Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Thendral
Puthiya ThendralPuthiya Thendral Logo
ஆகஸ்ட் 2007

நக்சலைட்டுகளை ஒழிக்க முடியுமா?
அசுரன்


மேற்குவங்கத்தின் நக்சல்பாரி என்ற ஊரில் தொடங்கிய உழவர்களின் எழுச்சி என்பதால், அந்த ஊரின் பெயரால், அதைப் பின்பற்றும் இயக்கத்தினர் தமிழில் நக்சல்பாரிகள் என்றும், ஆங்கிலத்தில் நக்சலைட்டுகள் என்றும் அழைக்கப்படுகின்றனர். ஆனாலும் தமிழகத்தை பொறுத்தவரையில் எண்பதுகள் வரையிலும் இவர்கள் தீ கம்யூனிஸ்ட்டுகள் (தீவிர கம்யூனிஸ்ட் என்பதின் சுருக்கமாம்) என்றே செய்திகளில் குறிப்பிடப்பட்டனர்.

தீ கம்யூனிஸ்ட்டுகள் அட்டூழியம் என்ற செய்திகளைப் படித்தால் பொதுவாக அதன் பின்னணியில் கந்துவட்டி கொள்ளைகும்பல்கள் அல்லது கொடூரமான நிலபிரபுக்களுக்கெதிரான ஏதாவது ஒரு நடவடிக்கை செய்தியாகியிருக்கும்.

தொண்ணூறுகளில் ஆந்திராவில் மக்கள் போர்க்குழுவின் நடவடிக்கைகள் பரபரப்பான செய்திகளாக ஆயின. அதன் பின், பீகாரின் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் மையம் அதிரடியாக செயல்படத் தொடங்கியது. (இப்போது இந்த இரு அமைப்புகளும் இணைந்து இந்திய பொதுவுடைமை கட்சி - மாவோயிஸ்ட் என்று புதிய பெயரிட்டும் களத்தில் இறங்கியுள்ளனர்). தற்போது சட்டீஸ்கர், ஜார்கண்ட் முதலான பகுதிகளில் மாவோயிஸ்ட்டுகள் 45, 50 என்று போலீசாரை கொன்றுகுவித்து செய்திகளில் இடம்பெறுகின்றனர்.

பொதுவாக இந்திய ஆளும் வர்க்கமும், போலீசும் இப்பிரச்சினைகளை வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளாகவே பார்க்கின்றனர். "படித்தவர்கள்" கூட இதனை சமூக பொருளா தார பிரச்சினையாகப் பார்க்காமல் சட்டம் ஒழுங்கு பிரச்சினையாகவே பார்க்கின்றனர் என்பது வேதனைக்குரியது. தற்போது தமிழகத்தில் நக்சலைட் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள உயர் போலீஸ் அதிகாரியான விஜயகுமாரின் பேட்டிகளே இதற்குச்சான்று.

தற்போதைய "பரபரப்பான சட்டீஸ்கரின்" நிலைமையை பார்ப்போம்.

சில மாதங்களுக்கு முன்புவரை பலருக்கும் தெரியாத சட்டீஸ்கர் என்ற பெயர் நக்சல்பாரிகளின் போராட்டம் காரணமாக தற்போது அடிக்கடி செய்திகளில் அடிபடத் தொடங்கியுள்ளது. அண்மையில் இப்பிரச்சினை குறித்து வரலாற்றிலேயே முதன்முறையாக சட்டீஸ்கர் சட்டமன்றம் கூட்டப்பட்டுள்ள செய்தியானது அனைவரின் கவனத்தையும் தன்பால் ஈர்த்துள்ளது.

மிகுந்த இயற்கைவளமும், கனிம வளமும் பெற்றுள்ள சட்டீஸ்கரில் தற்போது மேற்கொள்ளப்படும் தொழில்மய நடவடிக்கைகளால் மக்களிடமிருந்து நிலத்தைப் பறிக்கும்போக்கு உருவாகியுள்ளது. இதற்கு எதிரான நக்சல்பாரிகளின் நடவடிக்கைகளும், தன்னால் நக்சல்பாரிகளை சமாளிக்க இயலாத நிலையில் சல்வார் ஜுடும் என்ற அதிகாரப்பூர்வ கூலிப்படையை அரசு பயன்படுத்துவதும் இங்கு ரத்தக்களரியை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வன்முறைகளால் தங்கள் வாழிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள மக்கள் அரசால் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். டந்தேவாடாவில் உள்ள ஏர்ராபோர் நிவாரண முகாமிற்கு அருகில் துப்பாக்கி ஏந்தியபடி நின்றுகொண்டிருக்கும் ரமேசுக்கு அவருடைய வயதுகூட சரியாகத் தெரியவில்லை. 16 இருக்கலாம். அவருக்கு தேர்தலில் வாக்களிக்கவோ, திருமணம் செய்துகொள்ளவோ இந்த வயதில் உரிமை இல்லை. ஆனால், அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் சட்டீஸ்கரில் நக்சல்பாரிகளை வேட்டையாடுவதற்காக சிறப்புப் போலீஸ் அதிகாரி என்ற தகுதியில் கையில் துப்பாக்கி, ஒருவாரப் பயிற்சியுடன் 1500 ரூபாய் மாத ஊதியத்தில் இவர் பணியில் அமர்த்தபட்டுள்ளார்.

விடுதலைப்புலிகளின் கவிஞரான காசி ஆனந்தன் ஆயுதப்போராட்டம் பற்றி எழுதும்போது "தாயை நேசிக்க மீசை தேவையில்லை" என்றார். இது போராளிகளுக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம். போலீசுக்கு எப்படிப் பொருந்தும்?

அரசு ஒருபுறம் இவ்வாறு முயற்சி செய்ய காங்கிரஸ் எம்.எல்.ஏ - வான மகேந்திர கர்மா வேறொரு முயற்சியை செய்தார். அது தான் சல்வார் ஜுடும். நக்சல்பாரிகள் பழங்குடியினருக்காக போராடும் அதேவேளையில் மற்றொரு பழங்குடியான இந்த எம்.எல்.ஏ முதலமைச்சர் இராமன்சிங், பெருமுதலாளிகளின் ஆதரவுடன் இந்த இயக்கத்தைத் தொடங்கினார்.

இதிலுள்ள பெரும்பாலானோர் ரமேஷைப் போல பதினாறு வயதிற்குட்பட்டவர்களே. பின்னர் போலீஸ் துறையில் நிரந்தர வேலை தரப்படும் என்ற வாக்குறுதியுடன் இவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். பெரும்பாலான சல்வார் ஜுடும் தலைவர்கள், பழங்குடியினர் அல்லாதோர்கள் அல்லது பணக்கார பழங்குடியினரே.

பல்வேறு மனித உரிமை அமைப்புகளும், தனிப்பட்ட பார்வையாளர்களும் சல்வார் ஜுடும் மூலம் அரசால் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களை பட்டியலிட்டுள்ளனர். எடுத்துக்காட்டாக "சல்வார் ஜுடும் கூட்டம் நடத்தப்படும்போது மிகுந்த போலீஸ் பாதுகாப்பு இருக்கிறது. மக்கள் மிரட்டி அழைத்து வரப்படுகின்றனர். வராதவர்கள் சல்வா ஜுடும் குண்டர்களாலும், போலீசாலும், நாகா துணை இராணுவப்படையாலும் துன்புறுத்தப்படுகின்றனர்" என்கிறது மக்கள் குடியுரிமை கழக அறிக்கை ஒன்று. பெண்களை தாக்குவது பாலியல் வன்முறைகள் செய்வது, வீடுகளை எரிப்பது போன்ற குற்ற நடவடிக்கைகளில் இக்குண்டர்கள் ஈடுபடுகின்றனர். ஆனால் மாவோயிஸ்ட்டுகளோ தம் எதிரிகளை தீர்த்துக்கட்டுவதாக மட்டுமே தெரியவருகிறது. உண்மையை வெளியிட்டால் நக்சல் ஆதரவாளன் என்று முத்திரைக் குத்தப்படுவதால் உள்ளூர் பத்திரிகையாளர்கள் அஞ்சுகின்றனர்.

கனிமவளம் மிக்க இந்தமண்ணிலிருந்து மக்களையும் கிராமங்களையும் அப்புறப்படுத்திவிட்டு, நிலத்தை பெருமுதலாளிகளுக்கு கையளிப்பதற்காகவே மக்கள் மீது வன்முறை ஏவப்படுவதாக தெரிகிறது. ஜுன் 2005ல் மேற்கொள்ளப்பட்ட நக்சல்பாரிகள் எதிர்ப்பு போலீஸ் நடவடிக்கையின்போது 350 உயிர்கள் பலியானதுடன் 700 பழங்குடி கிராமங்கள் காலிசெய்யப்பட்டது இதை உறுதி செய்கிறது. இதனால் பல்லாயிரம் பழங்குடியினர் ஆந்திரா, ஒரிசா, மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு சென்றுவிட்டனர்.

1966 - ல் மிசோ தேசிய முன்னணி கொரில்லாக்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட அரசின் நடவடிக்கைகளால் இவ்வாறு தம் ஊரைவிட்டு துரத்தப்பட்ட மக்களில், இளைஞர்கள் அக்கொரில்லாக் குழுவில் பெருமளவில் இணைந்ததே வரலாறு. மிசோ சமூக கட்டமைப்பு குலைக்கப்பட்டதால், அவர்கள் இந்தியாவிலிருந்து அந்நியப்படுத்தப்பட்டார்கள்.

டந்தேவாடா மாவட்டத்திலுள்ள துருள்ளி கிராமத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த கிராமசபா கூட்டம் எஸ்ஸார் குழுமத்தின் இரும்பு எஃகு ஆலைக்காக 600 எக்டேர் நிலம் எடுப்பதற்கு நடத்தப்பட்டது. மக்கள் எதிர்ப்பால் முதல்கூட்டம் தோல்வியில் முடிய, மற்றொரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு சிலரின் விரல் ரேகைகள் மிரட்டிப் பெறப்பட்டன.

இது எங்கோ ஓரிடத்தில் நடந்தது அல்ல. சட்டீஸ்கரின் பஸ்தர் மாவட்டத்திலுள்ள லோகண்டிக்குடா வட்டத்தில் டாடா இரும்பு எஃகு தொழிற்சாலை அமைப்பதற்காக முப்போகமும் விளையக்கூடிய, வளமான 2169 ஹெக்டேர் வேளாண் நிலத்தை பிடுங்கி 10 , கிராமங்களை அகற்றுவதற்காக நடத்தப்பட்ட கிராமசபா கூட்டத்திலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போலீஸ் மூலம் மிரட்டி கையெழுத்து பெறப்பட்டது.

இவ்வாறு நிலத்திலிருந்து பழங்குடி மக்களை அந்நியப்படுத்துவது என்பது இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு மக்கள் மீது ஏவப்படும் மிகக்கொடிய அடக்குமுறையாகும். சட்டீஸ்கரில் நக்சல்பாரிகள் ஏன் வலுவாக இருக்கிறார்கள் என்பதற்கு இதுவே போதுமான பதிலாகும். அணைகள், தொழிற்சாலைகள், சுரங்கங்கள் போன்றவற்றிற்காக பலநூறாண்டுகளாக தாம் வாழ்ந்து வந்த நிலத்திலிருந்து வெளியேற்றப்படும் மக்களுக்கு இழப்பீடோ, வேலைவாய்ப்போ வழங்கப்படுவதில்லை. இதனால் அவர்களின் பண்பாடும், பாரம்பரியமும் அழிக்கப்படுகிறது. மக்கள் நலனை கருதாமல் முன்னெடுக்கப்படும் இந்த வகையான பொருளாதார நடவடிக்கைகள், சமூக கொடுமைகள் நீடிக்கும் வரை நக்சலைட்டுகளை ஒழிக்கமுடியாது என்பதே உண்மை. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு மக்களுக்கான அரசாக மாறுவது ஒன்றே இதற்குத் தீர்வு.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com