Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
செப்டம்பர் 2006
மாற்று முயற்சிகளுக்கான கவிதைகள்

பா. திருச்செந்தாழை

கவிதைக்கான சூழல் எப்படியிருக்கிறதென்றால், நாம் இரண்டு விதமான பதில்களை கூறலாம். நாளொரு பதிப்பகமும், வேளைக்கொரு நூல்களும் வருகின்ற படைப்புகளுக்கான பிரசுர வெளியை நீட்டித்துள்ள அருமையான காலகட்டமெனவும், வாசகர்களை விட படைப்பாளிகள் மிகுந்து போய் நாடக அரங்கின் அட்டை கத்தியைப் போல பெரு வாரியாய் கவிதை என பெயரிட்டுக் கொள்கின்ற கவிதைகளும், அத்தி பூத்தாற் போன்று ‘அட’ போட வைக்கின்ற சொற்பமான சிறந்த கவிதைகள் வருகின்ற நீர்த்துப் போன வறட்சி மிகுந்த சூழலெனவும் வகைப் படுத்தலாம். இரண்டாவது வகை குறித்து நாம் பெரிதாக அலட்டிக் கொள்ள தேவையில்லை யெனத் தோன்றுகிறது. மண்சுவற்றில் பூசப்பட்ட சுண்ணாம்பு கோடை கடப்தற்குள் செதில் செதிலாய் உதிர்ந்து விடுகிறதைப் போல, காலத்தின் ஈவிரக்கமற்ற நடுநிலை முன் இருக்க வேண்டியவை இருக்கவும், அகற்ற வேண்டியவை தடம் தெரியாமல் காணாமலும் போய்விடும்.

‘அன்பளிப்பு’ - அழகு பாரதியின் இக்கவிதைத் தொகுப்பை நீங்கள் எந்தத் தலைப்பின் கீழும் வகைப்படுத்தலாம். ஒரு மரத்தைப் போல ஒவ்வொரு பக்கம் நின்று பார்க்கும் பொழுதும் அது வெவ்வேறு தோற்றத்தை தருகிறது. சாதி ஒழிப்பு பேசுகின்ற புரட்சிகர கவிதைகளும், சேராக்காதல் தருகின்ற தனிமையின் பிதற்றலும், நகரம் சார்ந்த குடும்பங்களின் நுண்மையான மென் உணர்வுகளைக் கூட யதார்த்தத்தின் கூரிய முட்கள் சிதைந்து நசுக்கியதின் வெம்பலும் சிதறிக் கிடக்கின்ற இக்கவிதைகளை மேம்போக்கான வாசிப்பிலுள்ள வாசகன் தனது எளிய வாசிப்பிற்குகந்த கவிதைகளென அர்த்தப்படுத்திக் கொள்வான். ஆனால் கடுமையான வாசிப்பு சவால்கள் நிறைந்த தளத்தில் இத்தொகுப்பிற்கான இடம் எதுவென்றால், நம் பதில் மௌனம் மட்டுமே.

எல்லாக் கவிதைகளும் சொல்கின்ற விஷயங்கள் நமது வாழ்வில் நிகழ்ந்தவைதான். அனேகமாய் எல்லோரிடமும் இருக்கின்றன நல்ல சில கவிதைக்கான அனுபவங்கள். அதனை தனது மொழி ஆளுமையாலும், நுட்பமான விவரிப்பாலும் வெளிக்கொணர்பவனே படைப்பாளியாகிறான். யதார்த்த தளத்தில் இயங்குகின்ற இவரது கவிதைகளின் அழகியல் பார்வை மிகவும் வறட்சி மிகுந்ததாகவும், சொற்களின் தேர்வு காலாவதியாகிப் போன பழைமையும் உடையதாயிருக்கிறது. அனேகமாய் எல்லாக் கவிதைகளும் இந்த பழைமையின் சாயல் படிந்தவை.

‘நேரம்’, ‘அம்மா + அப்பா = தம்பி’, ‘மௌனங்கள் பேசி’, ‘கூடு’போன்றவை இவரது மாற்று முயற்சிகளுக்கான நல்ல அறிமுகமாக இருப்பினும், தாறுமாறாய் கலந்து கிடக்கிற ஆரம்ப கால பயிற்சி கவிதைகள் நியாயமாய் சில கவிதைகளுக்கு கிடைக்க வேண்டிய மதிப்பை குறைத்து விட முயல்கின்றன. இது படைப்பாளியின் அஜாக்கிரதையான கவிதைத் தேர்வின் பலனாகி விடுகிறது. அழகுபாரதி தான் சார்ந்த மண்ணி லிருந்து பல விஷயங்களை பதிவு செய்ய முனைந்திருக்கிறாரெனினும் அதற்கான வட்டார மொழி வழக்கை நுட்பமாகவும், ஆழமாகவும் பயன்படுத்தாமல் பொது மொழியின் வழி அதனைப் பதிவு செய்ததின் மூலம் நேர்த்தியான கற்சிலைகளாக வேண்டிய அனுபவங்கள், வர்ணம் பூசப்பட்ட சுண்ணாம்பு பொம்மைகளான மாறியிருக்கிற பரிதாபம் நிகழ்ந்துள்ளது.

கடைசி பக்கத்தில் ‘தடுத் தாட்கொண்ட பத்திரிகை’ களுக்கு நன்றி என்கிறார் அழகுபாரதி. நிராகரிக்கப்பட்ட கவிதைகளுக்கான பலவீனத்தை கண்டறிய அவர் முற்பட்டிருந்தால், அவரது படைப்பின் தரம் வேறு மாதிரியா இருந்திருக்கும். சாதாரண மனித மனத்தின் ஆவேசம் பொங்க, தனது கவிதைகளை நமக்கு முன் வைத்தாலும், இத்தொகுப்பு காட்டுவ தென்னவோ, படைப்பாளியின் போதுமானதற்ற படைப்பாளுமையையும், அழகு பாரதியிடமிருந்து இன்னும் சிறப்பான வேறொரு அன்பளிப்பை எதிர்நோக்கி இருக்க வேண்டிய காலத்தையும் மட்டுமே.

நூல் : அன்பளிப்பு
ஆசிரியர் : அழகுபாரதி
வெளியீடு : பாரதி புக் ஹவுஸ்,
டி-28, மாநகராட்சி வளாகம்,
மதுரை - 625001.
விலை: ரூ.40/- பக்கம்: 80


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com