பகுதியில் வாழும் பாரசிங்கா மான் போன்றவற்றுக்கு இதே கதி நேரலாம்.

புலி மற்றும் சிறுத்தைக்கு என்ன கதி நேரும்?

நான் ஏற்கெனவே குறிப்பிட்டதைவிட, இந்த இரண்டும் பரவலாக இருப்பவை. மேலே உள்ள உயிரினங்களுடன் ஒப்பிடுகையில் பாதுகாப்பானவை. சிறுத்தை எந்த நிலையிலும் பிழைக்கும் தன்மை கொண்டது. தற்போது பெருகிவிட்ட கள்ளவேட்டை வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்டு வளரும் வர்த்தக ரீதியிலான சுரண்டலை தடுத்து நிறுத்தினால்போதும். நமது சரணாலயங்கள், தேசிய பூங்காக்களில் சிறுத்தை பிழைப்பதிருப்பதை உறுதிப்படுத்தலாம்.

புலிகளைப் பொருத்தும் இதேநிலை சாத்தியமே. காடுகளை அழிக்கும் மனிதர்களின் கைகளில் இருந்து அவற்றின் உறைவிடங்களை காப்பாற்றுவதைப் பொருத்தே, புலிகளை பாதுகாப்பது அமைந்திருக்கிறது. புலிகளை காப்பதில் மட்டுமே கவனம் குவிக்கப்படும் நிலை என்னை கவலையுறச் செய்கிறது. புலிகளின் மீது குவிக்கப்படும் கவனம், வேறு பல ஆச்சரியம் அளிக்கும் உயிரினங்கள் உடனடியாக அழிந்து போவதை தடுக்கவிடாமல் நம் கண்ணை மறைத்து விடக்கூடும். புலிக்குக் கொடுக்கப்படும் கவனக்குவிப்பில் ஒரு பகுதியை, மேலே குறிப்பிட்ட ஓரிடத்தில் மட்டும் வாழும் உயிரினங்களிடம் காட்ட வேண்டும். அப்போது, 21ம் நுாற்றாண்டில் அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்டுள்ள அவை, அழிவின் வலையில் இருந்து தப்பிக்க முடியும்.

அப்படியானால், யானை?

யானையை நாம் காப்பாற்ற முடியும். யானைகளின் வலசை பாதை மற்றும் யானைகள் வாழும் தனிப்பகுதிகளை பாதுகாத்தால் இது சாத்தியம். அவற்றின் வலசை பாதையில் நாம் குறுக்கிட்டால்-ராஜாஜி தேசிய பூங்காவில் ஹரித்வார் மற்றும் டேராடூனில் சில்லா கால்வாய் குறுக்கிடுவதைப் போல குறுக்கிட்டால்-செயற்கை நெருக்கடியை ஏற்படுத்தி அவற்றின் உணவு ஆதாரம் குறைய காரணமாக ஆகிறோம் என்று அர்த்தம். இந்தச் சூழ்நிலையில், யானைகள் தங்கள் உறைவிடத்தை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தி அழிவு நிலைக்குக் கொண்டு செல்லக்கூடும். யானைகள் பாதுகாப்பு செயல்திட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ள யானைகளின் வலசை பாதைகள் குலையாமல் பார்த்துக் கொள்வதுடன், யானைகளின் தொகையை சிறப்பாக நிர்வகித்தால், அவற்றின் நீண்டகால பாதுகாப்பை உறுதிப்படுத்தலாம்.

வடகிழக்கு மாநிலங்களில் உலகின் மிகப் பெரிய அணைகளை கட்டப்போவதாக மின்துறை அமைச்சம் அறிவித்துள்ளது. வெள்ளங்களைக் கட்டுப்படுத்தவும், புனல்மின் திட்டத்தை செயல்படுத்தவும் தொடர்ச்சியாக அமைக்கப்படும் சிறு நீர்மின் திட்டங்களை நிறுவ வேண்டும் என்று நான் பரிந்துரைப்பேன். சிறிய அளவில் திட்டங்களை அமைப்பதன் மூலம் அதனால் உருவாகும் நலன்கள், தொலைவில் உள்ள நகரங்கள், தொழிற்சாலைகளை அடைவதைவிட உள்ளூர் மக்களை அதிகம் சென்றடையும்.

உயிரியல் திருட்டு எனும் மற்றொரு ஆபத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இந்த பயங்கரமான ஆபத்தில் இருந்து நாம் கட்டாயம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆனால் இப்பொழுதும் அக்கறையின்மை, செயலற்ற தன்மைகளைக் கொண்டிருக்கிறோம். எந்த வகையில் இந்தியாவின் பல்லுயிரிய வளம் கண்காணிக்கப்பட வேண்டும், நிர்வகிக்கப்பட வேண்டும் என்பதைப் பற்றி நாம் விவாதிக்க வேண்டிய தேவை உள்ளது. அப்படி விவாதிக்கப்பட்டால்தான் நமது தேசிய பாரம்பரியப் பெருமை சிறு லாபங்களுக்கு பலியிடப்படாது.

தற்போது அனைத்தையும் கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வரும் பன்னாட்டு கொள்ளை நிறுவனங்களின் கைகளில் இருந்து மருத்துவ தாவரங்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது. உலக வர்த்தக நிறுவனம் மற்றும் காப்புரிமை சட்டங்களின் ஆட்சி நடக்கும் இந்தக் காலத்தில், எதுவும் தாமதம் அடைவதற்கு முன், நாட்டின் இறையாண்மையை காக்கும் வகையில் நமது பல்லுயிரிய வளத்தை பாதுகாக்க சட்டத் தொகுப்பை உருவாக்க வேண்டும்.

இந்தியாவில் உள்ள அனைத்து கள உயிரியல் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பு உங்களுக்குக் கொடுக்கப்பட்டால், எந்தவிதமான மாற்றங்களை உருவாக்குவீர்கள்?

அலுவலக நேரம் சார்ந்தில்லாமல் வேலை பார்க்கும் பண்பாட்டை வளர்க்க வேண்டும். எந்த கல்வித் தகுதி தடைகளையும் வைக்காமல், எந்த துறையில் படித்தவரும் காட்டுயிரியல் படிப்பை தொடர்வதை ஊக்குவிக்க வேண்டும். எப்படியாவது சமாளித்து முனைவர் பட்டம் பெறுவதை மட்டும் நம்பி இருக்காமல், அறிந்து கொள்ளத் துடிக்கும் அறிவியல் ஆர்வத்தையே நான் ஊக்குவிப்பேன்.

எந்த பெரும் கல்வித் தகுதியும் இல்லாத நாட்டின் சிறந்த இயற்கையாளர்கள்தான், அத்துறைக்கு சிறந்த பங்களிப்பை செலுத்தியுள்ளனர். அந்த வகையில் முன்னணி தாவரவியலாளர், பாலுாட்டிகள் நிபுணர், பாம்பியலாளர், பூச்சியியலாளர் மற்றும் சிறந்த எழுத்தாளரான சார்லஸ் மெக்கான்-னை கூற வேண்டும். பிறகு எஸ்.எச். பிரேட்டர், டாக்டர் சாலிம் அலி (அவரது வாழ்நாள் பணிகளுக்காக பின்னாளில் கெளரவ முனைவர் பட்டம் வழங்கப்பட்டது) ஆகியோரைச் சொல்லலாம். காலங்களைக் கடந்த இந்த அறிஞர்களை, எதுவும் தெரியாத விஞ்ஞானிகள் என்று சிலர் அழைக்கின்றனர். ஆனால், இவர்கள்தான் இயற்கை வரலாற்றுக் கழகத்தின் முதுகெலும்பாக செயல்பட்டு, கழக இதழில் பெரும்பாலான ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளனர்.

11 முனைவர் பட்ட ஆய்வாளர்கள் மற்றும் ஏழு முதுகலை பட்டதாரிகளுக்கு வழிகாட்டியாகச் செயல்பட்டும், நீங்கள் ஏன் முனைவர் பட்டம் பெறவில்லை?

என்னைப் பொருத்தவரை, ஒரு வாரத்தில் உள்ள ஏழு நாட்களில், ஒவ்வொரு நாளின் 24 மணி நேரத்தையும் அர்ப்பணித்தால்தான் முனைவர் பட்டம் பெற முடியும். எனது ஊர்வன புத்தகத்தை நிறைவு செய்ய 23 ஆண்டுகள் ஆனது. நேரக் கட்டுப்பாட்டோடு சமர்ப்பிக்க வலியுறுத்தப்படும் விஷயங்களுக்காக என்னால் வேலை செய்ய முடியாது.

அந்த வகையில் எப்பொழுதும் நான் ஒரு அறிவியலாளராக இருப்பதைவிட, இயற்கையியலாளராக இருக்கவே ஆசைப்படுகிறேன்.

எடுத்துக்காட்டாக, ஒரு சரகத்தில் ஐந்து யானைகள் இருந்தால் இரண்டு அல்லது மூன்று யானைகளோ, அதேபோல ஒரு முறை இடப்பட்ட ஐந்து முட்டைகளில் ஒன்றோ, இரண்டோதான் பிழைக்கும் என்று நான் சொல்வேன்.

ஆனால் நவீன அறிவிய லாளர்களோ விகிதாசார சுத்தமாக 2.39 யானைகள், 1.65 குஞ்சுகள் பிழைக்கும் என்று கூறுவார்கள். சில நேரம் வெறும் புள்ளிவிவரங்களை முழுமையாகச் சார்ந்திருக்கும் அம்சம் எனக்குப் பிடிக்கவில்லை. அது ரொம்ப சாதாரணமானது.

இளம் காட்டுயிர் ஆர்வலர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன?

செயல்படுங்கள். ஆனால் உங்கள் செயல்பாடு நிறுவப்பட்ட உண்மைகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். தேவையற்ற எதிர்க்கும் தன்மையுடனோ, அடிப்படை வாதியாகவோ இருக்காதீர்கள். அப்படியிருந்தால், மக்களின் ஆதரவு போன்றவற்றை புறக்கணிப்பீர்கள். குட்டிச்சுவர்களில் வெட்டியாக அமர்ந்திருப்பவர்கள் கூட உங்களை ஆதரிக்க வேண்டுமா என்று யோசிப்பார்கள். உங்கள் நோக்கத்தை வலிமையாக வலியுறுத்த மக்களின் கற்பனை மற்றும் மனசாட்சியை அசைத்துப் பார்க்க முயற்சியுங்கள். காட்டுயிர் பாதுகாப்பில் ஆர்வம் செலுத்தவும், அதை பணியாகத் தேர்ந்தெடுக்கவும், கொள்கைப்பிடிப்பு அவசியம். பணக்காரர் ஆகிவிடும் நோக்கத்துடன் இந்தத் துறையில் வாய்ப்புகளைத் தேடாதீர்கள். அப்பொழுது உங்கள் கொள்கைகள், அறிவியல் இரண்டு அம்சங் களையும் சமரசம் செய்து கொள்ளும் நெருக்கடி உருவாகும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com