Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
செப்டம்பர் 2006
சபரிமலை அய்யப்பசாமி தரிசனம்: பெண்களின் கனவு நனவாகுமா?
ஏ.எம். சாலன்

கேரளாவிலுள்ள அய்யப்பசாமியைத் தரிசிக்க வேண்டும் என்பது நம் நாட்டு பெண்களின் நீண்டகால கனவு. ஆனால், காலம் காலமாக தடைவிதிக்கப் பட்டிருக்கிறது. பத்துவயது முதல் ஐம்பது வயதான பெண்களுக்குத்தான் இந்தத் தடை. பெண் விடுதலை இயக்கங்களும், பெண்ணியம் சார்ந்த கருத்துக்களும் தோன்றி வலுப்பெற வலுப்பெற, இப்போது பெண்களுக்கு இடையே இருந்து, இதற்கு எதிராக கேள்வி எழத் துவங்கியுள்ளது.

இதற்குப் பிள்ளையார் சுழிபோட்டது கன்னட நடிகை ஜெயமாலா.

விஷயம் இதுதான். கேரளாவிலுள்ள சபரிமலை அய்யப்பன் கோவில் உலகப் புகழ் பெற்ற ஒன்று. இங்கு அய்யப்பன் பிரம்மச்சாரியாக இருந்து தவம் செய்து வருகிறார், என்பது ஐதீகம். எனவே, பத்து வயது முதல் ஐம்பது வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு இந்தக் கோவிலுக்குள் நுழைந்து, அய்யப்பனைத் தரிசிக்க அனுமதி கிடையாது. பெண்கள் அனைவரும் பம்பை என்ற இடத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டு விடுவர். கேரளத்தில் இந்த நடைமுறை காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, உன்னி கிருஷ்ண பணிக்கர், தேவ பிரஸ்னம் பார்த்த போது சபரி மலையிலுள்ள அய்யப்பன் விக்ரகத்தை பெண் ஒருவர் தொட்டு விட்டதாகக் கூறியது பெரும் பிரச்சனையைக் கிளப்பி இருந்தது. பின்னர் அந்த அசுத்தத்தைக் கழுவி, சுத்தப்படுத்தி பூஜை கர்மங்கள் நடத்தப்பட்டன.

சபரி மலையில் அய்யப்பன் இருக்கும் பகுதி, ஸ்ரீகோவில் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஸ்ரீகோவிலுக்குள் தந்திரி குடும்பத்தினர் மட்டுமே செல்ல முடியும். அவர்கள் மட்டுமே விக்ரகத்திற்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்ய முடியும் என்பது ஐதீகம்.

நாம் மேலே குறிப்பிட்டவர்கள் கேரளாவிலுள்ள மிக உயர்ந்த சாதியைச் சோந்த நம்பூதிரி குலத்தவர்கள் என்பதை நாம் இந்த இடத்தில் நினைவில் கொள்ள வேண்டும். அங்கு, பெண்களுக்கு மட்டுமல்ல, தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் நுழைவதற்கு அனுமதி கிடையாது. இதுபோல், கேரளத்திலுள்ள குருவாயூர் கோவிலுக்குள்ளும் தடைகள் விதிக்கப்பட்டிருக்கிறது, என்பதையும் நாம் இந்த விஷயத்தோடு சேர்த்து வைத்து வாசிக்க வேண்டும். இனி, ‘பெண் ஒருவர் விக்ரகத்தைத் தொட்டு விட்டார்’ என்று தேவபிரஸ்னத்தில் கூறப்பட்டதை தந்திரி குடும்பத்தினர் கடுமையாக எதிர்த்தனர்.

ஆனால் ‘18 ஆண்டுகளுக்கு முன்புதான் சபரி மலைக்கு சென்றதாகவும், கூட்ட நெரிசல் காரணமாக ஸ்ரீகோவிலுக்குள் விழுந்ததில் அய்யப்பன் விக்ரகத்தை தொட நேர்ந்து விட்டது’ என, நடிகை ஜெயமாலா கூறியது, சர்ச்சையை மேலும் வலுப்பெறச் செய்தது.

இதையொட்டி இன்னொரு சம்பவமும் கேரளாவில் நிகழ்ந்தது. நடிகை மீரா ஜாஸ்மின் இதுமாதிரி ஒரு கோவிலுக்குள் நுழைந்து தரிசனம் நடத்த, அதுவும் இங்கு பெரும் பிரச்சனை ஏற்பட காரணமாயிற்று. இதையடுத்து, சபரிமலை கோவிலுக்குள் செல்ல பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை கேரளாவில் வலுக்கத் தொடங் கியது. இப்பிரச்சனை தொடர்பாக இந்திய இளம் வக்கீல்கள் சங்கம் மற்றும் சுப்ரீம் கோர்ட் பெண் வக்கீல்கள் ஐந்து பேர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்கள்.

அதன் உள்ளடக்கம் பின் வருமாறு:

“சபரிமலை கோவிலுக்குள் பெண்களுக்கு அனுமதி இல்லை என்று கூறுவது இந்திய அரசியல் சட்டத்தின் 14, 25 மற்றும் 26 பிரிவுகளுக்கு எதிரானது. சாதி, மத மற்றும் ஆண், பெண் என, பாகுபாடு பார்த்து யாரையும் பிரித்து வைக்க முடியாது, என்று அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. 1965ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட கேரள இந்து பொது வழிப்பாட்டு தலங்கள் (கோவிலில் நுழைய அனுமதி அளிப்பது) சட்டத்தின் பிரிவின் 3 (பி)ன் படி சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இது, அரசியல் சட்டத்துக்கு எதிரானது, என அவர்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தார்கள்.

நீதிபதிகள் கே.ஜி.பாலகிருஷ்ணன், டி.கே.ஜெயின் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இந்த மனு (18.8.06) விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள், இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு கேரள அரசு, திருவிதாங்கூர் தேவசம் போர்டு, தேவசம் கமிஷன், சபரி மலை தலைமை தந்திரி, பத்தனம் திட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் (சபரி மலை இந்த மாவட்டத்தில் தான் இருக்கிறது) ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்குத் தொடர்பாக கேரள தேவசம் போர்டு அமைச்சர் சுதாகரனிடம் கருத்துக் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் கீழ்க்கண்டவாறு பதில் கூறினார்:

சபரி மலைக்கு பெண்கள் சென்று வழிபாடு நடத்தலாமா? அதில் கேரள அரசுக்கு உடன்பாடு ஏதாவது உண்டுமா?’ என, சுப்ரீம் கோர்ட் கேட்டால்,

“அய்யப்பப தரிசனத்திற்கு, பெண்களை அனுமதிக்கலாம் என்றே பதில் அளிப்போம்” என, பதில் அளித்தார். மட்டுமின்றி, இந்த விஷயத்தில் நீதிமன்றம் எங்களிடம் எதுவும் கேட்க வில்லையெனில் எந்தவித மாற்றம் இன்றி பழைய முறையே தொடரும், அதில் எந்த வித மாற்றமும் இருக்காது. சபரி மலை ஆசார அனுஷ்டங்களில் அரசு தலையிட விரும்பவில்லை. அதே வேளையில் சுப்ரீம் கோர்ட் சபரி மலைக்கு பெண்கள் சென்று தரிசிக்க அனுமதி கொடுத்தால், அதை அமுல்படுத்துவதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும் என்றார். (மலையாள தினசரி மாத்ருபூமி, 19.8.06)

இதுபற்றி தமிழ் தினசரியான தினமலரில் வெளியான செய்தி:

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கேரள தேவசம் போர்டு அமைச்சர் சுதாகரனிடம் நேற்று கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர்,

“இது போன்ற கேள்வியை கேரள அரசிடம் கேட்டால், சபரி மலை கோவிலுக்கு பெண்கள் செல்ல அரசு தடை விதிக்கவில்லை என்று நாங்கள் பதில் அளிப்போம். பெண்களுக்கு தடை என்பது காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை. ஆன், பெண் என பிரித்துப் பார்க்கக் கூடாது. அனைவருக்கும் அனைத்து உரிமையும் உண்டு, என்பதுதான் இடதுசாரி ஜனநாயகக் கூட்டணி யின் கொள்கையாக உள்ளது. சபரிமலை கோவில் தொடர்பாக எழுந்துள்ள அனைத்து சர்ச்சைகளும் ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்றே அரசு விரும்புகிறது. இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டுக்கு கேரள அரசு தகுந்த பதில் அளிக்கும்” என்றார். இனி இதையொட்டி தினமலர் தரும் செய்தியை உற்று கவனிக்க வேண்டும்.

“சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்ல மாநில அரசு தடை எதையும் விதிக்கவில்லை என, கேரள அமைச்சர் தெரிவித்துள்ளதால் கோவிலுக்குள் பெண்கள் செல்லலாம் என, அந்த அரசு (இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் தலைமை தாங்கி நடத்தும் இடதுசாரிஜனநாயகக் கூட்டணி அரசு) அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிகிறது. சுப்ரீம் கோர்ட் தங்களுக்கு அனுப்பிய நோட்டீசுக்கு பதில் அளிக்கும் போதும் இதே கருத்தை தெரிவிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. கேரள அரசின் முடிவால் அய்யப்ப பக்தர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்” இதுதான் அந்த செய்தி.

இதில் ஒரு சிறு திருத்தம். நம் தினமலர் குறிப்பிட்டுள்ள ‘சபரி மலை அய்யப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்ல மாநில அரசு தடை எதையும் விதிக்கவில்லை என, கேரள அமைச்சர் தெரிவித்துள்ளதால் கோவிலுக்குள் பெண்கள் செல்லலாம் என, அந்த அரசு அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிகிறது’ என்ற செய்தி தவறான தாகும். அதை, அவர் தன் சொந்தக் கருத்து என்றுதான் தெரிவித்திருந்தார். கேரள முதல்வர் திரு.அச்சுதானந்தன் அவர்களும் கூட நாகர்கோவிலில் வைத்து பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்ட போது ‘இது அரசின் முடிவு அல்ல; அவரது சொந்தக்கருத்து’ என்றுதான் சொன்னார். (மாத்ருபூமி மலையாள தினசரி 21.8.06) இனி, ‘அய்யப்ப பக்தர்கள் கடும்அதிருப்தி அடைந்துள்ளனர்’என, தினமலர் குறிப்பிட்டிருந்ததை, ‘நம்பூதிரி சபை, பிராமண சபை, நாயர்கள் சங்கம், என, திருத்தி வாசித்துக் கொள்ள வேண்டும். காரணம், எந்தவொரு தாழ்த்தப் பட்ட அல்லது ஒடுக்கப்பட்ட இந்துக்களின் அமைப்பும் இவற்றுக்கு எதிரல்ல என்பதை நாம், இந்த இடத்தில் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி இவர்களை உள்ளடக்கிய ஏதாவதொரு அமைப்பு பெண்களின் அய்யப்ப தரிசனத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்குமானால் அம்மக்கள் மேல் சாதியினர் உருவாக்கி நடத்தும் இந்து மத அமைப்புகளால் மூளைச் சலவை செய்யப்பட்டவர்களாகவே இருப்பர் என்பது உறுதி.

இனி, மீண்டும் தினமலர் பத்திரிகையின் செய்தியைப் பின் தொடர்வோம். அந்தச் செய்தி கீழ்க்கண்டவாறு நீள்கிறது.

“அய்யப்பன் கோவிலுக்கு செல்வது என்பது அதன் பக்தர்களைப் பொறுத்தவரை மிக கடினமான ஒன்றாகவே கருதப்படுகிறது. 48 நாட்கள் கடும் விரதம் இருந்தே இரு முடிகட்டி கோவிலுக்கு சென்று வருகின்றனர். விரதம் இருக்கும் 48 நாட்களும் பெண்கள் பற்றிய சிந்தனை கூட இருக்கக் கூடாது என்பது அய்யப்ப பக்தர்களின் எழுதப்படாத சட்டம். அந்த அளவுக்கு கடும் கட்டுப்பாடுகளுடன்தான் ஒவ்வொரு ஆண்டும் அய்யப்ப பக்தர்கள் சென்று வருகின்றனர். (இந்த இடத்திலும் நம் தினமலர் பத்திரிகை முக்கியமான ஒரு விஷயத்தைக் குறிப்பிட மறந்து விட்டது. அதாவது, 50 வயதுக்குட்பட்ட பெண்களும் 10 வயது சிறுமிகளும் கூட இது போன்று கடும் விரதங்களை மேற்கொண்ட பிறகே சபரி மலைக்கு இருமுடி தாங்கி போகிறார்கள் என்பதே அது!)

மேலும் ‘ஒவ்வொரு ஆண்டும் லட்சக் கணக்கான பக்தர்கள் சென்று வரும் போது, நாம் மேலே குறிப்பிட்ட வயதிலுள்ள பெண் பக்தர்களின் எண்ணிக்கை மிகக் குறைந்த சதவீதமே. நடைமுறை இப்பிடி இருக்க, சபரிமலை கோவில் கடந்த சில மாதங்களாக அடுத்தடுத்து பல சர்ச்சைகளில் சிக்கி வருவதும் பெண்களை அனுமதிக்க கோரி சுப்ரீம் கோர்ட் வரை விவகாரம் சென்றதும் அய்யப்ப பக்தர்களை கடும் அதிருப்தி அடைய வைத்துள்ளது’ என.

கேரள மாநிலத்தைப் பொறுத்த வரையில் கடும் எதிர்ப்பு கிளம்புவது, சாதாரண அல்லது அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த அய்யப்ப பக்தர்களிடம் இருந்து அல்ல, என்பதை நாம் மீண்டும் நினைவில் கொள்ள வேண்டும்.

இனி தேவசம் போர்டின் பதிலைக் காண்போம்.

“சபரி மலையில் பின்பற்றப் பட்டு வரும் நடைமுறைகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும், என்றே தேவசம் போர்டு கருதுகிறது. 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு அனுமதி இல்லை என்ற நடைமுறை தொடர வேண்டும்; என்பதே எங்கள் கருத்து. இந்த விஷயத்தை சுப்ரீம் கோர்டில் மனு மூலம் தெரிவிப்போம்!” - இது, தேவசம் போர்டு உறுப்பினர் புனலூர் மது அவர்களின் கருத்து.

சபரிமலை தந்திரி கண்டரரு மகேஸ்வரு கூறுகையில், “குறிப் பிட்ட வயதுடைய பெண்கள் சபரிமலை கோவிலுக்கு வரக் கூடாது, என்று தடை விதித்திருப்பதற்கு சில காரணங்கள் உண்டு. இந்த நடைமுறை பல நூற்றாண்டு களாக பின்பற்றப்பட்டு வருகிறது. இதை மாற்றக் கூடாது. மேலும், பெண்களை அனுமதிக்க வேண்டும் என்பது சபரிமலை அய்யப்பன் மீது பக்தர்கள் வைத்துள்ள நம்பிக்கை எதிரானதாகவே கருத வேண்டும்” என்றார். (மேற்கண்ட இரண்டு பேட்டியும் தினமலரில் 19.8.06 அன்று வெளியாகி இருந்தது) கூடவே விஷ்வ இந்து பரிஷத் கூறுகையில், “ஒவ்வொரு கோவிலுக்கும் தனித்தனியாக ஒரு நடைமுறை இருக்கும்; அய்யப்பன் கோவில் ‘விரத சங்கல்பம்’ என்ற நடைமுறையைக் கொண்டது. இதை பெண்களால் செய்ய முடியாது” என்ற பேட்டியும் வெளியிடப்பட்டிருந்தது.

இனி, இதை சில பெண்களும் எதிர்க்கிறார்கள். குறிப்பாக பழைய ஆசார அனுஷ்டானங்களைப் பின்பற்றி வரும் பெண்களும், சில அறிவு ஜீவிகளும் இவற்றுக்கு எதிராகக் குரல் கொடுப்பதை கேட்க முடியும். உதாரணத்திற்கு, திருவனந்த புரத்திலுள்ள பிரஸ் கிளப்பினுடைய லிட்டரரி ஃபாரத்தை துவக்கி வைத்துப் பேசிய மலையாளப் பெண் எழுத்தாளர் அனிதாநாயர் அவர்களின் கருத்தை எடுத்துக் கொள்ளலாம்!

அவர் உரையாற்றுகையில், “சபரி மலை அய்யப்ப சாமியை தொழுவதற்காக பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற கருத்தை நான் எதிர்க்கிறேன்” என, வெளிப்படையாகப் பேசினார். (மலையாள தினசரி 21.8.06) மேலே கண்ட கருத்துக்களை எடுத்து அலசி ஆராயும் முன், கேரள தேசத்தின் முந்தைய அரசியலையும் பண்பாட்டினையும் திருப்பிப் பார்க்க வேண்டியது மிக மிக அவசியம்.

(நம்நாடு சுதந்திரம் பெறுவ தற்கு சற்று முன்பு வரையில்) கேரள தேசம் இங்குள்ள நம்பூதரி பிராமண குலத்தைச் சேர்ந்தவர் களால் ஆண்டாண்டு காலமாக ஆளப்பட்டு வந்தது. இக்கால கட்டத்தில் இங்குள்ள பூமியும், கோவில்களும் பல நம்பூதிரி குடும்பங்களின் குடும்பச் சொத்தாக இருந்து வந்தன. பிற சாதிப் பிரிவினர், இவர்கள் வீட்டை விட்டு வெளியே இறங்கும் வேளைகளில், குறுக்கே நடமாடக் கூடாது. இவர்கள் விரும்பினால் யாரை வேண்டுமானால் தங்களுடைய வைப்பாட்டிகளாக வைத்துக் கொள்ளலாம்! இவர்களைத் தவிர ஏனைய குலத்தைச் சேர்ந்தவர்களுக்கு கோவிலுக்குள் நுழையவோ அல்லது சென்று வழிபடவோ உரிமை கிடையாது. (இதனால் கோபம் கொண்டுதான், ஸ்ரீநாராயண குரு அவர்கள் தங்களுடைய இனத்தவர்களுக்காக வேண்டி ‘ஈழவசிவன்’என்ற பெயரில் ஒரு தனி சிவனையே உருவாக்கினார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.) குறிப்பாக தாழ்த்தப்பட்ட சனங்களுக்கும், பெண்களுக்கும் கோவில்களின் அருகே கூட செல்ல முடியாது.

சூழ்நிலை இப்படி இருக்க, தாழ்த்தப்பட்ட குலத்தில தோன்றிய அய்யன்காளி, நாராயணகுரு, வைகுண்டசாமி போன்ற பண்பாட்டுத் தலைவர்கள் தீண்டாமை கொடுமைக்கு எதிராக மூர்க்கத் தனமாகப் போராடினார்கள். இவற்றுக்கு எதிராக தங்கள் குல மக்களை அணி திரட்டினார்கள். இதைக் கண்ட சில மன்னர்கள், சில கோவில் களுக்குச் சென்று அவர்கள் தரிசிக்க உரிமை வழங்கினார்கள். அந்த வேளையிலும் கூட பெருந்தெய்வங்கள் வீற்றிருக்கும் கோவில்களுக்குள் நுழையும் உரிமை அவர்களுக்கு மறுக்கப் பட்டிருந்தது. இதை எதிர்த்து, பின்னர் கம்யூனிஸ்ட்டுகள் கடுமை யாகப் போராடி, வெற்றியும் பெற்றனர். (உ.ம். ஏ.கே. கோபாலன் அவர்கள் முன்னின்று நடத்திய குருவாயூர் சத்தியாக்கிரகம்).

இதனால் கோபம் கொண்ட நம்பூதிரி இனத்தவர்களும், நாயர்குல மக்களும் இடை யிடையே ஒடுக்கப் பட்டவர்களுக்கு தொல்லைகள் கொடுத்து வந்தனர். இதன் பெயரில் கேரளத்தில் கொள்ளையும், கொலையும், தீ வைப்பும் நடைபெற்றது. இவற்றையெல்லாம் சந்தித்ததற்குப் பிறகு தான் தாழ்த்தப் பட்டவர்களுக்கு கோவில் களுக்குள் நுழையும் உரிமை வழங்கப்பட்டது. பின்னர், கேரளத்தில் கம்யூனிசக் கருத்துக்கள் பரவின. பல இடதுசாரி அரசியல் இயக்கங்கள் தோன்றி வலுவடைந்தன. அதன் பலனாக கம்யூனிஸ்ட் கட்சி தேர்தலில் நின்று வெற்றி பெற்று கேரளத்தில் மந்திரி சபையும் அமைத்தது. ஒடுக்கப் பட்டவர்கள் ஓரளவு பயமின்றி தலைநிமிர்ந்து நடக்க ஆரம்பித்தார்கள்.

ஆனால், பெண்ணடிமையை இம் மண்ணிலிருந்து ஒழித்துக் கட்டு வதற்கான நடவடிக்கைகளோ, போராட்டங்களோ அல்லது சட்டங்களோ இயற்றப்பட்டு தீவிரமாக செயல்படுத்தப்படவில்லை. அந்த வேளையில் மத்தியிலிருந்த காங்கிரஸ் கட்சியும் கூட இதைக் கண்டு கொள்ளவில்லை. ஆக, பின்னர் வலது சாரிகளாலும் இடதுசாரிகளாலும் மாறிமாறி ஆளப்பட்ட போதிலும் கூட, பெண்ணுரிமை, பெண் விடுதலை, பெண்களுக்கான சமத்துவம், (பெண் கல்வி இங்கு ஓரளவு கவனத்தில் எடுத்துக் கொள்ளப் பட்டது) போன்ற பிரச்சனை களைத் தொடாமல் அப்படியே போட்டுவிட்டனர்.

வரலாற்று ரீதியாகச் சொல்வதாக இருந்தால், பெண்களை கோவிலுக் குள் நுழைய விடக் கூடாது என்ற தடை நம் நாட்டில் நிலவுடைமைக் காலத்தில் தோன்றியது எனத் தெரிகிறது. அக் காலத்தில்தான் பெண்களுக்கு உரிமை தர மறுத்து நம் சமூகம் அவர்களைக் கொடுமை படுத்திக் கொண்டிருந்தது. இன்று நம் நாடு சுதந்திரம் பெற்ற ஜனநாயக நாடு என்று சொல்லிக் கொள்கிறோம்?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com