Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Thendral
Puthiya ThendralPuthiya Thendral Logo
ஆகஸ்ட் 2007

சுரண்டப்படும் தொழிலாளர்கள்

ஒரு தொழிலாளியின் ஒப்புதல் வாக்குமூலம்
- கே. சந்திரசேகர்

மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்து, வறுமையின் காரணமாக கல்வியைக்கூட முழுமையாக கற்க இயலாமல், இளம் வயதிலேயே, இன்று எல்லாரும் பதறுகிறோமே குழந்தை உழைப் பென்று அந்த குழந்தை பருவத்திலேயே உழைக்க வேண்டிய கட்டாயத்தில், செயற்கை வைரத் தொழிலாளியாக வாழ்க்கையைத் துவக்கினேன்.

மூன்றே மாதத்தில் தொழிலைக் கற்று, குடும்பத்தை கையிலெடுத்துக் கொண்ட எனக்கு துவக்கத்தில் தொழில் நிலை, தொழிலாளர் உரிமை, சமூக நீதி என்ற விஷயங்கள் எதுவும் புரியவில்லை? விளையாட்டுப் பிள்ளையாகவே காலம் கழிந்தது.
இரவே கற்களை வாங்கி வந்து விடுவோம். காலை 8 மணிக் கெல்லாம் கற்களை ஒட்டி வேலையில் உட்கார்ந்தால், நாளெல்லாம் வேலை. இரவு 8 மணிவரை உழைத்தாக வேண்டும். அப்போதுதான் ரூ.20க்கு வேலை செய்யமுடியும்.

சமவயதுக்காரர்கள் பலர் ஒன்றாக அமர்ந்து வேலை செய்ததால், வேலை செய்யும் அலுப்பு தெரியாமல் பேசிக் கொண்டும், வேலை செய்வோம். பாடிக் கொண்டும் வேலையா என்ற கேள்வி வரலாம்? செயற்கை வைரத் தொழில் நடத்துவோர் தங்கள் இடத்தில் தொழில் நடத்த மாட்டார்கள்.

அதாவது கற்களை கொடுப்பது மட்டும் முதலாளியின் பணி, கற்களை வாங்கிய தொழிலாளி தன்னுடைய வீட்டிலோ, அல்லது வேறு எங்காவது வாடகைக்கு பட்டறையை பிடித்தோ, வேலைசெய்து கொடுத்து கூலியைப் பெற்றுக் கொள்ளவேண்டும்.

பட்டறை, வாடகை, வேலை செய்ய தேவையான வைரவடி (வைரத்தூள்), வைர குண்டு(தொழில் வைரம்), சாணதேய்ப்பு, சிலிக்கன் பவுடர், காரீயம், அரக்கு, கயிறு, காஷ்டிக் சோடா போன்ற தொழில் செய்ய தேவையான பொருட்கள் அனைத்தும் தொழிலாளியின் செலவுகள் ஆகும்.

வேலை செய்து கிடைக்கும் கூலி 20 ரூபாய் என்றால் அதில் பாதி தொகை இந்த செலவுகளுக்கு போய்விடும். இப்படி உழைப்பில் பாதி பறிபோய்விட்டாலும் வேலை செய்யும் முறைக்கு மட்டும் சுதந்திரம் தரப்பட்டது. அதனால், பகலெல்லாம் தடையில்லாமல், எவருடைய குறுக்கீடும் இன்றி வேலை செய்ய முடிந்ததால் பாட்டும், பேச்சுமாக வேலை செய்யமுடிந்தது.

இப்படி வேலைச் சுதந்திரம் அளிக்கப்பட்டதற்கு காரணத்தை பின்னால்தான் புரிந்துகொள்ள முடிந்தது. பிரச்சினை வரும்போது முதலாளிகள், தான் தொழிலே நடத்தவில்லை தொழிலாளிக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று சாதிக்க வசதியாகவே, தன் இடத்தில் தொழில் நடத்தாமல் தொழிலாளியிடம் வேலை செய்து கொண்டு வரச் சொல்கிறார்கள் என்று பின்னாளில் தான் புரிந்துகொள்ள முடிந்தது.

இப்படி வேலை செய்து கொண்டு வரும் தொழிலாளருக்கு அவர் என்ன வேலை செய்தார்? எவ்வளவு வேலை செய்தார்? அவர் பெற்றுள்ள முன்பணம் எவ்வளவு? அதில் எவ்வளவு வரவு வைத்திருக்கிறார்கள்? எல்லாம் அந்த முதலாளிக்கே வெளிச்சம். அதாவது முதலாளியின் நோட்டில் மட்டுமே விபரங்கள் குறிக்கப்படும். தொழிலாளிக்கு ஒரு துண்டு சீட்டில் கற்களின் எடை அதற்கான கூலி மட்டுமே குறித்துத் தரப்படும்.

பின்னாளில் ஏதும் பிரச்சனை வந்தாலும் தொழிலாளி தன்னிடம் வேலை செய்ததற்கு ஆதாரம் ஏதுமில்லை என்று தப்பித்துக் கொள்ள வசதியாக துண்டு சீட்டு முறை கையாளப்பட்டது. இன்று வரையிலும் கையாளப்பட்டும் வருகிறது.

இப்படி நிரந்தரமில்லாத நிலையில், முதலாளிக்கு சம்பந்தமில்லாத இடத்தில் உழைத்து, உழைப்பதில் பாதியை இழந்து விட்டு, குடும்பத்தை நடத்த முடியாமல் அந்த முதலாளியிடமே முன்பணம் வாங்கி, அவர்கள் பிடியில் சிக்கி, வெற்று புரோ நோட்டுகளில் கையெழுத்து போட்டு, தொழில் சுதந்திரத்தை இழந்து, கொத்தடிமைகளாக வாழ்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் வாழ்ந்து வந்த தொழிலாளர் மத்தியில் முன்பணம் வாங்காமல் வேலை செய்ததால் எமக்கு சற்று சுதந்திரமாக சிந்திக்க வாய்ப்பு கிடைத்தது? அதற்கேற்ப மூன்று சந்தர்ப்பங்கள் குறுக்கிட்டன.

முதலில் எனது திருமணம், திருமணம் என்பது மனிதனின் வாழ்வில் ஒரு முக்கியமான கட்டம், சேமிப்புகள் இல்லாததால் சார்ந்திருந்த முதலாளிடம் முன்பணம் கேட்டிருந்தோம் தருவதாகச் சொன்ன முதலாளி. திருமணம் நெருங்கிவிட்ட நிலையில் திடீரென பணம்தர மறுத்ததால் பலர் முன்னிலையில்பட்ட அவமானம், சிந்திக்க வைத்தது.

அடுத்து பெற்ற தாயின் மரணத்தின் போது ஈமச்சடங்குக்கு பணம் கேட்டபோது ரூ.25 தந்துவிட்டு குடும்பத்தோடு குற்றாலம் போன முதலாளியின் அலட்சியம், ரத்தத்தை சூடேற்றியது.

மூன்றாவதாக எம்மோடு வேலை செய்த நண்பர் மனநிலை சரியில்லாததால் மூன்று நாள் வேலை செய்யவில்லை. அதனால் கோபமடைந்த முதலாளி, நண்பரை செருப்பால் அடிக்க, அவமானம் பொறுக்காத நண்பர், காஷ்டிக் சோடாவை கரைத்து குடித்துவிட்டார். மூன்று நாட்களுக்குப்பின் அவர் மரணமடைய அச்சம்பவத்தின் விளைவாக கோபப்பட்ட எமக்கு அந்த முதலாளியை பழிக்குப்பழியாக அவமானப்படுத்தத் தோன்றியது. அப்படியே அவமானப்படுத்தவும் செய்தோம்.

அச்சம்பவம் தொழிலாளர் மத்தியில் ஒரு தூண்டுகோலாகி, தொடர்ந்து அவர்களுக்கு வழிகாட்ட வற்புறுத்தி, அதுவே ஒரு தொழிற்சங்கம் உருவாக காரணமாகியது. அதுதான் "தமிழ்நாடு செயற்கை வைர தொழிலாளர் நல பாதுகாப்பு சங்கம்".

அதிலிருந்து தொடர்ந்து சிந்திக்கக் தொடங்கியதன் விளைவு. தொழிலாளர் நிலை அரசுக்கு தெரிவிக்கப்பட்டு 1981ல் செயற்கை வைரத்தொழிலுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டது.

தொடர்ந்து குறைந்தபட்ச ஊதியத்தை அமல்செய்ய பல்வேறு போராட்டங்கள்! அதனால் எவ்வித பயனுமில்லை! விளைவு? கொத்தடிமை முறை! அதை தீர்க்கும் முயற்சியாகவே "தொழிலாளர் கல்வி. மேம்பாட்டு மையம்" உருவானது. அதில் கிடைத்த அனுபவங்கள் மேலும் சிந்திக்க வைத்தன. அந்த சிந்தனையின் பலன், பல்வேறு வித்தியாசமான, துணிச்சலான செயல்பாடுகள், அந்த செயல்பாடுகளின் விளைவு? தமிழ்நாடு கொத்தடிமை முறை ஒழிப்பிற்கான கூட்டமைப்பின் செயலாளர் பொறுப்பு,

எம்மை வளர்த்த செயற்கை வைரத் தொழிலில் உள்ள அடிமை முறையை போக்க மேற்கொண்ட பல முயற்சிகளில் இப்போது வெளியிட்டுள்ள வழிகாட்டியும் ஒன்று. இம்முயற்சி செயற்கை வைரத் தொழில் மட்டுமல்லாது அடிமைமுறை நிலவும் அனைத்து தொழில்களும் உள்ள தொழிலாளர்களை விடுவிக்கவும், மறுவாழ்வு அளிக்கவும் முயற்சிப்பவர்களுக்கு, பேருதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்".

கொத்தடிமை விடுதலை, மறுவாழ்வு செயல்பாட்டாளர்களுக்கான வழிகாட்டி

விலை ரூ. 30
தொழிலாளர் கல்வி, மேம்பாட்டு மையம்.
எடமலைப்பட்டிபுதூர், திருச்சி- 12.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com