Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
செப்டம்பர் 2006
பின் நவீனத்துவமும் இசையும்
எம். ஜி. சுரேஷ்

கலை, இலக்கியம், தத்துவம் போன்றவற்றைத் தொடர்ந்து இசையும் பின் நவீனத்துவ எல்லைக்குள் பிரவேசித்திருக்கிறது. கலையைப் போலவே இசையும் தனது வடிவம் வகைமை போன்றவற்றில் வேறுபடுவதன் மூலம் பின் நவீன நிலபரத்துக்குள் தன்னை வேறுபடுத்திக் கொண்டிருப்பது முக்கியமான நிகழ்வாகும். அந்த வேறுபாடே பின் நவீன யுகத்தில் இசையின் இருப்பு என்ன என்பதை உணர்த்துகிறது.

நவீன யுகத்தில் இசை என்பது மிகத் தீவிரமான அவதானிப்பாக, ஒரு மகத்தான படைப்பாக உணரப்பட்டது. இம்மானுவேல் கான்ட்டின் ருசி (Taste) கோட்பாட்டின் படி அது தரப்படுகிறது. இசை என்பது உயரிய கலை வடிவம். தெய்வீகத் தன்மை வாய்ந்தது. உயர்ந்த ரசனையாளர்களுக்காகச் சமைக்கப்படுவது. உயர்ந்த இசையை அனுபவிக்க ஞானம் வேண்டும் என்றெல்லாம் பலவிதமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

ஐரோப்பாவில் கன்சர்ட் (concert) என்று சொல்லப்படும் பெரிய அரங்கங்களில் நிகழ்த்திக் காட்டப்பட்ட இசை நிகழ்ச்சிகள் பெரிதும் மதிக்கப்பட்டன. கைகளில் கையுறை அணிந்த, தலையில் தொப்பி தரித்த மேட்டிமை மக்கள் குதிரைகள் பூட்டிய சாரட் வாகனங்களில் வந்து இந்த இசையரங்கங்களில் நிகழ்த்தப்பட்ட இசைக் கோவைகளைக் கண்டு களித்தார்கள். உயிருள்ள பார்வையாளர்களுக்காக உயிருள்ள இசைக் கலைஞர்கள் தங்கள் திறமைகளை இசைத்துக் காட்டும் ‘உன்னத’ நிகழ்வாக இசை என்பது இருந்தது. மேட்டிமை மக்களால் ருசித்து கொண்டாடப்பட்ட இந்த ‘உன்னத இசை’ சாதாரண குடிமகனுக்கு எப்போதுமே எட்டியதில்லை. அவன் தானுண்டு தன் வேலை உண்டு என்று இருந்தான்.

எப்போது ஒலி நாடாக்கள் கண்டு பிடிக்கப்பட்டனவோ அப்போதே ‘உயிருள்ள இசை’ என்பது கேள்விக்குள்ளாக்கப்பட்டது. ஒரு முறை நிகழ்த்தப்பட்ட இசை (Real) ஒலிநாடாக்கள் மூலமாக பதிவு செய்யப்பட்டு (Hyperreal) பலமுறை நிகழ்த்திக் காட்டப்பட்டது. அப்போதே இசையில் பின் நவீனத்துவக் கூறுகள் கால் கொண்டன. ஒலி நாடாக்களின் வருகை ‘பாப் இசை’யின் வருகையை அறிவித்தது.

பீத்தோவன், மொஸார்ட் போன்ற சாஸ்திரீய கலைஞர்களின் இடத்தை ஒலிநாடாக் கலைஞர்களான எட்கர் வரீஸ் (Edgar varese), பியரி ஷாஃபர் (Pierre schaeffer) ஜான் கேஜ் (John cage) போன்றவர்கள் வந்து நிரப்பிய அதிசயம் நிகழ்ந்தது. இவர்கள் அரங்கங்களில் இசைக்கப்படும் இசைக்கு மாற்றாக ஒலிநாடாக்களில் தங்கள் இசையை பதிவு செய்து உலக மக்களின் காதுகளுக்குக் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். இவர்களால் இசை ஜனநாயகப் படுத்தப்பட்டது. பின்னாளில் வந்த பீட்டில் (Beatle) போன்றோர் இந்த இசையை அதன் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தினார்கள்.

நவீனத்துவ இசை பெரிய பார்வையாளர்களின் பரப்புக்கு எதிரானது. இசை ஞானம் மிக்க குறுகிய வட்டத்துக்கானது. பெருவாரியான மக்கள் சங்கீத ரசனை இல்லாத மண்டுகள். எனவே தீவிரமான உன்னதமான மேன்மையான இசையே நவீனத்துவ இசையின் இலட்சியம். இதன் விளைவாக பெருவாரியான மக்கள் இந்த இசைக்கு மற்றமை (other) களாக மாறினார்கள். நவீன யுகத்தில் பிரபுக்கள் மட்டும் ‘உயரிய’ இசையைக் கேட்டு ரசிக்கும் அதிஷ்டம் கொண்டவர்களாக இருந்தார்கள். லட்சக்கணக்கான நடுத்தர, கீழ்த்தட்டு வர்க்கத்தினர் ஞானசூன்யங்களாக இருந்தார்கள். (கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை?)

ஐரோப்பாவைப் போலவே இந்தியாவிலும் இரண்டு விதமான மேட்டிமை இசைகள் இருந்தன. (இப்போதும் இருக்கின்றன) வடக்கே இந்துஸ்தானி இசையும், தெற்கே கர்னாடக சங்கீதமும் இந்தியாவின் ‘உயர்ந்த’ ‘உன்னத’ கலை வடிவங்கள். இந்த மேன்மையான இசை, விளிம்புநிலை மக்களை விலக்கி வைத்தது. அவர்களது இசை தாழ்ந்த கலை (Low art) என்று பரிகாசிக்கப்பட்டது. இதனால் விளிம்பு நிலை மக்களும் தங்களது பாரம்பரிய இசை வடிவங்களான பறை, கொட்டு, மேளம் போன்றவற்றை உதாசீனப்படுத்திவிட்டு இந்த ‘உயரிய’ இவை வடிவங்களைக் கற்கவும், ரசிக்கவும் தங்களை தகவமைத்துக் கொள்ளலானார்கள். மேற்கில் பின் நவீனத்துவம் இந்த உயர்ந்த (High art) தாழ்ந்த (Low art) கலைகளின் மீதான தனது கேள்விகளை எழுப்பியது.

பெரும்பாலும் தனிநபர்களின் சுவை உணர்வும் கலையுணர்வும் ஆதிக்கப் பண்பாட்டின் மூலம் நிர்ணயிக்கப் படுகின்றன. கட்டமைக்கவும் படுகின்றன. மேட்டிமைவாதிகள் தங்கள் ருசியைப் பொதுமைப் படுத்தி தங்களது ஆதிக்கப் பண்பாட்டை விளிம்பு நிலை மக்களின் மேல் திணிக்கின்றனர். இதை கலாச்சார முதலீடு (Cultural Investment) என்பார் பியரி பூர்தியூ. இது நவீனத்துவ இசைக்கும் பொருந்தும்.

நவீன இசை பிரபஞ்சத்தின் யதார்த்தத்தை எடுத்துரைப்பது. பின் நவீனத்துவமோ கலை, இலக்கியம், இசை போன்றவை பிரபஞ்ச யதார்த்தத்தை எடுத்துரைத்தால் போதாது. அவற்றை கேள்விக் குள்ளாக்க வேண்டும் என்றது. நவீனதுவத்தின் கலை, இலக்கியம், இசை போன்றவை ஊடகங்களின் நொறுக்குத் தீனியாகவும், நுகர்வதற்குத் தயாரிக்கப் பட்ட பண்டங்களாகவும் வகைப்படுத்தப் பட்ட பதார்த்தங்களாகவுமே இருந்தன. பின் நவீனத்துவமோ கலை என்ற பெயரால் விளைவிக்கப்பட்டு நுகர் பொருட்களாக்கப்பட்ட அந்தப் பணியிடங்களை நுகருமாறு ஒரு சமூகத்தின் மேல் திணிக்கும் அவல நிலைமையை விமர்சிக்கிறது. கிண்டல் செய்கிறது.

எட்கார் வரீஸ் பதிவு செய்யப்பட்ட (Record) கலக்கப்பட்ட (Mix) ஒலிகள் (Sounds) பேச்சுக்கள் (Spoken) ஓசைகள் போன்றவற்றை வைத்துத் தன் இசையை உருவாக்கிக் காட்டினார். ஜான் கேஜ் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ஒலி நாடாக்கள், ரேடியோ இசைத் தட்டுக்கள் போன்றவற்றை ஒலிக்க வைத்து அவற்றை ஒருங்கிணைத்து தனது இசையை உருவாக்கினார். ஓவியத்தில் ஆன்டி வார்ஹோல் (Andy warhol) செய்த மாதிரியான ‘கொலாஜ்’ தன்மையை ஜான் கேஜ் இசையில் செய்தார் எனலாம். ஜான் கேஜின் கற்பனைப் பிரதேசம் (Imaginary Landscape) யூரோபெரா (Europera) போன்ற இசை ஆல்பங்கள் குறிப்பிடத்தக்கவை.

ஜார்ஜ் ரோஷ்பர்க் (George Roxhberg) என்பவர் சாஸ்திரீய சங்கீதத்தின் துணுக்குகளை சேகரித்து ஒரு விதமான கலவை இசையை இசைத்துக் காட்டினார். சாஸ்திரீய இசையுடன் பறவைகளின் ‘கீச்’‘கீச்’ சப்தம் சேர்ந்து ஒலித்தது. இது ஒரு புதிய அனுபவத்தைத் தந்தது.

திட்டமிட்டு இயங்குவது மரபார்ந்த இசை என்றால் சந்தர்ப்ப வசமாக (chance) அமைவதே பின்-நவீன இசை எனலாம். ஜான் கேஜின் இசை உருவாக்கங்கள் எல்லாமே சந்தர்ப்பவசமாக உருவானவையே. அவரது 4‘33’ என்ற இசை நிகழ்ச்சியில் ஒரு பியானோ கலைஞர் இசைக்காமல் பியானோ முன் மௌனமாக அமர்ந்திருந்தார். அதைச் சுற்றியிருந்த சூழலின் சப்தங்கள் மட்டுமே இசையாக அர்த்தப்படுத்தப்பட்டன.

ஜோனதன் கிராமர் (Jonathan kramer) என்பவர் பின்-நவீன இசைக்கான சில குணாம்சங்களைக் குறிப்பிடுகிறார்.

பின்-நவீன இசை என்பது - நவீனத்துவத்தின் தொடர்ச்சி அல்ல; ஆனால் நகை முரண் கொண்டது; கால வித்தியாசங்களைக் கலைப்பது; உயர் கலை, தாழ் கலை என்ற பேதங்களை ரத்து செய்கிறது; மரபார்ந்த இசை வடிவத்தின் அமைப்பை (Structure) கேள்வி கேட்கிறது; மொத்தப் படுத்தலை (Totalising) நிராகரிக்கிறது; துண்டாடுதலையும் தொடர்ச்சியின்மையையும் கொண்டாடுகிறது.

மேற்கண்ட ‘குணாம்சங்கள்’ நம் ஊர் ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஜ் ஜெயராஜ் போன்றோரின் இசையில் காண முடியும் என்பது ஓர் ஆச்சர்யம் தரும் உண்மை.

‘அறிந்தும் அறியாமலும்’ என்ற தமிழ்ப் படத்தில் ‘தீப்பிக்க தீப்பிடிக்க’ என்ற ஒரு பாட்டில் முதலில் நவீன பாப் இசையும் பின்பு திடீரென்று எம்.கே. தியாகராஜ பாகவதரின் ‘மன்மத லீலையை வென்றார் உண்டோ?’ என்ற பழம் பாட்டின் இசையும் வரும். இதன் மூலம் இந்தப் பாட்டு கால வித்தியாசங்களைக் கலைக்கிறது. இரட்டைக் குறியீடு (Double coding) என்பது ஒரு பின் நவீனத்துவக் கூறு. அது இப்பாட்டில் இயங்குகிறது.

அதே போல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ‘சினேகிதியே’ என்ற பாடல் ஆரம்பத்தில் மெல்லிசையாக இனிமையாகத் துவங்கும். அந்தப் பாட்டின் நடுவில் திடீரென்று நாடோடித் தன்மையில் பாடல் மாற்றம் பெறும். இதுவும் இரட்டைக் குறியீட்டுத் தன்மையே.

‘அழகிய லைலா’ என்ற பாட்டு தமிழ்ப் பாட்டுதான். ஆனால், இசையோ அராபிய இசை. தமிழ்த் தன்மையும் அராபியத் தன்மையும் இரண்டு குறியீடுகளாக மாறிப் பின்-நவீனத் தன்மையுடன் மிளிர்கின்றன.

அதேபோல் மனிதமற்ற தன்மையும் (inhuman) பின்-நவீனக் கூறே. ஒரு காலத்தில் ஸ்டுடியோக்களில் ஏராளமான இசைக் கலைஞர்களை ஒரு இடத்தில் ஒன்றாக உட்கார வைத்து இசையமைக்க வைத்து பதிவு செய்வார்கள்.

இன்றைக்கு ஒரு பாட்டையோ அல்லது ஒரு காட்சிக்கான ரீ-ரிக்கார்டிங்கையோ பதிவு செய்வதற்கு எந்த இசைக் கலைஞரும் தேவை இல்லை. இசையமைப்பாளர் ஒருவர் மட்டும் போதும். ஏனெனில், இசைக் கலைஞர்கள் செய்யும் வேலையை கீபோர்ட் (keyboard)கள் செய்கின்றன. கீ போர்ட் மூலம் தாறுமாறான ஒலிகளை சந்தர்ப்பவசமாக உருவாக்கி, ரசிக்கத் தக்க இசைiயை உருவாக்கி பெற முடியும். இதில் மனிதர்கள் அற்ற தன்மை இருப்பதால் இது ஒரு பின்-நவீன இசை என்று சொல்லலாம்.

இத்தகைய பின் நவீன சூழலில் இசை என்பது, நாரதகான சபாவில் மார்கழி மாதத்தில் செம்மங்குடி சீனிவாச ஐயர் போன்றவர்கள் பாடுவதுதான் என்றும், கானா உலகநாதன் பாடும் ‘வாழை மீனுக்கும் வஞ்சரம் மீனுக்கும் கல்யாணம்’ என்பது இசையே இல்லை என்றும் சொல்வது அபத்தமானது. செம்மங்குடிக் கென்று இசைத்துறையில் ஒரு இடம் இருப்பதைப் போல் கானா உலகநாதனுக்கும் ஒரு இடம் நிச்சயம் உண்டு என்பதே உண்மை. யாருடைய இடத்தையும் (space) யாரும் மறுதலிக்க முடியாது என்பதே நிதர்சனம்.

இதைத்தான் பின்நவீனத்துவம் பன்மைத் தன்மை (Pluralism) என்கிறது. செம்மங்குடிக்கு மீனைப் பார்த்தால் குமட்டிக் கொண்டு வரும்தான். ஆனால், கானா உலகநாதனுக்கு மீனைப் பார்த்தால் வாயில் எச்சில் ஊறுகிறதே, என்ன செய்வது? இதைத்தானே சமஸ்கிருதம் ‘லோக பின்ன ருசி’என்கிறது. மக்களின் ருசி பின்னப்பட்டது என்பது இதன் பொருள். இது தானே உண்மை. சங்கதிகள், பிர்க்காக்கள் இல்லை என்பதால் கானா உலகநாதனின் பாட்டு வரலாற்றில் இருந்து அழிக்கப்பட்டு விட முடியுமா என்ன?

எதையும் அழிக்க முடியாது (Annihilation) என்கிறது நவீன விஞ்ஞானம். ஒரு பொருள் வேறு பொருளாக மாறுமே தவிர முற்றாக அழியாது. அதன் எல்லா அணுக்களும் வேறு வேறு புதிய பொருட்களுடன் போய் இணைந்து அந்தப் பொருளை வடிவமைக்கும். அப்படி இருக்கையில் உயர் கலை மட்டுமே வாழும்; தாழ்கலை முற்றாக அழித்து போகும் என்பது உண்மைக்குப் புறம்பானது இல்லையா? இதைத்தான் பின்-நவீனத்துவம் தனது உரையாடலில் நிகழ்த்துகிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com